கேணல் வசந்தன் அண்ணை அவர்கள் திருகோணமலை 10ம் குறிச்சியை/இரணை கேணியை சொந்த இடமாக கொண்டவர்.
திருகோணமலை மாவட்ட சிறப்பு தளபதியாக செயற்பட்ட ஒரு முக்கிய இராணுவ தளபதி. இவர் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் குறிப்பாக கிழக்கு மாகாணப் பகுதியில் மிக முக்கிய பங்காற்றியுள்ளார்.
1987ல் திருகோணமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினராக இருந்த லெப் கேணல் புலேந்தி அம்மான் அவர்கள் இருந்த காலத்தில் இருந்து தளபதி வசந்தன் அண்ணை அவர்களும் இணைந்து போராட்டத்திற்கான ஆரம்ப காலத்தில் இருந்து செயற்பட தொடங்கினார்.
மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் வரையிலான இறுதி யுத்தம் வரை தொடர்ச்சியாக நின்று வழிநடத்தியவர்.
இவர் திருமலை மாவட்ட படையணியில் இருந்து புலனாய்வு பணிக்காக புலனாய்வுத்துறையில் இணைக்கப்பட்டு அம்மான், கபிலம்மான் ,மாதவன் மாஸ்ரர் , கபில் மாஸ்ரர், காந்தி அண்ணை ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்.
2004ல் உள்ளகப்புலனாய்வு பொறுப்பாக இருந்த திரு.காந்தி அண்ணை அவர்களினால் புளியங்குளம் தடைமுகாம் பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு தீபன் அண்ணை அவர்களின் கண்காணிப்பில் தடைமுகாம் மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. இக்காலத்தில் புதிய நபர்கள் எமது முக்கிய பகுதிக்குள் வருபவர்களை விசாரணைக்கு உட்படுத்தி சந்தேகமானவர்களின் விபரம் குறித்த பிரதேசங்களுக்கு தொலை தொடர்பு ஊடாக தகவல் பரிமாறப்படும். குறித்த முகவரிக்கு நபர் செல்ல முன் அந்த பிரதேச புலனாய்வர்கள் சென்று விடுவார்கள்.
அவ்வாறான விரைவான தகவல் பரிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்கள். இதனுடன் சேர்த்து திருகோணலை மாவட்டத்துக்கான புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தவர்.
திருமலை மாவட்டத்தின் மிக நீண்ட காலப் போராளிகளில் தளபதி வசந்தன் அண்ணை அவர்களும் ஒருவர். இவர் பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் ஆரம்பகால நண்பர்களில் ஒருவர்.
திருகோணமலை கட்டளைத் தளபதியாகவும் பின் மாவட்ட சிறப்பு தளபதியாக நியமிக்கப்பட்டு அந்தப் பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவ கட்டமைப்பை பலப்படுத்தியவர்.
2009 ஈழ இறுதிப் போரின் போது முள்ளிவாய்கால் பகுதியில் வைத்து இலங்கை அரச படைகளினால் கைது செய்யப்பட்டு பின் நிர்வாண படுத்தி கைகள் பின் பிறமாக கட்டப்பட்ட நிலையில் சிறிலங்கா இனவெறி அரச படைகளினால் நந்தி கடல் பகுதியில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இறுதி போரின் போது சரணடைந்து அல்லது கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட முக்கிய தளபதிகள் பட்டியலில் இவருடைய விபரம் உள்ளடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழ போரில் இறுதி நாட்களில் முள்ளிவாய்கால் களத்தில் தீவிரமாக செயற்ப்பட்ட வீரத் தளபதி அரச படையினரின் படுகொலை காரணமாக முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரமரணம் அடைந்தார்.
(இதில் உள்ள தகவல்கள் உறுதிப்படுத்தவேண்டும்)
