தலைவர் பிரபாகரன் 8 வகுப்பு படிக்கும் போது எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தின் கதையும் 2009 முள்ளிவாய்கால் மர்மமும்
அந்த மர்மச் சிரிப்பின் ஆழத்தை அறிய வேண்டுமானால் அறுபதுகளின் கடைசியில் வல்வை சிதம்பராக்கல்லூரியின் வகுப்பறையொன்றுக்குள் நாம் நுழைய வேண்டும்.
காலப் புத்தகத்தின் ஏடுகளை பின்புறமாகத் தட்டுகிறேன்.. இதோ அந்த வகுப்பறை..
அந்த வகுப்பறை சாதாரண வகுப்பறையல்ல.. உலக நாடுகளே வருடந்தோறும் கார்த்திகை 27 அவரின் மாவீரர் நாள் உரையைக் கேட்பதற்காகக் காத்துக் கிடந்ததே.. அந்த உரைகளை உருவாக்கிய உலைக்களமே அதுதான்.
அன்று பிரபாகரன் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார், அதிர்ஷ்டவசமாக அவருடன் நானும் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது வரலாற்று மேதை இளவாலை க.புவனசுந்தரம் எமது வகுப்பாசிரியராக இருந்தார், அவர் மேற்பார்வையில் ஒவ்வொரு வாரமும் பாடசாலையில் இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெறும்.
மாணவர்கள் தமது பல்வேறு கலைத்திறன்களைக் காட்டும் மேடையாக அது அமைந்திருக்கும், அந்த இலக்கிய மன்றத்தின் பத்திராதிபராக இருந்தவரே பிரபாகரன்.
அவர் ஒருவருக்கு மட்டுமே ஒவ்வொரு வாரமும் மேடையில் தோன்றி உரைகளை வாசிக்கும் அரிய வாய்ப்பைக் காலம் வழங்கியிருந்தது.
நாம் எழுதிக் கொடுக்கும் ஆக்கங்களை திருத்தி செப்பனிட்டு, அத்தோடு பல அரிய நூல்களில் இருந்து திரட்டிய தகவல்களையும் ஒழுங்குபட தொகுத்து வாரம்தோறும் வாசிப்பார்.
அந்த வாசிப்பே நமக்கு அறிவின் கதவுகளை திறக்கும் சிந்தனை ஊற்றுக்களாக இருந்தாலும், அந்தப் பத்திராதிபர் பதவி உலகப் புகழ் பெறும் ஒரு பணிக்கான ஒத்திகை என்பதை அன்று என்னால் புரிய முடியவில்லை.
அக்காலத்திலேதான் பிரபாகரன் நாடகம் ஒன்றை எழுதி, நடித்து, இயக்கும் முயற்சிக்குள் இறங்குகிறார்..
” மர்ம மனிதன்..! ” இதுதான் நாடகத்தின் பெயர்..
அந்தக் கதையின் உள்ளோட்டமே அவர் போராட்டத்தின் நிழல் என்பதை அப்போது அறிந்தவர் எவரும் இல்லை.
பிரபாகரன் ஒரு மர்மமான முடிவை எடுக்கப் போகிறார், முள்ளிவாய்க்காலில் என்ன நடக்கப்போகிறது, எங்கிருந்து பிரச்சனை ஆரம்பமாகப் போகிறது என்பதையெல்லாம் அவருடைய உள்ளம் அன்றே ஒரு நாடகப் பிரதியாகப் பதிவு செய்திருப்பதுதான் நம்பமுடியாத புதுமை.
ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த போராட்டம் முதற்கொண்டு, கடந்த 2009 மே 17 வரை அவருடைய வாழ்க்கையின் நகர்வைக் கூர்ந்து அவதானித்தால் அந்த நாடகம் அவருடைய வாழ்வின் நெக்கட்டிப் பிரதிபோல ஒளிர்வதைக் காணலாம்.
ஒருவர் உண்மைக்குண்மையாக மனம் உருகி எழுதிய நாடகப்பிரதிகளே அவருடைய உண்மையான ஜாதகக் குறிப்பாக இருக்கும், அதுவே அவருடைய டி.என்.ஏ என்னும் மரபணுவின் அசல் பிரதி போலவும் இருக்கும் என்பதற்கு சேக்ஷ்பியரின் நாடகப் பிரதிகள் ஒரு சான்று என்று கூறுவார்கள், அதையே பிரபாகரனின் மர்ம மனிதனில் காண்கிறேன்.
அந்த நாடகத்தின் பிரச்சனைகள் ஒரு மோதிரத்தை எடுத்துச் சென்று துப்பாக்கி தூக்குவதில் இருந்து ஆரம்பிக்கும்..
பின்னாளில் அவர் தன் தாயாரின் காப்பை எடுத்துக் கொண்டு துப்பாக்கி வேண்ட சென்ற சம்பவம்போல அந்த மோதிரத்தில் இருந்தே கதை சூல் கொள்ளும்.
மோதிரத்தில் இருந்து புறப்பட்டு படிப்படியாக அது உக்கிரமடைந்து பெரும் போராக மாற்றமடையும்.., சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் ஒத்திகை நடந்தபோது எனக்கு சிறிய பாத்திரத்தைத் தந்து மூன்றாவது காட்சியோடு கதையில் இருந்து வெளியேறும்படி கூறிவிட்டார்.
மற்றய அனைவரும் அந்த புயலில் சிக்குப்பட்டு போராடிக் கொண்டிருப்பார்கள்.
கடைசிக்காட்சியானது பெரும் துப்பாக்கிச் சண்டையை கொண்டிருந்தது, அன்று நாங்கள் முள்ளிவாய்க்காலிலும், புதுமாத்தளனிலும் பார்த்தது போல அதுவும் பெரும் அவலமான காட்சியாகும், நாடக மேடையே இரத்தக் காடாகக் கிடந்தது.
நாடக முடிவில் மயான அமைதி… வகுப்பறையே உறைந்து கிடந்தது,
நாடகத்தில் பங்கேற்ற அனைவருமே கொத்துக் கொத்தாக இறந்து கிடந்தார்கள், துப்பாக்கி தூக்கி அடிபடாமல் வெளியேறிய பாத்திரமான நான் அந்தக் கதையின் முடிவு பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
அழிந்துவிடக்கூடாத அந்தப் பொக்கிஷத்தை காலம் எனது மூளையில் பதிவு செய்து கொண்டிருந்தது..
கலவரத்துடன் புவனசுந்தரம் மாஸ்டரின் முகத்தைப் பார்த்தேன்.. அவர் நாடியில் கை வைத்தபடி இருந்தார்… அவருடைய முகத்தில் ஈயாடவில்லை.
கடைசிக்காட்சியில் எல்லோருமே இறந்துவிட்டார்கள்… அப்படியானால் மர்ம மனிதன் என்பதன் பொருள்தான் என்ன..? முடிவில் பிரபாகரன் எதைச் சொல்ல வருகிறார்..?.
இறந்து கிடந்தவர்களில் பிரபாகரனைத் தேடிப்பார்க்கிறேன்.. கண்கள் நான்கு பக்கங்களும் சுழலுகிறது.. எங்குமே அவரைக் காணவில்லை..
அவர் இறந்துவிட்டாரா…? இல்லை உயிருடன் இருக்கிறாரா…? நாடகமே முடிவடைந்துவிடும்.
அந்த மனிதன் மர்மமானவன் அவன் இறந்தானா இருக்கிறானா என்பதை யாராலும் சொல்ல முடியாது என்பதுதான் நாடகத்தின் முடிவு.
அவரோடு சேர்ந்தவர்கள் எல்லாம் இறந்துகிடப்பதால் அவரும் இறந்துவிட்டார் என்று பாமர ரசிகர்கள் நினைத்துக் கொண்டார்கள்… இல்லை இறக்கவில்லை அந்த வீரன் தப்பிவிட்டான் என்று சிந்தனைத் திறன் மிக்கோர் கூறிக்கொண்டார்கள்…
இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பிரபாகரன் தனது நாடகத்தின் மூலமாக தந்த பதில் மௌனம்..! பின் ஒரு சிரிப்பு…! அவ்வளவுதான்…
அன்று காற்றில் கரைந்த அந்தச் சிரிப்பின் தொனிதான் 2008 நவம்பர் மாவீரர் நாள் உரையிலும் தெரிந்தது..
நாடக முடிவில் எவராலும் கண்டு பிடிக்க முடியாத ஒரு முடிவை வைத்துவிட்டு சிரித்த அவருடைய சிரிப்பையும், மாவீரர்நாள் உரையில் சிரித்த சிரிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால்…
உரைகளைவிட உன்னதமானதும் உள்ளர்த்தம் நிறைந்ததுமாக இருப்பது அவர் சிரித்த சிரிப்பே என்பது தெரியவரும்…
ஒரு சிரிப்பால் அவர் இந்த உலகத்தையே வேரோடு பிடுங்கிய் புரட்டிப் போடப் போகிறார் என்பதை பரிதாபத்திற்குரிய உலக இராஜதந்திரிகளால் அன்று புரிய முடியவில்லை..
ஆம்…!
பிரபாகரன் இருக்கிறாரா… இல்லையா… உலக அரங்கில் இன்று இதுதான் விலை மதிக்க முடியாத ஜாக்பாட் கேள்வி..
அந்த மர்ம மனிதன் நாடகத்தின் கடைசிச் சிரிப்பொலியை இப்போது மீண்டும் எனது நினைவுகளில் றீ வைன்ட் பண்ணி உருள விடுகிறேன்…
நீலக்கடல் அலையே என் நெஞ்சின் அலைகளடி என்ற பாரதி பாடல்போல அந்த மர்மமான சிரிப்போசை என் காதுகளுக்குள் மெல்லென அலையோசை போல உருண்டு கொண்டிருக்கிறது.
முப்பது நிமிடங்கள் கொண்ட மர்மமனிதன் என்ற நாடகக் கருவின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்தான் முப்பது வருடங்கள் கொண்ட விடுதலைப் போராட்டம் என்ற தகவலை மனது சிறைப்பிடித்து வருகிறது..
ஒரு சிரிப்பு 36 உலக நாடுகளை வன்னிக்குள் முகாமிட வைத்தது..
எரிக் சோல்கெய்ம் போன்றவர்களையே கோபத்தில் எகிறிக் குதிக்க வைத்தது.. பிரபாகரன் மீது குற்றம் சுமத்துமளவுக்கு அவரையே நிலை தடுமாற வைத்தது..
இன்று ஐ.நா சபையே குற்றம் புரிந்துவிட்டதாக ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டுள்ளதென்றால் அந்த நாடகக் கலைஞனின் சிரிப்பின் விலையை மதிப்பிட இந்த உலகில் யாரால் முடியும்..?
” அப்படியானால் அந்த நாடக முடிவு போல ஒரு பேரழிவுதான் இந்தப் போராட்டத்தின் முடிவா..? ” இப்படியொரு கேள்வி உங்கள் உள்ளத்தில் எழுவது தெரிகிறது..
அழிவும் அவலங்களும் வரலாம், ஆனால் எந்தச் சதிகாரரும் தப்பிவிட முடியாது… வெற்றி பெறவும் முடியாது.. போராட்டம் தொடரும் என்பதே அவரின் சிந்தனை… அந்தச் சிரிப்பின் சாராம்சம்..
அனுராதபுரத்தில் இருந்து 44 வருடங்கள் ஆட்சி செய்த எல்லாளன் மரணத்தின் பின் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட பேரழிவுகளுக்கான பதிலடிதான் அவருடைய காலத்தில் விழுந்திருக்கிறது என்ற எண்ணத்திற்கும் இதற்கும் தொடர்புண்டா..?
எல்லாளனின் 44 வருட காலமும் பிரபாகரன் போராட்டத்தை நடாத்திய 30 ஆண்டு காலமும், அவர் போராட்டத்திற்குத் தயாரான 14 வருடங்களையும் சேர்த்தால் அதுவும் 44 வருடங்களே..
இது மட்டுமா…
அதோ அனுராதபுரத்தின் எல்லாளன் சமாதியில் மினுக்கிட்டு எரிகிறதே.. ஒரு விளக்கு.. அந்த எல்லாளன் சமாதிக்கு அருகில் கருவுற்றவரே பிரபாகரன்…
இப்படி எண்ண அலைகள் ஓயாத அலைகளாக பீறிட்டுப் பாய்கின்றன..
இப்படி…
ஆம்..!
அந்தப் பிரவாக நதிக்கு ஏது மரணம்.. அது பல்லாயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருக்கும் ஓயாத தமிழ்ப் பேரலை..
தலைவர் வகுப்பு தோழர்
கி.செ.துரை 19.11.2012