(இந்தக்கதையை எழுதிய போராளி காந்தா இறுதியுத்தத்தில் மரணித்துவிட்டார். அவரது போராளிக் கணவரும் இன்றுவரை இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் எதுவும் தெரியாது. காந்தாவின் சிறு குழந்தைகள் தற்போது உறவினர் ஒருவரின் ஆதரவில் வாழ்கிறார்கள். மாவீரர் காந்தா எழுதிய கதையிது)
அந்த வரைபடம் எனது கோல்சருக்குள் மடித்தபடி பல நாளாய் கிடக்குது. எனக்கு அதைப் பார்க்கவேண்டுமெண்டா அதைப்பயன்படுத்திதான் மோட்டார்களுக்கு இலக்கின் வகை சொல்ல வேணுமெண்டோ அவசியம் இல்லை. இப்பதான் நிஸ்மியாக்காவந்தவா. வன்னியெண்டபடியால இந்தகுச்சொழுக்கைகள் அவாவிற்கு வடிவாத்தெரியாது. வரைபடத்தை எடுக்கச் சொல்லி அதில வடிவா விளங்கப்படுத்தச் சொல்லியும் கேட்டவா. எனக்கு பஞ்சியாகத்தான் இருந்தது. அக்கா கேட்டுட்டா எண்டதற்கு காட்டினன்.
வரைபடத்தை பார்க்கேக்க, “இந்த றோட்டிலயே காந்தா உம்மட வீடு” எண்டு அக்கா கேட்டவா. எனக்க ஒரே விசரா இருந்தது. வீடு இதில தான் எண்டு காட்டினப்போ எனக்கு ஏதோ செய்துச்சுது. ‘சீ… என்னகாலமப்பா’ என்று சினந்தும் கொண்டன். இப்பதான் அக்கா கேட்டா “நீநிக்கிற இடத்தில இருந்து எத்தனை கிலோ மீற்றர் தெரியுமா…?” என்னண்டா. அப்பதான் அந்தநாள் நினைவிற்கு வந்தது. அங்கதான் இருந்தன். ஆனால். எங்கயோ போட்டான். அக்கா என்னட்ட எத்தனை கிலோ மீற்றர் எண்டபதில் கேட்காமலே போயிற்றா. அந்த இடத்தவிட்டு எப்பபோனா எண்டு எனக்குத் தெரியேல்ல.
யோசிக்கேக்க மகிழ்ச்சியாகவும் இருந்தது, வெறுப் பாயும் இருந்தது. என்ர உடல் சோர்வா, அலுப்பா இருந்தது. ஏனெண்டா நேற்றிரவு நித்திரை இல்லை. அதற்கு முதல் நாளும் இல்லை. முதல் நாள் வேவுக்காரரோட போய் இராணுவத்தின்ர தடம் கிடக்கோ எண்டு பாத்து உறுதிப்படுத்தினனான். அதுதான் இரண்டு நாளா உசார் நிலையில இருந்திட்டம்.
அந்த நிலையில் உசாராய் இருந்தபடியால தான் அவன் அங்கு வெளிக்கிடேக்க கண்டு அடிச்சிட்டம். அவன்ர நகர்வு அந்த இடத்திலேயே தடை செய்யப்பட்டது. எனக்கு ஒரே இராணுவத்தின்ர நினைவுதான். ஏனெண்டா கொஞ்சத் தூரத்தில் எங்கட வீடு அங்கதான். அம்மா, அப்பா, தம்பி உறவுகள் என எல்லோரும் கூடியிருந்த ஊர். அவைகளுக்கு என்ன நடந்ததோ …சீ… நான் இப்படி நினைக்கக் கூடாது. என்னை நானே திட்டிக் கொண்டேன்.
என்ர பிள்ளையள் பாவங்கள். நேற்று வடிவாச் சண்டை பிடிச்சதுகள். தங்கட தங்கட காப்பு நிலைகளிலே என்ன செய்யுதுகள்? வடிவா அவதானிச்சுதுகளோ என்று பார்ப்பம் எண்டுதான் வெளிக்கிட்டன். நான் துவக்க எடுத்துக்கொண்டுவர தேனர சிவந்தாள். முன்னுக்கு நடந்தாள். அதோட குறிஞ்சியும் பின்னுக்கு துவக்கோட வந்தா. இரண்டு கிலோ மீற்றர் நீளத்துக்கு நடந்து நிலைகளைப் பார்த்தோம்.
அது 55வது காப்பரண். அதில நின்ற பல்லவி, குறிஞ்சி தான் உறவுக்காரி என்று எனக்குத் தெரியாது. பல்லவியின்ர பதுங்கு குழிக்க நிண்ட போது குறிஞ்சி தான் அவளிட்டக் கேட்டாள். “பல்லவி இதில இருந்து எங்கட வீடு 2 கிலோ மீற்றர் வருமெல்லா…..” வன்னியில எண்டா இது கூப்பிடு தூரம் என்றாள் பல்லவி. அவையளின்ர உரையாடலைக் கேட்க எனக்கு அவையும் தென்மராட்சி என்பது வடிவா விளங்குது. என்ர வீட்டக்கேட்டு நான் வேதனைபடுமாபது போல அதுகளையும் வேதனைப்படுத்த விருப்பமில்லாமல் இருந்ததுச்சுது.
அந்தக் காப்பரண் விட்டுப்போ கேக்க எனக்கு குறிஞ்சி. பல்லவி என அதுகளின்ர நினைவுதான் வந்திச்சுது. அதில இருக்கிற அம்மன் கோயிலுக்கு அதுகள் போயிருக்குங்கள். சீ… இப்ப அது சூனியப் பிரதேசமா பாழ்பட்டுக் கிடக்கும். அந்தப் பள்ளியில் படிச்சிருக்குறங்கள். அந்த ரோட்டால அடிக்கடி போய் வந்திருக்குங்கள். அதுகளும் என்னைப் போலத்தான் நினைக்குங்கள். இராணுவத்தை துரத்தினால், வீட்டை…. ஊரை…. பார்க்கலாம் எண்டு தானே சிந்திக்குங்கள். எனக்கு இப்ப நல்லா நித்திரை வருது. படுத்தா படு பயங்கரமாவரும். இப்படித் தானே அதுகளுக்கும் வரும். என்னையறியாமலே வாய் விட்டுச் சொல்லிக் கொண்டேன். அப்பதான் அதுகள் கேட்டதுகள் “ என்ன உங்கட பாட்டுக்கு நித்திரை எண்டு சொல்லிக் கொண்டு போறீயள்?”
“ஓண்டுமில்லை” எண்டன். என்ர நினைவெல்லாம் வீட்ட போச்சுது. காப்பரண் எல்லாம் பார்த்திட்டு என்ர நிலையில் வந்திருந்தன. திரும்பவும் “உசாரா இருங்கோ இராணுவம் நகரக் கூடும்” எண்டு செய்தி வந்திச்சுது.
என்ர சிறு சிறு அணப் பொறுப்பாளருக்கெல்லாம் உடனே தகவல்களை அனுப்பினன். திரும்பவும் இனி நித்திரை இல்லை மீளவும் வீட்ட போட்டன். எனக்குப் பகல் கொள்ளுற தெண்டாலே படுபயங்கரமாப் பிடிக்காது. இப்ப அந்தக் காலத்தை நினைக்க ஆசையாய இருந்தது.
காலையில எழும்பிபடிச் சாப்பிடுற சாப்பாடு, பள்ளிக்கூடம் பள்ளியால வந்ததும் சாப்பிடுவன் எனக்கு அம்மா சாப்பிடத் தந்திட்டு தம்பிக்கும் கொடுத்திட்டு போய் படுத்திடுவா. சாப்பிட்டிட்டு போனா விறாந்தையில அப்பா நல்ல நித்திரை அடிப்பார். அம்மா முன்னறைக்க படுத்திருப்பா அவவும் நித்திரையா இருப்பா. தம்பி சாப்பிட்டிட்டு வந்து அப்பாவிற்கு பக்கத்தில் படுத்திருப்பான். அக்காவும், அண்ணையும் கட்டாயம் பகல் நித்திரை கொள்ளுவினம். அவையளைப் பார்க்க எனக்கும் நித்திரை கொள்ள வேணும் போல இருக்கும்.
தலையணையைத் தூக்கிக் கொண்டு எனக்குப் பிடிக்காத பாடப்புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு போய் படிக்கிறதோட படுப்பன். நித்திரை வராது…. பேந்து புரண்டு புரண்டு படுத்துப் பார்ப்பேன்;. அப்பவும் நித்திரை வராது. எழுப்பிப் போய் பின்னறைக்குள்ள புழுக்கொடியல் உரப்பைக்குள்ள இருந்து எடுத்து வருவன். கைநிறைய புழுக்கொடியல் இருக்கும். இப்ப புழுக்கொடியல்; சாப்பிட ஆசையாக இருக்கிறது. இதுக்க இருக்கிற இந்த கொஞ்சத் தூரம் ஆமியைத் தூரத்திட்டா அங்க போய் சாப்பிடலாம். அம்மா கட்டாயம் புழுக்கொடியல் போட்டு வைச்சிருப்பா. புழுக்கொடியல் எடுத்துக்கொண்டு தேங்காயும் எடுத்து உரிச்சு உடைச்சுக் கொண்டுவந்து. பெரிய நாவலுக்குக் கீழ் கட்டின ஊஞ்சலில் ஆடி ஆடி சாப்பிட்டுப் பார்ப்பன். நித்திரை வராது. பகல் நித்திரை சரிவராது. மனம் கேட்காம திரும்பவும் வந்து படுத்துப் பார்ப்பன். நித்திரை வராது. பேந்து முன் வீட்ட போவன். விபுலனை விளையாடக் கூப்பிடுவமெண்டா. அங்க அவன் தாய்க்குப் பக்கத்தில் படுத்து நித்திரை அடிப்பான். முன்வீட்டு அன்ரியின் மனுசன் வெளிநாட்டில. அவா வீட்டையும் திறந்து போட்டிட்டு நல்ல நித்திரை அடிப்பா.
எனக்கு விசாராக்கும். திரும்பி வீட்டை வருவன். மாமரத்தில ஏறி காயாச்சும் சாப்பிட்டுக் கொண்டு மாமரக் கொப்பில் படுத்துப் பார்ப்பன். அதுவும் சரிவரா. தினம் இதுதான் நடக்கும் எல்லோரும் பகலிலே நித்திரை கொள்ள நான் மட்டும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு அது வெளியே திரிவன். இப்ப நான் அன்று போல சின்னவளாகவும் இருந்திருக்கலாம். உசார் நிலையில இருக்கச் சொல்லியெல்லோ தகவல் வந்தது. அந்தக் காலத்தில நித்திரை கொண்டாலும், பகலிலே வரவே வராது. இப்ப எப்பயடா நித்திரை கொள்ளுவன் எண்டிருக்கு.
என்ர பிளாட்டூன். செக்சன் பொறுப்பாளர்கள் எல்லாம் தொடர்பு எடுத்ததுகள். உசாராதாங்கள் இருப்பதா குறிப்பிட்டுதுகள். பல்லவி தொடர்பெடுக்கேக்க கேட்டாள். “அக்கா அவன் வந்தால் அடிச்சுக் கொண்டு அப்படியே தள்ளிக் கொண்டு போய் துப்பரவாக்கி விடுவம்” என்றாள் அதைத்தான் நானும் நினைச்சு வைச்சிருந்தன. கொஞ்சத்தூரம் அவன் ஓட ஓடக்க லைச்சு வீட்டுக்குக் கிட்ட போய்விடலாம். எல்லோருக்கும் இதைத் தானே சொல்லுறனான். ஊரைப்பிடிப்பம். வீட்டை போவம். அது மட்டும் எல்லாத் துயரையும் தாங்கிக் கொள்ளுவம் எண்டு.
என்ன விரும்புறன் எண்டு சொன்ன முரளிக்குக் கூட இப்படித்தானே சொன்னான். ஊருக்குப் போகும் மட்டும் சண்டையில சாகாதிருந்தா, அங்க போன பிறகு முரளிய விரும்பிறன் என்று சொன்னான். நாலு வருசமா அவனும் எதுமே என்னட்ட கதைக்காமல் இருக்கிறான். முரளியும் சண்டையில தான் நிப்பான். என்ர ஊரையும் என்னையும் நினைப்பான். எல்லோருக்கும் தங்கட ஊரைப் பார்க்க உறவுகளோட கதைக்கத்தானே ஆசையாக இருக்கும். திரும்பவும் நான் வீட்ட போய் வந்தன். அம்மா, அப்பா, தம்பி, என்ன செய்வீனம்? நடைபேசி கதைக்கத் தொடங்கியதும் முதலில் பல்லவியின்ர தொடர்புதான் கிடைச்சது. அந்தப் பக்கம் அவன் அசைவதாகத் தெரியுதாம். இராணுவம் 24 சூழல்வைத்து அடிக்கும் பீரங்கிக்குண்டுகள் வந்து விழுந்தது. வேற கனக்கச் சூடுகளும் வேகாமா வந்து விழுந்தது. வேற செல்களும் வந்து கொண்டிருந்தது. 55வது நிலைப் பக்கம் திருவிழா தொடங்கிற்று. நான் அவசரமாகவும் வேகமாகவும் பல்லவியின்ர நிலைக்கு போக வேண்டியிருந்தது.
ஒடிப்போனன். குறிஞ்சியும் தேனரசியும் என்னோட ஓடிவந்திச்சினம். குறிஞ்சிக்குச் சன்னம் பட்டிட்டுது. அதோடதான் வரப்போறதா குறிப்பிட்டாள். அவளப் பேசிப்போட்டன். கவலையா இருந்தது. சண்டையில நேரத்தை வீணடிச்சா எங்களுக்குத் தான் இழப்பு அதிகரிக்கும். வேகமா நாங்கள் போயிற்றம். பல்லவி நல்லா சண்டை பிடிச்சுக்க கொண்டிருந்தாள். வரைபடத்தை பார்த்து செல்விழுந்த கோணம் சொல்ல வேண்டியிருந்தது.
பல்லவி சொன்னாள் “அக்கா அதுக்குள்ள தான் எங்கட வீடு நான் என்னர செக்சனை கொண்டு இறங்கட்டே” தன் கோல்சருக்குள் இருந்த வரைபடத்தை எடுத்து எனக்குக் காட்டினாள். இரண்டு கிலோ மீற்றருக்கப்பால் அவளின் வீடு இருப்பதை அந்தக் கணத்திலும் வரைபடத்தில் காட்டினாள் அவள். முன்னோக்கி எதிரி நகர முற்பட்ட பக்கமா நகர முற்பட்டாள். கொஞ்சம் பொறு செல்லால கொடுத்திட்டு இறங்குவம் எண்டால், ஒரு நல்ல சண்டை கிடைச்சா திருப்பி இறங்கி அடிக்க வேணும்.
பல்லவி தான் பாய்ந்து அடிச்சுக் கொண்டு போனாள். கொஞ்சத் தூரத்தில் என்னைக் கூப்பிட்ட சத்தம் கேட்டது. ஓடிப் போனன். பிள்ளைகள் என்னை முந்திக் கொண்டு அவனைச் சுட்டபடி போய்க் கொண்டிருந்ததுகள். பல்லவி என்னட்ட வா எண்டாள். அவளுக்கு வயிற்றில காயம். அக்கா நீங்கள் என்ர அம்மாவையும் போய்ப் பாருங்கோ எண்டவள் உடனே மூச்சு விட மறந்திட்டாள். அம்மாவைப் போய்பாருங்கோ என்று திரும்பவும் ஒலித்தது. ஆனா, அது என்ர பிரமையா இருக்க வேணும். ஒரு மணித்தியாலயத்தில படுபயங்கரமா சண்டை நடந்திட்டுது செக்சன், பிளாட்டூன் எல்லாம் நல்லாச் சண்டை பிடிச்சதுகள் பல்லவியின்ர செக்சன் முன்னுக்கு அடிச்சுக் கொண்டு போனதுதான்…. பல்லவியும் விழுந்ததோட அடுத்தடுத்த செக்சனுக்கு இழப்புவரத் தொடங்கிற்று.
பல்லவி அவவொரு திறமையான சிறு அணிப் பொறுப்பாளர். நல்லாச் சண்டை பிடிப்பாள். என்ர கண்ணுக்கு முன்னுக்கு அப்படிச் சொல்லிப் போட்டுப் போயிற்றாள். என்ர சிந்தனை வெகு நேரமாக ஓடிச்சுது. பல்லவியின்ர நினைவு அடிக்கடி வந்து போகுது. நேற்றைய சம்பவங்கள்க் கோத்து மீட்டுக்கொண்டிருந்த போதுதான் நடைபேசியால் தொடர்பு வந்திச்சு. நிஸ்மியாக்காதான் தொடர்பு கொண்டிருந்தார்.
நேற்று நடந்த சண்டையில எங்கட நிலைகளில இருந்து பின்னுக்கு காயக்கரார்கள் என்று போனவையின்ர காப்பரண்களை நிறைக்க வேண்டியிருந்தது. அதுக்குத்தான் ஒரு செக்சன் பெடியள் வருகினம் எண்டும் அவதான் நேரயாவாற எண்டும் குறிப்பிட்டா. நேற்று நான் இருந்து நிலையும் இண்டைக்கு என்ர நிலையும் எனக்கே எதையெதையோ எல்லாம் கற்றுத்தந்து.
இதைத்தான் அடிக்கடி நினைச்சன். பல்லவி வீரச்சாவடைஞ்சா அந்தச் சண்டையில, அளின்ர செக்சன் மாதிரி ஒரு செக்சன் எண்டாலும் இருந்தா அந்தச் சூனியப் பிரதேசமான ஒரு கிலோ மீற்றரையும் பிடித்து முன்னுக்கு நகர்ந்து எங்கட முன்னனி நிலையை அசைச்சிருக்கலலாம். எதிரிக்கும் கொஞ்சம் பயமாகவும் இனி நகர்வெடுக்கத் துணியாமலும் இருந்திருப்பான். இந்த எண்ணந்தான் என்னைப் போட்டுக் குடைஞ்சிது. இன்னும் கொஞ்சப் பேர் இருந்தால் அல்லாட்டி இன்று வந்திருந்தா நிலைமை வேறாக இருந்திருக்கும். எங்களுக்கு வீச்சா சண்டை பிடிக்க ஆக்கள் காணாமல் இருக்கதே. எண்டு நினைக்க கவலையாகவே போட்டுது.
இப்ப நிஸ்மியாக்கா சொன்னபடி ஒரு செக்சன் வருதாம் தம்பியவையாம். வரட்டும் காயப்பட்டுப் போனவையின்ர இடத்தை நிரப்ப எண்டாலும் வரட்டும். நான் நினைச்சுக் கொண்டிருக்கவும் அந்த செக்சன் வந்து நிண்டது. வந்தவையளுக்கும் வரைபடம் காட்டி போற நிலைகளையும் காட்டி நிலைகளைச் சொல்லி விளங்கப்படுத்தவேணும். அது என்ர முக்கிய கடமையுமாய் இருக்குது. வரைபடத்தை விரிச்சு விளங்கப்படுத்தினன். அந்த செக்சன் பொறுப்பாளர். ஏதுவுமே கதைக்காம. அதில என்ன இதில என்ன என்று கேட்காம இருந்தது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
தம்பி என்ன ஒண்டும் கேட்காம இருக்கிறியள் எண்டன். அவன் அந்த வரைபடத்தில் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டினான். அதில தான் தன்ர வீடு எண்டான். என்ன பெயர் எண்டு கேட்டன். பல்லவன் எண்டான். நினைவுகள் வேகமாக……. நெஞ்சை ஏதோ செய்தது……..
முற்றும்
மூலம்: மாவீரர் காந்தா (பகிரப்படாத பக்கங்கள்)