Home / மாவீரர்கள் / பதிவுகள் / தாயகத் தந்தை

தாயகத் தந்தை

குறிப்பு: தாயகத் தந்தை எனும் இக்காவியத்திற்காக கானக வாழ்வின்போது விடுதலைப் போராட்டத்திற்கும், தேசியத் தலைவர் அவர்களிற்கும், போராளிகளுக்கும் உறுதுணையாக் இருந்த லெப். கேணல் நவம் அவர்களின் தந்தையின் அன்றைய கானக வாழ்வில் போராளிகளுடன் இருக்கும் நிழலாடும் நினைவுகளை இணைக்கின்றோம்.

ஐயா – வரலாற்றில் பதிவுபெற தவறக்கூடாத பெரிய மனிதர். வரலாற்றில் பதிவு பெறுவதால் பெருமை பெறுவோர் பலர். சிலரை பதிவாக்கிக் கொள்ளுவதால் வரலாறே பெருமை கொள்ளும். அந்தச் சிலரில் ஐயாவும் ஒருவர்.

இளமையில் இருந்தே உழைத்துப் பழகிய ஐயா இன்றும் அறுபதைத்தாண்டி விட்ட இன்றும் உழைக்கிறார். வன்னி நிலத்தின் புழுதி நிறைந்த சீரற்ற வீதியில் கடகடத்து ஓடுகிறது சைக்கிள் மூச்சுப் பிடித்து முதலாளி மிதித்தால்தான் சைக்கிள் ஓடும். ஆனால் மன ஓட்டம்….

ஐயாவின் இளைய காலம் அது வேறொரு சூழல். இன்றைய இளைய சந்ததி அவ்வளவாக அறிந்து கொள்ளாத அரசியற் சூழல். இலங்கைத்தீவின் ஐம்பதுகளிலும், அறுபதுகளிலுமான வரலாற்றுக்காலத்தில் தமிழர், சிங்களவர் என இனப்பிரிவுகள் தனித்து அடையாளம் காணப்பட்டதே இன்றைய இளைய சந்ததிக்குத் தெரியும். அதற்கும் அப்பால் மூன்றாவது அணியாகச் செயற்பட்ட செங்கொடி ஏந்திய சேனையின் அபிமானி இளைஞர் அவர். அல்ல, அல்ல அந்தச் செஞ்சேனையின் போராளி அவர்.

Lieutenant-Colonel-Navam-Father-3.jpg

அன்றைய யாழ் மண்ணின் சாபக்கேடானது, சாதியப்பிரிவினை. அந்தச் சாதியக்கொடும் கரங்களில் துன்புற்ற மக்களின் உள்ளங்களை தளமமைத்துச் செயற்பட்டது. அன்றையnகம்யூனிசக்கட்சி, அதன் முன்னணிப் போராளி ஐயா. ஆரம்பத்திலேயே அவர், சித்தாந்த ஈடுபாட்டுடனேயே அதில் இணங்கி, இயங்கப்போனார் என்றும் சொல்ல முடியாது தான்.
“அவன் உன் கிணற்றில் தண்ணீர் அள்ளினால் உயிர் எடுத்திடு”

“அவள் தன் மார்பில் உடை அணிந்திட்டால் முலை அறுத்திடு” என்ற சாதிய வெறியர்களின் அட்டூழியத்திற்கு அடங்கிப்போக மறுத்த ஆளுமை ஐயா!

அவர் போன்ற ஆளுமை இளைஞர்களின் எதிர்ப்புணர்வு அமைப்பு வடிவம் பெறுதல் தவிர்க்க முடியாததாக இருந்தது. அந்தக்காலத்தில் அடித்தட்டு மக்களின் மனங்களில் உள்ள பாதிப்புணர்வையே புரட்சிக்கு அடிப்படையாக ஆக்குதல் என்றிருந்தது செஞ்சேனைத் தத்துவம். ஆக ஒன்றும் ஒன்றும் இரண்டாகிப் பொருந்திப்போக ஐயாவும் செஞ்சேனைப் பிரதிநிதி ஆகிப்போனது வியப்பில்லாமல் ஆனது.

அந்த ஆரம்ப நாட்களில் கூட்டமாய் ரயிலேறி கொழும்பு போனார் ஐயா. சீனத்தூதரத்து மூன்று நாள் மாநாடு, கட்சி அலுவலத்துக் கலந்துரையாடல்கள், கூட்டங்கள் என்று ஐயா மாறிப்போனார் கால ஒட்டத்தில்.

ஐயா உண்மையிலேயே சமவுடமைச் சமுதாயக்கனவில் திளைத்தார். உலகப்புரட்சி ஒன்று விளையும் என்று நம்பினார். அதற்காக முன்னின்று போராடினார். தத்துவவித்தகங்களுக்கு அப்பால் ஆயுதத்தை ஏந்துதல் என்ற எல்லையும் கூட ஐயாவுக்கு – அந்த இளவயது ஐயாக்கு –சாத்தியமாகவே இருந்தது. அது அந்தக்காலத்து ஆயுதப்புரட்சி முனைப்பு.

“குடிசைத்திண்ணைகள் – குசுகுசுக்கும் போராட்ட மண்டபங்கள்”

“குடிசைக்கிடுகு மறைப்புக்கள் – அவை போராட்ட ஆயுதங்களஞ்சியங்கள்”

எங்கிருந்து வந்ததென தெரியாமலே வந்திறங்கின துப்பாக்கிகள். இன்று நாம் ப்பூ… என ஊதும் வேட்டைத்துப்பாக்கிகள் தான். அன்று அவைதான் இளைஞர் பட்டாளத்தின் புரட்சிப்போராயுதங்கள்.

வீறுகொண்ட அந்த இளைஞர் கூட்டத்தின் மத்தியில் ஐயா முன்னணி ஆள். ஆயுத வருகை வழி தெரிந்த மிகச் சிலரில் ஐயாவும் ஒருவர்.

கோயில் திறப்பு. தேனீர்க்கடைப் பிரவேசம் என்ற தம்வழியில் புரட்சி செய்தது ஐயாவின் அணி.
சம்பந்தி போசனம் செய்யும் மிதவாத தலைமைகளை ஆதிக்க சக்திகளின் அடியொற்றிய பிற்போக்காளர் என்று கேலி பேசியது ஐயாவின் அணி.

ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக பக்கம் சாய்ந்தது உள்ளுர் காவல்துறை. பக்கம் சார்ந்த சிவப்புச் செல்வாக்கை பயன்படுத்திச் செயற்படுத்தி பெருமை கொண்டது ஐயாவின் அணி,

ஐயாவுடன் அணி சேர்ந்த மைத்துனன் – ஐயாவின் அன்புச்சகோதரியின் வாழ்க்கைத்துணைவன் – தன் இளம் வயதில் தான் வரித்துக்கொண்ட “புரட்சியில் வீழ்ந்ததாலோ – என்னவோ? ஐயா தன்விதவைச் சகோதரியை கண்முன்னே எதிர்கொண்டதாலோ என்னவோ? தன்மைத்துனனின் சாவுக்கு தமிழ்த்தேசியவாத தலைமைகள் நீதி தர மறுத்ததாலொ என்னவோ? ஐயாவுக்கு தமிழ்த் தேசியவாதப்போக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே தெரியவில்லை.

மறுபக்கத்தில் தமிழ்த்தேசியவாதம் முனைப்புப் பெறவேண்டியது காலத்தின் கட்டாயமாகியது. “கலவரங்கள் என்ற பெயரில் தமிழினப் படுகொலைகள்” , “குடியேற்றங்கள்” என்ற பெயரில் தமிழ் “நில அபகரிப்புக்கள்” என்ற சிங்களம் தன் ஆதிக்க வலையை விரித்தது.

“ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது தவறா?” என்பது அந்தக்காலத்து தமிழ்த்தேசியவாத முழக்கம்.
“ஆதிக்க சாதிகள் மீண்டும் எங்களை ஆளவிடமாட்டோம்” என்று சாதியக் கருத்துக்களால் பதில் முழக்கம் இட்டனர் ஐயாவின் தலைமையில்

ஆக மொத்தத்தில் ஐயா முழு இலங்கையும் இணைந்த சமதர்ம சோசலிச நாடு உருவாகும் என்பதில் உறுதியான நம்பிக்கையே கொண்டிருந்தார்.

காலஓட்டத்தில் ஐயா காதலித்து கரம் பிடித்து, குடும்பப் பொறுப்பாக ஆகினார், ஐயா நம்பிய புரட்சியும் மெல்ல மெல்ல ஓய்ந்துபோக, சமகாலத்தில் தமிழ்த்தேசிய வாதமும் ஆயுத முனைப்புப் பெற்றது ஐயா, அதன் வீச்சையும், வீரியத்தையும், கூர்ந்து கவனித்த போதும் அவரால் அதனுடன் ஐக்கியமாகத்தான் முடியவில்லை. தமிழ்த்தேசியத்தின் மீது சிங்களக் கொடூரங்களை அவரால் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடிந்த போதும் இதற்கெல்லாம் தீர்வாக அவர் நம்பிய அந்த செம்மைப்புரட்சி இலங்கைத்தீவை சிங்களமும், செந்தமிழும் இணைந்த, சொர்க்கபுரியாகவே ஆக்குமென அவர் நம்பினார்.

ஐயா எப்போது எப்படி மாறினார் என்று அவருக்கே தெரியாது. குடும்பச் சுமை அழுத்த அவர் பணிபுரிந்த இடத்தில் என்னென்ன பணியுண்டோ அத்தனையும் செய்தார். அதற்கிடையிலும் அவரது தொழிற்சங்கப் பிரச்சினையோ என்னவோ வந்து தொலைக்க அங்கிருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டுப்போனது. ஐயாவின் நல்ல மனதுக்கு முன்னர் அறிமுகமாக இருந்த செஞ்சோனைத்தொடர்பு ஒன்று கைகொடுத்தது. ஐயா இப்போது பெரிய புத்தகசாலை ஒன்றின் விற்பனையாளர். ஐயாவிடம் சமதர்மவாதிகள் முன்பு ஏற்படுத்தி விட்டிருந்த வாசிப்புப் பழக்கத்திற்கு நல்ல தீனி.

ஐயா பொறுப்பான நேர்மையான மனிதர் என்பதால் ஐயாவை பணியாளராக நடாத்த உரிமையாளர் விரும்பவில்லை. அங்கு ஐயா ஒரு கௌரவமான மேற்பார்வையாளர். காசு விடயங்களைத் தவிர புத்தகசாலையே கிட்டத்தட்ட ஐயாவின் கையில்தான்.

இவ்வளவு காலமும் ஐயா ஒரு பக்க சிந்தனையில் படித்து விட்டாரோ என்னவோ, இப்போது புதிது புதிதாக எவ்வளவோ படிக்கப் படிக்க ஐயா கொஞ்சம் கொஞ்சமாய் மாறினார். தேசிய நீரோட்டத்துக்கு, தமிழ்தேசிய நீரோட்டத்திற்கு அடித்து வரப்பட்டார். வந்துவிட்டார்.

முன்பெங்கள் ஈழத்துப் புதுக்கவி தென்னிலங்கைத் தோழனுக்கு எழுதிய கடிதவரிக்கவிதை போலவே “தத்துவங்கள் எல்லாமே சரி, ஆனால்… நடைமுறைதான் ஒத்துவரவில்லை. ஒன்றாக்க முடியவில்லை” என்று ஐயாவின் மனமும் முடிவை எடுத்தது. தமிழ் இனம் மீதும் தமிழ் நிலம் மீதும் சிங்களம் தொடுத்த கொடும் செயற்தொடர்ச்சியால் சிங்கள தேசம் ஐயாவை மாற்றியே விட்டது.

அந்தக்காலத்து எல்லா உரிமைகளையம் கூர்ந்து கவனித்து உண்மைச் செயற்பாட்டுத் தலைமையை அடையாளம் கண்டு, ஐயா விடுதலைப்புலிகளது உள்ளுர் ஆதரவாளராகி ஊருக்குள் வேலை செய்யத் தொடங்கிவிட்டார்.

இதற்கிடையில் திலீபனின் உண்ணாவிரதம் தொடங்கிவிட அந்தக்காலத்து வெகுசன எழுச்சியில் ஐயாவும் முன்னின்று செயற்பட்டார். திலீபனின் உண்ணாவிரதம் சார்ந்த அனைத்து பத்திரிகைச் செய்திகளையும் வெட்டி ஒட்டித் தொகுத்து அழகுற கோவையாக்கி தேசியத்தலைவருக்கு என்ற அனுப்பி வைத்து காத்திருந்தார் ஐயா. “அத்தொகுப்பு கிடைத்ததெனவும், அருமையான ஆவணம்” எனவும் நன்றி சொல்ல ஆள் வந்தது என்பது இன்றும் மறக்காத அனுபவம் ஐயாவுக்கு.

ஐயாவிடம் மகனைப்பற்றி ஏராளமான கதைகள்.

“ஆகச்சின்ன வயசில அவனுக்கு கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுக்க அப்பாதான் வேணும். அவன் கதைக்க தொடங்கேக்கையும் முதல் “அம்மா…” சொல்லேல்லை. “அப்பா” தான் சொன்னவன். தாய் அப்பவே செல்லமாய் பேசிறவள். நான் பெத்து வளர்க்க நீ அப்பா… அப்பா.. எண்டுறியோ என்று”

“சும்மா பொய்யச் சொல்லக்கூடாது…. உண்மையில் நான் அவனை ஓராட்டி வளர்க்கேல்லைத்தான். ஆனா அவனுக்கு என்னில்தான் ஒரே பாசம்” அப்போது செய்யவில்லை என்பது இப்போது பிள்ளையே இல்லை என்றான காலத்தில், ஆற்றாமையுடன் சேர்ந்த சோகமாய், ஐயாவை எரிக்கும்.

ஐயாவுக்கு பிள்ளையில் பாசமாய், பிள்ளைக்கு ஐயாவில் பாசமாய், சொல்வதற்கு எவ்வளவோ கதைகள் ஐயாவிடம், அவனைப்பற்றிக் கதைப்பதென்றால் ஐயாவுக்கு பொழுது போவதும் தெரியாது, நாட்போவதும் தெரியாது.

“ஒருமுறை ஐயா அலுவலாய் கொழும்பில் நிற்கையில் இங்கு யாழ்ப்பாணக் கிராமத்தில் மழை பெய்ததாம். உடனே வீட்டினுள் இருந்த குடையை எடுத்துவந்து அதை கொழும்பு போய்க் கொடுத்துவிட்டு வரும்படி சொல்லி தமக்கையுடன் ஒரே சண்டையாம் அவன். இதைச்சொல்லி பெரிதாய் சிரித்துவிட்டு, சிரிப்பு ஓயும்போது அழுதுகொண்ருப்பார் – ஐயா
அவன் சிறுபிள்ளையாய் இருந்த காலத்தில் அவனது கண்ணுக்குள் சுண்ணாம்பு விழுந்ததையும், அவன் குழறி அழுததையும், கார் பிடித்து பெரியாஸ்பத்திரிக்குப் போனதையும், ஐயா சொல்வது ஏதோ நேற்று நடந்த விடயம் போலிருக்கும். அவர் கண் நீர் நிறைவது பார்க்க, ஏதோ விழுந்தது அவர் கண்ணிலோ என்றிருக்கும். இருபதிருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் பிள்ளைக்கு கண் சுகமாக்கிய அந்த வைத்தியரின் பெயரை நினைவில் வைத்து வலு கெட்டிக்கார ஆள் என்ற சொல்பவர் ஐயா… அதில் அவரது நினைவாற்றலைவிட அவரது பிள்ளைப்பாசமே மறுவளமாய் வெளிப்படும்.

மகனை நினைத்தால், ஐயாவுக்கு எப்போதுமே பெருமைதான்.

சின்ன வயசிலேயே உறவுக்காரர்களின் பலசரக்கு கடையொன்றில் உதவியாளனாகச் செயற்படத் தொடங்கிவிட்டான் மகன். அந்த வயசிலே பாமரக்குடிசைச் சூழலில் வளரவிட்டால், பிள்ளை விளையாட்டுத்தனமாகவே இருந்து விடுவான் என்ற கருதி ஐயா செய்த ஏற்பாடு அது.

பக்கத்து ஊர்க்கோயில் திருவிழாவுக்கு கடலைக்கொட்டை வாங்க சிறு பணத்திற்கும் கடைக்காசில் கைவைக்காமல் அப்பாவிடம் தான் வருவான் பிள்ளை என்பதிலும், மிச்சக்காசை கொண்டுவந்து அம்மாவிடம் பத்திரமாய் தருவான் என்பதிலும், ஐயாவுக்கு பெருமை. “அந்தக் காலத்தில் ஊர்ச்சபைகளிலே தனாதிகாரியாக இருந்தனான் எல்லே அந்த நேர்மையும் சிக்கனமும் தான் பிள்ளைக்கும்” என்பார்.

“என்ர பிள்ளை நல்லாப்படிப்பான். எங்கட குடும்பத்தில, ஏன் எங்கட ஊரிலேயே கணக்கில “டி” எடுத்தவன். அவன் ஒருத்தன் மட்டும் தான். நான் வேலை செய்யேக்கை “ஒவ்வீசில” சொல்லுறவை நான் கணக்கில புலி எண்டு அந்த மூளை அப்படியே அவனுக்கு என்ற சொல்வதில் ஐயாவுக்கு பெருமை.

“அவன் எல்லாத்திலையும் வலு கெட்டிக்காரன். எப்பவும் ஒவ்வொண்டையும் ஆராய்ந்து கொண்டுதான் இருப்பான்.
சின்னப்பிள்ளையிலேயே ஒரு றேடியோவை துண்டு துண்டா கழட்டிப்போட்டு அப்படியே பூட்டுவான்” என்று சொல்லிப் பெருமைப்படுவார் ஐயா.

“எல்லாத்திலேயும் ஆகலும் புழுகக்கூடாது. சின்னவயசில அவனுக்கு சரியான பயம். ஏதும் பிரச்சனை எண்டா ஆள் எங்கையின் ஒளிச்சிடுவான். இப்படித்தான் ஒருக்கா பக்கத்தில ஒரு குடிகார மனுசன் வெறியை போட்டுட்டு கையில ஒரு கத்தியை வைத்துக்கொண்டு கத்தினான் பாவி. பாவம் இவன்பிள்ளை, வீட்டுக்குள்ள ஓடி வந்து கட்டிலுக்குள் கீழதான் ஒழிச்சவன்.”

மகனைப்பற்றி சொல்வதற்குத்தான் ஐயாவிடம் எத்தனை கதைகள்.

Lieutenant-Colonel-Navam-Father-2.jpg

ஐயா ஒரு நாள் புத்தகக்கடையால் வீட்டுக்கு வர வழியிலேயே மறித்து செய்தி வீட்டைச்சுற்றி ஆட்கள் கூட்டம். “மூத்தவன் இயக்கத்திற்கு போட்டானாம்.” “இப்ப இஞ்ச என்ன நடந்து போச்சுது என்று எல்லாரும் வந்திருக்கிறியள்” என்று எல்லாரையும் பேசி அனுப்பியது. “நான் போய் அவனை கூப்பிடமாட்டன்” என்று கூறி அம்மாவிடம் பேச்சு வாங்கியது, அந்த ஊர் பிரதேசப் பொறுப்பாளரிடம் போய் ‘வீட்டில் ஒருஆள், போராடத்தான் வேணும். ஆள் நிக்கட்டும்” என்று சொல்லிவிட்டு வீட்டில் வந்து கம்மென்றிருந்தது – அம்மா அவனைத்தேடி முகாம்கள் எல்லாம் அலைந்தது. – கடைசியில் கோண்டாவிலில் ஆஞ்சநேயரின் அலுவலகத்தில் போய் நிற்க, அவர் உள்ளநாட்டு விளக்கமெல்லாம் கொடுத்து அனுப்பியது அந்த நேரம் பார்த்து அந்த முகாமிற்கு பொம்பர் வந்து அடிக்க, ஆஞ்சநேயர் அம்மாவையும் இழுத்துக்கொண்டு பங்கருக்குள் ஓடியது – என்று மகன் இயக்கத்திற்கு போனதைப்பற்றியும் எத்தனையோ கதைகள்.

ஆக மகன் இயக்கமாகிப்போனான். அப்பாவுக்கு மூத்தவன் இயக்கமானதில் கொஞ்சம் பெருமையும் குடும்பச்சுமையும் கலந்ததான உணர்வுக்கலவை. இடையில் எங்கோ ஒரு முகாமில் மகன் நிற்கிறான் என்ற கேள்வியுற்று அங்கு சென்றதும், ஆள் இல்லை என்று கூறி கொண்டு சென்ற பலகாரத்தை அங்கு நின்ற பிள்ளையளிடம் கொடுத்துவிட்டு வந்ததுமான வழமையான சம்பவங்கள். பெடியன் எங்கேயோ கழிச்சு கச்சேரியடியில் பழைய பூங்கா முகாமில் நிற்பதை அறிவிச்சதும் ஐயாவும் பெட்டி கட்டிக்கொண்டு போய் ஆளைச் சந்தித்ததும் வீட்டில் இருந்த சின்னப்பெடியன் வரி உடுப்போடை பெரியாம்பிளையாய் சிரித்துக்கொண்டு வந்ததும், ஐயாவால் இன்னும் மறக்கமுடியாத ஞாபகங்கள்.

எல்லாரையும் போல சண்டையில் நின்ற அவன் – ஐயாவின் மகன் – ஒரு நல்ல போராளி. முக்கியமானதொரு சமரை அண்டிய நல்லதொரு பொழுதில் அவன் தனித்த பணிக்கு தெரிவானான். ஐயாவின் பெருமைக்கெல்லாம் பொருத்தமான நல்லதொரு பிள்ளை அவன். கடும்பயிற்சியில் இருந்த அவனது அணியில் அவன் தான் கொஞ்சம் நோஞ்சான். நண்பர்களுக்கிடையே விளையாட்டாக ஒருமுறை கால் தடக்கி விளையாட, கீழே விழுந்த இவன் இசகு பிசகாக கையை ஊன்ற, கை உடைந்துபோனது. கை உடைந்தது காலத்தின் செயலானது. அவனுக்கு அது என்ன காலமோ? தமிழ் இனத்திற்கு நல்ல வாய்ப்பானது. கை உடைந்தவன் கடும் பயிற்சி அணிக்கு பொருத்தமின்றி வெளியேற்றப்பட்டான்.

அவனது விடாப்பிடியான ஆர்வ நெருக்குதலும், தகமையும் ஒன்று சேர குறுகிய தனிநபர் பயிற்சியுடன் ஆள் கொழும்புக்கு நகர தெரிவாகி விட்டான்.

அந்த இடைக்காலத்தில் அவன் பழைய மோட்டார் சைக்கிள் ஒன்றில் வீட்டுக்குச் சென்று அம்மாவுக்கு ஏதோ பொய் சொல்லிவிட்டு ஐயாவுக்கு கொழும்பு வேலைக்கு செல்லவுள்ளதை சொல்லி உதவி கேட்டான். தான் கொழும்பில் மாறிச்சாறி நிற்கவும். உதவிபெறவும், ஆக்களை அறிமுகம் செய்ய வேணுமாம். ஐயா அதிர்ந்துதான் போனார். அவன் போராளியானதை அங்கீகரித்தவர் தான். ஆனாலும் கொழும்பில் அங்கு கண்காணாத இடத்தில், அவ்வளவு ஆபத்திற்கு மத்தியில், முன்பின் ஒருதரம் கூட கொழும்புக்கு போயிருக்காத இவனா? என்ர பிள்ளையா?

அப்படி ஒரு முகவரியை கொடுப்பது அவனது ஆபத்தான பயணத்தை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என்று கருதினாரோ அல்லது அன்று அவருக்கு இருந்த புரிதல் நிலைக்க அப்படியான முகவரி ஒன்றை தெரிவு செய்ய முடியவில்லையோ? என்னவோ? ஐயாவால் அன்று அவனுக்கு அப்படி ஒரு அறிமுகத்தைக் கொடுக்க முடியவில்லை.

ஐயா மறித்து, நிற்கிற பிள்ளையா அவன்? அவன் தன் பயணத்தில் புறப்பட்டுவிட்டான்.

காலம் ஓடும். காலம் ஓட தனி மனிதனைச் சார்ந்த பொறுப்புக்களும் மாறும், சிலருக்கு ஓய்வு வரும், வேறு சிலருக்கோ ஓய்வில்லா நிலைமை வரும். ஐயாவுக்கும் அப்படித்தான். பிள்ளைகளை அதீத அக்கறையுடன் வளர்க்க விரும்பும் ஒரு தந்தைக்கு அடுத்தடுத்த பெண் பிள்ளைகள் வளருவதும், போராட்டச் சூழலால் அடிக்கடி மாற்றம் அடையும் வாழ்க்கை நிலையில் குடும்பத்தை பராமரிப்பதும், சாதாரண காரியமில்லையே. அதுவும் ஒரு மனிதனின் உழைப்பில் ஏழெட்டுச் சீவன்கள் வயிறாற வேண்டியதான நிலமை என்றால், சொல்லவும் வேண்டுமா?

அம்மாவுக்கு ஐயாவை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரே பேச்சும் திட்டும்தான். ஐயாவில அம்மாவுக்கு ஒரு கோபமும் இல்லை. வயதாகியும் மாறாத தீராத அன்புதான். அந்தக்காலத்தில் ஊரில் சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாகப் பேசப்பட்ட காதல் சோடி அவர்கள். அந்த அன்பில் இன்றளவும் எந்தக் குறையும் இல்லைத்தான், இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் கோபமே ஐயா படும் கஸ்ரத்தைப் பார்த்துத்தான்.

அம்மா மூத்தவனின் அனுசரணையை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டா. பெடியனை இத்தனை நாளாகக்காணவில்லையே? எங்கே அவன்? இயக்கத்தில் இருக்கிற மற்றப்பிள்ளைகள் வருடத்திற்கொரு தடவையாவது வந்து போவார்களே? ஏனிவன் வருவதில்லை? அம்மாவின் கேள்விகள் அம்மா அளவில் தவிர்க்கவும் முடியாதவை.

இந்தாள் ஏன் பெடியனைத் தேடுவதில்லை. அங்கங்கே இயக்கத்திடம் போய் உதவியாவது கேட்கலாமே? போராளி குடும்பமென்று எல்லோரும் தானே உதவி கேட்கிறார்கள்? ஏன் இந்த மனுசன் போய்க்கேட்பதில்லை. அம்மாவின் நியாயமான ஆதங்கம், ஐயாவில் வெடிக்கும். அம்மாவுக்கும் கோபிப்பதற்கு வேறுயாருள்ளனர்.

ஐயாவுக்கோ, இரண்டு பக்க இக்கட்டு. பெடியனோ கொழும்பில் இங்கு தேடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தவிர போராளி குடும்பமென்று உதவி பெறுவதில், ஏனென்று தெரியாது. அதைச் செய்ய ஐயாவால் முடியவில்லை.

அவ்வப்போது அம்மாவின் தொணதொணப்பு தாங்க முடியாததாகிவிடும். அந்த நேரங்களில் ஏதாவது கதையை எடுத்துவிட பழகிவிட்டார். ஐயா “மகனை எங்கையாவது ஓரிடத்தில் கண்டதாகவோ” இன்னொருவர் கண்டு சொன்னதாகவோ” நிலமைக்கேற்ப பொய்களாக கதைகள் உருவாகும்.

ஐயாவின் வாழ்வு – புத்தகக்கடையுடன் ஓடும்,

புத்தகங்களும், பத்திரிகைகளும் செய்திகளும், ஐயாவின் வாழ்வுடன் இணைந்த அம்சங்களாகி விட்டன. அதிலும் கொழும்புப் பத்திரிகைகள் ஐயாவுடன் உயிர்த்துடிப்புடன் இணைந்தவையாகி விட்டன. தொழில் என்பது ஒருபுறம் இருக்க, அவற்றில் மகனின் உயர் வாழ்வின் செய்தி அல்லவா வரும்.

பத்திரிகை என்றால் அதில் எவ்வளவு செய்தி வரும். அவரது மகனை வைத்திருந்த கொழும்பும் என்ன அமைதியாகவா இருந்தது. உண்மையும், எதிரியின் அதீத பயமும், கலந்த முனைப்புகளுமாக செய்திகள் வராமலா போகும். கையில் கிடைத்தவுடன் நடுநடுங்கும் கரங்களுடன் பத்திரிகையை விரிப்பார் ஐயா – எவ்வளவு கொடுமையானவை இந்தப் பத்திரிகைகள். அங்கொருவர் சயனைட் அருந்தியதாகவும், இன்னொரிடத்தில் சிலர் பிடிபட்டதாகவும், வேறோர் இடத்தில் சுற்றிவளைப்பு நடந்ததாகவம் வரும் செய்திகள். ஐயாவின் மனம் பதைபதைக்கும். ஐயோ அது என் மகன் இல்லையோ, அங்கு என் மகன் இல்லையோ? என்று கிடந்து தவியாய்த் தவிக்கும் தந்தை மனம்.

யாரிடம் கேட்பார் ஐயா? இந்தவகை செய்திகள் வராத பத்திரிகைகள் தான் நல்ல பத்திரிகைகள் என்றும், மற்றவை கெட்ட பத்திரிகைகள் என்றும், தரம் பிரிக்கும் மனம், என்றாலும் கெட்ட பத்திரிகைகளை நோக்கியே நீளும் கரம். இந்த வகைச் செய்திகளைப் படித்து வீட்டுக்குப்போனாலும் மனம் அமைதியா கொள்ளும். ஐயாவின் குழப்பம் அறியாது தொடங்கிவிடுவா அம்மா. “இந்த மனுசனுக்கு பிள்ளையைப்பற்றி ஏதேனும் யோசனை இருக்குதே”

அம்மாவின் மென்மனம் அறிவார் ஐயா – தன்மனப் பதைபதைப்பின் சிறு துளியும் தாங்காத தாய்மனத்து மென்மை அறிவார் ஐயா – எல்லாம் எனக்குள்ளே என்று – தானே சுமப்பேன் எல்லாமே என்று – தானாய் சுமந்து, தவியாய் தவிப்பார் ஐயா – அம்மா தொடங்கி விடுவா. “ஐயோ என்ர பிள்ளை எங்கை எண்டு ஒருக்கா விசாரியுங்கோவனப்பா…” ஐயாவும் தன் மனப்பதைப்பு மறைத்து. அம்மாவுக்கு சொல்ல தேடுவார் புதிய கதை ஒன்று.

அந்த வீரன் கொழும்பில், தந்தை தன் மகனைப்பற்றி பெருமைப்படும். எல்லாவற்றிலும் அங்கு தன்னை அடையாளம் காட்டினான். அங்கு அவனுக்கு அவனே முதலாளி, வழிகாட்டி, பொறுப்பாளன் எல்லாம்.

அவனிடம் அந்த தனித்த செயற்பாட்டுக்கு தேவையான பக்குவம் இருந்தது. ஆரம்பத்தில் எல்லோரையும் போல கொழும்பை பார்த்து திகைக்கவும் இல்லை. இவனுக்கு அமைந்துவிட்ட செயற்பாட்டுத் துணையும் அந்தமாதிரி அமைந்துவிட, “சிங்களத்துச் சீமை எங்கள் சிங்கனுக்கு உள்ளங்கையாய் ஆனது”

அவனிடமிருந்த இயல்பான நற்பண்புகள் நண்பர்களைப் பெற்றுக்கொடுத்தது. ஆக மொத்தத்தில் அவன் ஆரம்பத்தில் தனக்கு கூறப்பட்ட இலக்கை தொடும் வாய்ப்பைப்பெற்றே விட்டான்.

“சிங்களத்து ஆக்கிரமிப்புணர்வின் முக்கிய வேரில ஒன்று, அதுவே முதன்னை வேர்” ஆகவும் கூடும். அவனது பணித்தெரிவு அதுவே.

“உடல் உழைத்து உயிர் விதைத்து, காடு திருத்தி, நாடு சமைத்து காலாதிகாலமாய் எம்தமிழர் வாழ்ந்திட்ட ஊர்மனைகள்”
“கணநேர ஆக்கிரமிப்பில் அத்தனையும் சுட்டெரிந்து அகதிகளாய் ஆக்கிவிட்ட கொடுங்கோலன்”

“தம்நாட்டை விற்றேனும் எம் நாட்டை விடாதழிக்க சிங்களத்தை விலை பேசும் சீரில்லாப் புத்திசாலி”

“எம்மினத்து உயிர்களை ஆயிரமாய் கொன்றொழித்த கொடுங்கரம் இதிகாசத்து கோலியாத் போல கொடுங்கோலன் சிங்களத்து கொடுங்கோலன்”

“அடக்குமுறைக்குள்ளான மக்களது தாவீது போல, ஈசாயின் இளையமகன் தாவீது போல் ஐயாவின் மூத்தமகன் தாவீது – எங்களது தாவீது”

“தாவீது – திரும்பி வரும் திட்டமில்லாத் திடமனது வீரன். வாய்ப்பான சூழலில், வாகான வேளையில் அவன் கைக்கவண் கொடுங்கோலன் கதைமுடிக்கும்”

“இன்றென்றெண்ணி கவண் மறைத்துக் காத்திருப்பான் தாவீது. ஒன்றது பொருந்த இன்னொன்று பிசகும்.
கவண் மறைந்து தளம் சேர்வான், மனம் சோராத் தாவீது”

“கொடுங்கோலன் கோலியாத் தாய் மண்ணில் இட்ட தீ அவன் மனதெல்லாம் எரிக்கும். சோரான் தாவீது, ஓயான் தாவீது”
“காத்திருந்து பார்த்து கதை முடிக்கும் கவண் ஏந்தி களம் புகுந்தான் தாவீது”

“தாவீது வெல்வான் – கோலியாத் வீழ்வான் வென்ற தாவீது முழக்கமிட்டு வருவான் அவனை வரவேற்க அவனது மக்கள்… அது இதிகாசத்துக் கதை”

“இது நடைமுறை யதார்த்தம் இங்கும் தாவீது வென்றான், கோலியாத் வீழ்ந்தான்”

“ஆனால் தாவீது வரவில்லை, எங்கள் செல்வன் வரவேயில்லை. வித்தாகி வீழ்ந்தான்”

சிங்களத்தின் மலையான மலை சரிந்து வீழ்ந்தது. செய்தி கேட்டு நிமிர்ந்தார் ஐயா. நாளும் பொழுதும் ஐயாவை நடுநடுங்கி பதைபதைக்க வைத்த அந்த எதிர்பார்ப்புச் செய்தி வந்தே விட்டது. எந்தப் பத்திரிகையை தான் பார்த்து விடக்கூடாது என நினைத்திருந்தாரோ அந்த கொடியதிலும் கொடியதான பத்திரிகை, ஐயாவின் கரம் சேர்ந்தே விட்டது.

“மலையான மலையைப் புரட்டிப் போட்ட மாவீரன் என்பிள்ளையா?”

“ஐயோ! ஆதரிக்க யாருமின்றி சிங்களத்து வீதிவழி வீழ்ந்தது என் மகனா?”

“எம் இனத்து உயிர் குடித்து உலாவி வந்த பகை முடித்தான் அவன் என் மகனா?”

“ஐயகோ! துணைக்கு வர யாருமின்றி துடிதுடித்து வீழ்;ந்தது என் மகனா?”

ஐயாவுக்கு பொறுக்க முடியவில்லை யாருக்குத்தான் பொறுக்கமுடியும்? உதிரத்தில் உதித்து, தோளில் சுமந்து, கனவெல்லாம் குவித்து வளர்ந்த பி;ளளையல்லவா. அவன் எங்கோ தூரத்தில் யாருமற்ற அனாதையாய்… துணைக்கு யாருமின்றி, வீதிவழி துடிதுடித்து, வீழ்ந்திறந்து போனது கண்டால், யாருக்குத் தான் பொறுக்கமுடியும். ஐயாவின் நிலைமை யாருக்குமே வாய்த்திருக்காது. உலகமே அவனையும், அவனது தீரத்தையும் பேசிய போதும், யாருடனும் எதுவுமே பேசமுடியாதவராய் ஐயா. ஐயா யாருக்கும் ஏதுவும் சொல்லவே இல்லை சின்னதாய் செய்தி தெரிந்து தகவல் தர வருவோரையும் ஐயா கவனமாய் கையாண்டார். அம்மாவுக்கோ, மற்றப் பிள்ளைகளுக்கோ எதுவும் தெரியாது.

ஐயாவும் மகனது செயற்பாட்டு வட்டத்துடன் தொடர்பு கொண்ட உதவியாளராகி விட்டார். மகனது பொறுப்பாளர் வட்டத்தையும் தெரியும், அவருக்குத் தெரியும் என்பதை விட அவரது பணி மற்றும் பத்திரிகைத்துறை ஈடுபாடு காரணமாய் பரீட்சயமும் கூட, அடிக்கடி அவர்களை காணவும் செய்வார். அவர்களுக்குத்தான் ஐயாவைத் தெரியாதே. அவர்களைப் பொறுத்தவரை ஐயா ஒரு இயக்க அபிமானி அவ்வளவே.

காலம் அதுபாட்டுக்கு ஓடும். பிள்ளைகள் வளர்வார்கள், போராட்டசக்கரமும் நகரும், ஐயாவின் வாழ்க்கையும் நகர்ந்தது. ஐயா வாழ்க்கைச்சக்கரத்தை கடும் வலிமை கொண்டு இழுத்து நகர்த்தினார்.

ஐயாவுக்கு எத்துணை மனவலிமை, இடம்பெயர்வுகள், ஒன்றா, இரண்டா, யாழ் மண்ணிலேயே ஒன்றுக்கு பலதடவை, அதன் பின்பும் மீண்டும் சிங்களப்பேய்களின் துரத்தல், ஒவ்வொரு இடம்பெயர்வுக்கும் அம்மாவின் தொணதொணப்பு தாங்க முடியாததாகி விடும்.

“அவன் தம்பி இப்ப இருந்தால் நாங்கள் இப்படிக் கஸ்ரப்படுவமே”

“அவன் தூர நிண்டால், அவன்ர ஆக்களிட்ட போய் எண்டாலும் உதவி கேளுங்கோவன் அப்பா”

ஐயாவுக்கு இப்போது அம்மாவை சமாளிப்பதும் பெரிய வேலையாகி விட்டது. ஒரே காரணத்தையும், எத்தனை நாட்களுக்குதான் சொல்வது? ஐயா சொன்னாலும் தான் மனுசி நம்பவும் வேண்டுமே. புதிதுபுதிதாக காரணங்கள் கண்டுபிடிப்பார். இந்தப் பத்திரிகை தொடர்ந்து படிப்பதால் அது ஒரு வசதி. நம்பக்கூடிய கதைகள் புதிதுபுதிதாக உதிக்கும். மகன் திருகோணமலை, மட்டக்களப்பு என்ற கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து போக, ‘வெளிநாட்டிலும் இயக்கம் இருக்குது தெரியுமே’ என்றும் கதைவிடவசதி.

“வெளிநாட்டில எண்டாலும் இந்தப் பெடியனுக்கு ஓர் கடிதம் போட மனம் வரேல்லையாமோ?” என்ற கேள்வி பதிலுக்கு வரும்.

“நான் என்ன போய்ப் பார்த்தனானே? கேள்விப்பட்டதுதானே” என்று மடக்கிவிட்டு “இயக்கத்துக்கு கப்பலுகளும், எல்லோ இப்ப ஓடுதாம்” அப்பிடியானா முக்கியமான இடங்களில நம்பிக்கையான ஆட்களை தான் விடுவினம். எப்பிடியும் எங்கட பிள்ளை நாடு கிடைச்சாப் பிறகு தான் வருவான்” என்பார்.

பிள்ளைகளை இழந்தோரின் துயரத்திற்கு ஒன்றுமே ஈடாகாதுதான். ஆனாலும் விடுதலைப்போரில் பிள்ளைகளை இழந்தோருக்கு சமூகத்தின் அனுசரணையும், ஒரு ஆறுதலான விடயம், சிலவேளைகளில் மாவீரர் குடும்பம் என்ற வகையில் இயக்கமும் ஒரு சிறு அனுசரணையைத் தரக்கூடும். ஆனால் ஐயா அந்த அனுசரணையையும், ஆறுதலையும் விட இவனது இலட்சியத்தின் பெறுமானத்தைப் பார்த்தார். அவனது செயலின் விளைவு சிங்களத்தை அன்றுடன் விடாது இன்றும் தொடர்வதைப் பார்த்தார்.

தனிமனிதனை நிலைகுலைய வைக்கும் எத்தனையோ நெருக்கடிகள், ஐயாவுக்கு இடம்பெயர்வின் பின் பத்திரிகை அனுபவத்தால், இயக்கத்தில் பத்திரிகை சார்ந்த வேலைதான் கிடைத்தது. அங்கும் விடாமல் துரத்தி வரும் மனது செய்திகள்.
இடம்பெயர்ந்து வந்து ஐயா குடியிருக்கும் காணி – இரவற்காணி-மாவீரர் குடும்பத்தேவைக்காய் குடியெழும்பச் சொல்லும், “நாங்களும் போராளி குடும்பமெண்டு சொல்லுங்கோவனப்பா” எனும் மனைவியை அதட்டி அடக்கும் ஐயாவின் குரல்.

வரிசையான இடம்பெயர்வின் போது ஒருமுறை மகனது செயற்பாட்டுப்பயிற்சிக்கால, தங்குமிடக் குடும்பம் ஒன்றுடன் முட்டுப்பட்டுப்போனா அம்மா, இன்னாரின் குடும்பமென்றறிந்து பெருவரவேற்பு அங்கு. மகனது நிலவரத்தை ஓரளவறிந்த அவர்கள் தங்களது வசதியானதொரு வீட்டை இவர்களுக்கு அப்படியே கொடுக்க முன்வர விடயமறிந்து மறித்து விட்டார் ஐயா.

மகனுடன் பழகிய தோழர்கள் வருவார்கள், மகனின் சாதனையால் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பை. வேற்று மனிதனிடம் கேட்பது போல் கேட்பார்கள். ஐயா தன்னுயிரையே தாங்கிக் கொடுப்பார். பார்ப்பார்கள், போட்டுவிட்டுப்போவார்கள்.
“பணிமனையில் பணி நெருக்கடியும் பண நெருக்கடியும் சேரந்;து வரும். மாவீரர் போராளி குடும்பமென்று ஐயாவைத் தவிர, சிலர் மட்டும் அதனுள்ளும் சின்னதாய் ஒரு ஆறுதல் பெறுவர்”

“மகனது நினைவு நாள் வரும், ஒன்றுமறியாத வீடு கலகலத்திருக்கும், ஐயா மட்டும் அழுவார். யாருமறியாமல் அழுவார்”

“அந்த நினைவு நாளில் யாருக்கும் தெரியாமல் அழுது, ஓய்ந்து அவன் பெயரில் கோவில் வழிபாடு செய்து, பணிமனை வந்துசேர நேரம் கடந்துவிட்டிருக்கும். ஐயாவின் பணிமனைப் பதிவேடு வரவின்மை எழுதியிருக்கும்.”

மாவீரர் நாள் வரும். சோகமும், வீரமும், எழுச்சியுமாய், வீடெல்லாம் புதுக்கோலம் பெறும். அந்த மணி கசிந்துருகிக் கண் சொரிவர் பலர். குமுறி வெடித்துக் கொட்டி அழுவர் இன்னும் சிலர். ஐயாவின் குடும்பமும் நெஞ்சுருகிப் போய் வரும்.

மண்ணிழந்து போன தன் மாவீர மகனை எண்ணி வீட்டில் தனித்திருந்து வெடித்தழுது ஓய்வார் ஐயா.

தனிமனிதனை நிலைகுலையவைக்கும் நெருக்கடிகள் தான், ஐயா தன்னை தனிமனிதனாய் நினைப்பதில்லைப் போலும். அவருள்ளே அவன் அவரது உதிரத்தில் உதிர்ந்து உலகை வியக்கவைத்த பிள்ளை அவன் சாகவில்லை. ஐயாவுள் வாழ்கிறானந்தப் பிள்ளை.

ஐயாவும் காத்திருக்கிறார். அவருக்கொரு வாய்ப்புக் கிடைத்தால், அவரது பழைய கனவின் நாயகர்களைக் கேட்பார்.

“சிங்களமும் செந்தமிழும் சேர்ந்த சமதர்ம இலங்கை எனும் சொர்க்கபுரி சாத்தியமற்றுப் போனது எவ்வாறென்று”

“ஊரையே எதிர்த்து, பிள்ளைக்கு சிங்களம் படிப்பித்த நான். இன்று சிங்களத்தின் வீழ்ச்சிக்காய் இளைய சந்ததிக்கு பாடம் சொல்கிறேனே – இது எதனால் விளைந்ததென்று”

“இனங்கள் இணையவென நான் சிங்களம் கற்பித்த அதே பிள்ளை, நாடு பிரித்தெடுக்க, சிங்களத்து சீமைக்கு வரவைத்தது எதுவென்று”

“ஊரவன் கத்தலுக்கு பயந்து, வீட்டில் ஓடிப் பதுங்கிய பிள்ளை, தன்னந் தனியனாய் பல்லாயிரம் படை தாண்டி, பகைதேடி அழிக்கத் துணிந்த துணிவை வரவைத்த காரணி எதுவென்று”

இக்கேள்வி எல்லாம் அவர்களிடம் ஐயா கேட்கக் காலம் வருமோ? இல்லையோ? ஆனால் அதே கேள்விகளை அவர்களைப் பார்த்து காலம் கேட்டு, வெகுகாலம் ஆனதே.

குடும்பமே அவனுக்காய் காத்திருக்கும் அம்மா எப்பொழுதும் போல் அவனைத்தேடி அழைத்து வரும்படி ஐயாவை கேட்டபடி காத்திருப்பா. வசதி வாய்க்கும் வேளையில் கோயிலுக்குப் போய் “பிள்ளை நல்லா இருக்கவேண்டுமென அர்ச்சனை செய்தபடி, பிள்ளைக்கு எத்தனை வயசாய்ப் போச்சுது” என நினைத்தபடி அம்மா காத்திருப்பா.”

தங்கை அவள் இப்போது வளர்ந்து விட்டாள். “அப்பாவுடன் தேவையில்லாமல் கொழுவும் குடிகார அயலவரைச் சுட” கொண்டுவந்து தரும்படி கேட்ட துவக்கு அண்ணா தரமாட்டான் என்பதும், துவக்கு உண்மையில் எதற்கு என்பதும் இப்போது அவளுக்குத் தெரியும். அண்ணாவின் அன்புக்காய், அவனது வரவிற்காய் எல்லா சகோதரர்களுடனும் சேர்ந்து காத்திருக்கிறாள்.

ஐயாவும் காத்திருக்கிறார், மகனின் வெளிப்படுகைக்காய், அது தாயகத்தின் விடுதலையின் போதே என்பது அவருக்குத் தெரியும், தாயகத்தின் விடுதலைக்காய் காத்திருக்கிறார் விடுதலை பெறப்போகும் தாயகத்திற்காக, வெற்றி வீரனாய் களத்தில் வீழ்ந்த தனையனின் தந்தையாய் காத்திருக்கிறார்.

சமதர்ம சோசலிச இலங்கை எனும் மாயைக்காய் தோற்ற தந்தையாய் அல்ல… தாயகத்தின் தந்தையாய்…

எழுத்துருவாக்கம்:
ச.பொட்டு
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

நன்றி: வெளிச்சம் – பவள இதழ் (கார்த்திகை, மார்கழி 2001).

 

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

உகண விநியோகக் கப்பல் முழ்கடிப்பும் வீரகாவியமான கரும்புலிகளும்

26.06.2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கான ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் ...

Leave a Reply