செஞ்சேரா…(சுந்தரலிங்கம் அகிலன்)
நீ எங்களின் நீலக் கடலில் சாதித்தவன். உன்னை அறிமுகம் இல்லாத கடற்புலிகள் மிகக் குறைவென்றே நான் நம்புகிறேன். ஏனெனில் அப்படித்தான் உன் பணி இருக்கும். நிர்வாக போராளியாக இருந்த நீ படிப்படியாக ஒரு பொறுப்பாளனாக உயர்ந்ததை யாரும் மறக்க மாட்டோம். 1996 மல்லாவி மண்ணுக்கு நானும் நீயும், எனது குடும்பமும் உனது குடும்பமும் இடம்பெயர்ந்து வந்தோம். உனது தம்பி ( சித்தியின் மகன்) எனது நெருங்கிய தோழனாகிய போது தான் நீ எனக்கு அறிமுகமாகினாய். அப்போதெல்லாம் அகிலன் அண்ணா என்று தான் உனை அழைப்பேன்.
நீங்கள் இரட்டைக் குழந்தைகள். ஒரே வயிற்றில் பிறந்த மற்றவன் நிமலன். உங்கள் இருவரையும் இனங்கண்டு கொள்வது என்பது மிக மிக கடினமான ஒன்று. அடிக்கடி உன்னை நிமலன் அண்ணா என்றும் அவனை அகிலன் அண்ணா என்றும் மாறி அழைத்திருக்கிறேன். உன் தம்பி தான் “டேய் மண்டு அது நிமலன் அண்ணா இல்ல அகிலன் அண்ணா “ என்பான். எப்படியோ நீங்கள் இருவருமே என் அண்ணன்களாகிப் போன நாட்களில் மல்லாவியில் உன் குடும்பமும் என் குடும்பமாகியதை நீ நன்றாகவே அறிவாய்.
நான் நினைக்கிறேன் 1999 என்று. திடீர் என்று நீ காணாமல் போனாய். காரணம் உடனடியாகவே எமக்கு நன்றாகவே தெரிந்தது. நிமலன் அண்ணாவை தனிய விட்டு எப்படி உன்னால் போக முடிந்தது? உன் அக்கா அழுது குழறினா. ஏற்கனவே ஒரு தம்பியையும் தன் கணவனையும் போராட்டத்துக்காக அனுப்பிவிட்டுத் தினமும் கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருக்கும் உன் அக்காவை விட்டு எப்படி போக முடிந்தது? உன் அம்மா பற்றி யோசித்தாயா? அப்பாவின் இறப்புக்கு பின் உங்கள் அனைவரையும் எவ்வளவு போராட்டத்தோடு வளர்த்து வந்தா? உன் குட்டி மருமகள்? இது எதுவுமே உனக்கு அன்று தோன்றவில்லையா அகிலன் அண்ணா?.
ஓ… இது தான் தேசம் மீதான காதலா? உன்னோடு கூடப்பிறந்தவன் மீதான பாசத்தை விட அம்மா அக்கா என்று குருதியில் ஒன்றாகிய உறவுகளின் மீதான அன்பை விட தேசம் மீதான காதல் அதிகம் என்பது இது தானா? நீ உன் காலத்தின் கட்டளையை நிறைவேற்ற நீல வரியுடுக்கத் துணிந்து சென்றுவிட்டாய். உறவுகளோடு நாங்களும் நீ எம்மோடு அருகில் இல்லாத வெறுமையை நினைத்து கஸ்டப்பட்டோம்.
நீண்ட நாட்களுக்குப் பின் நானும் நிமலன் அண்ணாவும் உனைக் காணவென்று கைவேலிப்பகுதியில் இருந்த உன் முகாமுக்கு வந்திருந்தோம். நீ அங்கில்லை மாத்தளன் முகாம் ஒன்றுக்கு சென்றுவிட்டதாக கூறினார்கள். சந்திக்க முடியாத ஏமாற்றத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அந்த காட்டுப்பாதைக்குள் ஈருருளி எம்மை சுமந்து கொண்டு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியை நோக்கி சென்று கொண்டிருக்க உன் பொறுப்பாளர் வந்தார். நீ என்று நினைத்து நிமலன் அண்ணைக்கு சில விடயங்களைச் சொல்ல தொடங்கினார். நிமலன் அண்ணையோ “ அண்ண நான் செஞ்சேரன் இல்லை செஞ்சேரனின் தம்பி நிமலன்” என்றான்.
“ டேய் உங்களோட பெரிய பிரச்சனையடா… என்று புன்னகைத்தார். நாங்களும் புன்னகைத்தபடி நகர்ந்துவிட்டோம்.
மருதங்கேணி மண் தமிழீழத்துக்காக தந்த செஞ்சேரா, திடீர் என்று ஒருநாள் விடுமுறையில் வந்தாய். அந்த குறுகிய விடுமுறை நாட்கள் எம் எல்லோருக்கும் சந்தோசமான நாட்கள். ஒட்டங்குளம் , பேராறு , வவுனிக்குளம் அது இது என்று மல்லாவியின் அழகிய இடம் அனைத்திலும் நின்று நிழல்படம் எடுத்து மகிழ்ந்த அந்த நாட்கள் அத்தனையும் பசுமையானவை. பெரும்பாலும் நாங்கள் நால்வரும் தான் சுற்றித்திரிந்தோம். படிக்க மறந்தோம். உன்னோடு மகிழ்ந்திருக்கவே விரும்பினோம். நாட்கள் கடந்து நீ மறுபடியும் முகாம் திரும்ப வெளிக்கிட்ட போது மனமின்றியே விடைபெற்றோம்.
2001 ஐப்பசி மாதம் 21 அன்று உன் அண்ணா தேசத்துக்காக ஆகுதியாகிப்போக மல்லாவி மண் துடித்தது. நீயும் சோர்ந்து போய் இருந்தாய். அதே நேரம் உன் அக்காவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தான். அவனே உன் அண்ணாவாகி போய்விட்டான். அண்ணனின் பெயரையே அக்கா தன் குழந்தைக்கு வைத்தா. உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகிய தன் சகோதரனை தினமும் தன் மகனின் முகத்தில் பார்க்கத் தொடங்கினா.

தேசப்பணிக்காக நீ மீண்டும் நிமிர்ந்தெழுந்து சென்றுவிட்டாய். அடிக்கடி சந்திப்பது குறைந்து போனது. உன் பணி அதிகமாக கடல் மீது இருப்பதாக அறிந்தோம்.
செஞ்சேரா, எம் தேசம் பெரும் வெற்றிகளைப் பெற்று யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதிகள் எம் கைகளில் வந்த போது, நீயும் உன் தோழர்களும் மருதங்கேணியை அண்டிய பகுதிகளிலே பணியாற்றினீர்கள். சமாதானம் (2002 ) என்ற பொல்லாத உயிர்கொல்லி எம் மீது திணிக்கப்பட்ட போது அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். ஆனால் அதிகமாக நின்று கதைக்க உனக்கு நேரம் இருக்காது நீ ஓடிக்கொண்டே இருப்பாய். ஒரு நாள் உனை சந்திக்க வந்திருந்த என்னோடு பேசிக்கொண்டிருந்தாய். அப்போது கிபிர் வருவதற்கான எச்சரிக்கை வந்ததோ என்னவோ அவசரமாக என்னை அனுப்பி விட்டு உன் படகையும் அதற்கான எரிபொருளையும் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்துக்கு ஓடினாய். ஏனெனில் உன்னை விட உன் உயிரை விட அவற்றின் மீதே உனக்கு அதிகமான நேசம். அவற்றை காத்திட வேண்டும் என்ற துடிப்பு அதனால் நீ ஓடினாய்.
2006.08.11 ஆம் நாள் மீண்டும் மருதங்கேணி விட்டு இடம்பெயர வேண்டிய சூழல். அங்கிருந்து நகர்ந்து வள்ளிபுனம் பகுதியில் அம்மாவும் அக்காவும் இருந்தார்கள். 2007 மார்கழித் திங்கள் அக்காவுக்கு குழந்தை பிறக்க இருந்தது. வரப்போகும் குழந்தையை எதிர்பார்த்து பெரும் மகிழ்வு.
மருத்துவமனையில் அக்கா பிரவசத்துக்காக அனுமதிக்கப்பட்ட அதே நேரம், பருத்தித்துறை கடற்பகுதியில் உன் படகிற்கும் சிங்கள கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் உருவெடுத்தது. நீ உன் அணியினரோடு கடுமையான சண்டையிட்டாய். உனக்கு உதவிக்காக எமது சண்டைப்படகுகள் விரைந்தன. எதிரியின் டோராக்களை ஓட ஓட அடித்துத் துரத்தின. ஆனாலும் உன் படகு எதிரியின் குண்டடிபட்டு இயங்கு நிலையில் இல்லை. தாக்குதலை தாங்கிக்க முடியாது ஓடிய சிங்களத்தின் சண்டைப்படகுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மீண்டும் முழு வேகத்துடன் எம் படகுகள் மீது பாய்ந்தன. அந்த பாச்சலில் நீ எம்மை விட்டு பிரிந்து விட்டாய் என்ற செய்தி எங்கள் செவிகளுக்குள் ஆறாத துயரத்தோடு வந்து சேர்ந்தது.
அக்காவை பார்க்க வீட்டுக்குச் சென்ற எனக்கு உன் அதிர்ச்சி செய்தியே கிடைத்தது. உன் நண்பர்கள் வந்தார்கள். சம்பவத்தை கூறினார்கள். வீடு அதிர்ந்து போனது. ஐயோ ஐயோ என்ற குரல்கள் வானெழுந்தன. அருகில் இருந்த உறவுகள் வீட்டில் கூடினார்கள். மஞ்சள் சிகப்பு கொடிகள் உன் வீடெங்கும் நிறைந்து கிடந்தன. தகரக்கொட்டகை போடப்பட்டு புலிக்கொடியின் முன்னே நீ திருவுருவப்படமாக இருந்தாய். பூக்கள் உன் மேல் மாலைகளாகவும் இதழ்களாகவும் கிடந்தன. நெஞ்சு வெடிக்கும் சோகம் எங்கள் எல்லோருக்கும் நிறைந்து கிடந்தது.
அகிலன் அண்ணா. டேய் செஞ்சேரா, எப்படிடா உன் பிரிவை இந்த குடும்பம் தாங்க போகிறது? அக்காவுக்கு எப்படிடா நாங்கள் உன் வீரச்சாவை சொல்வது? அம்மா எத்தனை இழப்புக்களை தாங்குவா? உன் சகோதரனை எப்படிடா நாங்கள் தேற்றுவது? பதில் இல்லாத வினாக்கள் வந்து நினைவுகளை உலுப்பியது.
நீ விரும்பி இருந்தால் உன் அணியோடு கடலில் குதித்து நீந்திக் கரை சேர்ந்திருக்கலாம். ஆனால் நீங்கள் நேசித்த உங்கள் படகினை விட்டு வர மாட்டம் என்று எதற்காக பிடிவாதமாக நின்றீர்கள். ஓ…நான் ஏற்கனவே கேட்டதைப்போல இது தான் தமிழீழ தேசம் மீதான உங்கள் காதல் அல்லவா.
நீ சென்று விட்டாய். இப்போது உன் அக்கா மடியில் மகன் ஒருவன் செஞ்சேரனாக வந்து பிறந்துவிட்டான். அவன் முகத்தில் இனி வரும் காலம் எல்லாம் அக்கா உன்னைக் காண்பாள். உன் மருமக்கள் இருவரின் முகத்திலும் அம்மா உன்னையும் அண்ணாவையும் வாழ்நாள் முழுவதும் காண்பா. நாங்களும் உங்கள் நினைவோடே அவர்களை காண்போம்…
உன் அக்காவின் இணையும் இறுதி நாளில் முல்லைத்தீவில் வைத்து வலிந்து காணாமலாக்கப்பட்டுவிட்டார். அவரின் இருப்பையும் நாம் யாரும் அறிய முடியவில்லை.
அண்ணா உன்னை இறுதியாக கண்ட அன்று எனக்காக நீ ஒரு பரிசு தந்தாய். அதில் தேசத்தின் அண்ணன் நீல வரியோடு நிற்கும் படமும் மறுபுறம் கடற்புலிகளின் இலட்சனையும் பிரதிபண்ணப்பட்டிருந்தது. அதை என் உந்துருளியின் சாவியில் அதை நான் கொழுவி வைத்திருந்தேன். 2009 மே 16 ஆம் நாள் இரவு வரை அதை நான் தவற விடவில்லை. கவனமாக பாதுகாத்தேன். ஆனால் எதிரியின் காலடிக்குள் அடிமையாக சென்ற அந்த பொல்லாத நாளில் உன் பரிசையும் என் அப்பாவின் தகட்டோடும் எழுத்துக்களோடும் சேர்த்து நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்குள் போட்டு தாட்டுவிட்டேன்.
அதுவும் உன்னைப் போலவே அமைதியாக உறங்கும். ஆழ்கடலின் அலைகளுக்குள் நீ அமைதியாகி விட்ட பொழுது இன்றும் நெஞ்சுக்குள் வந்து நெருடிக்கொண்டிருக்கிறது.
செஞ்சேரன் அண்ணனுக்காக,
இ.இ.கவிமகன்.
நாள் :24.11.2025

