05.07……ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகளில் அவனும் ஒருத்தனாக எமக்கும் தெரியாமல் தன்னை இணைத்துக்கொண்டான் .அதன் பிறகு உலகறிய வெற்றி நாயகனானான். எனது பத்து வயதுவரை அவனுடன் ஒன்றாக படித்தேன்.
அவன் எனது ஆரம்ப வகுப்பு பள்ளித்தோழன். அவன் எமது ஊரைச்சேர்ந்தவன். அவனது குடும்பத்தில் அனைவருக்குள்ளும் அவன் கெட்டிக்காரனாகவே இருந்தான். எனது தாயார் அவர்களுக்கு சிறுவயதில் கல்வி கற்பித்தமையால் குடும்ப நண்பர்களாகவே இருந்தனர். நான் நினைக்கிறேன் 98 ஆம் ஆண்டளவில் அவன் தன்னை போராட்டத்தில் இணைத்துக்கொண்டு விட்டான் என அன்ரி வீட்டுக்கு வரும் போது சொன்னா. நான் அவனை எங்கும் சந்திக்கவில்லை. ஒரு நாள் மதிஅக்காவின் வீட்டிற்கு எனது கணவருடன் சென்றோம். அப்போது எனது வீட்டுப்பெயரை சொல்லி அழைத்தது ஒரு குரல். திரும்பிப்பார்த்தேன் நன்கு பழகிய குரல் .தெரிந்த முகம். தனுசனை மாதிரி இருக்கிறது என்றேன். தலையாட்டினார்.
இங்கு வந்து ஒரு மாதம் தான். இனி இங்கே தான் என்றார். அப்போது அவரை இனி அடிக்கடிபார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டே எனது கணவருக்கு அவன் யார் என்பதை விளங்கப்படுத்திக்கொண்டு வந்தேன். சில காலங்கள் சென்றது. அடிக்கடி சந்தித்தோம் வீட்டுக்கும் வருவதுண்டு. அவனது குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருந்தனர். எனவே வன்னிக்கு அவரை பார்க்க வந்தால் எமது வீட்டிற்கு அழைத்துவந்து தான் செல்வதுண்டு. உரிமையோடு ஒரு சகோதரியடம் கேட்பது சொல்வதுபோலவே நடந்து கொள்வான். முன்பு சிறுவயதில் நண்பனாக இருந்தவன் சகோதரனாகிட்டான். அவனது சகோதரிகள் இருவரும் சிறுவயதில் எமது வீட்டில் வந்து தங்குவதுண்டு. ஆனால் இவன் சிறுவயதில் அவ்வாறெல்லாம் இல்லை. என்னுடன் கதைப்பதே அரிது. நானும் சிறுவயதில் யாருடனும் பெரியளவில் கதைப்பதில்லை. அமைதியாக இருப்பதுண்டு.
அதனால் அவ்வளவு நெருக்கம் இருந்ததில்லை. .. அதன் பிறகு மதிஅக்காவின் வீட்டிற்கும் வந்துவிட்டதாலும் அருகே அவனது குடும்பம் இல்லாததால் ,தங்கைமார் அருகே இல்லாததாலும் தனது நாளை தானே குறித்து வைத்திருந்ததாலும் என்னை அவனது சகோதரிபோலவே உரிமை எடுத்துக்கொண்டு கதைக்கத்தொடங்கினான் போலும். அதன் பிறகு காலங்கள் உருண்டோடியது. அவன் அக்காவீட்டில் இல்லை. வேறு இடம் செல்லப்போவதாக கேட்டு சென்று விட்டான் என அக்கா ஒரு தடவை சொன்னா. காலங்கள் கடந்தது. ஒரு நாள். அநுராதபுரம்….. நடைபெற்ற அதிகாலை திடீரென எனது கணவர் அழைக்கப்பட்டு சென்றிருந்தார். அப்போது யார் யார் போனவை என்று பார்க்கப்போறியளோ ரேகா அண்ணை என ஒரு தம்பி கணனியில் என் கணவருக்கு காட்டிக்கொண்டிருந்த போது அதில் ஒரு புகைப்படம் தனுசனுடையது. எனது கணவருக்கே அவன் அதில் இணைந்த விடயம் தெரியாது.
அதிர்ச்சியாக இருந்தது. நான் இறந்துவிட்டால் நீங்கள் வெளியே தெரியப்படுத்தாவிடினும் நான் இறந்த செய்தியை ரேகா அண்ணையிடமாவது தெரிவித்து விடுங்கள் என இறுதியாக சொன்னதாக சொல்லியுள்ளனர். எனது கணவர் என்னிடம் வந்தார். என்னை அழைத்தார். வேலைக்கு போகவேண்டாம் என்றார். ஏன் என்றேன். கொஞ்சம் தயார்படுத்திக்கொள்ளுங்கள் அதிர்ச்சியான விடயம் சொல்லப்போகிறேன் என்றார் புரியவில்லை. ரேகாவின் கைகளை பிடித்துக்கொண்டு சொல்லுங்கோ என்றேன். நேற்று சென்றவர்களில் உங்கள் தனுசனும் ஒருவர் என்றார். என்னால் அதிர்ச்சியுடனான அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. . அவன் குடும்பம் அங்கு இல்லை. உறவினர் வீட்டிற்கு சென்று சொன்னேன். அதன்பின்னர் அனைவரும் வெளிப்படுத்தப்பட்டனர். எனது கணவர் வழமையில் சில மணிநேரம் மட்டுமே வேலைப்பளு காரணமாக கலந்து கொள்வதுண்டு. ஆனால் அன்றைய தினம் அவனது அஞ்சலி நிகழ்வில் முழுவதும் முடிவடையும் வரை அருகே இருந்தார். அவனது 3 சகோதரர்களும் லண்டனில் வசிக்கிறார்கள்.
இன்று இருந்திருந்தால் அவனும் லண்டனில் வசித்திருப்பான். நல்ல நிலையில் இருந்திருப்பான். எம் இனத்துக்காக தம்மை ஆகுதியாக்கியவர்களில் அவனும் ஒருவனாய்… தனது ஊரறியாத பயணத்தை மட்டும் என்னிடமும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இறுதியில் அவனுடன் இன்னும் அதிகமாக சிலநாட்களை அவனுக்கென்று நானும் என் கணவரும் என் பிள்ளைகளும் அவனுடன் நேரத்தை செலவழித்திருந்திருப்போம் . தன்னிடமாவது சொல்லியிருக்கலாம் என என் கணவர் சொன்னார்..
– முகநூல் பதிவு Rega Bala –