எமது அடுத்த சந்தததியினருக்கு வரலாற்று ஆவணங்களாக எடுத்துக்காட்டும் நினைவுக்கட்டுமாணங்கள் யாவும் எமது தேசவிடுதலையின் ஆவணங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்தும். இவ்வாறு நேற்றுக்காலை 9.30 மணிக்கு கிளிநொச்சிகுளச் சந்தியில் தமிழீழ அரும் பொருள் காப்பகத்தினால் அமைக்கப்பெற்ற மாவீரர் நினைவுத்தூபி நில மீட்பு கல் வெட்டு திரைநீக்கம் தமிழீழ அரும்பொருள் காப்பகப் பொறுப்பாளர் ஆதித்தவர்மன் தலைமைவகித்து உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ்த் தேசிய புனிதநாளில் எமது தேச விடுதலையின் அத்திவாரங்களான மாவீரரின் தியாகத்தை உணர்ந்திருந்த வேளையிலும் எமது போரியல் வரலாற்று வடுக்களையும், எச்சங்களையும் தாங்கியிருக்கும் நினைவுகளை நிறுவுவதன் மூலம் எமது அடுத்த சந்ததியினருக்கு வரலாற்று ஆவணங்களாக எடுத்துக்காட்டும் நினைவுக்கட்டுமாணங்கள் எமது தேச விடுதலையின் ஆவணங்களை ஆதாரங்களோடு வெளிப்படுத்தும் இந்தத் தார்மீகப் பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து பணி செய்வோம் என்றார்.
கிளிநொச்சிக்குளச் சந்தியில் ஓயாத அலைகள்-2 நடவடிக்கை மூலம் கிளிநகர் மீட்புச்சமரில் வீரச்சாவடைந்த 398 மாவீரர்களையும் நினைவு கூரும்வகையில் நிறுவப்பட்ட மேற்படி தூபியும், கல்வெட்டும் நேற்றுக்காலை 9.30 மணிக்குத் திரைநீக்கம் செய்து வைக்கப்பெற்றது. தமிழீழ அரும்பொருள் காப்புப் பொறுப்பாளர் சி.ஆதித்தவர்மன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியினை தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஏற்றிவைத்தார். ஈகச்சுடரினை கிளி.மாவட்ட அரச அதிபர் தி.இராசநாயகம் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து நினைவுத்தூபியினை கிளி.மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் காண்டீபன் அவர்களும், நில மீட்பு நினைவுக் கல்வெட்டினை கிளி.மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அ.தனபாலசிங்கம் கிளி.மாவட்ட அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் இ.கணேசபிள்ளை ஆகியோரும் திரைநீக்கம் செய்துவைத்தனர். மாவீரர்களின் திருவுருவப்படத்திற்குக் கரைச்சிப் பிரதேசசபை விசேட ஆணையர் பொன்.நித்தியானந்தம் மலர்மாலை அணிவித்தார்.
ஈழநாதம் 28-11-2004

