அன்புடன் குமுதினி அக்கா…!
எப்பிடி நீ சுகமா இருக்கிறியா என்று எழுதிடத்தான் என் விரல்கள் துடிக்கிறது. ஆனால் நீ உன் நண்பிகளோடு இணைந்து தமிழீழ தேசத்துக்காக உன்னை விதையாக்கிவிட்டாய் என்ற தூய்மையான திமிர் எழுந்து என்னை “நினைவுக்கல்லுக்குள் நீ நலமாக உறங்குகிறாயா? என்று தான் கேட்க சொல்கிறது. நீ எப்படி நிம்மதியாக உறங்குவாய்? அந்த நிம்மதியை நாங்கள் உனக்குத் தரவில்லையே. உன் நிம்மதியாக உறக்கத்துக்கு கூட சந்தர்ப்பத்தை தராது எங்கள் தேசத்தை எதிரியிடம் கைவிட்டு விட்டோமே.
குமுதினி அக்கா என்று தான் உனை நான் அழைப்பேன். என் பெரியப்பாவிற்கு நீ மூன்றாவதாக பிறந்தவள். சிறு வயதில் இருந்து நீ அமைதியின் உருவம். உன்னை நேசித்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். அக்கா அக்கா என்று உங்களோடு திரிந்த காலங்கள் நெஞ்சுக்குள் வந்து வருத்தத்தை தருகிறது. கரவை மண்ணில் கூடி இருந்து களித்த ஒவ்வொரு வினாடிகளும் நெஞ்சுக்கள் நின்று வருத்தத்தை தருகிறது. நீ ஊட்டி விட்ட சோற்று பருக்கைகள் என் குருதியின் அணுக்களில் நின்று கொண்டு உன்னை தேடுகிறது.
அக்கா 1994 ஆம் வருடம் நீ என்னையும் எங்களையும் விட்டு தேசக்கடமைக்காக பயணித்துவிட்டாய். உன் சித்தப்பாக்கள் தூக்கிய ஆதே ஆயுதங்களை உன் தோழில் சுமக்க துணிந்து சென்று விட்டாய். நானோ உனைத் தேடி அழுவதை தவிர வழியற்றுப்போய்விட்டேன். எங்கே நீ என்று யாருக்கும் தெரியவில்லை. உன் விடுதலைப்பணி அடிப்படைப்பயிற்சிகளை முடித்துக்கொண்டு மாலதி படையணியில் தொடர்கிறதாக ஒருநாள் என் தந்தை வந்து கூறிய போது, “அக்காவை நாங்கள் பார்க்க ஏலாதா அப்பா” என்ற வினாவை கேட்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அப்பா மறுத்துவிட்டார். அதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றார். நீ சிறப்பு பயிற்சி ஒன்றில் நிற்பதால் சந்திக்க முடியாது என்றார். நான் ஏமாற்றத்தோடு அப்பாவை பார்த்த பின் பெரியப்பாவை பார்த்தேன். அவர் விழிகள் கலங்கி இருந்தது.
காலங்கள் மெல்ல அல்ல வேகமாகவே கரைந்து போனது. ஊரில் இருந்து நாம் மல்லாவிக்கு வன்பறிப்பாளர்களால் இடம்பெயரவைக்கப்பட்ட போது நீயும் வன்னிக்கு நகர்ந்திருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் நியமாக நீ எங்கே என்பது யாருக்கும் தெரியாது. நீ படையணியோடு. நாங்கள் படகேறி எங்கள் குடும்பங்களோடு.
வன்னிக்கு வந்தும் காலங்கள் ஓடின. என் தந்தை தன் தேசப்பணியோடு. நீ உன் பணியோடு. என் சித்தப்பாவும் நானும் பெரியப்பாவும் பெரியம்மாவும் உன்னைத் தேடித்தேடி அலைந்து கொண்டிருந்தோம்.
“கருப்பட்டமுறிப்பு” மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் ஒலுமடு தாண்டி வரும் ஒரு சிறு கிராமம். அங்கு தான் நீ உன் படையணியோடு நிற்பதாக உன் படையணி போராளியாக இருந்த எங்கள் உறவுக்காற சகோதரி கூறிய அடுத்த பொழுது உன்னைத்தேடி சித்தப்பாவின் ஈருருளி நகர்ந்தது. முன்னால் இருந்து “கெதியா சித்தப்பா கெதியா “ என்று விரட்டிக்கொண்டிருந்தேன் நான். ஒரு நிமிசம் கூட மணித்தியாலங்களைப்போல நகர்ந்தது. அந்த கிரவல் கூட ஒழுங்காக போடப்படாத காட்டு வீதியில் எங்கள் பயணம் உன்னைத் தேடித் தொடர்ந்தது.
உன் முகாம் வந்து சேர்ந்தோம். காவல் கொட்டிலில் நின்ற உன் தோழியிடம் “தளிர் அக்காவின் தம்பி நான் அக்காவ பார்க்க வேணும்.” சித்தப்பாவ கதைக்க விடாமல் நானே கேட்டேன். தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை தோழில் கொழுவிய அந்த அக்கா என் கையை பிடித்துக் கொண்டு என் பெயரைக்கேட்டா. “இப்ப எதுக்கு என்ட பெயர் அக்காவ வரச்சொல்லுங்கோ நான் பார்க்க வேணும்.” என்று அதிகாரமா சொன்னேன். அவாவுக்கு சிரிப்பு வந்திருக்க வேணும் என்று நினைக்கிறேன். கையில பிடிச்சு மெதுவா கிள்ளிப்போட்டு என்ன மிரட்டுறாய் என்று பொய் கோவத்தோடு உள்ளே சென்றா. காத்திருப்புக் கொட்டிலில் உனக்காக காத்திருக்கத் தொடங்கினோம். நீ வருவாய் வருவாய் என்று அந்த அக்கா போன திசையில் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மீண்டு வந்த அந்த அக்கா “தளிர் இங்க இல்ல ஆள் ஒரு பயிற்சிக்காக வேற இடத்துக்கு போயிட்டா நீங்கள் சந்திக்க முடியாது” என்று சொல்லி எங்களை திருப்பி அனுப்பிவிட்டா. நாட்கள் வருடத்தை தின்று தீர்த்தது. யாழ்ப்பாணத்துக்கான பாதை திறக்கவென்று “வெற்றிநிச்சயம் (ஜெயசிக்குறு )” என்று பெயர் வைத்து வவுனியாவில் இருந்து கிளம்பிய இராணுவ நடவடிக்கை பேரலையாக எழுந்து ஆர்ப்பரித்தது. அப்போது எங்கள் படையணிகளின் தாண்டிக்குளத்தில், புளியங்குளத்தில் கனகராயன்குளத்தில் என தொடரான முறியடிப்பு நடவடிக்கைகளில் காலுடைந்து நொண்டியபடி நகர்ந்து கொண்டிருந்தது ஜெயசிக்குறு எனும் அரக்கன்.
A9 வீதியை குறுக்கறுத்து வன்னியை துண்டாடியபடி யாழ்ப்பாணத்துக்கான பாதையை திறப்பதுவே அந்த அரக்கனின் நோக்கம். அதை முறியடித்து சிறீலங்காவின் படையகத்துக்கு பெரும் அதிர்வை கொடுத்துக்கொண்டிருந்தன விடுதலைப்புலிகளின் அணிகள்.
அந்த நேரத்தில் தான் “மன்னகுளம்” பகுதியில் வைத்து ஒரு பெரும் திணறடிப்பை செய்தன தலைவன் படையணிகள். அதில் உன் படையணியும் பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. அதில் நீயும் ஒருத்தியானாய். மகனாருக்கு நிகரானவர்கள் என்று உன் போன்ற மகளாரும் நொண்டிய அரக்கனுக்கு செவியில் உரத்து உரைத்த சண்டை அது. உன் துப்பாக்கியின் ஒவ்வொரு ரவைகளும் தமிழீழ வரலாற்றை எழுதின. நாங்களோ எங்கோ தூரக் கேட்கும் தொடர் வெடிச்சத்தங்களில் பயந்து போய் கிடந்தோம். உனக்கோ இருட்டுக்கும் பயம் இல்லை. கொல்ல வந்த பகைக்கும் பயம் இல்லை. வெடித்த வெடிகளுக்கும் பயம் இல்லை. அதனால் தான் மழையென பொழிந்த வெடிக்குள்ளும் உன் கரங்கள் உறுதியாக எதிர்த்து நின்றன.
அக்கா நீ அன்று நிகழ்த்தியது சாதனையல்ல என் வாழ்வுக்கான தியாகம். நான் வாழ வேண்டும் என்று நீ உன்னை ஈந்த ஈகம் அது. நீ உன்னை எனக்காக தியாகித்தாய். நானோ பள்ளியுடையில் பரபரத்துக்கொண்டிருந்தேன்.
அக்கா நீ வீரச்சாவாம். தகவல் அப்பா ஊடாக வீட்டுக்கு வந்து சேர்ந்தது. முத்தையன்கட்டில் பெரியப்பாவும் பெரியம்மாவும் அக்காவும் இருந்தார்கள். நாங்கள் மல்லாவியில். பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தோம். உன் திருவுருவப்படம் தான் எனக்காக காத்திருந்தது. நீ உன் வித்துடலைக் கூட நான் பார்க்க கூடாது என்று நினைத்துவிட்டாய் போல. உயிருடன் உன்னைப் பார்க்காத இந்த தம்பி உயிரற்று வீழ்ந்துவிட்ட உன் வித்துடலையுமா பார்க்க கூடாது அக்கா? அழுத விழிகளைத் துடைத்துக் கொண்டிருந்த என்னை ஒரு கரம் பற்றியது.
கருப்பட்டமுறிப்பில் நீ நின்ற முகாமில் காவல் காத்த அதே அக்கா.
தம்பி அன்று நீங்கள் வரும் போது அக்கா உள்ள தான் நின்றவா. ஆனால் நீ தன்னை பார்த்தவுடன் “ வா வீட்ட போவம் “ என்று கேட்டால் தன்னால பதில் சொல்ல முடியாது. அவன் அழுவான் என்னை கண்டால் அழுவான் என்று திரும்பத்திரும்ப சொல்லி அழுததாக கூறினா. அதுமட்டுமல்ல உன்னை மறைந்திருந்து பார்த்தா என்றும் கூறினா.
அக்கா, உன்னை பார்க்கத்தானே ஓடி வந்தனான். எனக்கு அக்கா தங்கை யாரும் இல்லை. சிறு வயது முதல் பெரியப்பாவின் அல்லது பெரியம்மாவின் பிள்ளைகளான நீங்கள் தானே சகோதரங்கள். உங்களைத்தானே நேசித்தபடி வளர்ந்தேன். இப்படி இருக்க ஏன் உன்னை பார்க்க வந்த என்னை பார்க்காமல் தவிர்த்தாய்? அப்படி நான் என்ன கேட்டுவிடப்போகிறேன் என்னோடு வீட்டுக்கு வா என்று தானே. அதற்கு நீ இல்ல அக்கா இப்ப வரமாட்டன் பிறகு வாறன் என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தானே.
கேட்டுக்கேட்டு அழ நெஞ்சம் தவித்தது. ஆனால் ஒரு முறையேனும் உன் திருமுகத்தை காண வந்த அன்புத்தம்பியை பார்க்காமல் தவிர்த்து விட்டு நிரந்தரமாக போய்விட்ட உன்னோடு கதைக்க கூடாது என்று அந்த சின்ன வயசு கவிக்கு கோவம் வந்தது அக்கா.
அக்கா, உன் தம்பி இப்போது வளர்ந்து ஒரு மகனின் அப்பா ஆகிவிட்டேன். உன் அக்காவுக்கு 3 பிள்ளைகள். நாங்கள் அனைவரும் நலம். என்ன ஒரே கவலை. உன்னைப்போலவே உன் அப்பா, சித்தப்பாக்கள் அத்தை என்று அனைவரும் என்னை விட்டு உன்னோடு வந்துவிட்டார்கள். நீ கண்ட தமிழீழ கனவும் நனவாகாமல் போய் மீண்டும் தான் அந்நிய தேசத்து அகதியாக்கப்பட்டுவிட்டேன். தனித்து நிற்கும் வெளிநாட்டு வாழ்க்கை ரம்ப கசக்கிறது. உங்களோடு மண் வீடு கட்டி விளையாடிய சின்ன வயசு திரும்பி வராதா என்று மனம் ஏங்குகிறது.
அக்கா,
இறுதியாக முள்ளிவாய்க்காலில் அடிமையாக எதிரியின் கால்களைக்கு மிதிபட்டு நாம் ஏற்றப்பட்ட பேரூந்து ஊர்ந்து வந்து கொண்டிருந்த போது காற்றுப் போன நிலையில் நீ உறங்கும் முள்ளியவளை துயிலும் இல்லத்தின் முன் நின்றுவிட்டது. அப்போது தான் உன்னை தேடினேன். அக்கா நீ உறங்கிக் கொண்டிருந்த அந்த புனித பூமி புனிதமற்ற புத்தனின் பேரர்களினால் மிதிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோலத்தை பார்க்க முடியாது தலையை திருப்பிக்கொண்டேன்.
உன்னை இனி பார்க்க முடியாது என்று தெரிந்தும் ஏக்கத்தோடு உன் இருப்பிடத்தை பார்த்துக்கொண்டு வந்த அந்த நொடி இன்றும் நினைவிருக்கிறது அக்கா.
நிம்மதியற்ற உன் ஆத்மாவுக்கு என்னால் என்ன சொல்லி விட முடியும்? நீங்கள் கண்ட கனவை தொலைத்து விட்டோம். இருந்தாலும் உன் மீதும் உண் தோழர்கள் மீதும் உள்ள நேசத்தை. உறுதி குலைந்து விடாமல் இறுதி வரை பயணிப்பேன் என்பதை மட்டுமே சொல்ல முடியும்.
தேடும் விழிகளோடு அன்புத் தம்பி
அன்புடன் : இ.இ.கவிமகன்
நாள் 20.11.2025
