தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது.
தேசியத்தலைவர் அவர்களால் இந்த திருமண ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.இதில் ஐவர் இடம் பெற்றிருந்தனர்.
திருவாளர்கள் அன்ரன் பாலசிங்கம்,பா.நடேசன்,புதுவை இரத்தினதுரை,தேவர் அண்ணா மற்றும் பெண் போராளிகளான அக்காச்சி,சீதா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் குழுவின் தலைவராக திரு.அன்ரன் பாலசிங்கமும்,தேவர் அண்ணாவும் செயற்பட்டனர்.
திருமண வயதை அடைந்த போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலம் பங்காற்றிய ஆண்,பெண் போராளிகளுக்கு திருமண ஏற்பாட்டுக் குழு சோடிப் பொருத்தம் பார்த்து திருமண ஒழுங்கினை மேற்கொண்டு வந்தது.
காதல் திருமணங்களும் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிட்ட அம்சமாகும். ஆண் போராளிகள் 28 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும்,பெண் போராளிகள் 23 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும் இருத்தல் முக்கியமானது.
போராளிகள் தமக்கிடையே காதல் ஏற்படுமாயின் அது பற்றிய விபரத்தினை எழுத்து மூலம் துறைப் பொறுப்பாளருக்கு அறிவிக்க வேண்டும். துறைப்பொறுப்பாளர் அதனை ஏற்பாட்டுக் குழுவின் பதிவாளருக்கு அனுப்பி வைப்பார்.
திருமண ஏற்பாட்டுக் குழு கூடிய அதைப்பற்றி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரித்த பின் அந்த விபரத்தை தேசியத்தலைவருக்கு அனுப்பி வைக்கும்.
தேசியத்தலைவர் அவர்களது அங்கீகாரம் கிடைத்தபின் ஆண்,பெண் போராளிகளின் பெற்றோர்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் பூரண சம்மதத்தோடு திருமண நிகழ்வினை ஏற்பாடு செய்யும்.
திருமண நிகழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் குறைந்த அளவிலான உறவினர்கள், அத்தோடு துறை சார்ந்த போராளிகளும் கலந்துகொள்ளும் நிகழ்வாக அந்த திருமணம் இடம்பெறும்.
விடுதலைப்புலிகளால் நடாத்தி வைக்கப்பட்ட திருமணங்களில் தாலி அணிதலும் முக்கியமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. தங்கத்திலான தாலி மஞ்சள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருக்கும்.
வழமையாக திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையிலேயே இந்தத் திருமண நிகழ்வுகள் இடம்பெற்றன.சில மூத்த தளபதிகளின் திருமணங்களில் தேசியத் தலைவரும் திருமதி மதிவதனி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
சில போராளிகளின் காதல் திருமணங்கள் எப்படி நடைபெற்றன என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கின்றேன்.
நிதர்சனம் பகுதியில் கடமை புரிந்த தவா,எழில் ஆகியோர் களுக்கிடையில் காதல் ஏற்பட்டுள்ளது. தவா அவர்கள் இவ்விடயத்தை திருமண ஏற்பாட்டுக் குழுவுக்கு அறியத் தந்தார். குழுவில் அங்கம் வகித்த புதுவை இரத்தினதுரையும் நானும்(தேவர் அண்ணா) தவா,எழில் ஆகிய இருவரையும் அழைத்துப் பேசினோம். அப்போது எழிலனின் பெற்றோர் தமிழீழ மண்ணில் இருக்கவில்லை. அவரது மாமியார் மானிப்பாயில் இருப்பதாக எழில் தெரிவித்தார்.
புதுவை அவர்களும் நானும் சென்று மாமியாரைச் சந்தித்து விபரத்தை எடுத்துக் கூறி அவர் மூலம் பெற்றோருக்கும் அறியத்தரப்பட்டு தேசியத்தலைவர் அவர்களின் அனுமதியோடு அந்தத் திருமண நிகழ்வு இடம்பெற்றது.
இதே விதமாக இன்னும் சில போராளிகளின் திருமணங்களும் நாம் போராளிகளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களோடு கலந்து பேசி அனைவரினதும் பூரண சம்மதங்களுடன் இடம்பெற்றிருக்கின்றன.
புலிப்போராளிகளது திருமணங்களுக்கு தமிழீழ திருமண பதிவுச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டு திருமணப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையில் சபையினர் முன்பாக ஆணும் பெண்ணும் உறுதிமொழிகளைக் கூறி கையொப்பங்கள் இடப்பட்டு சாட்சிகளின் ஒப்பங்களோடு அவை அங்கீகரிக்கப்பட்டன.
இவர்களுக்கு திருமணம் முடிந்தபின் குடும்ப பராமரிப்பு இறுக்கமான நிதியை மாதாமாதம் இயக்கத்தின் நிதிப் பிரிவு வழங்கி வந்தடையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.
தேவர் அண்ணா