இதுவொரு தனிப்பட்ட பதிவாகும். ஆவண நோக்கில் பகிரப்பட்டுள்ளது.
வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவுகூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக் குறிப்பிட்டார். முன்னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்துகொண்டிருந்தன.
அத்துடன் இலங்கைத்தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளியாகின.
இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர் குறிப் பிட்டார். உலகில் வெவ்வேறு நாடுகளில் யூதர்கள் என்ற காரணத்துக்காக கொல்லப்பட்ட அனைவரது பெயர், சம்பவங்கள் அனைத்தையுமே இஸ்ரேலில் பதிவுக்குள்ளாக்கி வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர் ஒடடுமொத்தமாக யூத இனம் தாம் சந்தித்த இன அழிவுகளை வரலாறாகப் பதிவு செய்வதில் காட்டிய அக்கறையை விலாவாரியாக விபரித்தார். அதனைப் போலவே ஈழநாதம் காட்டும் அக்க றையை குறிப்பிடத்தக்க விடயம் எனப் பாராட்டினார்.
இறுதி யுத்தம் முடிந்து பதினோரு ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்னமும் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட தமது உறவுகள் பற்றிய பதிவுகளை எம்மினம் பூரணப்படுத்த வில்லை. இறுதி நாட்களில் நடைபெற்ற வீரச்சாவு விபரங்கள் கூட முழுமைப்படுத்தப் படவில்லை. இந்த விடயங்களில் யாராவது அக்கறை காட்ட முனைந்தால் தலையில் குட்டி அமர வைக்கும் போக்கினையே சிலர் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.
வரலாற்றை மாற்றி எழுதும் பிரகிருதிகள் தமது கற்பனைகளை ஓரிரு சம்பவங்களில் சோடித்து இணையத்தளங்கள், முகநூல்களில் உலாவ விடுகின்றனர். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரைக்கொண்ட மாவீரருக்கு சீலன் எனப் பெயர் வைத்தவன் தானே என்றும் தான் ஒரு மூத்த உறுப்பினர் என்றும் அண்மையில் ஒருவர் இணையத்தில் பதிவிட்டிருந்தார்.மூத்த உறுப்பினர் என்று சொல்வதற்கு அவர் தலை நரைக்கும் வரை காத்திருந்தார் போலும்.
வரலாற்றில் நடைபெறும் திணிப்புக்கள் என்ற விடயத்தில் நாம் எச்சரிக்கையாகத் தான் இருக்கவேண்டும். அந்த விடயத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் பற்றியும் குறிப்பிட்டாகவேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் மாவீரர் துயிலுமில்லங்களின் செயற்பாடுகள்,முடிவுகள் தொடர்பாக தீர்மானிக்கும் உரிமை தமக்கே உள்ளது என்ற நினைப்பு சிலரிடம் ஊறிவிட்டது போல் உள்ளது.
விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் வித்துடல் தமிழகத்தில் எரியூட்டப்பட்டது. (கொள்ளி வைத்தவர் அப்பையா அண்ணர்) இரண்டாவது,மூன்றாவது மாவீரர்களான லெப்.சீலன் மற்றும் ஆனந்தின் உடலங்கள் யாழ்.போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன. எப்படியோ தகவல் அறிந்த சீலனின் தாயார் தனது மகனின் உடலை தன்னிடமே கையளிக்கவேண்டுமென பொலிஸாரிடம் வேண்டிக்கொண்டார்.
அவ் வேண்டுகோளை பொலிஸார் நிராகரித்தனர். ஊர்காவற்துறைப் பகுதியிலேயே பொலிஸாரால் இவ்விரு உடல்களும் எரியூட்டப்பட்டன. வரலாற்றுச் சமரான 1983 ஜூலை திருநெல்வேலியில் வீரச்சாவெய்திய லெப். செல்லக்கிளி அம்மானின் வித்துடலைப் புலிகளே கொண்டு சென்றனர். நீர்வேலிப் பகுதியில் இவ் வித்துடல் விதைக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இவ் விடயம் பகிரங்கப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. சுவரொட்டிகள் மூலமே இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டது. முதல் மாவீரரான சங்கரின் ஓராண்டு நினைவு நாளை யொட்டியே அவரது வீரச்சாவுச் சம்பவமும் வெளிப்படுத்தப்பட்டது .
முதல் மாவீரர் சங்கர்
அன்றைய காலகட்டத்தில் இருவரின் பாதுகாப்புக் கருதி சங்கரின் வீரச்சாவை உடனடியாக வெளிப்படுத்த முடியவில்லை. பல்கலைக்கழக விரிவுரையாள ரான நித்தியா னந்தனையும், அவரது துணைவியார் நிர்மலாவை யும் கைது செய்ய இராணுவத்தினர் யாழ். நாவலர் வீதியிலுள்ள அவர்களது வீட்டுக்குச் சென்றனர். ”27.10 1982 அன்று இடம்பெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன்,புலேந்திரன். ரகு (குண்டப்பா) ஆகியோர் இவர்களது வீட்டிலேயே தங்கவைத்து சிகிச்சை யளிக்கப்பட்டனர்” என்ற தகவல் படையினருக்குக் கிடைத்திருந் தது. படையினர் இவர்களது வீட்டை முற்றுகை யிடச் சென்ற போது அங்கிருந்த சங்கர் அந்த முற்றுகையிலிருந்து தப்ப முயன்றார்.
படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் வயிற்றில் காயமடைந்த அவர் கைலாசபிள்ளையார் கோவிலடிக்கு ஓடி வந்து சேர்ந்த போது துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தார் அப்போது யாழ்.பல்கலைக்கழக மாணவனும் பின்னாளில் 18 ஆண்டுகளுக்கு மேலாக ஈழநாதம் நாளிதழின் பிரதம ஆசிரியராக விளங்கிய வருமான பொ .ஜெயராஜ் . அவர் சங்கரைக்கண்டார். ஏற்கனவே அறிமுகமாயிருந்த சங்கரை தனது துவிச்சக்கர வண்டி யில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு எதிரே உள்ள குமாரசாமி வீதியிலுள்ள 41 எண்ணுடைய வீட்டுக் குக்கொண்டுபோனார். இந்தப்போராட்டத்துடன் சம்பந்தமுடைய பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பழகி வந்த இந்த வீட்டில் இருந்த ஏனையோருடன் இணைந்து சங்கரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அன்றைய காலகட்டத்தில் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது முடியாத விடயம். எனவே மேலதிக சிகிச்சைக்காக சங்கர் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். சிவகுமார் என்னும் இயற்பெயரைக் கொண்ட அன்ரனே இவரைத் தமிழகத்துக்குக் கொண்டு சென்றார்.
சங்கருக்காக உண்ணாவிரதமிருந்த தலைவர்
பொதுவாக எவருமே நினைவு தப்பி வலியில் துடிக்கும் போது “அம்மா ….. அம்மா .. „ என்றே அரற்றுவதுண்டு . ஆனால் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அந்தச் சமயத்தில் சங்கர் “ தம்பி … தம்பி “ என்றே அரற்றினார். தலைவர் சங்கரின் மனதில் எந்தளவுக்கு ஆழமாக உறைந்திருந்தார் என்பதற்கு இதுவோர் சிறந்த உதாரணம். தமிழர்களின் விடுதலைக்காக இதுவரை 36 ஆயுதப்போராட்ட இயக்கங்கள் தோன்றிய போதும் அதில் புலிகள் மட்டுமே வித்தியாசமாகத் தெரிந்தார்கள் என்றால் அதற்கு இது போன்ற உதாரணங்களை சுட்டிக் காட்டலாம். வேறு எங்கும் காண முடியாத விடயம் இது . அந்தப் பாசப்பிணைப்பே வரலாற்றில் முதல் மாவீரனாக (விடுதலைப் புலிகள் இயக்கத்தின்) பெயர் பதித்த சங்கரின் நினைவு நாளின் போது 1983 இருந்து 2008 வரை நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருக்கும் எண்ணத்தைக் தலைவருக்கு ஏற்படுத்தியது
மாவீரர் நாள் அறிவிப்பு
இதன் அடுத்தகட்டம் தான் மாவீரர் நாள் பற்றிய அறிவிப்பு.இந்திய இராணுவம் செயற்பட்ட காலத்தில் 1989 ம் ஆண்டில் இந்த அறிவிப்பு மணலாற்றுக் காட்டில் இருந்த( ’14’முகாம் ) மூலம் சகல பிராந்திய தளபதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. முதலாம் உலகப்போரின்போது போர்க்களத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் நினைவு நாள் பற்றி சங்கர் என்ற மூத்தபோராளி உரையாடலொன்றின்போது தலைவரிடம் குறிப்பிட்டார் (இவரே பின்னாளில் விமானப் படையின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்ததுடன் அதனை வழிநடத்தியவர். (இயற்பெயர் வை.சொர்ணலிங்கம்) இந்த பொப்பி மலர் உதாரணமே இலங்கையில் ‘சூரியமல்’ எனப்படும் சூரியகாந்தி இயக்கத்துக்கு வழி வகுத்தது.
அந்தப்பொறியை சங்கர் தட்டியபோதே எங்களது தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய போராளிகளுக்கும் ஒரு நாளைப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற சிந்தனை தலைவர் மனதில் உருவானது . அந்தவகையிலேயே புலிகளின் முதல் மாவீரரான சங்கரின் (சத்தியநாதன் ) நினைவு நாளை மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினார் அவர். இது பற்றி குறிப்பினை தேவர் அண்ணாவும் வெளியிட்டிருந்தார் .
கிழக்கில்…!
மட்டக்களப்புக்கு இந்த அறிவிப்பு வந்தபோது வடக்கு,கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் கட்டம்கட்டமாக வெளியேறும் நிலையில் இருந்தது .முதலாவது தொகுதியினர் அம்பாறை மாவட்டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்றாக வெளியேறிவிட்டனர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்கங்களுக்கு கூடுதலான ஆயுதங்களையும் அவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சியும் வழங்கிவிட்டே இம் மாவட்டத்திலிருந்து வெளியேறினர்.இந்தியப்படையினர். இவர்களால் பயிற்சியளிக்கப்பட்டோர் திருக்கோவில் மற்றும் தம்பிலுவில் ஆகிய இடங்களில் இரு பெரும் முகாம்களை அமைத்திருந்தனர் .இந்தநிலையில் அன்றைய அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய அன்ரனி தலைமையில் ஒரு முகாமையும் இன்னொன்றை அன்றைய மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக விளங்கிய ரீகன் தலைமையிலும் 05.11.1989 அன்று தாக்கி கைப்பற்றினர்புலிகள்.
இந்த நிலையில் அம்பாறையில் அன்ரனி முதல் மாவீரர் நாளை திறம்பட நடத்தினார். திருக்கோயில் பகுதியில் தளபதி அன்ரனி தலைமையில் போராளிகள் பாதுகாப்பு வழங்க அம்பாறை மாவட்ட அரசியல் துறையினர் நிகழ்வை நடத்தினர்.
ஆனால் மடடக்களப்பு மாவடடத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்ததால் பெரும்பாலான கிராமங்களில் மாவீரர்களின் படங்கள் வைத்து தீபம் ஏற்றப்பட்டது.வந்தாறுமூலையில் புலிகளும் மக்களும் கூடியிருந்த இடத்துக்கு எதிர்பாராத விதமாக இந்தியப்படையினர் வந்தபோதும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
திருகோணமலையைப் பொறுத்தவரை இந்திய இராணுவத்தின் நெருக்கடி அதிகமாக இருந்தது. அவ்வாறிருந்தும் சாம்பல்தீவு மகாவித்தியாலயத்தில் நிகழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 150 க்கு மேற்பட்ட பொதுமக்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் பாதுகாப்புக்காக ஒரு அணி அனுப்பப்பட்டிருந்தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலையிலான சுரேஷ் என்ற போராளியையும் (பின்னர் படகு விபத்தில் ஆகுதியானார் ) நிகழ்வைப் பொறுப்பேற்று நடந்த அரசியல் பொறுப்பை ஏற்றிருந்த ரூபனையும் அனுப்பியிருந்தார் பதுமன். அன்றைய காலகட்டத்தில் சங்கரின் புகைப்படம் கூட இவர்களின் கைவசம் இருக்கவில்லை.
நிகழ்வு நடைபெறும் தகவல் அறிந்து இந்தியப்படையினர் அங்கு விரைந்தனர். அவர்களை எதிர்த்து புலிகள் போரிட்டனர். ஒரு பக்கம் மோதலில் ஈடுபட்டுக்கொண்டே நிகழ்வையும் நடத்திமுடித்தனர் .மாவீரர்களின் பெற்றோரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சுருக்கமாக நிகழ்வு நடந்தன. ரூபன் சுடரேற்றி வைத்தார்.அதேவேளை இந்தியப்படையினரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட லெப்.ரிச்சாட் (இராமசாமி குணராசா, இறக்கண்டி, திருகோணமலை.)என்ற போராளி களப்பலியானார். இன்னுமொரு போராளியும் இந்தச் சமரில் காயமடைந்தார்.மாவீரர் நாளின் மாண்பைப் பேணவும் மாவீரரின் பெற்ரோரைக்காக்கும் முயற்சியி லும் தன்னை ஆகுதியாக்கிய முதல்மாவீரனாக ரிச்சாட்டின் வரலாறு அமைந்தது.
வடக்கில்..!
கிளிநொச்சி மாவட்டத்தின் நிகழ்வு பிரதேசப் பொறுப்பாளராக இருந்த அத்தாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. உருத்திரபுரம் சிவன்கோயி லடி, அக்கராயன்,கிளிநொச்சி ஆகிய இடங்களில் இந்திய இராணுவ முகாம்கள் இருந்தபோதும் இவற்றுக்கு நடுவில் இருந்த கோணாவில் அ.த.க பாடசாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன. வாடகை மோட்டார் வண்டியில் ஒலி பெருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறிவிப்புச் செய்யப்பட்டது. சில வேளை இவர்களுக்கு இந்தியப்படையினரால் தொந்தரவு ஏற்படலாம் எனக்கருதி, நகரில் இருந்த சகல ஒலிபெருக்கி மற்றும் வாடகை மோட்டோர் வண்டிகளின் உரிமையாளர்கள் நிகழ்விடத்துக்கு அழைக்கப்பட்டனர்.
“வானம் பூமியானது பூமி வானமானது” என்ற பெருமாள் கணேசனின் பாடலை பின்னாளில் பிரபல எழுச்சிபாடகராக விளங்கிய S .G சாந்தன் பாடினார். அடிமைத்தனத்துக்கு எதிரான சினிமாப் பாடல்களை மாணவர்கள் பாடினர். (சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா , உள்ளத்திலே உரம் வேண்டுமடா போன்ற) “ஓநாயும் ,சேவல்களும்” என்ற நவீன குறியீட்டு நாடகமும் மேடையேற்றப்பட்டது.வன்னியில் முதன்முதல் மேடையேற்றப்பட்ட இக் குறியீட்டு நாடகத்தை நா. யோகேந்திரநாதன் எழுதியிருந்தார். அன்ரன் அன்பழகன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். மாவீரர் நாளுக்கான சுடரேற்றல் முதலான நிகழ்வுகளுடன் மிகச் சிறப்பான முறையில் அனைத்தும் நடைபெற்றன. மூன்று முகாம் களிலிருந்தும் இந்தியப்படையினர் வந்தால் எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அசம்பாவிதம் ஏதுமின்றி அனைத்தும் நடைபெற்றன.
மன்னார்ப் பிராந்தி யத்தின் சகல மாவீரர் விபரங்களை யும் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் அமுதன் (சுரேஷ் ) தலைவரிடம் சமர்ப்பித்திருந்தார். பண்டிவிரிச்சான் , நானாட்டான், கறுக்காய்க் குளம், முழங்காவில் ஆகிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. பண்டிவிரிச்சான் பாடசாலையில் பிரதேசப்பொறுப் பாளர் கணேஷின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது. கவிதை, பேச்சு, நாடகம் என பல்வேறு நிகழ்வுகளின் போட்டிகளும் முன்கூட்டியே ஏற்பாடு செயப்பட்டிருந்தன. நானாட்டான் நெல் களஞ்சியத்தில் பிரதேசப் பொறுப்பாளர் ஞானியின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடந்தன. பின்னாளில் தமிழீழ நிர்வாக சேவையில் பிரமுகராக விளங்கிய சின்னப்பா மாஸ்டர் இந் நிகழ்வை திறம்படச் செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்.
கறுக்காய்க் குளத்திலும் நெற்களஞ்சியத்திலேயே நிகழ்வுகள் நடைபெற்றன. பிரதேசப்பொறுப்பாளர் பாரதி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.பூநகரி பிரதேசத்துக்கான நிகழ்வு முழங்காவில் மகா வித்தியாயத்தில் நடைபெற்றது. பிரதேசப் பொறுப்பாளர் சாம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக பொட்டுவே செயற்பட்டார். அவர் தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜன் (பின்னாளில் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கியவர்) சூட் ( தவளை நடவடிக்கையின் போது வீரச்சாவெய்தி யவர்) ஜக்சன் (தற்போது புலம்பெயர் நாடொன்றில் வசிப்பவர்) முதலானோரிடம் மாவீரர் நாள் அறிவிப்பு பற்றிக் குறிப்பிட்டார். இந்தியப் படையினரின் நடவடிக்கை தீவிரமாயிருந்ததால் சிறு சிறு குழுக்களாக காலத்துக்கேற்ப செயற்பட்டுக் கொண்டிருந்தனர் புலிகள். நீர்வேலி வாதரவத்தை, குப்பிளான், மாதகல் போன்ற இடங்களில் இந்த நகரும் குழுக்கள் பெரும்பாலும் தங்கியிருந்தன. பகிரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வது சிரமமென்பதால், சுவரொட்டிகள் அடித்து சாத்தியமான இடங்களில் ஒட்டுவோம் என ராஜனிடம் தெரிவித்தார் பொட்டு.
முதல் சுவரொட்டி
திலீபன் காலத்தில் அரசியற் பணிகளை மேற்கொண்டவர் என்ற வகையில் நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் பற்றி ராஜனின் அபிப்பிராயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன. ‘‘உங்கள் சுவடுகளில் தொட ரும் பாதங்கள்’’ என்றொரு வசனத்தை (சுலோகம் என்றும் சொல்லலாம்) எழுதிக் கொண்டுபோய் பொட்டுவி டம் காட்டப்பட்டது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். எனினும் மக்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதிய வைப்பது எப்படி என்று சிந்தித்த வாறே தொடர்ந்து செயலில் இறங்கினார்.
எங்கேயாவது கறுப்பு வர்ணம் (பெயின்ற்) எடுத்து வரும்படி சொன்னார். வெளியே சென்றவர்கள் ஒரு வாளியில் அதனைக் கொண்டு வந்தனர். வெள்ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அருகில் நின்ற சூட்டை அழைத்து அவரது காலின் அடிப்பாதத்தில் பெயின்றை அடித்து அத்தாளில் பதிய வைத்தார். அச்சொட்டாக கால் பதிந்தது. எனினும் அங்கு நின்ற அன்னையொருவர் இவரது கால் சிறியதாக உள்ளது; வேறொருவரின் கால் பெரிதாக இருக்குமாயின் நன்றாக இருக்கும் எனத் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார். அது சரியாகவே இருந்தது பொட்டுவுக்கு. உடனே அருகில் நின்ற ஜக்சனின் காலில் மை பூசப்பட்டது. அது மிகப் பொருத்தமாக இருந்தது. ராஜன் எழுதிய வசனத்தில் பாதங்கள் என்ற சொல்லை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக …. (டொட் டொட்) என குறிப்பிட்டார் பொட்டு.
அந்த வகையில் தயாரிக்கப்பட்ட சுவரொட்டியே முதன் முதலில் மாவீரர் நாளுக்கென மக்களின் பார்வைக்கு வந்தது. துவிச்சக்கரவண்டி மூலமாக பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சென்று ஒட்டினர் புலிகள்.
ஒதுங்கிய இராணுவம்
புத்தூர் முகாமிலிருந்து புறப்பட்ட இந்திய இராணுவத்தினரை நாடகக் கலைஞர் செல்வம் மற்றும் பாலன் முதலானோர் வழி மறித்தனர். மாவீரர் நாள் தொடர்பான விடயங்கள் இருப்பதால் வெளியே வராமலிருக்குமாறு அவர்கள் இராணுவத்திடம் கூறினர். தாங்கள் எப்படியும் வெளியேற வேண்டியவர்கள் தானே என்ற நினைப்பிலோ என்னவோ மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து திரும்பிச் சென்றனர் இந்தியப் படையினர்.
புலிகளின் கட்டளைப் பணியகமான மணலாறு’ 14: முகாமில் தேவர் அண்ணாவோடு இணைந்து ஏற்பாடுகளை கவனிக்குமாறு தலைவர் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் பெண் போராளிகள் உட்பட அனைவரும் உணர்வுபூர்வமாக பணிகளில் ஈடுபட்டனர். புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை இயக்கமும் காட்டுக்குள் இருந்து ஒலிபெருக்கி மூலம் பாடல்களை இசைக்க விட்டு தமது தோழர்களை நினைவுகூர்ந்தி ருக்காது.
இந்நிகழ்வுகள் நடைபெறும்போதும் இந்தியப் படை வந்தால் எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தளர்ச்சி ஏதும் இருக்கவில்லை.
நிகழ்வுகளை கார்த்திக் மாஸ்டர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு ஏற்கனவே காட்டுக்குள் வைத்தே புகைப்படக் கருவியைக் கையாள்வது, அதன் நுணுக்கங்கள் என்பவற்றைக் கிட்டு கற்பித்திருந்தார். தலைவரின் உரை முதலான விடயங்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரலை சங்கர் மற்றும் தேவர் அண்ணா திட்டமிட்டிருந்தனர்.
1990 ஆம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 12 மணி இரு நிமிடத்துக்கு சுடரேற்றுமாறு விடுத்த அழைப்புக்கு மதிப்பளித்திருந்தனர் மக்கள். ஆலயங்களில் மணிகள் ஒலிக்க வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மக்கள் சுடரேற்ற தலைவரின் உரை வானொலியில் ஒலிபரப்பானது. வீட்டு வாசலில் சுடரேற்றிய சமயம் மழை பெய்தது. அதனால் சுடர் அணைந்து விடாமலிருக்க குடை பிடித்தனர். இந்தக் காட்சி ஒரு ஓவியரின் மனதில் தைத்தது. அவர் இக்காட்சியைத் தத்ரூபமாக வரைந்திருந்தார். தீபமேற்றல், மணியோசை ஒலிக்கச் செய்தல் முதலான விடயங்க ளெல்லாம் கவிஞர் புதுவை அண்ணாவின் ஆலோசனையே. அதனைத் தலைவர் ஏற்றிருந்தார். மாவீரரின் பெயரை வீதிகளுக்கு சூட்டுவதும் நடைபெற்றது.
மாவீரர் பெற்றோரைக் கெளரவித்தல் நிகழ்வும் இந்த ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. வலிகாமம் பகுதி மாவீரர்களது பெற்றோர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையிலும் வடமராட்சியைச் சேர்ந்தோர் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் தென்மராட்சியைச் சேர்ந்தோர் டிறிபேர்க் கல்லூரியிலும் தீவகத்தைச் சேர்ந்தோர் வேலணையிலும் கெளரவிக்கப்பட்டனர். புதிய உடைகள், அன்பளிப்புகள் வழங்கல், விருந்தோம்பல் முதலான விடயங்கள் பெற்றோரை நெகிழ வைத்தன. தாங்கள் இழந்த பிள்ளைகளை அங்கிருந்த போராளிகளின் வடிவில் கண்டனர். இந்திய இராணுவ காலத்தில் ஒரு போராளி வீரச்சாடைந்தார். அவரது உடல் ஓரிடத்தில் எரியூட்டப்பட்டது. ஏதோ அனாதைகள் போல எங்கள் சகாவை எரிப்பது ஒரு போராளியின் மனதைத் தைத்தது. விடுதலைக்காகப் புறப்பட்ட வர்கள் என்றாலும் அவர்களுக்கான நிகழ்வு கெளரவமாக நடத்தப்பட வேண்டும்– எங்கள் கட்டுப்பாட்டில் ஒரு நிலம் இருக்குமாயின் தனிப் போராளிகளுக்கென ஒரு சுடலை அமைக்க வேண்டும் என ராஜன் நினைத்தார்.
துயிமில்லங்களின் உருவாக்கம்
நெருக்கடிகள் தானே புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கும். எம்.ஜி.ஆர். இளமையில் வறுமை காரணமாக பட்டினி கிடக்க வேண்டியேற்பட்டது. அந்த வலி மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் தான், தாம் முதலமைச்சராக வந்தபோது சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். தான் சாப்பிடக் கூடிய நிலையில் இருந்திருந்தால் நிச்சயம் கல்வியை இடைநிறுத்தியிருக்க மாட்டார். இந்த நிலை தனது ஆட்சியில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது . முதலில் உணவுக்காகவேனும் பாடசாலைகளுக்குப் பிள்ளைகள் வரட்டும் என நினைத்தார்.
அதுபோல் வாழைத்தோட்டத்தில் சேரி வாழ்க்கையை அனுபவித்ததால்தான் ஒவ்வொரு குடும்பத்துக்குத் தனித்தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென்று பிரேமதாஸ நினைத்தபடியால்தான் வீட்டுத் திட்டத்தில் அதீத அக்கறை காட்டினார். 10 லட்சம் வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றினார். அதைப் போன்றதே போராளிகளுக்கான தனிச் சுடலை என்ற சிந்தனையும். ராஜன் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரானதும் தனது எண்ணத்தைச் செயற்படுத்த முனைந்தார். முதலில் நிலம் வேண்டுமே? சிறைச்சாலைத் திணைக்க ளத்துக்கு சொந்தமான நிலம் கோப்பாய்– இராசபாதையில் உள்ளது என்ற தகவலை ஒரு போராளி தெரிவித்தார். அதனையே போராளிகளின் சுடலையாக்குவோம் என முடிவெடுத்தார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ராஜன்.
காணியைத் துப்புரவாக்குதல் போன்ற பணிகளில் பொ.ஐங்கரநேசனின் ‘தேனீக்கள்’ அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் ஈடுபட்டனர். அடுத்து சுட லையையும் வடிவமைக்க வேண்டும். யாழ்.நகரப் பொறுப்பாளராக இருந்த கமல் மாஸ்டர் (வீரச்சாவடைந்துவிட்டார்) தனது பணிமனைக்கு முன்னால் வெளிநாட்டிலிருந்து வந்த கட்டட வடிவமைப்பாளர் ஒரு வர் இருக்கிறார் என்று தெரிவித்தார். அவரையே வரவழைத்து சுடலைக்கான வடிவம் அமைக்கப்பட்டது. வடிவமைப்பாளர் கோரியபடி கந்தர்மடத்திலிருந்த பொறியியலாளர் பங்களிப்பும் கிடைத்தது. ஏற்கனவே அறிமுகம் இல்லாதபோதும் இருவரும் ஆர்வமுடன் இப்பணியில் ஈடுபட்டனர். பொற்பதி வீதியிலுள்ள கட்டடத் தொழிலாளிகளின் பங்களிப்பில் நடந்த பணிகளில் உடலை எரிப்பதற்கான மேடையும் அடங்கியிருந்தது.
இதன்பின்னர் வீரச்செய்தியவர் ஒரு கிறிஸ்தவர். அவரை எப்படி எரிப்பது என்ற பிரச்சினை. அதுவும் தனிச் சுடலையில் ஏன் எரிப்பான் என்பது அடுத்த கேள்வி. விவகாரம் எழுந்ததும் ராஜன் அங்கு சென்றார். ‘‘பொதுச் சுடலையில் கண்ட காவாலி, கழிசறைகளையும் எரித்திருப்பார்கள். எங்கள் மகனோ புனிதமான மாவீரர். காவாலிகளை எரித்த இடத்தில் இவரையும் எரிப்பதை ஏற்கமாட்டார்கள் தானே?” எனக் கேட்டார். யதார்த்தத்தைப் புரிந்தனர் பெற்றோர்.
மேடையில் இவரது சடலம் எரிப்பதை ஒளிப்படமாக எடுத்து தலைவருக்குக் காண்பிக்கப்பட்டது. ‘‘தனி மயானம் நல்லதுதான்; நாங்கள் ஏன் எரிக்க வேண்டும்? புதைக்கலாமே?’’ இந்தக் கேள்வி தான் வித்துடல்களைப் புதைக்கும் வழக்குக்கு அத்திபாரம். அடுத்ததாக வீரச்சாவெய்துபவரின் வீட்டுக்கு சென்றபோது அங்கும் பிரச்சினை எழுந்தது. ஏன் எங்கள் பிள்ளையைச் சுடலையில் எரிக்காமல் புதைக்க வேண்டும்? என்று கேட்டனர். நீங்கள் மகனின் நினைவு எழும் போதெல்லாம் அந்த இடத்துக்குச் சென்று கும்பிடலாம். அழலாம். பூப்போடலாம் என்று விளக்கமளிக்கப்பட்டது.
வரலாற்றில் துயிலுமில்லத்தில் முதன் முதலாக விதைக்கப்பட்டவர் என்ற வரலாறு சோலை என்ற மாவீரருக்குக் கிடைத்தது. மாவீரரை விதைக்குமுன் வாசிக்கப்படும் வாசகங்களையும் (மாவீரர் பெயர் தவிர்த்தது )புதுவை அண்ணாவே எழுதினார்.
மாவீரர் பதிவுகள்
இந்தக்காலப் பகுதிகளிலே மாவீரர் பணிமனை முழு அளவில் செயற்பட ஆரம்பித்தது. இந்தியப் படையினரின் வருகைக்கு முன்னர் மாவீரர்களின் விபரம் பேணப்பட்டிருந்தது. எனினும் இந்தியப் படையினரின் காலத்தில் புதிதாக இணைந்து கொண்டோர் பற்றிய விவரம் தலைமைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்திலேயே இணைந்து அக்காலப் பகுதியிலேயே சிலர் மாவீரராகியும் இருந்தனர். எனவே இவ்வாறான விடயங்களைத் தெரிவிக்கும்படி பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பொன்.பூலோகசிங்கம் என்ற சட்டத்தரணியின் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது. அவர் நாள்தோறும் தினக்குறிப்பு (டயரி) எழுதும் பழக்கமுடையவர். பத்திரிகைகளில் வரும் மாவீரர் இழப்பு, பொதுமக்கள் இழப்பு (படையினர் மற்றும் இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்டவை) குறித்து அவர் எழுதிய குறிப்புகளே மாவீரர் பட்டியலை கணிசமான அளவு சரியாக்க உதவிற்று. தாவடியில் தும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சில் லூக்காஸ் என்பவர் மாவீரரானார். ஆனால் இந்த மாவீரர் பற்றிய விவரம் எவருக்கும் தெரியாது. நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் என்று மட்டுமே தெரியும்.
1990 இல் ஈழநாதம் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டபோது வீரவணக்க விளம்பரங்கள் வெளிவந்தன. தங்கள் பிள்ளைகளை, உறவுகளை, நட்புகளை நினைவுகூர வசதியான சிலரால் மட்டுமே முடிந்தது. அதேசம்பவங்களில் வீரச்சாவெய்திய ஏனைய மாவீரர்களை எவரும் நினைவுகூரவில்லை. இதனைக் கண்ணுற்ற ஒரு போராளி அப்போதைய அரசியல் தலைமையை வகித்த மாத்தயாவிடம் இவ்விடயம் பற்றிக் குறிப்பிட்டார். நாளாந்தம் அதே நாளில் வீரச்சாவெய்தியோர் விவரம் வெளியிடப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தைத் தெரிவித்தார். வருடம் 365 நாளில் மட்டுமல்ல 4 வருடங்களுக்கு ஒருமுறைவரும் (லீப்வருடம் ) பெப்ரவரி 29 இல் கூட மாவீரர் விவரம் உண்டு என்பதும் தெரியவந்தது.
இதற்கென இயங்கிவந்த பணிமனை இரண்டு மாவீரர்களின் தந்தையான பொன்.தியாகம் அப்பாவின் பொறுப்பில் ஆரம்பிக்கப்பட்டு மாவீரர் பணிமனையுடன் இணைக்கப்பட்டது. (பின்னர் இவர் மூன்று மாவீரர்களின் தந்தையானார். பள்ளமடுவில் இவரது மகளும் வீரச்சாவடைந்தார்) பெயரில், திகதியில், முகவரியில் என பல்வேறு தவறுகளுடன் இருந்த பட்டியல்கள் தியாகம் அப்பாவின் முயற்சியால் திருத்தப்பட்டன. மாவீரர் நிகழ்வுகள் பற்றிய சுற்றுநிருபங்கள் இந்தப் பணிமனையினால் விடுக்கப்பட்டன. இந்தப்பணிமனை கோரும் விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என பிராந்தியத் தளபதிகளுக்கும் தலைவரும் உத்தரவு பிறப்பித்திருந்தார். எந்தெந்தத் துயிலுமில்லங்களில் யார் ,யார் விதைக்கப்பட்டார்கள், வித்துடல் கிடைக்காத யார் யாருக்கு எங்கெங்கு நினைவுக்கல் உள்ளன போன்ற முழு விவரங்களும் இந்தப்பணிமனையில் இருந்தது.இதன் மூலம் மிகவும் காத்திரமான பணியை செய்துவந்தார் பொன் தியாகம் அப்பா.
‘‘தாயகக் கனவுடன்..”
1992 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது. அப்போது மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய ஜெயா ஒரு ஆலோசனையை முன்வைத்தார். மாவீரர் பெற்றோரும் போராளிகளும் இணைந்து பாடக் கூடிய ஒரு பாடல் உருவாக்கப்பட வேண்டும் என்றார். உடனே தலைவர் புதுவையண்ணாவைப் பார்க்க கையைப் பொத்தி பெருவிரலை உயர்த்திக் காட்டினார் புதுவையண்ணா.
ஈழநாதம், விடுதலைப் புலிகள், சுதந்திரப் பறவை வெளிவந்த மாவீரர்கள் பற்றிய கட்டுரைகளை தனியான நூல்களாக வெளியிட வேண்டும் என்ற அறிவனின் யோசனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. துயிலு மில்லத்துக்கு வருவோர் தமது பிள்ளைகளின் நினைவாக வீடுகளில் நாட்டுவதற்கு அவர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக் கற்களுக்கு முன்னால் தென்னை போன்ற பயன்தரு மரங்களை வைக்க வேண்டும் என்று பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரால் வைக்கப்பட்ட யோசனையும் ஏற்கப்பட்டது. இந்த யோசனை இன்று பல்வேறு வகையிலும் பின்பற்றப்படுவது ஆரோக்கியமான விடயம்.
ஜெயாவின் கருத்தை உடனடியாக செயலாக்கினார் புதுவையண்ணா. அதுதான் ‘‘தாயகக் கனவுடன்’’ என்று ஆரம்பிக்கும் மாவீரர் பாடல். மனதைப் பிழியும் இப்பாடல் இன்றுவரை மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள்மற்றும் தமிழ் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. கண்ணன் இசையமைக்க வர்ணராமேஸ்வரன் குரலில் ஒலித்த பாடல் இது. கோப்பாய் துயிலுமில்லத்தில் தனக்குப் பக்கத்தில் நின்று நேரில் அதனைப் பாடவேண்டும் என்று அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் வர்ணராமேஸ்வரனின் வேண்டிக் கொண்டார். ஒலிபெருக்கியிலும் இந்தப்பாடல் இசையுடன் ஒலித்தது.
முதன்முதலாக இவ்வரிகளைக் கேட்ட மாவீரர் குடும்பத்தினர் கதறி அழுதனர். இப்பாடலின் ஒலிநாடாவை ஒரு போராளியிடம் (கரும்பறவை) வழங்கிய புதுவையண்ணை முதன் வரிகளைக் கேட்கும்போது உங்களுக்கு நினைவில் வரும் சம்பவங்களையும் கருத்துக்களையும் எழுதித் தாருங்கள் என்றார். அந்த விடயம் வெளிச்சம் இதழில் வெளிவந்தது. ஒரு மாவீரனின் தாயாரான மலரன்னையும் அன்றைய மாவீரர் நாள் குறித்து கட்டுரை எழுதியிருந்தார்.
மாறிய நேரம் 1992 மாவீரர் நாள் பொதுச்சுடரை தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.1991 இல் இதனை மாத்தயா ஏற்றியிருந்தார். மாவீரர் பாடலில் வரும் ‘‘நள்ளிரா வேளையில் நெய் விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்’’ என்ற வரி ‘‘வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்’’ எனப் பின்னாளில் மாற்றப்பட்டது. ஏனெனில் முன்னர் நள்ளிரவிலேயே மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டது. பின்னரே தற்போதுள்ள மாலை 6.05 க்கு மாவீரர் சுடர் ஏற்றும் முறை வழக்கத்துக்கு வந்தது . தற்போதைய நேரமே முதல் மாவீரரான சங்கர் வீரச்சாவெய்திய கணம், 2009 மே 15 ஆம் நாள் வரை 35 ஆயிரம் அளவில் மாவீரர்களின் விவரம் கிடைத்தன. இதன் பின்னர் தரவுகளைப் பேணவோ வழங்கவோ இயலக் கூடிய நிலையில் சூழல் அமையவில்லை.