Home / மாவீரர்கள் / பதிவுகள் / இயக்கத்தின் வேலைகளை விடுதலைத்துடிப்புடன் செய்தவர் மேஜர் ஜொனி

இயக்கத்தின் வேலைகளை விடுதலைத்துடிப்புடன் செய்தவர் மேஜர் ஜொனி

அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல இன்றுவரை அவன் வரவேயில்லை…

எங்களால் என்றுமே மறக்க முடியாத அந்த இருள் சூழ்ந்த நாட்கள்.

இங்கே “அமைதி தேடுகின்றோம்” என வந்து – அக்கிரமங்கள் புரிந்த இந்தியத் துப்பாக்கிகளின் ஆட்சிக்காலம்.

வன்னியில் கருப்பட்ட முறிப்பு என்ற சிற்றூர்ப் பொறுப்பாளனாக ஜொனி இருந்தான்.

ஒரு நாள் அப்போதைய எமது பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்த மிதி வண்டியில் போய்க்கொண்டிருக்கிறான். அவன் சென்றுகொண்டிருந்த பாதை யாழ்ப்பாணப் பிரதான வீதியில் சந்திக்கின்ற மூலை. மிதிவண்டி வளைவில் திரும்பவும் பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவன் மீது பாயவும் சரியாக இருந்தது.

எதிர்பாராத தாக்குதல் – கண்ணிமைப்பொழுதிற்குள் அவன் செயற்பட்டான். தன்னைப் பிடிக்க வந்த படையினர் மீது வண்டியைத் தூக்கி வீசினான்; அருகில் பதுங்கியிருந்தவர்கள் மீது கைக்குண்டுகளை வீசினான். தப்பி விடுகிறான் ஜொனி.

இந்தச் சம்பவத்தில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

இப்படியாக அந்த ஊரில் ஜொனி அரசியல் வேலை செய்த நாட்களில் அடிக்கடி இந்தியப் படையினரைச் சந்தித்திருக்கிறான். அவை ஒவ்வொன்றும் மயிர்க்கால்களைக் குத்தி நிமிர வைக்கும் சம்பவங்கள். அப்போதெல்லாம் அவன் ஒரு புலிவீரனுக்கே இருக்கக்கூடிய சாதுரியத்துடன் தப்பிவிடுவான்.

அந்த ஊரில் மிகவும் நெருக்கடியான அந்தக் காலகட்டத்தில், கடினமான ஒரு சூழ்நிலைக்குள் நின்று அவன் போராட்டப் பணிகளை ஆற்ற வேண்டியிருந்தது. இந்தியப் படையினரும், இந்திய அடிவருடிகளும் எங்கும் நிறைந்திருந்த அந்த நாட்களில் கிராமங்களிலோ, நகரங்களிலோ அரசியல் வேலை செய்வதென்பது ஒரு சுலபமான காரியமாக இருக்கவில்லை.

காடுகள், ஆறுகள், குளங்கள், வயல்வெளிகளினூடாக மைல் கணக்கான தூரங்களிற்கு அவனது கால்கள் நடக்கும். தனது பொறுப்பாளர்களால் ஒப்படைக்கப்படும் வேலைத் திட்டங்களை, இவ்வாறாகச் சிரமப்பட்டுத்தான் அவன் செவ்வனே செய்து முடிப்பான்.

கருதப்பட்ட முறிப்பு என்ற அந்த ஊர், எங்களது போராளிகளின் அணிகள், பொருட்கள், ஆயுதங்கள், ஆவணங்கள் என்பவற்றோடு முக்கிய தகவல்களையும் பரிமாறுகின்ற பிரதான இடங்களுள் ஒன்றாக இருந்தது. போராட்டத்தின் பெறுமதிமிக்க இவ்வகையான வேலைகளுக்காக, இந்த ஊருக்கு வருகின்ற போராளிகளை ஜொனி மிகுந்த இடர்களுக்கு நடுவில் பாதுகாத்துப் பராமரித்திருக்கிறான்.

இந்தியர்கள் வளைத்து நிற்கும் போதே கிராமத்துக்குள் நுழைந்து, போராட்டக் கருத்துக்களடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிவிட்டோ, பிரசுரங்களை விநியோகித்துவிட்டோ மிகச் சாதுரியமாகத் தப்பி, அவர்களின் முற்றுகைக்குள்ளிருந்து ஜொனி வெளியேறிய சம்பவங்கள் பல உண்டு.

மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், புத்திஜீவிகள் எனச் சமூகத்தின் எல்லா மட்டத்தினருக்குள்ளும் நுழைந்து, ஜொனி போராட்டக் கருத்துக்களை விதைத்தான். இதன்மூலம் இளைஞர்களையும், பெண்களையும் பெருமளவில் போராட்டத்தோடு இணைத்தான்.

1989 ஆம் ஆண்டு எமதுதேசம் மாவீரர் நாளை முதற்தடவையாக அனுஸ்டித்த போது, கருப்பட்ட முறிப்புப் பகுதியில் அதனைச் சிறப்பாக நடத்தினான். தம்மை நோக்கி இந்தியர்களின் துப்பாக்கி முனைகள் நீண்டிருந்தபோதும், அந்த மக்கள் உணர்வுபூர்வமாக அந்நாளை அனுஸ்டித்தனர். அந்த அளவுக்கு ஜொனி அவர்களோடு இரண்டறக் கலந்து, அவர்களைப் போராட்டத்தின்பால் ஈர்த்திருந்தான்.

அவனையும், தோழர்களையும் ஆபத்து நெருங்கி வந்த பல சந்தர்ப்பங்களில், அவன் நேசித்த இந்த மக்கள் தான் அவர்களுக்குக் கவசமாக நின்றிருக்கின்றார்கள்.

1990 இன் ஆரம்பம். இந்தியர்கள் எங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். இவனது திறமையான செயற்பாடு காரணமாக இவன் மல்லாவிப் பிரதேசப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். போர் நின்றிருந்த அந்த நாட்களில் மக்களிடையில் அரசியல் வேலைத்திட்டங்கள் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட போது, ஜொனி அவ்வேலைகளைச் சிறப்பாகச் செய்துடித்தான்.

கிராம அபிவிருத்தி வேலைகள், சிறுவர்களுக்குக் கல்வி வசதிகள் செய்தல், பெண்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் என இவனது செயற்பாடுகள் வளர்ந்தன. அந்த நாட்களில் சின்னக் குழந்தைகள் முதல் ஆச்சி அப்புவரை, மக்கள் ஒவ்வொருவரோடும் இவன் நெருக்கமான உறவுகளை வளர்த்திருந்தான். அவர்களால் என்றுமே ஜொனியை மறந்துவிட முடியாத அளவுக்கு அது இருந்தது.

1990இன் நடுப்பகுதி. சிறீலங்காப் படையினருடன் இரண்டாவது ஈழப் போர் ஆரம்பித்தது. சண்டைக்குப்போக வேண்டும் என்ற ஜொனியின் ஆவலைப் பூர்த்திசெய்யும் களமாக, அது அமைந்தது.

மாங்குளம் இராணுவ முகாம்மீதான முதலாவது தாக்குதல் தொடுக்கப்பட்டது. எனினும்இ வெற்றியீட்டமுடியாமல் போய்விட்ட அந்தத் தாக்குதலின் போது, ஜொனி காலில் காயமடைந்தான்.

காயம் மாறி, வட்டக்கச்சிப் பிரதேசப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றிக்கொண்டிருந்த போதும், ‘என்றைக்காவது ஒரு நாள் இந்த முகாமை நிர்மூலமாக்கியே ஆகவேண்டும்.’ என்ற வேட்கையே, அவனுள் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அந்த நாளும் வந்தது. இரண்டாவது தடவையாகவும், இறுதியானதாகவும் மாங்குளம் இராணுவ முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஜொனி பெரும் பங்காற்றினான். அந்தத் தாக்குதலின் வெற்றி ஜொனியைப் பூரிப்படைய வைத்தது.

இந்தத் தாக்குதல் முடிந்து சிறிது காலத்தின்பின், அவனது நீண்டநாள் கனவு நனவானது. அரசியல் வேலையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு அவன் சமர்முனைக்கு அனுப்பப்பட்டான். அந்த நாட்களில் அவனைக் காண்கின்றபோது ஓர் ஆத்மதிருப்தி அவன் முகத்தில் தெரிந்தது. ஒரு சின்னக்குழந்தை மிகமிக ஆசையோடு எதிர்பார்த்த ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும் போது, அக் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்வோடு, அவன் சண்டைக் களங்களில் உலாவினான்.

எவ்வளவு ஆர்வத்தொடும் திறமையோடும் அவன் அரசியல்துறை வேலைகளைச் செய்தானோ, அதைவிட அதிக ஆர்வத்தோடும் அவன் படைத்துறை வேலைகளில் ஈடுபட்டான். அரசியல் வேலைகளைச் செய்யும்போது, ஒரு சிற்றூர்ப் பொறுப்பாளனாக இருந்து பின்னர் கிளிநொச்சி மாவட்ட அரசியல் பொறுப்பாளனாக வளரும் அளவுக்கு அவனுள் இருந்த ஆற்றல், சண்டைகளின் போதும் வெளிப்படத் தவறவில்லை.

நீண்டகாலமாக அரசியல் வேலை செய்துகொண்டிருந்த அவனுக்கு, அந்தச் சண்டைக்களங்கள் புதிய உற்சாகத்தைக் கொடுத்தன. போர் அரங்கிலே ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நின்று…… ஓய்வின்றி உறக்கமின்றி அவன் போரிட்டான்.

ஜொனி 1969ஆம் ஆண்டு, ஓகஸ்ட் திங்கள் 19ஆம் நாள் பிறந்தான்.

அப்பாவும் அம்மாவும் இவனுக்குச் செல்லமாக இட்ட பெயர் ஜெகதீஸ்வரன். குடும்பத்தில் 3 ஆண்களும் 4 பெண்களுமாக 7 உடன்பிறப்புகளுக்குப் பின்பு, இவன் பிறந்தான். இவனுக்குப் பின்பு ஒரு தங்கை. எவருடனும் அதிகம் பேசாத சுபாவமுடைய ஜொனி, ஆடம்பர வாழ்வு முறைக்கும் புறம்பானவனாக இருந்தான்.

மீசாலை இவனது ஊர். வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற இவனுக்கு, சமூகத்திற்குச் சேவை செய்ய வெண்டும் என்ற சிந்தனையும், ஆர்வமும் இயல்பாகவே இருந்தன. சின்ன வயதிலிருந்தே பொது வேலைகளில் ஈடுபடுவான். மீசாலையின் புழுதி படிந்த தெருக்களில், வயல் நிலங்களில், தோட்ட வெளிகளில்…… எங்கும் அவனது சேவை பரந்திருந்தது.

பாடசாலையில் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் திறமைமிக்கவனாக ஜொனி இருந்தான். அங்கு மாணவர் தலைவனாக இருந்த அவன், திறமையான செயற்பாடுகளுக்காகப் பரிசுகளும் பெற்றிருக்கிறான்.

இந்திய இராணுவம் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருந்த அந்தக் காலம், இவனுக்குள் ஒரு புயலையே வீசச் செய்தது. இயல்பாகவே மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற சுபாவமுடையவனாக இருந்த ஜொனி, அன்றைய நெருக்கடியான நாட்களில், ஊரில் எமது போராளிகளுக்கு உற்ற துணையாக நின்றான்.

வீட்டாரிற்கும் வெளியாட்களுக்கும் தெரியாமல், மறைமுகமாக இயக்கத்திற்கு வேலை செய்துகொண்டிருந்த ஜொனி, 1989 இன் முற்பகுதியில் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டான்.

இரணைமடுவில் வன்னியின் அடர்ந்த காடுகளின் நடுவில் தனது பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறிய இவனுக்கு, எல்லாப் புலிவீரர்களுக்கும் இருப்பதைப் போல, சண்டைக்குப் போகவேணும் என்ற ஆசை இருந்தது.

ஆனாலும், இயக்கம் அரசியல் வேலைகளை வழங்கியபோது, திறமையுடன் அதனைச் செய்யத் தொடங்கினான்.

எங்கள் தேசத்தில் 1991 ஆம் ஆண்டின் சிறப்பான நிகழ்வு அதுதான்.

ஆனையிறவுப் பெருஞ்சமர்……

அந்த நீண்ட சண்டைகளின்போது, ஜொனி உயிர்த்துடிப்புடன் களங்களில் போரிட்டான்.

அந்தச் சமரின் இறுதி நாட்களில் ஒன்று. ஒரு மாலை நேரம்; ஐந்து மணிப் பொதுழு. எங்கள் காவலரணிற்கு வந்த ஜொனி எம்மோடு மகிழ்ச்சியாகக் கதைத்துக்கொண்டிருந்தான். நீண்ட நேரம் அன்பான உரையாடல். நேரம் போனதே தெரியவில்லை. இருண்டுவிட்டதால் தனது காவலரணிற்குப் போவதற்காக எழுந்தான்.

தட்டுவன்கொட்டிப் பகுதியில் இவனது அரண்கள் இருந்தன. அப்பகுதியின் பொறுப்பாளனாகவும் இவன்தான் இருந்தான்.

எழுந்தவன், திரும்பிச் சொன்னான்……

“என்ர பொயின்ரைக் கடந்து ஆமி வாறதெண்டால் என்ர உடம்புக்கு மேலாலதான் வருவான்”

அவன் சொல்லிவிட்டுப் போனபோது நாங்கள் எவருமே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அன்று இரவு கடந்து மறுநாள் விடிந்து விட்டது. நேரம் ஓடியது. காலை 11 மணியை நெருங்கியபோது விமானங்கள் இரைய, குண்டுகளை அதிரச் சண்டை தொடங்கிவிட்டது.

ஜொனியின் காவலரண் பகுதியை நோக்கி படை நகரத்துவங்கியது. வானிலிருந்து குண்டுகள் பொழிய, எறிகணைகள் கூவிவர, கனரக வாகனங்கள், கனரன ஆயுதங்கள் சகிதம் எதிரி மெல்லமெல்ல முன்னேறினான். அது ஒரு கடுமையான மூர்க்கத்தனமான சண்டையாக இருந்தது. தங்களில் சிலர் பிணங்களாய்ச் சரிய, எதிரி அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்தான். அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை. இன்றுவரை அவன் வரவேயில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல

ஆனால், அவனோடு பழகிய அந்த இனிய நாட்களின் நினைவுகள் என்றும் எம்மோடு பசுமையாய் வாழும். இந்த இலட்சியப் பயணத்தில் அவனது நினைவுகள், எம்மோடு துணையாய் வரும்.


நினைவுப்பகிர்வு: நிமால்.
வெளியீடு – விடுதலைப்புலிகள் இதழ் 

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

கடற்புலிகளின் பழிவாங்கல் நடவடிக்கை 1 & 2

‘புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் நிலப்பரப்பு கடலோடு ஒன்றிப் போயுள்ளது’. இது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் கடலின் ...

Leave a Reply