உலக வரலாற்றில் எங்கும் நிகழாத அற்புதமான தியாகங்களும்,அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில்தான் நிகழ்ந்திருக்கின்றன” என்ற தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனையை மெய்ப்பிக்கும் வகையில்,ஏற்கனவே இரு ஆண்சகோதரர்கள் மாவீரரான நிலையில் குடும்பத்தில் ஒரேயொரு பெண்பிள்ளையாக இருந்தபோதிலும் தன் இலட்சியத்திலிருந்து இம்மியளவும் நகராமல் மூன்றாவது மாவீரராகத் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்ட மேஜர் எஸ்தர் என்னும் பெண்புலியின் வீரவரலாற்றுப் பக்கங்கள் இவை.
பச்சைப்பசேலென இயற்கையின் எழில் பரவிக்கிடக்கும் வல்லுவத்தை,பன்னாலை,தெல்லிப்பளையில் இராஜரட்ணம் சிவலட்சுமி இணையரின் நான்காவது மகளாக,மூன்று அண்ணன்மாரின் செல்லத்தங்கையாக 1973 ஆனி 22ம் நாள் தாய்மடி சேர்ந்தாள் ஜெனித்தா.இவளுக்கு அடுத்ததாக 1975 இல் இளைய சகோதரனும் இணைந்துகொள்ளவே குடும்பத்தில் குதூகலம் குறைவின்றிக் குவிந்தது.
ஜெனித்தா. சிறுவயதிலிருந்தே மிகவும் குறும்புக்காரி.அமைதியாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு தனது சேட்டைகளை அங்கங்கே செய்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் நகர்ந்துவிடுவாள்.
அண்ணன்மாரின் செல்லத்தங்கையாதலால் யாரும் அவளைக் கடிந்துகொள்வதில்லை.பாடசாலைப் பருவம் வர யாழ் மகாஜனாக் கல்லூரியில் தனது கல்வியைத் தொடங்கினாள்.ஜெனித்தா படிப்பிலும்,விளையாட்டிலும் மிகுந்த கெட்டிக்காரியாக விளங்கினாள்.சுருண்ட கேசமும்,காந்தக்கண்களும்,மெல்லிய இடையும் பார்ப்போரைக் கவர்ந்துகொள்ளும் தோற்றங்கொண்டவளாய் வளர்ந்துவந்தாள் ஜெனித்தா.
இவ்வேளை இலங்கை இராணுவத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரங்களாலும்,அடக்குமுறைகளாலும் தமிழ்மக்கள்சொல்லொணாத் துயரங்களுக்குள்ளாக்கப்பட்டனர்.இக்காலப்பகுதியில் அவளது மூத்தசகோதரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொள்ள முதன்முறையாக அவர்கள் வீட்டில் கவலை குடிகொள்ளத்தொடங்கியது.சகோதரனின் பிரிவு அவளைப் பாதித்தாலும் அவன் சென்றபாதை சரியாகவே தோன்றியதால் தன்னைச் சமாதானம் செய்துகொண்டவளாய் தன் கல்வியில் கவனம் செலுத்தினாள்.காலங்கள் சில உருண்டோடவே,1989இல் சாதாரணதர பரீட்சைக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தாள் ஜெனித்தா.தேர்வை எழுதி முடித்தவள் பெறுபேற்றுக்காகக் காத்திராமலே தமிழ்மக்களின உரிமைக்காகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்தவளாக சகோதரன் சென்ற பாதையிலேயே தானும் செல்ல முடிவெடுத்தாள்.
1990 தைமாதத்தின் ஓர்நாள்.அன்றைய நாளும் வழமைபோலவே புலர்ந்தது.ஜெனித்தா யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினாள்.வீட்டிலிருந்தவர்கள் அவளைக் காணாமல் பதற்றத்துடன் தேடிக்கொண்டிருக்க அவளோ விடுதலைப் புலிகளின் மகளிரணியுடன் தன்னை இணைத்துக்கொண்டு எஸ்தர் என்னும் நாமததைத் தனதாக்கிக் கொண்டாள்.
அடுத்தமாதமே பயிற்சிக்கான அணியுடன் இணைக்கப்பட்டாள்.விடியல் முகாமில் மகளிர் படையணியின் ஆறாவது பயிற்சிப்பாசறையில் தலைமைப்பயிற்சியாசிரியர் டெல்ராவின் மேற்பார்வையில் பயிற்சிகள் ஆரம்பமாகின.பயிற்சிகளில் மிகுந்த ஆர்வத்துடன் சிறப்பான முறையில் அனைத்தையும் நிறைவுசெய்து தன்னம்பிக்கையும்,திடமும் கொண்ட போராளியாக எஸ்தர் வெளியேறினாள்.
அவ்வேளை பெரும் ஆட்பலத்தோடும் ஆயுத பலத்தோடும் அச்சறுத்தலாக இருந்த இராணுவத் தளமான பலாலிப் பகுதியின் முன்னரங்க நிலைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிரணி நிலைப்படுத்தப்பட்டபோது பதினைந்து பேர் கொண்ட அணியின் தலைவியாக எஸ்தர் நியமிக்கப்பட்டார். அக்காலப் பகுதியில் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளை முறியடிக்கும் முயற்சிகளில் எஸ்தரும் இணைந்துகொண்டு சிறந்த அணித்தலைவியாகத் தன்னை அடையாளப்படுத்தினார். அடுத்தடுத்து கோட்டை கோழியாக்குளம் தாக்குதல்களிலும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். இதன்பின் தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதல் பெயர்சூட்டி நடாத்தப்பட்ட ஆகாயக் கடல்வெளிச் சமர் ஆனையிறவில் இடம்பெற்றபோது பதினைந்துபேர் கொண்ட அணியினை வழிநடத்தி எவ்வித காப்புகளுமற்ற வெளியில் சமராடி நின்றார். இவ்வாறு துணிகரமிக்க போராளியாகக் களத்திடை மிளிர்ந்தார் எஸ்தர்.
அடுத்ததாகத் தமிழர் தாயகப் பகுதியைத் துண்டாடும் நோக்கில் படையினரால் மணலாற்றுப் பகுதியில் 1991.08.29 அன்று ஒப்பறேசன் மின்னல் எனும் பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அதனை எதிர்த்துக் களமிறங்கிய மகளிரணியினரோடு எஸ்தரும் இணைந்துகொண்டார். செப்ரெம்பர் 26 வரை நீடித்த இத்தாக்குதலில் காத்திரமான பணியாற்றி நின்றார் எஸ்தர். இவ்வேளையில் இடம்பெற்ற சம்பவமொன்றினை இத்தாக்குதலில் இவரோடு பங்குகொண்ட பெண்போராளி ஒருவர் என்னோடு பகிர்ந்துகொண்டார்.
களமுனைகளில் எப்போது வேண்டுமானாலும் எதிரிகளின் நிலைகளிலிருந்து தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதால் போராளிகள் ஒவ்வொருவரும் இதனை எதிர்பார்த்தே காத்திருப்பர். இப்படியாக ஒருநாள் காவற்கடமைகளில் இருந்தவர்கள் தவிர ஏனையோர் பதுங்குகுழிகளுக்குள் உறங்கும்படி பணிக்கப்பட்டிருந்தது. எல்லோரும் உறங்குவதற்கு ஆயத்தமாகிவிட எஸ்தரோ பிடிவாதமாக வெளியில் உறங்குவதற்கு இடத்தினைத் தெரிவுசெய்து தூங்கிவிட்டார். வழமைபோல அன்றிரவு இராணுவத்தினரின் எறிகணைகள் கூவத்தொடங்கின. சட்டென்று விழித்துக்கொண்ட எஸ்தர் பதுங்குகுழிக்குள் குதிக்கவும் எஸ்தர் உறங்கிய இடத்தில் ஏறிகணை வீழ்ந்து வெடிக்கவும் சரியாக இருந்தது. அவசரமாகக் குதித்து ஏனையவர்களின் மேல் விழுந்து, எழுந்து அனைவரது தூக்கத்தையும் பறித்துக்கொண்டார். இப்படியாகப் பிடிவாதமும் சேட்டைகளும் அவரோடு இணைந்ததாகவே நாட்கள் நகர்ந்தன.
இக்காலப் பகுதியில் வலிகாமம் பகுதியை நோக்கி முன்னேற்ற நடவடிக்கையைப் படையினர் தீவிரப்படுத்த தெல்லிப்பளையிலிருந்த எஸ்தரின் குடுப்பத்தினரும் இடம்பெயரவேண்டிய
சூழ்நிலைக்குள்ளாக்கப்பட்டனர்.எனவே,கூட்டங்கூட்டமாக இடம்பெயர்ந்த மக்களோடு இவர்களும் இணைந்துகொண்டனர். போராளியான மூத்த சகோதரனின் தொடர்புகளற்ற நிலையில் இளைய சகோதரனும் போராட்டத்தில் மூன்றாவது போராளியாகத் தன்னை இணைத்துக்கொண்டார்.இன்னோர் சகோதரன் தமிழீழ காவற்துறையிலும் பணியாற்றி வந்தார். அடுத்தடுத்துப் பிள்ளைகளின் பிரிவால் பெற்றோர் கலங்கி நிற்க எஸ்தரோ, களமுனைகளில் இன்னும் உறுதியோடு செயற்பட்டார்.
1992 காலப்பகுதி யாழ் பத்தமேனிப் பகுதியில் தமிழர் பிரதேசங்களை நோக்கி வந்த படையினரை எதிர்த்து மகளிர் படையணி தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருந்தது. இவர்களோடு ஒருத்தியாய் எஸ்தரும் எதிர்த்து நின்று சமராடிக்கொண்டிருந்தார். அவ்வேளையில் எதிரியின் ரவையொன்று இவரின் வயிற்றுப் பகுதியைப் பதம்பார்க்க,ஏற்பட்ட குருதியிழப்பினால் கைகளிலிருந்த சுடுகலன் ஓய்ந்துபோக எஸ்தர் சுயநினைவை இழந்திருந்தார். இரவோடு இரவாக வீரச்சாவடைந்தவர்களின் வித்துடல்களோடு காயமடைந்தவர்களும் யாழ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட பேச்சிழந்து கிடந்த எஸ்தரின் பெயரும் அந்நடுநிசியில் வீரச்சாவடைந்தோர் விபரத்தில் இணைக்கப்பட்டது. தொடர்ச்சியாகப் பல களமுனைகளில் தனது சுறுசுறுப்பான செயற்பாடுகளால் விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த அவ்வேங்கைக்கு அன்றைய நாளிலேயே மேஜர் தரநிலை வழங்கப்பட்டது.
மூன்றாம் நாள் யாழ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு, மயக்கத்திலிருந்த அப்பெண்போராளி மெல்லமெல்லத் தன்னிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அவரது மண்ணீரல் முழுமையாகச் சேதமடைந்திருந்த காரணத்தால் சத்திர சிகிச்சை மூலம் முழுமையாக அகற்றப்பட்டுவிட மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பினாலும் அவரது மனோதிடத்தினாலும் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல எங்கள் எஸ்தர் சாவை வென்று வந்தார்.அதன் பின்னர் அவரிடம் பெறப்பட்ட விபரங்களின் படி அவரது இருப்பு உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து களமுனையில் சுழன்று திரிந்தவருக்கு ஓய்விலிருப்பது மிகவும் கடினமானதாகவே இருந்தது. இருப்பினும் காயத்தின் தீவிரத் தன்மையால் எஸ்தர் கட்டாயமாக ஓய்வெடுக்கவேண்டிய நிலைக்கு உள்ளாகியிருந்தார்.இப்படியே சிலமாதங்கள் உருண்டோடிய நிலையில் எஸ்தரின் காயங்கள் ஓரளவு குணமாக மருத்துவமனையிலிருந்து அரியாலை மணியந்தோட்டத்திலிருந்த மகளிர் படையணியின் முகாமிற்குச் சென்றார். அப்போதைய மகளிர் படையணித் தளபதியாகவிருந்த விதுசாவுடன் இணைந்து நிர்வாக வேலைகளைத் திறம்பட நகர்த்துவதற்கு உறுதுணையாகச் செயலாற்றினார்.
இவ்வேளை யாழ் குடாநாட்டு மக்கள் பெருந்திரளாக இடம்பெயர்ந்துகொண்டிருந்த நேரம் . எதிரியின் முற்றுகைக்குள் வாழ விரும்பாத எமது மக்கள் பெருந்தொகையாக இடம்பெயர்ந்துகொண்டிருந்தவேளை யாழ் மருத்துவமனையும் தனது சேவைகளைச் சாவகச்சேரிக்கு இடம் மாற்றியது. இக்காலப்பகுதியில்தான் மகளிர் படையின் மருத்துவப் பொறுப்பாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் எஸ்தர். மிகவும் நெருக்கடியான அந்நாட்களில் எல்லோரையும் ஓய்வென்பதே அறியாமல் பணிகள் அழுத்திக்கொள்ள எஸ்தர் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பினை நேர்த்தியாகச் செய்வதில் முனைப்போடு பங்காற்றினார்.
1996.04.04 அன்று அளவெட்டிப் பகுதியில் படையினருடனான நேரடிமோதலின்போது எஸ்தரின் இளைய சகோதரனான மேஜர் வண்ணன் (இராஜரட்ணம் விஜிகரன்) வீரச்சாவைத் தழுவிக்கொள்ள, இத்தகவல் சாவகச்சேரியில் நின்ற எஸ்தருக்குத் தெரிவிக்கப்பட்டது. இராணுவ முற்றுகைக்குள் இடம்பெற்ற சம்பவம் என்பதால் அம்மாவீரனது வித்துடல் எம்மவர்களால் மீட்க முடியாமற்போனது. இத்தகவல் எஸ்தருக்கு மட்டுமே கூறப்பட்டது. சகோதரனின் இழப்பினால் கவலையுற்ற போதிலும் எஸ்தர் எதனையும் வெளிக்காட்டாமல் தானும் போராளி என்ற நிலையை உணர்ந்தவராய் தனது பணிகளில் கவனமாக இருந்தார்.
பின்னாளில் ஏற்பட்ட தொடர் இராணுவ நடவடிக்கைகளால் விடுதலைப் புலிகளின் தளங்கள் யாவும் கிளாலிக் கடனீரேரி ஊடாக வன்னிக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருந்தன. எஸ்தரின் பெற்றோரும் வன்னிக்குச் சென்று கிளிநொச்சியில் வாழ்ந்து வந்த வேளையில் இளைய சகோதரனின் வீரச்சாவு உரிய முறையில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அம்மாவீரனது நினைவுக்கல் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் நாட்டப்பட்டது. இதன்பின் வந்த நாட்களிலேயே மூத்த சகோதரனான ரசிகனின் வீரச்சாவும் உறுதிப்படுத்தப்பட எஸ்தர் தனது போராட்டப் பயணத்தில் இன்னும் இன்னும் வீச்சோடு பயணிக்கத் தொடங்கினார்.
மூன்றாம்கட்ட ஈழப்போரின் ஆரம்பநாட்களவை.களங்கள் விரிந்து செல்லவே எஸ்தர் புதிதாக மருத்துவப் போராளிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தினை உணர்ந்து கொண்டவராக அதற்கான முயற்சிகளில் இறங்கினார். இதற்காகப் புதிய போராளிகளாக இணைந்துகொண்டவர்களையும், (பின்வந்த நாட்களில் ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் இணைக்கப்பட்டு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டனர்) படையணிகளிலிருந்தும் 110 வரையான போராளிகளை இணைத்து குறுகிய நாட்களில் அவசரமான முதலுதவிப்பயிற்சிகள் அனுபவம் வாய்ந்த போராளிமருத்துவர்களால் வழங்கப்பட்டு எமது தலைவரால் திட்டமிடப்பட்ட தாக்குதல் நடவடிக்கைக்காகத் தயார்ப்படுத்தப்பட்டனர். இவ் அணியில் ஒருத்தியாக இருந்த என்னை தனது முகாமிற்கு வரும்படி பணித்த எஸ்தர் ஏனையவர்களைக்களமருத்துவ நிலைகளிலும் பிரதான மருத்துவமனைகளிலும் தேவைக்கேற்றபடி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அனைவரும் தத்தமது நிலைகளுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் திட்டமிடப்பட்ட அத் தாக்குதலுக்கு வேண்டிய மருத்துவப் பணிகளோடு இணைந்து மருத்துவப் போராளிகளுக்குரிய ஆட்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ததோடு, தாமும் பல அனுபவங்களைப் பெற்றுக்கொண்டனர்.
எஸ்தரின் முகாம் புதுக்குடியிருப்பிலிருந்து மாங்குளம் செல்லும் பிரதான சாலையில் கற்சிலைமடு எனும் இடத்தில் மருத்துவப்பிரிவு மகளிரணி நிர்வாக அலுவல்களை கவனிக்கும் முகாம் அமைந்திருந்தது. அன்றுதான் அம் முகாமிற்கு முதன்முதல் செல்கிறேன் ஏதோ ஒரு ஆலயத்திற்குள் பிரவேசிப்பது போன்ற உணர்வுதான் என்னுள் எழுந்தது. மிகவும் அமைதியாகவும் சுத்தமாகவும் காணப்பட்டன முகாமின் ஒவ்வோரிடமும். அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரினதும் வேகமான செயற்பாடுகள் எனக்குள்ளும் ஏதோவொரு மாற்றத்தைக் காலப்போக்கில் ஏற்படுத்தியதென்றே சொல்லமுடியும். அன்றைய தினம் தான் இக்கதையின் நாயகியோடு நேரடியாகப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
உந்துருளியொன்று தனது வேகத்தைக் குறைத்தபடி வந்து நிற்க, அதிலிருந்து சுமாரான உயரமும் கத்தரிக்கப்பட்ட சுருண்ட கேசமும் கொண்ட எஸ்தர் தனது தங்ககத்தினுள் நுழைந்தார்.சிறிது நேரத்துக்குள் அம்முகாமிலுள்ள பெண் போராளி ஒருவர் என்னை வரும்படி அழைத்தார். அவரைப்பின் தொடர்ந்து செல்ல எஸ்தரின் இருப்பிடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே எமது மருத்துவக்கல்வி மீளவும் ஆரம்பிக்கும் வரை அறிக்கைப் பொறுப்பாளருடன் (தழல்) இணைந்து அறிக்கை எடுப்பதற்குரிய படிமுறைகளை விரைவில் அறிந்துகொள்ளும்படி கூறினார். சுருக்கமாக எப்படி விபரங்கள் சேகரிப்பதெனவும் தவறுகள் ஏற்படாதவண்ணம் அனைத்தையும் பதிவுசெய்யும் முறைமையையும் எனக்கு சொல்லிக்கொடுக்கும்படி அவ் அறிக்கைப் பொறுப்பாளராக இருந்த போராளிக்கும் கூறிவிட்டு ஏனையவர்களையும் தத்தமது வேலைகளுக்கேற்றபடி தயார்நிலையில் இருக்கும்படி பணித்துவிட்டு தொலைத்தொடர்புக்கருவி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட விடயத்தைச் சுமந்துவர, மீண்டும் எம் டீ 90 உந்துருளியில் அவசரமாகப் புறப்பட்டுச்சென்றார் எஸ்தர்.
1997.01.09 குறிக்கப்பட்ட நேரத்திற்குப் படையணிகளால் தாக்குதல் ஆரம்பிக்கப்பட, காயமடைந்தவர்களை ஏற்றியபடி ஊர்திகள் பிரதான தளங்களை வந்தடைந்து கொண்டிருந்தன.அவர்களுக்கு வேண்டிய அவசியமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு பின்தள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து நாமும் அவ்விடத்திற்கு விரைந்தோம். காயமடைந்தவர்களின் விபரங்கள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு கொடுக்க வேண்டிய விபரங்களைத் தயார் செய்வதற்காக முகாம் திரும்பினோம் .தட்டச்சு வசதிகளோ, கணினி இயந்திரங்களோ எதுவுமற்ற அன்றைய நிலையில் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் கையாலேயே எழுதிமுடிக்க வேண்டும் இரவிரவாக இலாந்தரின் ஒளியில் அறிக்கைகளை எழுதிக்கொண்டிருக்க திடீரென ஓசையின்றி வேலை நடக்கிறதா என்பதனை உறுதிப்படுத்த எஸ்தர் எமக்குப் பின்னால் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்ப்பார். இதே போல் இரவு வேளைகளில் காவற்கடமையிலுள்ளவர்கள் விழித்தபடி உள்ளனரா என்பதையும் அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்வார். எஸ்தர் அதிகமாகப் பேசி நான் பார்த்ததில்லை. ஆனால், செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொறுப்பாளராகவே காணப்பட்டார்.
எஸ்தரின் நேரடிப் பார்வையிலிருக்கும் அம்முகாமில் எழுச்சிப் பாடல்களின் இசை அதிகாலையிலேயே செவிகளைத்தழுவ, ஒருவித புத்துணர்வோடுதான் ஒவ்வொரு விடியலும் புலர்வதுண்டு. எழுந்ததும் ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி என்பன முடித்துவிட்டு அனைவரும் முகாம் துப்பரவுப் பணிகள் முடித்து, தாமும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டுமென்பதில் எஸ்தர் கண்டிப்பானவர் என்பதனால் சூரியனின் கதிர்கள் பூமியைச் சேர்வதற்கிடையில் அனைத்தையும் முறையாக நடைமுறைப்படுத்தும் ஆளுமை மிக்க பொறுப்பாளராகவே எனது பார்வையில் மட்டுமன்றி. அவரை அறிந்தவர்களும் குறிப்பிடும் அளவிற்குத் தனித்துவம் மிக்கவராகவே விளங்கினார்.
மீண்டும் ஒரு சிறிய இடைவெளிகளின் பின் எமது மருத்துவ அணியினர்(அருள் – 1) இணைக்கப்பட்டு முத்தையன்கட்டு வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பசுமை மருத்துவமனையில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. முறையான பட்டறிவுமிக்க மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த போராளி மருத்துவர்களால் எமக்குரிய கற்கை நெறிகள் பயிற்சிகள், பரீட்சைகள் என்பவற்றோடு சிறப்பான முறையில் இறுதி நாள் நிகழ்வுகளை கலைநிகழ்வுகள் என்பவற்றோடு நிறைவாக்கியதோடு மட்டுமன்றி, புதிய மருத்துவ அணிக்கான போராளிகளைத் தெரிவு செய்து (அருள் 2) பசுமை மருத்துவமனையிலேயே இவ் அணியினரும் தமது மருத்துவக் கல்வியினைத் தொடர்வதற்கு அனைத்து ஒழுங்குகளையும் விரைவுபடுத்திக் கொடுத்தார். இவ்வேளை அபயன் மருத்துவமனையில் தாதிகளாகவும் ஒரு அணியினர் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். எஸ்தர் மருத்துவப் பிரிவு மகளிர் பொறுப்பேற்றுக் கொண்ட 18மாத காலப் பகுதியிலேயே இருநூறு(200) வரையான புதிய மருத்துவப் போராளிகளை உருவாக்கிய பெருமை இவரின் காலத்திலேயே இடம்பெற்றது என்பதனைப் பதிவு செய்ய வேண்டியதும் என் கடமையே.
எஸ்தரால் உருவாக்கப்பட்ட மருத்துவப்போராளிகள் களமருத்துவப் போராளிகளாகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவப் போராளிகளாகவும் பின்வந்த நாள்களில் வன்னியில் அகலப்பதிந்த களமுனைகளெங்கும் கால்பதித்தனர். இவர்களில் பலர் சத்திரசிகிச்சைக் கூடங்களிலும் மருத்துவமனைகளிலும் மக்களுக்கான மருத்துவ சேவைகளிலும் இறுதிவரை பயணித்ததும் குறிப்பிடத்தக்கது.
எஸ்தரின் நிர்வாகத்திற்குட்பட்ட நோயாளர் தங்கும் மருத்துவமனை விடுதிகளுக்கு எஸ்தரின் வருகை திடீர், திடீரென்று நிகழ்வதுண்டு, எஸ்தரின் எம் டீ 90 உந்துருளியின் ஓசை கேட்டாலே எல்லோருக்கும் உதறல் எடுக்கும். ஏனெனில் சிறுபிழையும் எஸ்தரின் கண்களிலிருந்து தப்பமுடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.பார்வையால் அனைத்தையும் அளவீடு செய்யும் எஸ்தர், வந்துபோகும் வரை ஒருவித பதட்டத்துடனேயே அனைவரும் நிற்பர். வசதிகள் குறைவான அவ்வேளைகளிலும் காயமடைந்த போராளிகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் எஸ்தர் தவறியதில்லை.
1997.05.13 வவுனியாவிலிருந்து ஜெயசிக்குறு படைநடவடிக்கை ஆரம்பித்த காலம். ஆசியாவில் மிகநீண்ட இராணுவ நடவடிக்கையாகப் பேசப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கையானது யாழ் நெடுஞ்சாலையைக் கைப்பற்றும் நோக்கில் படையினரால் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் வன்னிக் களமுனைகள் அகலத் தொடங்கின. எனவே காயமடைந்து வருபவர்களுக்குரிய மருத்துவத் தேவைகளை இலகுவாக்கும் பொருட்டு A9 வீதிக்கு கிழக்குப்பகுதி, மேற்குப்பகுதி என மருத்துவப் பிரிவு உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு, அவசரமாக மருத்துவமனைகள், முகாம்கள் அமைக்கப்பட்டு இரு வேறு பொறுப்பாளர்களின் தலைமையில் செயற்படத் தொடங்கின. இதுவரை மருத்துவப் பிரிவு மகளிர் பொறுப்பாளராக இருந்த எஸ்தர் களமருத்துவ மகளிர் பொறுப்பாளராக நியமிக்கப்பட, அதுவரை களமருத்துவ மகளிர பொறுப்பாளராகச் செயற்பட்ட மேஜர் அமுதா (பின்னாளில் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்தார்) வன்னி மேற்கு மருத்துவப் பிரிவு மகளிர் பொறுப்பாளராகத் தமது கடமைகளைத் தொடர்ந்தனர்.
ஜெயசிக்குறு படைநடவடிக்கையை முறியடிப்பதற்கான படையணிகளுக்குத் தேவையான மருத்துவத்தேவைகளை மேற்கொள்வதற்காக புளியங்குளத்திலிருந்து யாழ் நெடுஞ்சாலைக்கு இடது புறமாக மன்னகுளம் பிரதான மருத்துவத்தளம் காயமடைந்த போராளிகளை பதுங்குகுழிகளுக்குள் வைத்துச் சிகிச்சை வழங்கக்கூடிய முறையில் அமைக்கப்பட்டிருந்தது. 1997.08.20 காலையில் தொடர்தாக்குதல்களோடு படையினர் முன்னேற முயன்றனர். பலத்த எறிகணை வீச்சுக்களோடும் விமானத்தாக்குதல்கள் டாங்கிகளோடும் முன்னேற முயன்ற படையினருடன் பொருதி, எமது போராளிகள் அதிகளவில் காயமடைந்து அம் மருத்துவத்தளத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.மருத்துவக் கல்லூரியின் தமிழீழ மருத்துவர்கள் இருவரும் மருத்துவப் போராளிகள் சிலரும் இணைந்து காயமடைந்தவர்களுக்கான அவசரசிகிச்சைகளை வழங்கி, வாகனப் பகுதியினரின் உதவியோடு பின்தள மருத்துவமனைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர்.தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த தாக்குதல்களால் யாரும் சில நாள்களாக உணவு உண்பதற்கோ உறங்குவதற்கோ அவகாசம் இருக்கவில்லை. இதனைக் கவனித்த எஸ்தர் ஒவ்வொருவருக்கும் தேநீர் தயாரித்து, அவர்களின் வேலைகளில் இணைந்து கொண்டு தேநீர் அருந்தி மீண்டும் அவர்கள் உற்சாகத்தோடு வேலைசெய்வதற்கு உதவியாக இருந்தார். எதையுமே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாத குணவியல்பு அவருடன் உள்ளதாகவே நாம் நினைப்பதுண்டு தனது வேலைகளில் கவனத்துடன் இருக்கும் எஸ்தர் கண்டிப்பான சில இயல்புகளால் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவராகவே காணப்பட்டாலும் களைப்பு மிகுதியால் இருந்த போராளிகளின் மனநிலையை அறிந்தவராக அவர் செயற்பட்ட விதம் அவ்விடத்தில் தாய்மையின் உணர்வும் மேலோங்கி நின்றதை உணர்த்தும் ஓர் விடயமாகவே எனக்குத் தோன்றியது.
தொடர்ந்து,தனது தொலைத்தொடர்புக் கருவி மூலம் காயமடைந்தவர்களைச் சேரவிடாது வாகனப்பகுதி மூலம் பின்தள மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக அவரது குரல் கம்பீரமாக ஒலித்துக்கொண்டிருந்தது. நிலைமைகள் ஓரளவு சீராகிக்கொண்டிருந்தன. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி முடிந்தது. சற்று ஓய்வெடுக்கலாம் என நாம் நினைத்திருக்க, தொலைத்தொடர்புக் கருவி சிணுங்கியது. எஸ்தரின் முகம் தீவிரமாவதை உணர்ந்தவர்களாய் எல்லோரும் பரபரப்பானோம். இராணுவம் புதூர்ப்பகுதியால் முன்னேறுவதற்குத் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவசரமாக அவ்விடத்தில் பதுங்குகுழிகள் அமைப்பதற்கான உபகரணங்களுடன் புறப்பட்ட எமது குழுவினரோடு எஸ்தரும் இணைந்து கொண்டார். அவரது காயத்தின் தன்மை காரணமாக நாம் எவ்வளவோ மறுத்தும் தானும் எம்மோடு சேர்ந்துகொண்டு இரவோடிரவாக அப்பகுதிக்குச் சென்று பதுங்குகுழிகளை வெட்டத்தொடங்கினோம். பின்னணி விநியோகங்கள் எதுவும் முழுமையாக இல்லாததனால், அதற்குரிய பொறுப்பாளர்களால் கட்டளைகள் வழங்கப்பட துரிதகதியில் வேலைகள் முடிக்கப்பட்டன.
புளியங்குளத்திலுள்ள எமது போராளிகளுக்குரிய வழங்கலைத் தடைசெய்யும் முனைப்பிலேயே படையினர் புதூர்ப்பகுதியால் முன்னேறத் தீர்மானித்திருந்தனர். அவசரஅவசரமாக எமது மருத்துவத் தளம் அமைக்கப்பட்டு காயமடைந்தவர்களை எதிர்கொள்வதற்காக ஆயத்தமாகினோம். படையினர் தாக்குதலை ஆரம்பிக்க எதிர்த்தாக்குதலைத் தொடுத்த மாலதி படையணியும் பின் இவர்களோடு இணைந்து கொண்ட ஜெயந்தன் படையணியினதும் தாக்குதலைச் சமாளிக்க முடியாது திணறிய படையினர் தாக்குதலைக் கைவிட்டு தமது நிலைகளிலேயே முடங்கிப் போயினர். இத்தாக்குதலில் காயமடைந்த போராளிகளுக்குரிய சிகிச்சைகளை வழங்கிய பின் அவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் ஒன்றியிருந்தார் எஸ்தர்.
ஜெயசிக்குறு படைநடவடிக்கை இராணுவத்தினருக்குத் தோல்வியில் முடிய, அடுத்த தாக்குதல் கிளிநொச்சியிலுள்ள படையினருக்குக் கொடுக்கவெனத் தேசியத்தலைவரால் திட்டமிடப்பட்ட அதற்கான ஆயத்தங்களில் அனைவரும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவ்வேளை வடகாட்டில் அமைந்திருந்த எமது மருத்துவமனைக்கு வான்தாக்குதல் நிகழ்த்தப்பட இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அவசர அவசரமாக மல்லாவியிலிருந்த அரசியற்துறைக்குச் (இளம்பருதி, இறுதியுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்) சொந்தமான முகாமிற்குக் காயமடைந்தவர்களும் மருத்துவ உபகரணங்களும் நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தன. காயமடைந்தவர்களால் அம்முகாம் நிரம்பியிருந்தது. அங்கு கடமையிலிருந்த அனைவரும் களைப்பு மிகுதியினால் அம்முகாமின் முன்பிருந்த மரநிழல்களிலும் அகப்பட்ட இடங்களிலும் தூங்கிக்கொண்டிருந்தனர்.அங்கு எமது போராளி மருத்துவர்களுள் ஒருவராகிய வசந்திமாலா ஓர் தறப்பாள் கொட்டகையை அமைத்து மருத்துவ உபகரணங்களோடு தானும் தங்கிருந்தார். இவ்வேளை, மன்னகுளப் பகுதியிலிருந்து மறுநாள் கிளி. பரந்தன் தாக்குலுக்காக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த பிரதான மருத்துவநிலைக்குச் செல்வதற்காக எஸ்தர் அன்றைய நாள் இரவு அங்கு வந்து சேர்ந்தார். மன்னகுளத்தில் அவசர மருத்துவத் தேவைகளுக்காகச் சிலர் தங்கியிருக்க, முரசுமோட்டைப் பகுதியில் அமைக்கப்படும் புதிய பிரதான மருத்துவத்தளத்திற்குத் தேவையானவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பிவிட்டு அப்போதுதான் அங்கு எஸ்தர் வந்திருந்தார்.
எஸ்தர் மருத்துவப்பிரிவிற்கு வந்த நாளிலிருந்தே வசந்திமாலாவிற்குப் பரீட்சயமானவராகையால் ஓரளவிற்கு எஸ்தர் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு.
அன்றைய தினம் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அவ்வேளை இரவின் அமைதியைக் கலைத்தபடி நாய் ஒன்று அம்முகாமை அண்மித்த பகுதிகளை நோக்கி ஊளையிட்டுக்கொண்டேயிருந்தது. இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த அந்த நாயின் ஊளைக்குரல் இருவர் மனதிலும் ஏதோ ஒருவித நெருடலை ஏற்படுத்தவே செய்தது. அதுவரை களமுனை விடயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்த எஸ்தர் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை “இம்முறை நான் திரும்ப வரமாட்டேன் அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதனைச்சற்றும் எதிர்பார்க்காத தோழி “ஏனப்படிச் சொல்கிறீங்கள் எதுவும் நடக்காது திரும்பவும் இங்க வருவீங்கள்” என்று கூறினார்.நள்ளிரவு கடந்தும் ஒலித்த ஊளைச்சத்தம் ஏதோ ஓர் அபாய அறிவிப்பை உணர்த்தியதாகவே தோன்ற நெருடலுடனேயே உறங்கிப் போயினர். .அன்றைய அதிகாலை வேகமாகப் புலர்ந்தது போன்றே தோன்றியது. சோர்வு மிகுதியால் சிறிது நேரம் தூங்கினால் என்ன என்றே விழிகள் கெஞ்சின. இருந்தபோதும் முகாமில் எல்லாம் போட்டது போட்டபடி இருந்ததால் விரைவாக அனைத்தையும் ஒழுங்குபடுத்தவேண்டிய அவசியத்தை உணர்ந்தவர்களாய் அனைவரும் விழித்துக் கொண்டனர். எல்லோருக்கும் முன்பாக எழுந்துகொண்ட எஸ்தர் புறப்படுவதற்கு ஆயத்தமாகி வந்தார். தோழி கொடுத்த தேநீரை அருந்தி முடித்து, புன்னகையோடு விடைபெற்றுச் சென்றார்.
முரசுமோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்தப் பிரதான மருத்துவத்தளம் ஆண், பெண் களமருத்துவப் பொறுப்பாளர்களான திவாகர், எஸ்தர் ஆகியோரின் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டு, மருத்துவ உபகரணங்கள் அவசர தேவைக்குரிய குருதிவகைகள் குளிரசாதனப்பெட்டியில் பத்திரப்படுத்தப்பட்டு, போராளி மருத்துவர்கள், மருத்துவப் போராளிகள் என அனைவருமே தயார் நிலையில்..
1998.02.01 கிளிநொச்சி படைத்தளம் மீதான தாக்குதலைப் படையணிகள் தீவிரப்படுத்த, கிளிநொச்சிக்குக் கிடைக்கக்கூடிய உதவிகளை நிறுத்துவதற்காக நெடுஞ்சாலையைக் குறுக்கறுத்து எமது கண்ணிவெடிப்பிரிவினர் கண்ணிவெடிகளைப் புதைக்க, ஆனையிறவுக்குள் புகுந்த கரும்புலிகள் தாக்குதலை நிகழ்த்த திக்குமுக்காடிய சிங்களப்படையினர் வேவுலிமானங்கள் மூலம் எமது நிலைகளைக் கண்காணிக்கத் தொடங்கினர். இவ்வேளை இடம்பெற்றுக்கொண்டிருந்த தாக்குதல்களில் காயமடைந்த எமது போராளிகளை ஏற்றியபடி ஊர்திகள் மாறிமாறி அம்மருத்துவத்தளத்திற்கு விரைந்து கொண்டிருந்தன. வாகனங்களின் நடமட்டத்தினைத் துல்லியமாகக் கணித்த வேவுவிமானங்களின் தரவுகளின் அடிப்படையில் எமது பிரதான மருத்துவமனை எதிரிகளால் இனங்காணப்பட்டது. காயமடைந்தவர்களுக்குரிய சிகிச்சைகளை வழங்குவதிலும் ஏனையவர்களைப் பின்தளமருத்துவமனைக்கு (அவசர சிகிச்சைகளை அளித்த பின்னர்) அனுப்புவதிலும் என ஓய்வின்றி அனைவரும் உழைத்துக் கொண்டிருந்தவேளை, திடீரென வானூர்திகள் பேரிரைச்சலோடு பிரதான மருத்துவ நிலையை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நிகழ்த்தின.நொடிப்பொழுதில் அம்மருத்துவத்தளம் சிதைக்கப்பட்டிருக்க, அங்கு உயிர்காக்கும் பணியிலிருந்த மேஜர் சுசில், மேஜர் ரோகினி ஆகிய போராளி மருத்துவர்களோடும் மருத்துவப் போராளிகள் உட்பட 43 பேருடன் களமருத்துவப் பொறுப்பாளர்களான மேஜர் திவாகர், மேஜர் எஸ்தர் ஆகியோரையும் வித்துடல்களாகவே
பார்க்கமுடிந்தது.
தொலைத்தொடர்புக் கருவிகள் அலறியபடி அத்துயரச் சம்பவத்தை எம் செவிகளில் சேர்த்தன. காற்றலையில் வந்த செய்திப் பொய்யாகிப் போகாதோ.? என நாமெல்லாம் காத்திருக்க, தன் இறுதி யாத்திரைக்கு ஆயத்தமாவதற்காய் புறப்பட்ட ஊர்தியில் “தியாகசீலம்” நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார் எஸ்தர் வித்துடலாய். அன்றையநாள் பேரிழப்பின் வலியைச் சுமந்தோராய் நாம் பணிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தோம்.
போராட்ட வாழ்வில் உயிரிழப்புகள் தவிரக்க முடியாத நிகழ்வாகிப் போனாலும் எஸ்தரின் வீரச்சாவுச் செய்தியானது எம் எல்லோர் மனங்களையும் நிலைகுலையச் செய்வதற்கு இன்னோர் காரணமும் இருந்தது. ஏற்கனவே தாயகவிடியலுக்காக இரு மாவீரர்களைத் தந்து, அவர்களின் வித்துடல்களைக் கூட காணமுடியாத வேதனைகளோடு வாழ்ந்து வந்த எஸ்தரின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்வதெப்படி? என்ற வினாவே எல்லோர் மனங்களிலும் நிறைந்திருந்தது. ஒரு வழியாக வீரச்சாவுச் செய்தி முத்தையன்கட்டில் வசித்து வந்த பெற்றோர்களுக்கு அரசியற்துறையினரால் அறிவிக்கப்பட ,,எமது பிரிவைச் சேர்ந்த போராளிகளும் எஸ்தரின் இல்லத்திற்கு விரைந்தனர்.
ஆசையாய்ப் பெற்றெடுத்த மகளின் இழப்பு எஸ்தரின் பெற்றவர்களுக்குப் பேரிடியாகவே விழுந்தது. ஒரே மகளான எஸ்தர் உயிரற்ற உடலமாய்ப் பேழையில் வர, மூன்று பிள்ளைகளை இழந்து நின்ற அவர்களின் துயரை வார்த்தைகளால் விபரிப்பது சற்றுக் கடினமானதே. அத்தாயின் கண்ணீரைத் துடைத்து ஆறதல் கூற வழியற்றவர்களாய் விக்கித்து நின்றனர் எம்மவர்கள்.
சந்தனப் பேழையில் வந்திருந்த எஸ்தர், சிலமணிநேரங்களில் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு முத்தையன்கட்டு வலதுகரை அ.த.க பாடசாலைக்கு மக்களின் பார்வைக்காகவும் மலர் வணக்கத்தைப்பெற்றுக்கொள்வதற்காகவும் வந்து சேர்ந்தார். வீரவணக்கக் கூட்டம் நிறைவாக அங்கிருந்து கற்சிலைமடு முகாமிற்கு வந்தார். வழமையாக எஸ்தரின் உந்துருளியின் ஒலியிலேயே பரபரப்பாகும் அம்முகாம் அன்றைய நாள் அமைதியில் உறைந்து கிடந்தது. காந்தக் கண்களால் அனைத்தையும் கவனிக்கும் எஸ்தரின் விழிகள் சலனமற்றுக் கிடப்பதை ஏற்க மனம் மறுத்தது. அங்கிருந்த போராளிகளின் இறுதி அஞ்சலிகளையும் பெற்றுக்கொண்ட அந்த வீரமறத்தியைச் சுமந்தபடி துயிலுமில்லம் நோக்கிப் பயணமானது அவ்வூர்தி.
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் இம்மறத்தியைத் தன்னுள் தாங்கிக்கொள்வதற்கான ஆயத்தங்களோடு காத்திருந்தது. அங்கே இராணுவ மரியாதைகள் அனைத்தும் நிறைவாக, தன்னைப்பெற்றவர்களிடமும் எஞ்சிய இரு அண்ணன்மாரிடமும் உறவினர்களிடமும் தான் வளர்த்தெடுத்த போராளிகள், தான் நேசித்த மக்களிடமும் விடைபெற்றுக்கொண்டு அவர்களின் கண்ணீரோடு விதைகுழிக்குள் உறங்கச் சென்றார் மேஜர் எஸ்தர். “இனிமேலாவது அமைதியாய் அவர் விழிகள் உறங்கட்டும் என அவர் விதைகுழி மீது மண்தூவி, உறுதி எடுத்துக் கொண்டவர்களாய் எம் மனங்களைத் தேற்றியபடி பணிகளுக்குத் திரும்பினோம் .எஸ்தர் தான் பிடிவாதக்காரி என்பதை எமக்கு மீளவும் உணர்த்தி நின்றார். தன்மரணத்திலும் கூட. இறுதியாய்த் தன் தோழியிடம் கூறியது போன்றே வராமலே போனார் என அவரது தோழி அடிக்கடி கூறி நினைவு கூர்ந்து
கொள்வார்.
மேஜர் எஸ்தர் சரித்திரம் படைக்கப் பிறந்தவர். அவரது வீரச்சாவோடு எதுவுமே முடிந்துவிடவில்லை. மருத்துவப் பிரிவின் வளர்ச்சிக்காய் விழுப்புண் தந்த வலிகளோடும் அல்லும் பகலும் அயராது களமுனைகளிலும், மருத்துவத் தளங்களிலும் அவர் பதித்த தடங்களின் நினைவாய் பின்னாளில் நிமிர்ந்து நின்றது மேஜர் எஸ்தர் நினைவு மருத்துவமனை. புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தன் செல்லும் பிரதான வீதியை ஊடறுத்து வள்ளிபுனம் எனுமிடத்தில வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அம் மருத்துவமனை வைத்தியக் கலாநிதி சூரியகுமாரை தலைமை மருத்துவராகக் கொண்டு 1999.02.02 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
வன்னிப்பெருநிலப் பரப்பில் விடுதலைப்புலிகளின் இரண்டாவது பெரிய சத்திர சிகிச்சைக் கூடத்தினைக் கொண்டதாகவும் ஆய்வுகூடம், நோயாளர் விடுதிகள், தங்ககம் என்பவற்றைக் கொண்டதாய் சிறப்போடு தனது பணிகளை ஆரம்பித்துக் கொண்டது. எஸ்தரின் எண்ணங்களில் ஒன்றான புதிய மருத்துவப் போராளிகளை உருவாக்குவது மட்டுமன்றி, தமிழீழ மருத்துவக் கல்லூரி அணி 2 இனருக்குரிய கற்கை நெறிகளும் இங்கு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இங்கு பாரிய சத்திர சிகிச்சைகள் மருத்துவ கலாநிதி சூரியகுமார் தலைமையில் இடம்பெற்று வந்தன. இவருடன் இணைந்து பின்வந்த நாட்களில் வைத்திய கலாநிதி சிவபாலனும் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். நாளடைவில் வைத்திய கலாநிதி சிவபாலனின் மேற்பார்வையிலேயே இம்மருத்துவமனை இயங்கி வந்தது .பல காயமடைந்த போராளிகள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று மீளவும் களங்களில் உலா வந்தனர். வன்னி கிழக்குப் பகுதியில் பெயர் சொல்லக்கூடிய மருத்துவமனைகளுள் மேஜர் எஸ்தர் நினைவு மருத்துவமனை எமது போராளிகளால் அடிக்கடி உச்சரிக்கப்பட்டே வந்தது.
இறுதிக்களம் வரை பணியாற்றிய மருத்துவர்களோடும், மருத்துவப் போராளிகளோடும் இங்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களும் மருத்துவப் போராளிகளும் எஸ்தரால் உருக்கப்பட்ட மருத்துவப் போராளிகள் என அனைவரும் தமது மருத்துவப் பணியில் உயர்ந்த சேவையினை வழங்கினர். சிலர் இப்பணியின்போது தம்முயிர்களை ஈகம் செய்ததோடு ,பலர் தமது அங்கங்களையும் இழந்து நின்றனர் என்பதும் வரலாற்றுப் பேருண்மையாகும்.
எமது நீண்ட விடுதலைப் பயணத்தில் பல களங்களிலும் எதிர்நின்று சமராடி, தளகள மருத்துவப் பிரிவு மகளிர் பொறுப்பாளராகவும் இறுதி மூச்சுவரை பயணித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டு மேஜர் எஸ்தராய் எம் மனங்களில் நிறைந்திருக்கும் இம் மாவீரரின் வீரகாவியத்தினை வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் என் எழுத்துகளினூடாக வெளிக்கொணர்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
🙏🙏🙏
சர்மிளா முகிலன்.
சூரியப்புதல்வர்கள் 2022