யாழ். மாவட்டம் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவர் சுதாஜினி. 1991 – 1992ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கலைமதியாக இவர் பல வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ‘ஓயாத அலைகள் 01’ நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
கலைமதியின் உறவினர்கள் அன்று இராணுவ ஆக்கிரமிப்பு ஊர்களினுள் இருந்தமையால் உறவினர்களுக்கு வீரமரண செய்தி அறிவிக்கப்படாமல் தமிழீழ மாவீரர் பணிமனை கிளிநொச்சி கோட்டத்தின் ஊடாக இறுதி வீரவணக்க நிகழ்வுகள் அனுஸ்ரிக்கப்பட்டு, பின்னைய காலங்களில் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் கப்டன் கலைமதி ஆகிய மாவீரரின் நினைவுக்கல் நிறுவப்பட்டது.
காலம் பல களங்களை விரித்து உண்மை, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள் 02, 03, 04, தீச்சுவாலை – அக்கினிக்கீல என தொடர் வெற்றி செய்திகளுடன் கடந்து சென்று எதிரியானவனை பேச்சுவார்த்தைக்கு வரச்செய்து சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்டு பாதைகள் திறக்கப்பட்டது.
வன்னி நோக்கியதுமான பல உறவுகளின் வருகையுடன் கலைமதியின் குடும்பமும் தேடல்களுடன் வருகைதந்தனர். தாயார் மகளைக் காண எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சுதாயினி போராளி கலைமதியான ஏனைய தகவலும் , பெயர் விபரங்களும் அந்த தாய் அறிந்திருக்கவில்லை. பின் உரிய காலவேளைகளில் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக கலைமதியின் குடும்பம் தொடர்பு இல்லாது இருந்தது. பின்னர் யாழ். மாவட்டத்திலிருந்து போராளிகள் மீளவும் வன்னிக்கு அழைக்கப்பட்டனர். அப்போது யாழ். முகமாலை பாதையும் மூடப்பட்டு வவுனியா மாவட்டம் ஓமந்தை சோதனைச் சாவடி மட்டுமே திறந்திருந்தது. 2007ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் கலைமதியின் தாயார் சில உறவுகள் மூலம் சில செய்திகளை அறிந்து மகளைக் காண வன்னி நோக்கி புறப்பட யாழ். மாவட்டத்திலிருந்து தென் தமிழீழம் நோக்கி கப்பலில் விரைந்து ஓமந்தை சாவடி ஊடாக பலகாரங்கள், இனிப்பு வகைகள் என மகளைக் காண்பதற்கு அனைத்து பொதிகளை சுமந்து கிளிநொச்சி வந்தடைகின்றார்.
அங்கு மகளை பற்றிய தரவுகளை தாய் கூறிநிற்க கோவைகள் திரட்டப்படுகிறது. அவளின் பெயரும் வருகின்றது. ஒரு வருடமா..? இரு வருடமா..? பத்து பதினைந்து வருடம் காத்திருந்த தாய்க்கு எப்படி அவர்கள் கூறுவார்….? மகள் வருவாள்…? மகள் வருவாள் என நடுவப்பணியகத்தின் வாசல் படலையை பாத்திருந்த தாய்க்கு எப்படி அவர்கள் உரைப்பார்கள்….?
பின்னர் அந்தத் தாய்க்கு ஒருவாறு கூறப்பட்டது தங்கள் மகள் எம்மினத்திற்காக தன்னுயிர் தந்து மாவீரம் ஆகிவிட்டாள் அம்மா…… ஏதோ ஏக்கத்தோடு காத்திருந்த விழிகளில் ஓர் இனந்தெரியாத இனிய சோகம் நிறைந்து. அந்த தாயை ஏற்றி வீரமகள் துயில்கொள்ளும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் நோக்கி வாகனம் விரைந்து சென்றது. கருவறை சுமந்திருந்த சுதாஜினி செல்வத்தை விதைகுழியில் கலைமதியாகி உறங்கும் மகளை பார்த்த அந்த தாயின் உணர்வை – பரிதவிப்பை இங்கே நாம் வார்த்தைகளால் வரித்துவிட முடியாது.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடாகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது. எனும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனைப்போன்று எத்தனையோ காவியங்கள் தமிழீழ மண்ணில்.
எப்படி ஆறுதல் உரைப்போம் அந்த தாய்க்கு. அன்று தன் உதிரத்தை பாலாய் ஊட்டி வளர்த்த அந்த அன்னை வீரத்தின் மடியில் உறங்கும் மகவின் கல்லறையை தன் விழிநீரால் தேற்றினாள். தாயே உன் மகளின் வீரத்தால் எம் தேசம் விடுதலை அடைந்தது நாளை அவர்களின் கனவும் நனவாகும். கலைமதிபோல் நீள் வரிசையில் உறங்கும் மாவீரச் செல்வங்களின் விதைகுழி மீது சத்தியம் செய்து தொடர்வோம் அவர்களின் வழியில் என ஆறுதல் கூறி போராளிகளும் அன்று விடுதலைக்கு பலம் சேர்க்கும் புலத்திலிருந்து சென்ற உறவுகளும் தாயின் அருகில் நின்றார்கள்.
அன்றைய காலப்பகுதியில் புலத்திலிருந்து – தமிழீழம் (வன்னி) சென்ற குடும்பத்தினரால் அதே சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும் இன்று அந்த தாயின் உணர்வலையாய் ஆயிரம் கதைகள் சொல்லி நிற்கின்றன வரலாற்றில்.
என் இறுதி வார்த்தைகளும்
உங்களுக்கு கிடைக்காமல்
போகலாம்
ஆனால், நாளை….
சுதந்திரத்தின் பிரசவிப்பில்
உங்கள் முற்றத்தில்
மலராய்
நான் மலர்வேன்.
அதுபோல், தாயே கலங்காதே கலைமதியோடு நீள் வரிசையில் துயில்கின்ற மாவீரச் செல்வங்களின் கனவை நனவாக்க நாமும் பயணிப்போம்.
நினைவுகளுடன் என்றும் அ.ம. இசைவழுதி.