கிளிநொச்சி மாநகரைக் கைப்பற்றிய ஶ்ரீ லங்கா இராணுவம் பரந்தனில் இருந்து முரசுமோட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
முரசுமோட்டைப் பகுதி களமுனையில் ஶ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இவர் தலையில் படுகாயம் அடைந்தார்.
இவரின் பெயர் H.M சமன்_புஷ்பகுமார ஆகும். இராணுவத்தில் சமன் புஷ்பகுமாரவின் பதவிநிலை லான்ஷ் கோப்ரல் என்பதும் எந்தன் நினைவுப் பெட்டகத்தில் உண்டு.
சிங்க றெஜிமென்ற்,கஜபாகு றெஜிமென்ற் கெமுனுவோச் என பல படைப்பிரிவுகளைக்
கொண்ட ஶ்ரீலங்கா இராணுவத்தில் லான்ஷ் கோப்ரல் H.M சமன் குமார எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்பது எந்தன் நினைவில் இல்லை.
2009 ஆம் ஆண்டு தைத் திங்கள் நடைபெற்ற மிக உக்கிரமான தொடர் சமரில் தமிழர் சேனையால் செங்களத்திடை மீட்கப்பட்டார்.
களமுனையில் கடமையில் இருந்த தமிழர் சேனையின் இராணுவ வைத்தியர்களால் துரித சிகிச்சை வழங்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இடம்பெயர்ந்து தருமபுரத்தில் இயங்கிய கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையிலும் அன்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழர் மனங்களில் நிரந்தர இடம்பிடித்து நிற்கும் Dr.த.சத்தியமூர்த்தி அவர்களின் மானுடநேயமும் இவரின் விடுதலைக்கு காத்திரமான பங்காய் அமைந்தது.
மிக நல்ல முறையில் பராமரிப்பும் வழங்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்(ICRC) ஊடாக மேலதிக சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பட்டார்.
தரணி எங்கும் மானுடநேயம் தள்ளாடிக் கொண்டிருக்க தமிழர்தம் செயலிலும் சொல்லிலும் அந்த மானுடநேயம் தனித்துவமாய் நடைபயின்றது.
யுத்தக் கைதிகளை எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டுமென அண்டைய இரு நாடுகள் விவாதம் செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் என் நினைவில் மலர்ந்தவை.
“எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு” ….
என கவிஞர் காசியானந்தன் எழுதி எம்மரும் பாடகர் மானமிகு தேனிசை செல்லப்பா பாடிய பாடல் வரிகளும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.
-Tharsan Tharum –