Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / முள்ளிவாய்க்காலில் வீரவரலாறான அன்பரசன்

முள்ளிவாய்க்காலில் வீரவரலாறான அன்பரசன்

அன்பரசன் (லோறன்ஸ்) அவர்கள் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறிலங்கா அரசு தமிழர்கள் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் காலத்திற்குக் காலம் மேற்கொண்டு வந்த ஆக்கிரமிப்புகளாலும், இராணுவத்தின் தாக்குதல்களாலும் மக்கள் அனுபவித்த அவலங்களையும் வலிகளையும் கண்டு 1989 இன் பிற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். மணியந்தோட்டம் 03 பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று அன்பரசன் என்னும் பெயருடன் யாழ். மாவட்டப் படையணியில் சேர்க்கப்பட்டார். யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களில் இவரும் பங்கு கொண்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதித்துறை ஆரம்பிக்கப்பட்டு. துறை சார்ந்த சார்ந்த பணிகளைச் செய்வதற்காகத் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் போராளிகள் தலைமையால் நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ். மாவட்டத்திலிருந்து அன்பரசனும் 1991 ஆம் ஆண்டு நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நிதித்துறைப் பணிகளைக் கற்றறிவதற்காக இவர் நிதித்துறைப் பொறுப்பாளருடன் பணியாற்றினார். நிதித்துறையால் தமிழீழ மீட்புநிதி சேகரிப்புப் பணி தொடங்கியபோது அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இயல்பாகவே அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் பேசும் பண்பு கொண்ட இவர், மக்களுக்கு நிதி சேகரிப்பின் தேவையைத் தனது பேச்சாற்றலால் புரியவைத்துப் பணியைத் திறம்படச் செய்ததோடு, இரவு பகல் பாராது அயராது பணிசெய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இவரின் முயற்சியினையும் பணியின் ஆர்வத்தினையும் தற்துணிவான நன்னடத்தையையும் கருத்தில் எடுத்த நிதித்துறைப் பெறுப்பாளர் அவர்கள், இவரை வருவாய்ப்பகுதிப் பணிக்கு மாற்றினார். அக்காலப் பகுதியில் வருவாய்ப் பகுதிப் பொறுப்பாளராக இருந்த தமிழ்க்குமரன் அவர்களுடன் வருவாய்ப்பகுதி நடவடிக்கைகளை ஆர்வமுடன் பட்டறிந்துகொண்டு செயலாற்றினார். இதனால் இவருக்கு வலிகாமம் பகுதி சந்தைப்பகுதியினை நிர்வகிக்கும் பணி வழங்கப்பட்டது.

வன்னிக்கும் யாழ். குடாநாட்டுக்குமான போக்குவரத்துப் பாதையாக இருந்த கிளாலி படகுச்சேவையில் பணியாற்றுவதற்காக 1995 காலப்பகுதியில் அமர்த்தப்பட்டார். மக்களின் சிரமங்களையெல்லாம் கருத்திற் கொண்டு பொறுமையாகவும். அமைதியாகவும், மக்களுடன் நல்லுறவாகவுமிருந்து தனது பணிகளை நகர்த்தி, தான் சிறந்த நிர்வாகி என்பதை இப்பணி மூலம் நிரூபித்தார். 1995 இறுதிக்காலப்பகுதியில் யாழ். குடாநாட்டை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிய பின் கிளிநொச்சிப் பகுதியில் வருவாய்ப்பகுதி நடவடிக்கைகளை நிர்வகித்தார். 1996 இல் சிங்கள இராணுவத்தின் முல்லைத்தீவு இராணுவமுகாம் மீதான ஓயாத அலைகள் 1 தாக்கி அழிப்புச்சமரில் நிதித்துறைப் படையணியில் ஒரு அணியின் பொறுப்பாளராக நின்று களமாடினார். சமநேரத்தில் ஆனையிறவுப் பகுதியிலிருந்து சத்ஜெய 1. 2 இராணுவ நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர்த்துச் சமர் புரிவதற்காக நிதித்துறைப் படையணி முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து ஆனையிறவின் முன்னரங்கப் பகுதிக்கு நகர்த்தப்பட்டது. அங்கு முன்னேறிய இராணுவத்தைத் தடுத்து நிறுத்தி விரட்டியடித்த சமரில் இவர் தனது வீரத் தடத்தைப் பதித்திருந்தார்.அதன் பின் 1996 இன் இறுதிக் காலப்பகுதியில் இவர் நிதித்துறையின் போர் ஊர்திப் பகுதிக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் அப்பணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த யாழவன் (நியூட்டன்) அவர்களுடன் பணியாற்றியதோடு ஊர்திகள் பற்றி தெரிந்து கொள்வதுடன் போர்க்களங்களின் சூழலுக்கு ஏற்ப பாதைகள் அமைப்பது, பாதைகளுக்கு ஏற்ப ஊர்திகள் தேர்வு செய்வது, ஓட்டுநர்களின் பாதுகாப்பு போன்ற அனைத்து விடயங்களையும் நேரில் சென்று பணி செய்து பட்டறிந்து கொண்டார்.

யாழவன் அவர்களுக்கு வேறு பணி வழங்கப்பட்டபோது அன்பரசன் போர் ஊர்திப் பகுதியின் பொறுப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். போர் ஊர்திப் பணி என்பது சாதாரண பணியல்ல. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதியில் எறிகணைகள். துப்பாக்கி ரவைகள் மழையாகப் பொழியும். வான்தாக்குதலுக்கு மத்தியில் ஊர்தியை ஓட்டவேண்டும். உயிருக்குப் போராடும் விழுப்புண் அடைந்த போராளிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாது பாதையில் ஆழ ஊடுருவும் இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலையும் சமாளிக்க வேண்டும். முன்னிலையில் சமராடிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கு உணவு. வெடிபொருட்கள் வழங்கல். அணிகளை இடம் மாற்றுதல் போன்ற பின்களப் பணிகளை ஆற்ற வேண்டும். இவற்றைத் திறம்படச் செய்தார்.

2002 இல் அன்பரசனிற்கு அமைப்பினால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 2002 சமாதான காலப்பகுதியில் வருவாய்ப்பகுதிப் பணி நடவடிக்கையாக யாழ். மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிலகாலம் அங்கு சிறப்பாகப் பணியாற்றினார்.

சமர்க்கள முன்னரங்க நிலைகளில் எதிரியின் தாக்குதலை போராளிகள் தற்காத்து நின்று சமர் புரிவதற்கு ஏதுவாகப் பாரிய மண் அணை அமைப்பது, பீரங்கித் தாக்குதல்கள், வான் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவல்ல காப்பரண் அமைப்பது, எதிரியின் துப்பாக்கிரவை, எறிகணைவீச்சு, விமானக் குண்டுவீச்சுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கால்வாய்ப் பாதைகள் மற்றும் பதுங்குகுழிகள் அமைத்தல், விழுப்புண்ணடைந்த போராளிகளையும், சமர்க்களத்தில் வித்தான மாவீரர் வித்துடல்களையும் துரிதமாக பின்களம் நகர்த்துவதற்கு ஏற்ப பாதைகள் அமைத்தல் போன்ற முக்கிய பணிகளை துரித கதியில் மேற்கொள்வதற்காக 2003 காலப்பகுதியில் புதிய தொழில்நுட்ப கனரக ஊர்திகள் இணைக்கப்பட்டு நிதித்துறைக் கனரக ஊர்திப் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அன்பரசன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். போர்ப் பகுதி முன்னரங்கப் பணி என்பதால் ஓய்வின்றி, தூக்கமின்றிப் பணியாற்ற வேண்டும். இப்பணிக்குப் பொறுமை, அமைதி என்பன இருக்க வேண்டும். இப்பணியினை இவர் செவ்வனே செய்தார். களமுனைப்பகுதி, நிர்வாகப் பகுதிக்கான இன்னொரு பகுதி ஊர்தி பேணுகைப் பகுதி. இதற்குப் பொறுப்பாக இருந்த போராளி வேறு பணிக்கு மாற்றப்பட்டமையால் அவரின் பணியினை 2007 காலப்பகுதியில் அன்பரசன் பொறுப்பேற்றார். இங்கும் தனது திறமையான செயற்பாட்டால் களமுனைப் பணிகள் மற்றும் படையணிகளின் ஊர்திகளைப் பேணுகை செய்யும் மிகப் பெரும் பணியினை 2009 இறுதிவரை சிறப்பாக ஆற்றினார்.

2009 மார்ச் மாதம் ஆனந்தபுரம் பெட்டிச்சமருக்கான ஏற்பாடு நடந்தபோது நிதித்துறையின் காப்பரண் அமைக்கும்பணி. உணவு விநியோகம் வழங்கற் பகுதி நடவடிக்கை. ஊர்திப் பகுதி, ஊர்திப் பேணுகைப்பகுதி மற்றும் நிதித்துறை சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பாளராக அன்பரசன் அமர்த்தப்பட்டார். மாதத்தின் இறுதிப் பகுதியில் ஆனந்தபுரப் பகுதியை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்த சமயத்தில் புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலிருந்து ஆனந்தபுரம் நோக்கி முன்னேறிய இராணுவத்தைத் தடுத்து கட்டளைத் தளபதி பானு அவர்களின் நெறிப்படுத்தலில் தனது அணியுடன் களமிறங்கிய அன்பரசன் அச்சமரில் விழுப்புண் அடைந்தார். இவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது. 15 இருந்தபோது.15 மே 2009 ஆம் நாள் காலை சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மாவீரன் அன்பரசன் (லோறன்ஸ்) அவர்களின் விடுதலைப் போராட்டப் பணி அதிகமாகக் களமுனை சார்ந்ததாகவே இருந்தது. அதாவது களமுனையில் போராடும் போராளிகளுக்கான சுடுகலன், வெடிபொருட்கள் வழங்குதல், உணவு வழங்குதல், முன்னரங்க நிலைகளில் காப்பரண்கள் அமைத்தல், விழுப்புண் அடைந்த போராளிகளின் உயிரைக் காப்பாற்றத் துரிதமாகப் பின்களம் எடுத்து வருதல். படையணிகளை நகர்த்தும் பணிகள் என முக்கிய பணிகளுக்காக இந்த மாவீரன் தனது இறுதி மூச்சுவரை பயணித்து தமிழீழ விடுதலைக்காகத் தாய்மண்ணிலே வித்தானார்.

நன்றி 

சூரியப்புதல்வர்கள் -2023

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

முள்ளிவாய்க்காலில் வீரவரலாறான புதியவன்

புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட ...

Leave a Reply