Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரவரலாறான அறிவு

முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரவரலாறான அறிவு

எமது நீண்டபெரும் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் களமான முள்ளிவாய்க்கால் வராலாற்றுப் பூமியில் உறுதியோடு போராடி தம் இன்னுயிர்களைத் தமிழீழ விடுதலைக்காய் அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற மாவீரர்களுள் ஒருவராக மாவீரர் வீரவேங்கை அறிவும் வித்துடலாய் சாய்ந்தார்.

இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு செல்லையா சிவகுமார் என்னும் இயற்பெயரோடு துடிப்புள்ள இளஞராக வளர்ந்து வந்தார். 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட யாழ். இடப்பெயர்வின் மூலம் அதிகமான மக்கள் இவர் வாழ்ந்து வந்த தொட்டியடி. விசுவமடு பகுதியிலும் குடியேறவே அவரது கண்முன்னே தம் இருப்பிடங்களை இழந்து எம் மக்கள் படும் இன்னல்களையும் அவர்கள் சந்தித்த இழப்புகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டும் தேச விடியலின் அவசியம் பற்றிச் சிந்தித்தவராக 1995 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பினரோடு இணைத்துக் கொண்டார்.

வன்னிப் பகுதியின் வனப்பகுதியொன்றில் அமைக்கப்பட்டிருந்த பயிற்சிப் பாசறையில் மாறன் பயிற்சி முகாம்) புதிதாக இணைந்த பல தோழர்களோடு சுறுசுறுப்புடன் பயிற்சிகளில் கலந்து கொண்டு துணிவு மிக்க போராளியாக அறிவு எனும் பெயருடன் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினார்.

இக்காலப்பகுதியில் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கோடு சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்கொள்ளும் படையணியில் ஒருவராக அறிவும் புளியங்குளம் நோக்கி புறப்பட்டார். அங்கே இராணுவத்தினரோடு இடம்பெற்ற கடும் சமர்களில் ஆர்வமுடனும் துணிவுடனும் களமாடி நின்றார். புளியங்குளத்தில் எதிரியின் நகர்வுகளைத் தடுத்து நிறுத்தி தீரமுடன் போரிட்ட எம்மவர்களில் அறிவின் வீரமும் துணிவும் அனைவராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர் சண்டைகளில் ஈடுபட்ட அணிகள் பின் தளங்களுக்கு அனுப்பப்பட்ட வேளையில் அறிவும் முகாம் திரும்ப நேரிட்டது. ஆனாலும் மீண்டும் களமுனைக்கு செல்வதற்கான அனுமதி வேண்டி தனது பொறுப்பாளரிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.

ஓய்வில் இருந்த போராளிகளைச் சந்திக்க வந்த சிறப்புப் பொறுப்பாளர் பிரிகேடியர் கடாபி அவர்களின் கவனத்தில் அறிவின் செயற்பாடுகள் கொண்டுவரப்பட்டபோது, பொறுப்பாளரினால் வேறு வேலைகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டார். அவனது திறமையும் இரகசியம் பாதுகாக்கும் தன்மையும், விடயங்களை ஊகித்தறியும் திறனும் அவரை இரகசிய பாதுகாப்பு அணிக்கு உள்வாங்கியது. தலைவரின் பாதுகாப்பு அணியின் தள அமைப்பு நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அங்கும் தனக்குத் தரப்பட்ட கடமையைத் திறம்படச் செய்தார் அறிவு. சண்டைக்களங்களில் அவர் காட்டிய அதே வேகமும் ஆர்வமும் இங்கும் காணமுடிந்தது. இரவுபகல் பாராது தரப்பட்ட வேலையை முடித்த பின்னரே ஓய்வெடுப்பார். இவ்வாறு நகர்ந்த அவரது போராட்ட வாழ்க்கையில் அமைப்பு நடைமுறைகளுக்கு அமைய திருமண பந்தத்தில் இணைந்தார். குடும்பம் ஒரு பக்கம் இருக்க கடமையே கண்ணாக முகாமில் பணிசெய்தார் அந்த அற்புத போராளி.

மீண்டும் போர் ஆரம்பித்து நில ஆக்கிரமிப்புத் தொடர அணிகள் தொடர் சண்டையில் நின்றபோது அதில் ஒருவராய் விசுவமடு. புதுக்குடியிருப்பு. ஆனந்தபுரம் என தொடர் களங்களின் நெடுகிலும் தொடர்ந்து வந்தார் அறிவு. இவ்வாறு உறுதிமிக்க ஒரு போராளி மண்ணையும் மக்களையும் நேசித்த அந்த மாவீரர் 13 மே 2009 அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் விதையாக வீழ்ந்தார்.

 

நன்றி 

சூரியப்புதல்வர்கள் -2023

About ehouse

Check Also

முள்ளிவாய்க்காலில் வீரவரலாறான அன்பரசன்

அன்பரசன் (லோறன்ஸ்) அவர்கள் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறிலங்கா அரசு தமிழர்கள் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் காலத்திற்குக் காலம் ...

Leave a Reply