புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட வரலாறு என்பது பொறுப்புகள். பதவிகளைக் கடந்த உறுதி தளராத நேர்மையும், தன் அடக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த வாழ்வியல் சகாப்தம்.
யாழ்.மாவட்டம்அரியாலையைச்சேர்ந்தநாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணபதிப்பிள்ளைக்கும் கனகாம்பிகைக்கும் மகனாக 05.04.1956 ஆம் ஆண்டு பிறந்து குகநேசன் எனும் பெயருடன் வளர்ந்தார். உயர்தரத்தில் விஞ்ஞானபாடரீதியாக நல்ல பெறுபேற்றைப் பெற்றும் சிங்களத் தரப்படுத்தல் மூலம் சிங்களவர் அதே பெறுபேறில் சித்தியடைய அதே பெறுபேறுள்ள தான் தரப்படுத்தல் என்ற போர்வையில் புறக்கணிக்ப்பட்டதை கண்டித்து இனி சிங்களவர்களது இந்த பாடத்திட்டத்தைப் படிக்கமாட்டேன் என மறுத்து தனது கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தபோது பெற்றோரின் வற்புறுத்தலில் தாயகத்தைவிட்டு 1980 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து யேர்மனியில் தஞ்சமடைந்தார்.
அங்கு சென்ற காலத்திலேயே தனது விடுதலைக்கான பணியினை ஆரம்பித்து அன்றைய இக்கட்டான நெருக்கடி நிறைந்த சூழ்நிலைகளில் எந்தவித பயமும் இன்றி விடுதலைப் போராட்டத்திற்கான நிதி திரட்டுதல். விடுதலைப் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கிலான பரப்புரைப் பணிகளையும் துணிச்சலுடன் முன்னெடுத்தார். அன்றைய காலத்தில் யேர்மனியில் சிறிலங்கா கைக்கூலிகளினாலும் மாற்றுக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிலை நிறுத்தியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். இதன் விளைவாக யேர்மனிய அரசால் கைது செய்யப்படும் அளவிற்கு இவரது செயற்பாடுகள் மிகக் காத்திரமானதாக அமையப் பெற்றிருந்தது. பின்னர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லாததால் சிறையிலிருந்து விடுவித்த போது யேர்மனிய அரசு இவருக்கு வழங்கிய 8000 டொச்மார்க்குகளை அமைப்பின் செயற்பாடுகளுக்கு வழங்கினார் என்பது வரலாறு.
1992ம் ஆண்டு தமிழீழம் திரும்பிய புதியவன் மாஸ்டருக்கு இயக்கத்தில் நேரடிப் பணிகள் காத்திருந்த போதும் அவர் இயக்கத்திடம் வைத்த பிரதான கோரிக்கை தான் இயக்கத்தின் அடிப்படைப் பயிற்சியினை எடுக்கவேண்டும் என்பதாகும். அவரது வயது முதிர்ச்சியை கருத்திற்கொண்ட இயக்கம். அவர் ஒரு முழுமையான போராளியாக அடிப்படைப் பயிற்சி இன்றியே பணியாற்றலாம் என்றபோதும் அவர் அடிப்படைப் பயிற்சி எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக நின்று பயிற்சியினை எடுத்து இதயபூமி 1 எனப் பெயரிடப்பட்ட மணலாறு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையிலும் பங்குபற்றினார். கராத்தேயில் கறுப்புப் பட்டியைப் பெற்றிருந்த புதியவன் மாஸ்டர் என்றுமே இயக்கப் பயிற்சிகளில் சளைத்தவர்.
அல்ல. புதியவன் மாஸ்டரின் வெளிநாட்டு நிர்வாக அனுபவத்தை தமிழீழத்தில் பயன்படுத்த விரும்பிய இயக்கம். அவரை மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகக் கட்டமைப்பில் செயலாற்ற வழிவகை செய்தது. அரசியல் செயற்பாடுகளையும் சண்டைக் களங்களையும் எதிர்கொள்ளும் ஒரு போராளியே முழுமை பெறுகின்றான் என்ற அடிப்படையில் போரையும் அரசியலையும் போராளிகள் மத்தியில் அனுபவப் படங்களாக்கிப் போராளிகளைப் புடம்போட்டு வளர்க்கும் அனைத்துலகத் தொடர்பகக் கட்டமைப்பில் எதற்கும் தயங்காத போராளியாகத் தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் பொறுப்புகளையும் சண்டைக் களத்திலும் சரி அரசியல், நிர்வாகப் பணிகளிலும் சரி நேர்மையாகச் செய்து முடிப்பவரே புதியவன் மாஸ்டர்.
1992 இல் அடிப்படைப் பயிற்சியை முடித்து வந்த புதியவன் மாஸ்டர் நந்தவனத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றார். நந்தவனம் என்பது தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து மீண்டும் தமிழீழம் வருவோருக்கான வதிவிட அனுமதியை வழங்குவது முதற்கொண்டு அவர்களுக்கான பலதரப்பட்ட தேவைகளையும் நிறைவாக்கிக் கொடுத்து. புலம்பெயர் தமிழர்களின் உறவுப் பாலமாகச் செயலாற்றி நின்ற செயலகமாகும். இத்தகைய நந்தவனத்தின் அடிப்படைப் பொறுப்புகளிலிருந்து அதியுயர்ந்த பொறுப்புகள் வரையில் பலவிதமான செயற்பாடுகளையும் மிகத் திறம்படச் செய்த போராளிகளில் முன்னுதாரணமான ஒருவர் புதியவன் மாஸ்டர். அவர் செயலாற்ற ஆரம்பித்த காலம் முதல் 2009 மே 18 வரையில் நந்தவனக் கட்டுமானத்தின் செயற்பாடுகளிலும் வளர்ச்ச்சியிலும் விரிவாக்கத்திலும் நற்பணிகளிலும் புதியவன் மாஸ்டரின் பங்களிப்பென்பது தவிர்க்கமுடியாது பின்னிப்பிணைந்திருக்கும் மகத்துவம் மிக்கது.
மண்கிண்டி மலைத் தாக்குதலின் பின்னர் நிர்வாகப் பணிகளில் அதிகம் ஈடுபட்டிருந்த புதியவன் மாஸ்டருக்கு 1996 இன் பின்னர் இடையிடையே குட்டிசிறி மோட்டர் படையணியின் சண்டைக் களங்களுக்குச் சென்றுவர வாய்ப்புகள் கிடைத்தபோதும், 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆனையிறவு பரந்தன் கள முனைப்பகுதியில் கனரக கிட்டு ஆட்டிலறிப் படையணியில் மொங்கன் எனப் பெயரிடப்பட்ட ஆயுதத்தில் சண்டையிடும் வாய்ப்புக்கிட்டியது. அதனையும் தனக்கே உரிய பாணியில் திறம்படச் செய்தவர் பின்னைய நாட்களில் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்லறிப் படையணியில் 130MM ஆட்டிலறி போன்ற பல வகையான ஆட்லறிகளை எதிரிக்கு எதிராக ஏவிச் சண்டையிடும் சமர்க்களப் பணிகளை மிகத்துணிவுடன் செய்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் தாயகக் கட்டுமானம் என்பது நந்தவனம், ஆவணக்காப்பகம், மாவீரர் படிப்பகம், இராசன் அச்சகம், அறிவியல் கல்லூரி, அரசறிவியல் கல்லூரி, ஊடக மையம், தொண்டு நிறுவனம், சுற்றுலா விடுதிகள், தொலைத்தொடர்பு நிலையங்கள் எனப் பல கட்டுமானங்களைக் கொண்டது. இக்கட்டுமானங்கள் பலவும் லெப். கேணல் தரப் போராளிகள் பலரினால் நிர்வகிக்கப்பட்டன. இவ்வாறான கட்டுமானங்கள் பலவற்றிலும் அனைத்துலகத் தொடர்பகத்தின் மூத்த போராளிகளில் ஒருவரான புதியவன் மாஸ்டர் செயல் திறன் மிக்க போராளியாகவும், இடைநிலைப் பொறுப்பாளராகவும், ஆவணக் காப்பகம் போன்ற சிலவற்றின் பொறுப்பாளராகவும் செயலாற்றிய காத்திரம் மிக்க பொறுப்பாளர்.
1992ம் ஆண்டு தமிழீழம் வந்த புதியவன் மாஸ்டருக்கு அவரது வயது முதிர்ச்சியின் காரணமாக ஒருசில ஆண்டுகளிலேயே இயக்கத்தின் ஏற்பாட்டில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண இணையராகி இருவரும் இணைந்து வயதுவந்த போராளிகளுக்கான திருமண ஏற்பாடுகளைச் சிறப்புடன் செய்துவைப்பதற்குப் புதியவன் மாஸ்டர் ஆற்றிய பங்கென்பதும் அவரது விடுதலை வரலாற்றின் இன்னொரு அத்தியாயமே. விடுதலைக்காக அயராது உழைத்ததன் விளைவாக இவர்களுக்கு குழந்தை வாய்ப்புகள் பலதடவைகள் வந்து கரைந்து போயிற்று. இத்தகைய சூழலில் இயக்கத்தினதும் குடும்ப உறுப்பினர்களினதும் சகபோராளிகளினதும் நண்பர்களினதும் அன்புரிமை கலந்த வேண்டுதல்களுக்கு அமைய செயற்பட்டு அன்புக்குழந்தைச் செல்வத்தினை பெற்றெடுத்தனர். குழந்தை பிறந்து சில ஆண்டுகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் இறுதிநாள் வந்தது.
போராளிகளும் பொதுமக்களும் சிங்கள இராணுவத்திடம் சரணடைகின்றனர். குழந்தையும் கையுமாகப் போராளி. மனைவி மற்றும் சக போராளிகள் பலரும் தணியாத விடுதலை மீதான தாகத்தைச் சுமந்தபடி கையறு நிலையில் விடுதலைக்காகப் போராட மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வரும் என்ற நம்பிக்கையுடன் சரணடையத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
வாழ்வின் எல்லா இடங்களிலும் தன்னை மறைத்துத் தன் மனைவியை முன்னிறுத்திய புனிதப் போராளி புதியவன் மாஸ்டர் தனது மனைவியால் மகனைப் பாதுகாக்க முடியும் என்ற பூராண நம்பிக்கையுடனும், என்றுமே போராளிகளின் மனதைப் புண்படுத்தாத புதியவன் மாஸ்டர் இராணுவத்திடம் சரணடையத் தீர்மானித்துவிட்ட சக போராளிகளின் மனம் புண்படாத படியும் அவர்களிடம் அவர்களுக்கு ஏற்றவாறான கதைகள் சொல்லிவிட்டு போர்க்களம் நோக்கிப் போகின்றார்.
ஆம்! அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. எப்போதுமே எவர்மனதையும்
புண்படுத்திவிடாது விடுதலைக்காய் அப்பழுக்கின்றி செயலாற்றிய உறுதியின் வடிவமாகிய அந்த உத்தம வீரர், வாழ்வின் எல்லாக் கால கட்டங்களிலும் சலசலப்புக்காட்டாது தளராத உறுதியுடனும் தன்னடக்கத்துடனும் வாழ்ந்தது போன்றே இறுதிக் கணத்திலும் அப்படியே உறுதியின் வடிவமாகி 18 மே 2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். எம் நினைவெல்லாம் நிறைந்த புதியவன் மாஸ்டர் இன்று எம்முன்னே விடுதலையின் வித்தாகி, தமிழீழத்தின் வீர வரலாறாகி நிற்கின்றார்.
நன்றி
சூரியப்புதல்வர்கள் -2023