மே 9,10ஆம் திகதி | வட்டுவாகல் பாலத்துக்கு கொஞ்சம் முன்னாலைதான். ஒரு 1கிமீட்டர் இருக்கும்.’
ஒரு மே 9, 10ஆம் திகதி போல ஒரு மாமரங்கள் நிறைந்த கூடலுக்கு கீழே இருத ஒரு பதுங்ககழி இவர்களின் புலிகளின்குரல் இயங்கினது. அந்த காப்பரணுக்குள்ளே ஒருநாள் பின்னேரம் போல உள்ளே சென்றனான். அதுதான் என்ர வாழ்க்கையில் புலிகளின் குரல் ஒலிபரப்பு கணத்தை நான் கண்ட முதல் நிகழ்வு.
காப்பரண் ‘ட’னாப்பட இருந்தது. முன்னுக்கு இருந்த வாசலில் ஒரு அக்கா இருந்து பாடல்களை ஒலிபரப்புச்செய்து கொண்டிருந்தவ. அவக்கு அங்காலதான் தவபாலன் மாமா இருந்தவர். அவரை அன்டைக்குத்தான் நான் முதன்முதலாகக் கண்டனான். அவர் கழுத்தில ‘headphone’ மாட்டியிருந்தவர்.
எனக்கு நல்ல ஞாபகம், நான் அந்த அக்காட்ட நீங்கள் ”கண்ணிவெடி கனவில் வருது” பாட்டுப் போடுவியளோ என்ட அந்த அக்கா சொன்னவ உந்தப் பாட்டை இப்ப போட்டா சனம் என்னை அடிக்கும் என்டு சொன்னவ.😆 நான் ஏன்னென்டு கேக்க, ஆமி வாற நேரத்திலை உந்தப் பாட்டையோ இப்ப போடுறது என்டு என்னை ஏசினவ. இதெல்லாம் மறக்க ஏலாத தருணங்கள்!
அந்த எறிகணை விழுந்த கூடாரத்துக்கு முன்னுக்கு இருந்த கூடாரத்திலைதான் நாங்கள் முதலிலை இருந்தனாங்கள். அது திறந்த வெளிப் பதுங்ககழி. ஒரு நாள் பின்னேரம், 9ம் திகதி என்டு நினைக்கிறன், இருந்தாப்போலை ஆமி எங்களுக்கு முன்னால இருந்த அந்தக் கூடாரத்துகு செல் அடிச்சு அந்தக் கூடாரத்துக்கு முன்னால ஒரு அம்மா தன்ர குழந்தை ஒன்றிற்கு, ஒரு ஒன்று அ ஒன்றரை வயது மதிக்கத்தக்கது, குளிச்சவாத்துக்கொண்டு இருந்தவ. அந்தக் குழந்தை குளிச்சுக்கொண்டு நின்ட பேசினுக்கு மேலையே அந்த அந்த எறிகணை வீழ்ந்து வெடிச்சதில அந்த குழந்தை துகளாகிப்போட்டுது. அம்மா அப்படியே சிதறிட்டார். அதிலிருந்து வந்த சிதறுதுண்டம் ஒன்று என்ர அம்மம்மாவின்ர காது மடலிலை ஏறிற்றுது. அம்மாக்கு காலிலை மற்றொண்டு ஏறினது. நல்ல காலம் ரண்டும் சரியான சின்னன் என்டதாலை நாங்களை அதைக் கையாலையே இழுத்து எறிஞ்சு போட்டு பக்கத்து பதுங்ககழிக்குள்ள போக முதலுதவி மருந்து கட்டிவிட்டவ, அதுக்குள்ள இருந்த அம்மாக்குத் தெரிஞ்ச ஒரு நேர்ஸ் அக்கா.
அதுக்குப் பிறகுதான் அந்தக் காப்பரணுக்குள்ள போனன்னாங்கள். அதுக்குள்ள ஏற்கனவே மூண்டு குடும்பம் இருந்தது. நெருக்கம்தான். செல்லுக்கு மட்டும் உள்ளுக்குப் போறனாங்கள். மற்றும்படி வெளியிலைதான் இருந்தனாங்கள், சரியா அன்டும் அடுத்தநாள் பின்னேரம் வரைக்கும். பேந்து அந்த இடத்தை விட்டு நாங்கள் வேறொரு இடத்துக்குப் போயிற்றம். அந்த ஒற்றையடிப் பாதைக்குள்ளாலை நகர்ந்து பின்னாலை இருந்த ஒரு வடலி கூடலுக்குப் பக்கத்திலை போயிருந்தனாங்கள். இடம்பெயரேக்கிலதான் நான் ஜவான் மாமாவைவும் பாத்தனான். இடுப்பிலை பிஸ்டல் கட்டிக்கொண்டு நிண்டவர்.
- நன்னிச் சோழன்-Yarl.com