முள்ளிவாய்க்காலில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகப் போராளிகளுக்கென இயங்கிக்கொண்டிருந்த தற்காலிக மருத்துவமனையின் இறுதிக்காலம்.
மூத்த மருத்துவப் போராளி லோலோ அண்ணா, வயிற்றில் ஏற்பட்ட பாரிய காயங்களுடன் படுக்கையில் கிடக்கின்றார்.
அங்கே கிடைத்திருந்த மிகக் குறைந்த மருத்துவ வசதிகளைக் கொண்டு மருத்துவர்கள் முதலாவது சத்திரசிகிச்சையைச் செய்து முடித்திருந்தார்கள். எனினும், அவர் உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கையை உறுதியாகக் கூற முடியாத அளவுக்கு உடல் வலுவிழந்திருந்தது.
தொடர்ந்த சிகிச்சைகளை வழங்கவும் முடியாத நிலை. மருத்துவமனை வளாகம் முழுவதும் காயமடைந்தவர்கள் நிறைந்திருந்தார்கள். எழுந்து நடக்கக்கூடியவர்கள் நடந்தும், ஏன், சிலர் தவழ்ந்தும் வட்டுவாகல் நோக்கி நகர்ந்தார்கள்.
அது மே 16ஆம் திகதி 2009
இனி எதுவும் சாத்தியமற்றுப் போய்க்கொண்டிருந்த நாட்கள்.
லோலோ அண்ணாவுக்கு மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை அவசியமாகிறது. ஆனால் அதற்கான சூழல் அங்கே இல்லை. இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. மருத்துவமனைப் பகுதிகளும் தாக்குதல்களுக்கு உள்ளாகின. எங்கும் தீ, புகை, வெடிப்புச் சத்தம். சுற்றியிருந்த நிலமெல்லாம் நெருப்புக் களமாக மாறிக்கொண்டிருந்தது.
அந்த நேரத்தில், லோலோ அண்ணாவின் மனைவியும் போராளியும் எழுத்தாளருமான மலைமகள் அங்கே வருகின்றாள்.
அவளது தோளிலும் துப்பாக்கி தொங்கிக்கொண்டிருக்கிறது. அவளுக்கும் தனது அணியுடன் நகர வேண்டிய கடமை அங்கே இருக்கிறது.
களநிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருப்பதை அவள் உணர்ந்திருந்தாள். அந்த இடத்தைவிட்டு நகர வேண்டிய கட்டாயம். அங்கே இனி எதையும் மாற்ற முடியாத நிலை உருவாகியிருந்தது.
போராளி மருத்துவர் வான்மதி, லோலோ அண்ணாவின் மருத்துவ நிலையை அவளுக்கு விளக்குகின்றார்.
அடுத்து என்ன செய்வது?
தனது கணவனைக் காப்பாற்றுவதற்கான வழிகள் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டிருக்கின்றன.
அந்தக் கொடூரமான சூழலில், கணவனின் நிலையை உணர்ந்த மலைமகள், அவரிடம் இரண்டு குப்பிகளைக் கொடுத்துவிட்டு,
“நான் எனது அணியுடன் உள்ளே செல்கிறேன்” என்கிறாள்.
அங்கே வார்த்தைகள் இருக்கவில்லை. கண்கள் கூடப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கவில்லை. உணர்வுகளால் மட்டுமே பேசிக்கொண்டார்கள்.
விடைபெறுதலின் சம்பிரதாயங்கள் எதுவுமில்லை.

வானமே கந்தகப் புகையை விழுங்கி மூச்சுத்திணறியது. கண்ணீர் வற்றிப்போக, இரத்தம் ஆறாய் கசிந்தது
பேரமைதி மட்டுமே!
அவள் தன் கடமையை நோக்கி நடந்தாள்.
மீண்டும் ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால், சில மணித்துளிகளுக்குப் பின்னர் மீண்டும் கணவனைப் பார்க்கச் சென்ற அதே இடத்திற்கு வருகின்றாள்.
பார்க்கிறாள்.நிலமை அதைவிட மோசமாக இருக்கிறது
லோலோ வின் உடல் வறண்டு, உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில காயக்காரர்களும் சில மருத்துவப் போராளிகளும் அங்கே நிற்கிறார்கள்.
குப்பியைக் (சைனற்)கடிக்கும் நிலையையும் அவர் கடந்துவிட்டாரோ என்று நினைக்கிறாள்.
உடல் அசைவற்றுக் கிடக்கிறது. உதடுகள் அசைய மறுக்கின்றன. உயிர் இன்னும் இருக்கிறது தண்ணீர் , தண்ணி என்று கெஞ்சுவது கண்களில் தெரிந்தது ஆனாலும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அவள் ஊகித்துக்கொள்கிறாள்.
அந்தச் சூழலில் தனது கணவர் எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற அச்சமும் வேதனையும் அவளுக்குள் எழுகின்றன.
தனது உணர்வுகள் அனைத்தையும் இறுகக் கட்டுப்படுத்திக்கொண்டு போராளி மருத்துவர் வான்மதியிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள். குப்பியிலிருந்த மருந்தை ஊசி மூலம் செலுத்திவிடுமாறு கேட்கிறாள்.
ஆனால் வான்மதியால் அதைச் செய்ய முடியவில்லை.
மருத்துவ அறிவுக்கும் மனித உணர்வுக்கும் இடையில் ஒரு பெண் மருத்துவர் எதிர்கொண்டிருக்கக்கூடிய அந்தப் பெரும் மனப்போராட்டத்தை வார்த்தைகளால் அளவிட முடியாது.
கணவனை அந்த நிலையில் விட்டுவிட்டுச் செல்வதா? மீண்டும் அவரிடம் சென்று விடைபெறுவதா?
எதற்கும் காலம் காத்திருக்கவில்லை.
தன் கடமையை நோக்கிப் புறப்பட்டாள் மலைமகள்.
அந்தப் பிரிவு அவர்களுக்கிடையிலான கடைசிப் பிரிவாகிவிட்டது.
மலைமகள்!
வீரவேங்கையே!
உங்களைப் பற்றியும், உங்களது எழுத்துக்களைப் பற்றியும், உங்கள் இறுதி நிமிடங்களைப் பற்றியும், உங்கள் வாழ்வைப் பற்றியும் எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை.
எத்தனை மாவீரர்களின் குருதிச்சுவடுகளை எழுத்துக்களால் பதிவு செய்தீர்கள்!
எத்தனை பேரின் வாழ்வையும் தியாகங்களையும் வரலாற்றின் பக்கங்களுக்குக் கொண்டுசென்றீர்கள்!
ஆனால் உங்களைப் பற்றி எழுதும் வல்லமை எனக்கு இல்லை.
ஆனாலும் எழுதுகின்றேன்.
நீண்ட வருடங்களாக என் நெஞ்சைப் பிளந்துகொண்டிருந்த இந்த நினைவுகளை இன்று எழுதி முடிக்கின்றேன்.
நாம் சொல்லாவிட்டால் இந்த மண்ணில் வாழ்ந்த உங்களைப் போன்றவர்களின் தியாகங்களும், எதிர்நீச்சல் போட்ட மனிதாபிமானமற்ற சூழல்களும், உங்கள் தனிப்பட்ட வாழ்வின் வலிகளும் யாருக்கும் தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் என்னை எழுதத் தூண்டுகிறது.
போராளிகளாக இருந்தாலும் அவர்கள் கல்லான மனிதர்களா?
அவர்களுக்கும் கலங்கிப்போகும் கணங்கள் இருந்தன. சொல்ல முடியாத வலிகள் இருந்தன. போரின் இறுதிக் கணங்களில் சுமந்த துயரங்களும், இழப்புகளும், இயலாமைகளும் இருந்தன.
அவற்றையெல்லாம் தாண்டி, யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அசாத்தியத் துணிச்சலையும், மிகக் கடினமான முடிவுகளையும் எதிர்கொண்ட சரித்திர நாயகர்கள்.
அந்த மனிதர்களின் உணர்வுகளையும் பதிவு செய்ய வேண்டும்.
ஒரு புறம் மனைவி. இன்னொரு புறம் தாய். மறுபுறம் போராளி. அதற்கும் அப்பால் ஒரு போராளி எழுத்தாளர்.
இந்த அடையாளங்களையெல்லாம் சுமந்துகொண்டு, தனது வாழ்வின் மிகக் கொடூரமான தருணத்தைக் கடந்து சென்றவள் மலைமகள்.
வரலாறு என்பது வெற்றிகளையும் தோல்விகளையும் மட்டும் பதிவு செய்வது மட்டுமல்ல.
நாம் தாங்கிய வலிகளையும், வெளியில் சொல்லப்படாமல் புதைக்கப்பட்ட நினைவுகளையும், காலம் மறைக்க முயலும் மனிதர்களின் கதைகளையும் பதிவு செய்வதும்தான்.
ஈழத்தாயே!
உன் மடியில் உறங்கும் இந்த உயிர்களின் நியாயங்களை மறந்துவிடாதே.
அவர்கள் சுமந்த வலிகளையும், வாழ்ந்த வாழ்வையும், சொல்லப்படாமல் போன வரலாற்றையும் மறைத்துவிடாதே.
மலைமகள் அக்கா
நீங்கள் எத்தனையோ பேரின் வரலாற்றை எழுதினீர்கள்
இன்று உங்கள் வரலாற்றை நடுங்கும் கரங்களால் எழுத வேண்டியிருக்கிறது எமக்கு.
மாவீரர்கள் சாதாரண மனிதப்பிறவிகள் இல்லை….
மிதயா கானவி
EelamHouse A place for Eelam history documents