தளபதி வசந்தன்

தாயகக் களத்திடை நண்பன்

தளபதி வசந்தன்

தலைநகர் படையணி

தளபதி வசந்தன் பற்றிய மிக நெடிய போராட்ட வாழ்வியலின் நினைவுகளிலிருந்து…. மிகச் சிறிய அனுபவ பகிர்வாக இதனை முன்வைக்கிறேன்.

அதிகம் பேசாத, தன்னை முன்னிருத்தாத,முன்னிருத்த விரும்பாத,
செயல் வேகத்தாலும், விவேக கரிசனையுடனும் செயலாற்றிய ஆளுமைமிக்கத் தளபதி
எங்கள் வசந்தன்.

திருகோணமலையின்
அடர்ந்து, வானளாவி உயர்ந்த காடுகளை ஊடறுத்துப் பாதங்கள் பதியும், மலைகளும்,குன்றுகளுமாய் முதுகுச்சுமை அழுத்தும் ,
மிகநீண்ட தம்பலகாமத்து சேற்று வயல்நிலங்களில் கால்கள் புதையும், கோடையில் வரண்ட கமார் வெடிப்பினுள் குதிகாலும், விரல்களும்
செருகிக்கொள்ளும். ஆறுகளும், அறுத்தோடிகளும்…
இவைகள் எதுவும் எம்
விடுதலைப் பயணத்தை நிறுத்தியதில்லை.

இத்தகைய இயற்கை அன்னையின் சீண்டல்களை எல்லாம், அன்பொழுக தாலாட்டும் சங்கீதமாக ஏற்றுக்கொண்ட எங்கள்
தளபதி வசந்தன்,

எமது கட்டளைத் தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் சொர்ணம் அவர்களின்
வலதுகரமாக இணைந்திருந்து,
அவரது பெரும் திட்டங்களுக்கு வலுச்சேர்த்தவர்.

மூத்ததளபதி பொட்டு அம்மான் அவர்களின், மிக நேர்த்தியான இரகசிய நகர்வுகளில் அற்புதமான பாத்திரம் வகித்தவர்.

தேசியத்தலைவர் அவர்கள், பிரிகேடியர் சொர்ணம் அவர்கள்மீது
வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு இணையான எதிர்பார்ப்பினையும்,
ஆவல் மிகுதியினையும்
தளபதி வசந்தன்மீது
கட்டளைத் தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்கள்
கொண்டிருந்தார்.

தனது அத்தனை பணித் தேவைகளையும்
நிறைவேற்றக்கூடியவர் தளபதி வசந்தன், என்பதில் அவருடைய
அழுத்தமான அவதானிப்பு இருந்தமையானது.

தளபதி வசந்தன் அவர்களின்,
ஈடு இணையற்ற உழைப்பின் விளைவு என்றே கொள்ளமுடியும்.

வசந்தன்…
வசந்தன்..
நான் வரும்வரை களத்தை கவனமாக வைத்திரு….

இவ்வாறான
கட்டளைக்கு ஏற்ப
களங்களைக் கையாளும்
வலிமை தளபதி வசந்தனிடமிருந்தது.

நூற்றுக்கும் அதிகமான போராளிகளை அணிவகுத்து அழைத்துவருவதும், அழைத்துச் செல்வதோடு, பல்வேறு போராட்டப் பணிகளின்
அதிபயங்கர அனுபவங்களைச் சந்தித்தவராக, வென்று தந்தவராக வலம்வந்தவர்..

அதனை இனிய பயணமாகவும்,
சவாரஷ்யம் தழுவும் வாழ்கைக்கையாக மாற்றிக்காட்டுவதில்
நுட்பமாக அடியெடுத்து வைத்தவர்.

நம்பிக்கை என்ற நேர்மறையான மனத்துணிச்சல்,

பசியின்மை
களைப்பின்மை, சலிப்பின்மை என…
இவற்றை அணிகளிடையே தக்கவைப்பதில் தலைமை தாங்கும் ஆச்சரியம் மிக்க வர்களாக
திருமலை மண்ணில், கிழக்கு மண்ணில் பல அரும்பெரும் தளபதிகள் பலரையும் வரிசைப்படுத்த முடியும்.
தளபதி வசந்தனும் ஆரவாரமின்றி மனதில் எழந்து நிற்பவர்.

தளபதி வசந்தனின் பன்முகத்தன்மையான
ஆளுமை வீச்சு தாயக களப்பிரதேசம் எங்கும் எதிரொலித்தது.

கிழக்கில் ஆரம்பித்த அவரது விடுதலைப் போராட்ட பயணமானது, வடக்கில்,- யாழ், பளை, மணலாறு
ஓமந்தை, மன்னார்- கட்டுக்கரை என அவரது பயணம் குறுக்கும், நெடுக்குமாக
வலைப் பின்னல் போல் அமைந்திருந்தது.

வழங்கப்பெற்ற அனைத்து இயக்கப் பொறுப்புக்களையும்
போதும் போதுமென செய்து முடித்துவிட்டு
வேர் என இருந்தார்.
பெயர் எதுவும் வேண்டாம் என்ற….

கபிலம்மான் மனநிலை

இவருக்கு வாய்த்திருந்தது ஓர் அழகிய உளவியல் சமன்பாடுதான்.

கெரில்லாப் போராட்ட முறையினை நன்கு அறிந்தவராக
வியட்னாமிய வயல் வெட்டைகளையும்,
சீனாவின் மலைப் பிரதேசங்களையும்
வரலாற்றின் வழி கற்றுணர்ந்து,
மலைகளையும், வாவிகளையும் , ஆயிரம் அதிசய கதைபேசும் காட்டின் இடை சில்வண்டாக,தேனீயாக
மான் ,யானைக் கூட்டங்களை ரசித்தும், அச்சமின்றி கடந்தும் வந்தவராக.

செறிந்த, அடர்காட்டினை ஊடறுத்து வரும் சூரியக்கதிருக்கு கண்ணசைத்து விட்டு

கும் இருட்டில்
அணிகளை சிதறவிடமால் பாதுகாப்பாக நகர்த்துவதில் வழிகாட்டியோடு வழிகாட்டியாக இவரது போர்ப்பயணம் நெடியது.

போரியல் வாழ்வு அதிக விழிப்புணர்வால் செதுக்கப்பட்டது.

சீருடை தரித்த போராளிகள் மெல்ல நகர்ந்து வருகின்றனர்,
இராணுவ தளங்களும்,
மினி முகாம்களும், படையினரின் அடுத்தடுத்த காவல் அரண்களும்,
வீதி ரோந்துகளும் இவ்வாறே சூழப்பெற்ற ஒவ்வாத
புவியியல் சூழ்நிலையில்,

தாக்குதல் தேவைக்காகவும்,
பிரதேசம் விட்டு பிரதேசம் கடந்து செல்கையிலும்,
அணிகளைப் பாதுகாப்பாக கடந்து செல்ல உதவுவதற்காக என….., நாம் சந்திக்கும் சவால்கள் எத்தனை எத்தனை,

எதிரியின் பதுங்கித் தாக்குதலுக்கு உள்ளாவதும்
வீரச்சாவடைவதும், விழுப்புண் அடையவும்,
அணிகள் சிதறிக் காட்டில் திசைமாறவும் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில்

மிக நிதானமாக நின்று களச்சூழலைக் கையாள்வது என்பது
போர்கலையின் ஓர் அம்சமாகிறது.

இத்தகைய சூழ்நிலைகளின் நம்பிக்கை நாயகனாக
போர்க் கலையில் வல்லவனாக எங்கள் மத்தியில் ஒன்றிப்போனவர் தளபதி வசந்தன்.

காட்டில் உயர்ந்த மரங்களின் கிளைகள் மத்தியில் *பரண்* அமைத்து,
அரிசி, மாவு ,பருப்பு, சீனி தேயிலை, உப்பு, சோயாமீற், செத்தல்
என சேமிக்கப்பட்டிருக்கும்.

நெருக்கடியான பயணங்களில் அவை எமக்கு உதவும்.

ஆயிரமாயிரம் தோழர்களின் தேடலும்
சேமிப்புமாக அவை இருக்கும்..

இன்றும் அவர்களது
நினைவுகள் மட்டுமே
மீதமிருக்கின்றன.

பலசந்தர்ப்பங்களில்,
குரங்குகள் பிய்த்து எறிந்திருக்கும்,
அடை மழை பெய்து
நனைந்து ,ஊறி…
உருமாறி, நிறமாறி இருக்கும்.

கற்பாறைகளின் நடுவே *பாசி மண்டிக்* கிடக்கும் தண்ணீரால்
அலசிக் கழுவி……

கரைந்து ஓடியவை தவிர
மீதியை,
கஞ்சியாக்கி
அரை வயிறு ,
கால் வயிறு நிரப்பிக்கொண்டு நடைபயணம் தொடரும்.

சிரித்து மகிழ்ந்தபடி
தளபதி வசந்தனுடன்
நடப்போம்.

சிலமணி நேரத்தில்
பளிச்சிடும் தண்ணீர் ஓடையைச் சந்திப்போம்.

மொடுக்கு மொடுக்கென எல்லோரும் குடிப்போம்.
அவரவருக்குரிய
தண்ணீர் போத்தல்களில் நிரப்பிக்கொள்வோம்.

குளிர் காற்று முகத்தில்
அறையும்,
இரு கைகளாலும்
ஓடைநீரை அள்ளி
முகத்தில் அடித்து *அப்பி* எடுப்போம்.

உருண்டு,
மொழு மொழு என்று *வைரம்* போல் மின்னும் சிறு சிறு கற்கள்
ஓடைக்கரையில் கண்ணில் படும்.

இருவாச்சிப் பறவை
தலைக்குமேலே விர் என சிறகடித்துச் செல்லும்.

செக்கச் செவேலென்று
உலுவிந்தம் பழங்கள்
கனிந்து,
கொத்துக் கொத்தாய்
கைக்கெட்டும் உயரத்தில் குலுங்கும்

ஆகா எத்தகையச்
சுதந்திரப் பற்றி இழுப்பு….

ஆளுக்காள் மனப்பூரிப்பை
பகிர்ந்துகொண்டு அடுத்த எட்டினைத் தொடர்வோம்.

தளபதி வசந்தன் மற்றும் போராளிகளோடும்,
இயற்கையோடும்….

இத்தகைய போராடுவதற்காகவே
வாழ்ந்த அத்தகைய பொழுதுகள் ஆனந்தமானவை,
பெரும் பேறான வாழ்வியல் அனுபவம் அவை.

தளபதி வசந்தன் நினைவுகள்,
தியாகவனத்துச் சோலைக்காற்றுப் போன்று மனதை வருடிச் செல்கிறது.

வீரமிகு போராட்ட வரலாற்றினை தமது வீரத்தால், அர்ப்பணிப்பால்,
ஈரமிகு வியர்வையால்,
பிசுபிசுக்கும் செங்குருதியில் தோய்த்து எழுதித் தந்துவிட்டுச் சென்ற
மாவீரர்கள் வரிசையில்…

இங்கு, நம் தளபதி வசந்தனும் ஒரு அத்தியாயத்தை நிரப்பீடு செய்கிறார்.

இவர்களது அர்ப்பணிப்பான வாழ்வினதும்,
இவர்கள் சந்தித்து
இனிய கலையம்சமாக மாற்றிக்காட்டிய ஆச்சரியமான போரியல் வரலாற்றினது…

சிறு துளியேனும்
தூய்மையாக நம்மை பற்றிக்கொள்ள வேண்டும். செயலாற்றும் ஒழுக்க நெறியை வரித்துக் கொள்ளவேண்டும்.
இதுவே தளபதி வசந்தனின் கனவும்,
அவருக்கான அஞ்சலியாகவும் அமையும்.

தாயகக் களத்திடை நண்பன்

அ. சுரேஷ் மன்னார்
29.05.2026

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

லெப் கேணல் புதுவேந்தன்

லெப் கேணல் புதுவேந்தன் அண்ணை அவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் …

Leave a Reply