17 வருடங்களாக பேசப்படாமல் புதைக்கப்பட்ட ஒரு கடற்புலி மறவனின் இறுதித் தருணம்.
1991 யூலையில் ஆகாயக்கடல் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்டு முதலாவது மரபுவழி தாக்குதல் நடவடிக்கை ஆனையிறவுப் பெருந்தளம் மீது நடைபெற்றது.
அத்தளம் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாமல் தப்பித்துப் போனதற்கு கடல்வழி வினியோகமே காரணம் என்பதனை தனது சிந்தனையில் நன்குணர்ந்தார் தேசியத் தலைவர்.கடலில் பலம்பெற்றவர்களாக சிறப்பு கடற்சண்டை படையணியாக கடற்புலிகளை உருவாக்கத் திட்டமிட்டார்.
1984 காலப்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கடல்புறா அமைப்பு, தமிழகத்துக்கும் தமிழீழத்துக்குமான போக்குவரவுகளில் ஈடுபட்டு வந்தது.
இதுவே பின்னாளில் 1991 காலப்பகுதியில் கடற்புலிகள் என பெயர் மாற்றப்பட்டது.
தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவராக தமிழீழக் கடற்பரப்பில் எமது கடலாதிக்கத்தை நிலைநாட்ட சிறப்புத்தளபதி சூசை அவர்கள் கடற்புலிகள் அமைப்பை விரிவாக்கம் செய்யும் அயராத பணிகளை முன்னெடுத்திருந்த வேளையது.
1985 காலப்பகுதியில் வடமாராச்சியில் தேசியத் தலைவர் நேரடியாக மூத்த போராளிகளுக்கு பயற்சியளித்த பயிற்சிப்பாசறையாக உருவாக்கப்பட்டிருந்த நவிண்டில் பயிற்சிக்களம் (கலிபோர்னியா எனும் பெயரோடு அந்நாளில் இயங்கியிருந்தது) 1990 களில் மாவீரர் ரவிராஜ் பயிற்சிப் பாசறையாகி பின்னர் 1991 இல் மாவீரர் யப்பான் பயிற்சிப் பாசறையாக கடற்புலிப் போராளிகளுக்கான அடிப்படை பயிற்சிப் பாசறையாக மாற்றம் பெற்றது.

யப்பான் பயிற்சிப் பாசறையின் மீள் கட்டுமானத்தை பொறுப்பேற்று அதற்குத் தேவையான நிதிமூலங்களை நேர்த்தியாக கையாண்டு செயற்பட்டதில் சுமன் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
இதுவே சிறப்புத்தளபதி சூசை அவர்களுக்கு சுமன் அவர்களின் நிர்வாக ஆளுமையை நிதிக்கையாளுகையை வெளிப்படுத்தியிருந்தது.
அன்றிலிருந்து தொடங்கிய சுமன் அவர்களின் பயணம் 2009 மே 18 இறுதிவரை தொடர்ந்திருந்தது.
கடற்புலிகளின் போராளிகள் அணியும் செருப்பிலிருந்து, உடையிலிருந்து, உட்கொள்ளும் உணவுவரையும்,தாக்குதல் நடவடிக்கைப் பயிற்சிகளின் போது வழங்கப்படும் விசேட உணவுகள் வரையும், புதிய புதிய இரகசியத் தளக்கட்டுமானங்கள் உருவாக்கத்தின் போதும் , விழுப்புண்ணடைந்த போராளிகளுக்கான பராமரிப்புகளிலும் நேரடியாக சூசையண்ணை உடன் உச்சரிக்கும் பெயர் ‘சுமன்’ என்பதே ஆகும்.
அதேவேளை சூசை அண்ணையின் நம்பிக்கைக்குரிய மெய்ப் பாதுகாவலனாகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
கடற்தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தன்னை அனுப்பும்படி எத்தனையோ கடிதங்கள் வரைந்துதான் அவர் சில களமுனைகளுக்குச் சென்றுவந்தார்.
களத்தைவிட அவர் பொறுப்பேற்றுக்கொண்ட பின்தளக் கட்டுமான வேலைகளே போரின் வெற்றியையும் கடற்புலிகளின் அபார வளர்ச்சிப் போக்கையும் தீர்மானிப்பதை விளக்கிய சிறப்புத்தளபதியின் உத்தரவுக்கேற்ப தனது பொறுப்புநிலையைச் சரிவர உணர்ந்து இறுதிவரை செயலாற்றியவர்.
தமிழீழத்தின் வடபிராந்தியத்தில் மட்டுமல்லாது மேற்குப் பிராந்தியத்திலும் கடற்போர்முனை திறக்கப்பட்டபோது, அடிக்கடி கிளாலிக் கடல்தாண்டிச் சென்று உழைத்த ஒரு உன்னதமான போராளி,பொறுப்பாளர் சுமன் அவர்கள்.
கடலோரம் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு கடற்புலிகளின் கரையோரப் பாதுகாப்பு பொறிமுறைகள் உருவாக்கப்பட்ட வேளையில் அந்த மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப நிதிமூலங்களை உருவாக்கி அம்மக்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தி சிறப்புத்தளபதி சூசை அண்ணையால் பாராட்டுப் பெற்றவர்.
1991-2009 மே18 இறுதிப்போர்வரை சூசையண்ணையின் நேரடி நிர்வாகத்தில் அவர் முகாம் அமைக்கும் சகல தங்குமிடப் பாசறைகளிலும் ஒன்றாகத் தங்கியிருந்து பயணித்த ஒரேயொரு போராளி என்றால் அது சுமன் அண்ணையாகத்தான் இருக்க முடியும். சூசையண்ணையின் வேகத்துக்கும் அவரது கடுமையான நிர்வாக நடைமுறைக்கும் ஈடுகொடுத்துச் செயற்படும் சுமன் அவர்களின் திறமை கடற்புலிகள் அமைப்பின் துறைசார் பொறுப்பாளர்களை வியக்க வைக்கும்.
கடற்புலிகள் அமைப்பின் நிதிப்பொறுப்பை இறுதிவரை ஏற்றுப்பணிசெய்த நெறியாளன்.
கடற்புலிப் போராளிகள் அனைவருக்கும் பரிச்சயமான பெயர்.
இன்று 17 வருடங்கள் கடந்தும் எவரது வாய்களும் உச்சரிக்காது உறங்கிவரும் வரலாறாய் வட்டுவாகலோடு உறைந்துபோயுள்ளது.
கடற்புலிகள் வரலாற்றில் படைக்கப்பட்ட அத்தனை வீரசாதனைகளுக்குப் பின்னாலும் சுமன் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பும் உறுதியும் என்றைக்கும் நிலைத்தே நிற்கும்.
தொடரும்…….
நினைவுகளோடு…
புலவர்.