வலையொளியில் பேச்சு ஒன்றை கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன். மகாபாரதக் கதையின் கிளைக்கதை என்று அக்கதையினை மிக தத்ரூபமாக சொல்லிக்கொண்டிருந்தார் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர்.
“ பாண்டவர்கள் சூதில் தோற்றுப்போய் வனவாசம் சென்ற காலத்துக் கதை அது. பாண்டவர்கள் ஒவ்வொருவரும் தவம் செய்வதற்காக புறப்பட்டார்கள். அதில் காண்டீபதாரி என்று அழைக்கப்படுகின்ற அர்ச்சுணன் கைலாய மலைக்கு சென்று சிவபெருமானை வழிபட்டு அவரை நோக்கி கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு அவரிடம் இருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றுக்கொண்டான். அதன்பின் அங்கிருந்து பல இடர்களைத் தாண்டி தனது சகோதரர்களும் தன் இணையாளும் வாழ்ந்த காட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு தங்க ரதம் அவனின் பயணப்பாதையில் வந்து நின்றது.
“உன்னை அழைத்து வருமாறு எமக்கு கட்டளை தயவு செய்து எம்முடன் ரதத்தில் பயணிப்பாயாக” என்று அந்த ரதத்தில் வந்திருந்த இந்திரலோகத்து பெண்கள் இருவர் அவனிடம் அன்புக்கட்டளையிட்ட போது அவன் அதை மறுத்துவிடுவான். ஆனாலும் அவர்கள் இக்கட்டளையைத் தந்தவர் தமது தந்தையாகிய இந்திரதேவர் ஆவார். அதனால் உன் தந்தையை தரிசிக்க நீ எம்முடன் நிச்சயமாக இந்திரலோகத்திற்கு வர வேண்டும் என்று விளக்கம் கொடுத்த பின் அவன் மனமுவந்து அங்கு பயணம் செய்வான்.
இந்திரனை சந்திப்பான். அவரோ ஆரத்தழுவி இது எனது உலகம். நீ என் மகன். அதனால் நீ இங்கே இருக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கத் தகுதி பெற்றவன். அதனால் நீ இங்கே தங்கி இருந்து இந்திர உலகத்தின் வாழ்வை மகிழ்வோடு வாழு என்று அன்புக்கட்டளை இட்டார். ஆனாலும் அக்கட்டளையை அர்ச்சுனன் மறுத்துவிடுவான். ஏன் என்று காரணத்தையும் விபரிப்பான். “ என் தந்தையே எனக்கு கடமைகள் இருக்கின்றன. என் தமையனை சர்க்கரவர்த்தியாக அமர வைக்க வேண்டும். அதற்கு அவருடன் கூட இருக்க வேண்டும். என் அண்ணன் ஆட்சியில் அமரைம்வரை எனக்கு அது ஒன்று மட்டுமே இலக்கு. இந்த சுகபோக வாழ்க்கை எனக்கு வேண்டாம். நான் உடனடியாக என் தாயிடமும் தமையனிடமும் செல்ல வேண்டும். என்று மறுத்து பூவுலகை வந்தடைவதாக நீள்கிறது அந்த வலையொளி காணொளி.
இது இதிகாசம். இதில் உண்மை இருக்கா இல்லையா? இது உண்மையாக நடந்ததா இல்லையா? எனக்கு அது பற்றிய உண்மை அறிவு இல்லை. ஆனால் இதை விட எத்தனையோ வீர மகன்களை/ மகள்களை எங்கள் தமிழீழம் பெற்றிருக்கிறது. அதில் ஒருவர் தான் லெப். கேணல் மேனன்.
தமிழீழ புலனாய்வுத்துறைக்குள் வெளிமாவட்டப்பிரிவில் பணியாற்றினார். அதிலும் சிறீலங்காவின் தலைநகரில் தான் அவரது பணி. அவரை போராளி என்று அறிந்தவர்களை விட கொழும்பில் பெரும் செல்வந்தர் என்றும் பெரும் வர்த்தகர் என்றும் அறிந்தவர்களே அதிகம்.
ஏனென்றால் அவரின் விடுதலைக்கான பயணம் மிக நெடியதாக இருந்தது. அதுவும் எதிரியின் கோட்டைக்குள் புகுந்து எதிரியின் அடித்தளத்தையே ஆட்டங்காண வைக்கும் பணி. அதனால் அவர் விரும்பிய படி வாழவும் எல்லையில்லாத அளவுக்கு பணத்தை செலவு செய்யவும் அவருக்கு அனுமதி இருந்தது. ஆனால் அந்த சொகுசான வாழ்க்கைக்குள்ளும் மேனன் தான் ஒரு மறைமுக போராளி என்பதில் இருந்து தவறியதில்லை. தினமும் தலைவனின் வார்த்தைகளை மீட்டுப் பார்க்கும் அவருக்குத் “தமிழீழம்” என்ற பெரும் இலக்கு எப்போதும் தடம் மாறாமல் இருக்கும்.
தலைவனின் எதிர்பார்ப்பு என்னவோ அந்த இலக்கை அடைய வேண்டும் எனில் அதற்காக எவ்வளவு துன்பங்களையும் அவர் சுமக்கத் தயாராகவே இருந்தார். அதே நேரம் சிங்கள புலனாய்வாளர்களின் கண்களில் மண்ணைத் தூவி தான் உண்மையில் ஒரு செல்வந்த வர்த்தகர் என்பதை வெளிக்காட்டி தனது அடையாளம் வெளித்தெரியாதவாறு பயணிக்க வேண்டும். அதனூடாக அவர்களின் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். அதற்காக அவர் எவ்வாறான செல்வந்த வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கலாம். ஆடம்பரத்துக்கு மேல் ஆடம்பரமாக வாழவும் அவருக்கு அனுமதி இருந்தது. ஆடம்பர பங்களா, ஆடம்பர வாகனங்கள் ஆடம்பர வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருந்த எமது தமிழீழத்து காண்டீபதாரிகளில் ஒருவரான மேனன் இதே வசதிவாய்ப்புக்களோடு இன்றும் சிறீலங்காவின் தலைநகரில் வாழ்ந்திருக்கலாம். அல்லது புலம்பெயர்ந்து சர்வதேச நாடொன்றில் வாழ்ந்திருக்கலாம். அவரது பணச்செழிப்புக்கு ஏற்றதாக தான் விரும்பிய வாழ்க்கையை அமைத்து வாழ்ந்திருக்கலாம்.
இருந்தும் மேனன் அவை அனைத்தையும் உதறி எறிந்து விட்டு வன்னிக்கு வருகிறார். தனக்கு கீழ் அவர் ஏற்படுத்தி இருந்த புலனாய்வுக்கட்டமைப்பு மிக சரியான போராளியிடம் ஒப்படைத்துவிட்டு தனது இணைப்பு சரியாக இயங்குகிறதா என்பதை எல்லாம் உறுதிப்படுத்திய பின் வன்னிக்கு வந்த மேனன் தனது வாழ்க்கைத் துணைவியாக அரசியல் துறை பெண்போராளி ஒருவரை ஏற்றுக் கொள்கிறார்.
காலம் நகர்ந்தது. சுருதியன் என்ற ஆண்மகவு பிறந்தது. காலங்கள் அடுத்த வருடங்களாக கடந்த பொழுது அடுத்த மகவு கருவாகி மாதங்கள் பத்தை நெருங்கி இருந்தது. குழந்தை பிறப்புக்கு தயாராக இருந்த நாள் ஒன்றில் களமுனையில் இருந்து வீடு நோக்கி வந்த மேனன் எதிரியின் தாக்குதல் ஒன்றில் வீரச்சாவடைந்தார்.
வித்துடல் விதைப்பதற்காக விசுவமடு துயிலும் இல்லம் கொண்டுவரப்படுகிறது. விதைப்பதற்கு தயாராக விதைகுழியில் மேல் வைக்கப்படுகிறது. முதல்பிடி மண் போட்ட மேனனின் துணைக்கு குழந்தை பிறப்புக்கான அறிகுறிகள் எழுகின்றன. அடிவயிறு வலி எடுக்கிறது. இடுப்பெலும்பு வலி எடுக்கிறது. இரண்டாவது பிடி மண் போட முன் குழந்தை பிறக்க முன் எடுக்கும் வலி பெரும் வலியாக எழுகிறது. தாங்க முடியாத வேதனை. அருகில் நின்ற பெண் போராளிகள் மேனனின் துணையைத் தாங்கிக் கொண்டார்கள். பொன்னம்பலம் நினைவு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றார்கள்.
இங்கே லெப் கேணல் மேனன் விதைக்கப்பட்ட நேரம் மேனனின் பெண் குழந்தை மேநிலா என்ற பெயரோடு பிறந்த பொழுது அன்று தமிழீழ வரலாற்றில் பதிவாகிறது.
தனது தமையனாரை ஆட்சி அதிகாரத்தில் ஏற்றுவதற்காக இந்திரலோக வாழ்வை புறக்கணித்து தன் வாழ்வை எப்படி அர்ச்சுனன் வாழ்ந்தானோ அதே போலவே எங்களின் மேனனும் அவர் போன பல நூறு போராளிகளும் தமது ஆடம்பர வாழ்வைத் துறந்து தமிழீழ மீட்புக்காக வன்னிக்கு மீண்டார்கள் என்ற வரலாற்றுப் பக்கங்களை எண்ணும் போது இதிகாசங்கள் எம்மால் நம்பப்படலாம் நம்பாமல் விடப்படலாம். ஆனால் எங்கள் தியாக வேங்கைகளின் கதைகளை கண்முன்னே கண்டு, அறிந்து அவர்களோடு வாழ்ந்து அவர்களோடு பழகி ஒன்றாக உணவருந்தி மகிழ்வை அனுபவித்துவிட்டு அவர்களை நம்பவில்லை என்றால் எங்களின் வரலாறுகள் பொய்த்துவிடுமல்லவா?
வீரமகன்களின் நினைவுகளோடு
எழுதியது : இ.இ.கவிமகன்
21.04.2026
