Home / ஆவணங்கள் / பகிர்வுகள் / தமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்

தமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்

காலத்துக்குக் காலம் இலக்கியத்தின் தன்மைகள் மாறுபாடு கண்டுள்ளன. வீரம், காதல், போர், பண்பாடு பற்றி தொன்மைக்காலம் முதலாக ஏரளமாய், தாராளமாய் இலக்கிப்பொழிவுகள் இருப்பினும், அந்தந்த காலங்களுக்கேற்ப அதே விடயம் புதிய வடிவங்களில் படைக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன.

ஈழப்போராட்ட காலத்தில் வீரம், படைபலம், போர் பற்றியெலாம் பெருந்தொகைப் பாடல்கள் வெளிவந்திருப்பினும் பண்பாடு, தத்துவம் சார்ந்த பாடல்களும் அவ்வப்போது வெளிவந்தன. ஆயினும் வீரம், படைபலம், போர் சார்ந்த பாடல்கள் அளவிற்கு இவை தொகையாக வெளிவரவில்லை.
தமிழர்களின் பண்பாடு பற்றியுரைக்கும் இப்பாடலே ஈழப்போராட்ட காலத்தே வெளிவந்த ‘பண்பாடு சார்ந்த முதற்பாடல்’ எனலாம். அதாவது இப்பாடல் முழுமையுமே பண்பாடு பற்றியே பேசுகிறது. பண்பாடு என்பதற்கும் கலாசாரம் என்பதற்கும் வேறுபாடு அறிதலில் இன்றும் விவாதம் தொடரும் நிலையில் பண்பாட்டின் வகையறைகளை தெளிந்துரைத்துப் போகிறது இப்பாடல்.

‘பரணி பாடுவோம்’ இசைநாடாவில் வெ. இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்) எழுதிய பாடலிது. தமிழ் வாத்தியங்களின் சேர்க்கையில் இசைவாணர் கண்ணன் இசையமைக்க மறைந்த பாடகர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்கள் பாடலைப் பாடியிருந்தார். அக்காலத்தில் இசைநாடா என்றே இவை வெளிவந்தன. பொதுவாக ஒலிப்பதிவு நாடா என்பர். ‘கெசற் பீஸ்’ என ஆங்கிலத்தில் பொதுவாயழைப்பர். 1992இற்கு முற்பட்ட இசைநாடா இது.

பண்பாட்டுக்கிசைவாக பண்பாடு
தமிழிசை பண்பாடு
தமிழன் வரலாற்று வரிகளையே
நீ பாடு வீர
வரலாற்று வரிகளையே நீ பாடு.

மேல் வந்ததே பாடலின் பல்லவி.

தொடரும் முதற்சரணத்தே சொல்லப்படும் தமிழனின் பண்பாடுகளை நோக்குங்கள். இவை தொன்றுதொட்டு தமிழ்க்குடி பின்பற்றி வருதலாம்.

ஈகை இரக்கமுடன்
வீரம் விருந்தோம்பல் பண்பாடு
இவை எம் பண்பாடு
ஒழுக்கம் பொதுவுடைமை
பணிவு துணிவு எல்லாம் பண்பாடு
தமிழன் பண்பாடு

என்று வரும் அதே சரணத்தில் இவ்விதமாய் வரிகள் தொடர்கின்றன.

அறிஞர் வியந்துபட
உலகம் போற்றிநிற்கும் பண்பாடு
இது எம் பண்பாடு (2)
வந்தோரை வரவேற்கும் பண்பாடு
தமிழன் பண்பாடு
தமிழன் வரலாற்றில் பண்பட்ட தனியேடு
தமிழன் தனியேடு
பண்டைய தமிழர்களின் செயற்பாடு
இந்த செயற்பாடு
பண்பட்ட பழந்தமிழர் பண்பாடு: நல்ல
பண்பாடு

இச்சரணத்தில் ‘பொதுவுடைமை’ எனும் சொல் காண்கிறோம். பொதுவுடைமை என்பது அண்மைய நூற்றாண்டு கண்ட சொற்போலே சிலர் வியப்பர். அப்படியன்று. பொதுவுடைமை தமிழர் ஆதியிலே கண்டதாம்.

இவ்விதம் பொதுவுடைமை வேற்றினங்கள் கொள்ளாது தமிழன் கொள்ளக் காரணம் எதுவோ? அது எதுவாக இருக்குமெனில் உலகில் ஒட்டுமொத்த மாந்தரும் ஒரே மொழிக்குள் இருக்கையிலே 4000 ஆண்டுகளின் முன்னே ஒரே மொழியிருந்து பல மொழிகள் திரிபாகி புதுமொழிகள் தோன்றின. ஆக அம்மொழிகளின் தலைமொழி தமிழாகையால் தமிழ்மொழியுடையோன் அம்மொழிகளையும் அங்கீகரித்தல் சரியாயிற்று. இஸ்லாமியரோ, இங்கிலாந்தனோ தமிழ் மூத்தது என்பதை நிராகரிப்பதே இல்லை. அதை துணிவோடு அங்கீகரிக்கின்றனர்.

அவ்விதமே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பொதுவுடைமை. முதல் மனிதன் தமிழனாகவே இருந்திருக்க வேண்டுமென்பர் பல்கோண ஆய்வுளார். அப்படி முதல் மனிதன் தமிழன் எனில் அவனிருந்தே இனக்குழுமங்களும், பூமி பகுபட்ட பின்னே பல்லிட பரம்பல்களும் தோன்றியதெனில் மூத்தோனின் வழி மற்றோராதலால் யாவரும் ஒன்றானோர் என்றும், இதில் எவ்வழியும் மூத்தோனின் வழித்தோன்றல் எனும் வேறோர் அர்த்தம் நிலவுகிறது. ஆகவே ‘எவ்விடமும் எம்மிடமே’ எனும் கருத்தும் சரியே.

இப்பாடலில் தொடர் சரணம் பேசும் பொருள் நோக்குவோம்.

பெற்றோரைப் போற்றி
கற்றோரைக் காமுறுதல்
பண்பாடு
எம் பண்பாடு (2)
தமிழன் வரலாற்றில்
வழிவந்த பண்பாடு
எமது பண்பாடு (2)
தாயை தமிழ்மொழியை
நாட்டைப் பழித்தவனை பழிவாங்கி..
மண்ணைக் கைப்படுத்த
அறிவைப் பாழ்படுத்த
வந்தவனின் உயிர்வாங்கி
களத்தில் வாகை சூடிய
வரலாறு
தமிழர் பெருமைமிகு போரேடு
ஆ….ஆ…
பண்டைய பண்பாட்டை
வீரமிகு வரலாற்றை
வீரம் விளைந்து நிற்கும்
வேங்கைகளின் வரலாற்றை
வீறுகொண்டே எழுந்தே
நீ பாடு (3)

ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களிலே பண்பாடு பற்றிப்பேசும் இப்பாடலில் தமிழ் வாத்தியங்களின் சேர்க்கை அதிகமாம். இசைவாணர் கண்ணன் அவர்களின் தமிழ்ப்பக்குவம் இசையாயிற்று. அக்காலத்து கலை, பண்பாட்டுக் கழகம் இசைநாடாவினை வெளியீடு செய்திருந்தது.

பதிவு

-புரட்சி-

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்…

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு ...

Leave a Reply