Home / மாவீரர்கள் / பதிவுகள் / லெப். கேணல் செல்வகுமார் எளிமையான போராளி..!

லெப். கேணல் செல்வகுமார் எளிமையான போராளி..!

செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார்.

அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியேறி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார்.
ஆரம்பகாலங்களில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய துரோகிகளைக் களை எடுப்பதில் முக்கிய பங்காற்றினார். காலில் பல தடவைகள் செருப்பும் இல்லாது தான் குமாரைக் காணமுடியும். குமாரே சத்தியம் பண்ணி, தான் ஒரு போராளி என்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவனது தோற்றம் அப்படித்தான் இருக்கும். மிக எளிமையான உடை அலங்காரத்துடன் யாழ் நகர வீதிகளில் எந்த நேரமும் காணமுடியும்.

1991ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பணிக்காக அனுப்பப்பட்டிருந்தான். அங்கு சென்று சிறிது காலத்தில் அங்கு நடந்த குண்டு வெடிப்பொன்றின் காரணமாக தமிழ்நாட்டில் தங்கி இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த எல்லாப் பிரிவுப் போராளிகளும் IB யால் இலக்கு வைக்கப்பட்டு, கைது செய்ய முற்படும் போது ஒரு சில போராளிகளைத் தவிர, யுத்தகளத்தில் படுகாயமடைந்து, மருத்துவத்திற்காக தங்கி இருந்த போராளிகள் உட்பட அனைவரும் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர்.

எப்படியோ IB இன் கண்களில் மண்ணைத் தூவி குமாருடன் தொலைத்தொடர்பைச் சேர்ந்த போராளியும், இன்னுமொரு போராளியுமாக மூவரும் கரையில் புலிகளின் படகுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்காக யாரும் வரவில்லை இவர்களுக்கு உதவி செய்யவும் தமிழ்நாட்டு மக்களும் பின்வாங்கிய நேரம். அப்போது இவர்களுக்கும் குப்பியைக் கடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த முடிவுக்கு குமாரை தவிர மற்ற இரு போராளிகளும் வந்திருந்தனர்.

அப்போது குமார், சாவது பிரச்சனை இல்லை அதற்கு முன் தப்புவதற்கு முயற்சி செய்வோம் முடியாவிட்டால் குப்பியைக் கடிப்போம் என்று முடிவெடுத்து அன்று இருட்டிய பின் கரையில் இருந்த சிறு தோணி ஒன்றில் தங்கள் கைகளையும், துடுப்பையும் நம்பி, நம்பிக்கையுடன் தாயகம் நோக்கி புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் இயற்கை இவர்களுக்கு சாதகமாக காற்றும் அடுத்தமையால், தங்கள் சாரம் (லுங்கி) கொண்டு தற்காலிக பாய்மரம் ஒன்றை உருவாக்கி இருவர் அதை பிடிக்க ஒருவர் துடுப்பு பிடிக்கத் தோணி வேகமெடுத்தது.

இப்படியே பாய்மரமும், துடுப்பும் போட்டு மூன்று நாட்கள் உணவும் இல்லாது கொண்டு வந்த 5L நீரும் தீர்ந்து போக அரை மயக்கத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டிருந்த எம் மக்களால் கரை சேர்க்கப்பட்டார்கள். அன்று குமாரின் நம்பிக்கை மூன்று போராளிகளின் உயிரைத் காத்தது. அதன் பின்னரான காலங்களில் யாழில் இருந்தபடி தனது புலனாய்வு வேலைகளை விஸ்தரித்து தனது நேரடி வழிநடத்தலில் கொழும்பில் சில தாக்குதலும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

எப்போதும் போராளிகளுடன் மென்மையான போக்கையே கையாளும் குமார் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவதில் கெட்டிக்காரன். ஓய்வுறக்கமின்றி சுழன்ற போராளி. சிறிது காலம் சாள்சுக்கு (கேணல்.சாள்ஸ்) அடுத்த நிலையிலும், இறுதிக்கலாங்களில் தனி நிர்வாகம் ஒன்றை பொறுப்பெடுத்து செய்த சிறந்த நிர்வாகி.

12/01/1998 அன்று குமாரின் குழந்தையின் 31 விழாவிற்கான ஆயத்தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருந்த போதும், இலக்கொன்றை அழிப்பதற்கு, குண்டு ஒன்றை அனுப்புவதற்கான ஆயத்தங்களின் இறுதிக் கட்டம், கடமை தான் முக்கியமாக கருதிய அந்த போராளி அந்தக் குண்டை கொண்டு செல்லும் போது தவறுதலாக அது வெடித்து வீரச்சாவைத் தழுவியிருந்தார்.

இந்த செய்தியை நான் செய்தி. ஊடகங்கள் ஊடக அறிந்த போது அதிர்ந்துதான் போனேன். நான் ஊர் வரும் போதெல்லாம் எனக்காக காத்திருந்த நல்ல நட்பு பாதியிலேயே போய்விட்டது. மிகவும் திறமை மிக்க போராளி ஒருவனை எம் தேசம் அன்று இழந்தது..!!

– நினைவுகளுடன் ஈழத்து துரோணர்..!!!

About ehouse

Check Also

கேணல் கிட்டு

தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு ...

Leave a Reply