Breaking News
Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / படைத்துறைச் செயலக ஆளுமை கேணல் மனோ மாஸ்ரர்

படைத்துறைச் செயலக ஆளுமை கேணல் மனோ மாஸ்ரர்

மனோ மாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார். இந்திய படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல் ரீதியிலும் வளர்க்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார். போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த இறுக்கமான கொள்கையுடையாவராக இருந்தார்.மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பெறப்பட்ட பல்வேறு போரியல் வெற்றிகளுக்கு மட்டுமன்றி தமிழீழப் பரப்பெங்கும் களமாடிய ஜெயந்தன் படையணியின் வெற்றிகளுக்குப் பின்னாலும் இந்த மனிதரின் உழைப்பு உயர்ந்து நிற்கிறது.

ஜெயசிக்குறு படைநடவடிக்கை காலத்தில் அவர் வன்னியில் நின்றபோது ஜெயந்தன், அன்பரசி படையணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் மட்டுமன்றி பல்வேறு படையணிகள்,பிரிவுகளுக்கும் தனது தனது படைத்துறை பங்களிப்பை வழங்கினார்.முன்னாள் உயர்தரக் கணித ஆசிரியரான இவர் பௌதீகம்,வேதியல் பாடங்களிலும் சிறந்த அறிவைக்கொண்டிருந்தார்.

இதனால்தான் அவரால் போராளிகளை அரச மருத்துவர்களாகக் கூட ஆக்கிக்காட்ட முடிந்தது. தமிழ் அடிச்சுவடி அறியாத பல போராளிகளை இந்த மனிதரால் ஆங்கிலம் கூட பேசவைக்க முடிந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் பணியாற்றிய நாட்களில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கிராமப்புறங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டார்.

அவரது பணிகளில் சில இன்றுவரை நீட்சி பெறுவது அந்த மனிதரின் அன்றைய உழைப்பின் வெளிப்பாடு.தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக கடினமாக உழைத்து 29.04.2009 அன்று முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மிக எளிமையான இந்த மனிதன் பற்றிய விரிவான பதிவொன்றை வலராற்றில் பதிக்கவேண்டியது இந்த போராட்டத்தில் அவருடன் பயணித்த அனைவரினதும் கடமையாகும்.

பல்துறைகளில் வித்தகர்களாக மிளிர்ந்த பல போராளிகளை செதுக்கிய சிற்பி #மனோமாஸ்டர்! ஒரு நல்ல வீரனில் பண்பும் அடக்கமும் நிறையவே இருக்கும் என்று சாண்டிலியனும்,கல்கியும் எழுதிய பொத்தகங்களில் படித்திருக்கிறேன். அதை மனோமாஸ்ரிட(மு)ம் பார்த்திருக்கிறேன்!

கல்வியும் எங்கள் மூலதனம்… என்பதை சிந்தையில் கொண்டு கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை பொதுமக்களிடமும் போராளிகளிடமும் ஊக்குவித்தவர்.
ஆங்கிலப் புத்தகங்களை அதிகம் அதிகம் வாசித்து யோசித்து யோசித்து எங்களது பூகோள அமைப்பு,காலநிலை,தட்பவெட்பம் போன்றவருக்கு ஏற்ப நவீன படைத்துறைப் பாடத்திட்டங்களை வரைந்தவர்.

சாதாரண போராளிகளுக்கும் இலகுவில் விளங்கக் கூடிய முறையில் அவர்களுக்கு பக்குவமாக படைத்துறை அறிவூட்டி வந்தார்.
அம்பு வில்லுடனும் ,வாளுடனும் இருந்த தமிழர்தம் படைத்துறை அறிவைப் பெருக்குவதற்கு தலைவரின் தலைமையில் தமிழினம் எடுத்த முயற்சிகளையும் வார்த்தைகளில் வடிக்கமுடியாது.
அந்த முயற்சிகளுக்கு காத்திரமான பங்களிப்பை நல்கிய எங்களின் ஆசான்!

காடுகளில் போராளிகள் கஞ்சி குடித்து வாழ்ந்த காலங்களிலும் அவர்களுக்கு #கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் முன்னின்று வழிகாட்டிய திறமையான வழிகாட்டியும் ஆவர்!
மனோமாஸ்டர் எனும் பெருவிருட்ஷத்தின் விழுதுகள் இன்றும் எம்மண்ணில் உள்ள கல்விச்சாலைகளிலும் பட்டி தொட்டிகளிலும் கல்விப்பணி செய்தே வருகிறார்கள்.
அந்தப் பெருவிருட்ஷத்தின் பெருவிழுதுகள் பாரெங்கும் பரவி அவரின் பெரும் பண்புகளைத் தாங்கி எங்களுடன் வாழ்ந்து வருவதால் பெருமை

கேணல் மனோகரன் ஆசிரியர் குறித்து அரசியல் ஆய்வாளர் திரு.இதயச்சந்திரன் அவர்கள் தனது முகநூலில் பதிந்திருக்கும் அவரது நினைவுக் குறிப்பு பின்வருமாறு:

“என் இளமைக்கால நண்பன். வீரச்சாவடையும் வரை அவனோடு பேசிக்கொண்டிருந்தேன். 29.04.2009 அன்று குருவியிடமிருந்து துயரச்செய்தி வந்தது. ‘அண்ணே எறிகணை வீச்சில் வாத்தி இறந்துவிட்டார்’. இப்படி எத்தனையோ இழப்புகள். வலிகளால் நிறைந்தது எம் வாழ்க்கை.”

கருணா வரலாற்று துரோகத்தை இழைத்தபோது அப்போது தராக்கி சிவராமின் பெயரும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. எனக்கு தெரிந்த வரையில் அப்போது தராக்கி சிவராம் ஒருத்தரை தொடர்பு கொண்டு அவருக்கு மட்டும் தன்னிலை விளக்கம் அளித்தார்.

அவர்தான் கேணல் மனோ மாஸ்டர்.

அடுத்து கருணாவின் துரோகத்தைக் கண்டித்தும் வன்னி பின் தளத்தின் தேவை குறித்தும் அதன் படைத்துறை மூலோபாய சிந்தனைகளை விபரித்தும் சிவராம் “வீரகேசரியில்’ கருணாவை விளித்து ஒரு கடிதம் எழுத முன்பாகவும் சிவராம் தொடர்பு கொண்டு பேசிய ஒரு ஆளுமை கேணல் மனோ மாஸ்டர் மட்டுமே… அன்று மனோ மாஸ்டர் சிறிது சலனப்பட்டிருந்தாலும் வரலாறு வேறு வகையில் எழுதப்பட்டிருக்கும்..

‘வெற்றி தோல்வி முக்கியமில்லை, அடுத்த தலைமுறைக்குத் தெளிவான வரலாற்றையே விட்டுச் செல்ல வேண்டும்’ என்ற தலைவரின் கோட்பாட்டிற்கமைவாக அன்று காய்களை நகர்த்தி தென் தமிழீழத்தின் மீது விழ இருந்த கறையை துடைத்து தாயகக் கோட்பாட்டை நிலை நிறுத்தியவர் மனோ மாஸ்டர்.

குறிப்பு – கேணல் மனோகரனுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தன், விழுப்புண் அடைந்திருந்தது பின்னர் வீரச்சாவடைந்த கேணல். கீர்த்தி ஆகியோரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவில் நிறுத்தி அவர்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.

.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

லெப்ரினன்ற் கேணல் பூவேந்தன்

1999 ஆரம்ப காலம் ஜெயசிக்குறு சிறிலங்கா இராணுவ நடவடிக்கை ஊடாக இராணுவம் ஒட்டுசுட்டான் சந்தி வரை வந்திருந்தது அப்போது புதுக்குடியிருப்பு ...

Leave a Reply