காலமெழுதிய காவியம்

பகலவன் மேற்குவானில் பவனி வந்து கொண்டிருந்தான். போராளிகள் திட்டமிட்ட இராணுவமுகாம் தாக்குதலுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிகளை கட்டியிருந்தது. தங்களுக்குத் தரப்பட்ட இராணுவமுகாம் பகுதிகளை குறித்த நேரத்தில் பிடிக்கவேண்டுமென்ற உத்வேகம் எல்லோர் மனங்களிலும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது.

அவன் தன்னிடமிருந்த சலனப்படக் கருவியை சரி பார்த்துக் கொண்டிருந்தான். இராணுவமுகாம் தாக்குதலைப் பதிவுசெய்வதே அவனுக்குத் தரப்பட்ட பணி. புகைப்படக் கருவியை கையிலெடுத்ததும் கடந்தகால நிகழ்வொன்று நினைவில் மோதி சிரிப்பூட்டியது.

வீட்டிலிருந்த நாட்களில் நண்பனின் வீட்டில் நிகழ்வொன்றுக்குப் போயிருந்தான். புகைப்படப் பிடிப்பாளனும் நண்பன் வீட்டாருடன் சேர்ந்து படமெடுக்க வேண்டி யிருந்ததால் அவனிடம் புகைப்படக் கருவியைத் தந்து படமெடுக்கச் சொன்னார்கள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. படமெடுக்க வேறெவரும் இருக்கவில்லை. ஒருவாறு முயற்சித்து படமெடுத்துவிட்டான். பிறிதொரு நாளில் அந்த அல்பத்தைப் பார்த்தபோது அவனெடுத்த புகைப்படத்தில் புகைப்படப் பிடிப்பாளனின் கை மட்டுமே அகப்பட்டிருந்தது.

இன்று அவனொரு பட்டறிவான களப் படப்பிடிப்பாளன். எத்தனையோ சண்டைக் களங்களைப் பதிவு செய்திருக்கிறான். இராணுவ ஆக்கிரமிப்பால் மக்கள் படும் அவலங்களையும் விடுதலை எழுச்சி நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறான்.

தொடக்க காலங்களில் தொடர்ச்சியாக துப்பாக்கியோடு களமிறங்கியவன் இப்போது தொடர்ச்சியாக படப்பிடிப்பு கருவியோடு களமிறங்க வேண்டியிருந்தது. களப் படப்பிடிப்பின் முக்கியத்துவத்தை அவன் முழுமையாக உணர்ந்திருந்தான். எந்தப் பதிவாக இருந்தாலும் தெளிவாக இருக்கவேண்டுமென்பது அவனது அவா. சண்டைக் களங்களில் அருகில் நின்று படப்பிடிப்பில் ஈடு பட்டு விழுப்புண்ணோடு மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறான்.

மாலைப்பொழுது மங்கி இருள் பரவத் தொடங்கியது. அணிகள் இராணுவமுகாம் நோக்கி நகரத்தொடங்கின. பனை வெளிகளோடு அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். தாக்குலுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கணத்தை பதிவுசெய்ய அவனது சலனப்படக் கருவி தயாராக இருந்தது. டோப்பிடோக்கள் வெடிக்க தடையில் பெரிய ஒளிப்பிளம்பு தோன்றி மறைந்தது. அதனைப் பதிவு செய்தவன், அணிகளோடு ஓடி தடையைக் கடந்து முகாமுக்குள் பிரவேசித்தான்.

அவனது சலனப்படக்கருவி அணு அணுவாக களத்தை பதிவுசெய்துகொண்டிருந்தது. போராளிகளின் வீரதீரச் செயல்களும் தியாகங்களும் பதிவாகின. சண்டை இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. இராணுவத்தினர் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். அவனது சலனப்படக்கருவி பின்தொடர்ந்து அதனையும் பதிவு செய்தது.

அடுத்த இராணுவ முகாமிலிருந்து ஏவிய எறிகணையொன்று அவனுக்குப் பக்கத்தில் விழுந்து வெடித்தது. அவன் சலனப்படக் கருவியை அணைத்தபடி நிலத்தில் விழுந்தான். எறிகணை மழைபொழிந்து ஓய்ந்த போது அவனது உடல் சிதைந்து குருதியில குளித்து குளிர்ந்துபோயிருந்தது. சலனப் படக்கருவி மட்டும் பாதிப்பற்று அவனது அணைப்பில் அகப்பட்டிருந்தது.

ஆ.ந. பொற்கோ
தமிழீழ விடுதலைப்புலிகள் இதழ் ( கார்த்திகை, 2006 )

About ehouse

Check Also

போராளியின்யின் குறிப்பேட்டிலிருந்து…

இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. ...

Leave a Reply