Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / லெப் கேணல் இசைவாணன்

லெப் கேணல் இசைவாணன்

தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தான் சுரேன் என்றும் இசைவாணன் என்றும் அழைக்கப்படும் போராளியும் ஒருவராகிறார். தமிழீழ விடுதலைக்காக ஒரு காலை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றீடாக ஒற்றைச் செயற்கை காலோடு தன் வாழ்க்கையை தமிழீழ விடுதலைக்காக கொடுத்த உன்னதமான வேங்கை இசைவாணன்.
இன்று நாம் இழந்து விட்டோம் என்ற உண்மை ஏற்க முடியாது தொண்டைக்குள் சிக்குண்டு கிடக்கிறோம். ஒற்றைக்கால் என்பது சில வேளைகளில் அவர் நடக்கும் போது புலனாகினும் அவரின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அதை வெளிக்காட்டியதே இல்லை. இதை உணர்த்தக் கூடிய ஒரு நிகழ்வாக கீழ் வருவதை குறிப்பிடலாம்.

1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குறிபார்த்து சுடுதல் (Sniper) பயிற்சிக்காக ஒரு அணி தயாராகிய போது தன்னை அதில் இணைக்கும் படி பல முறை தலமையை நச்சரித்து கொண்டிருந்தார். ஆனால் அந்த பயிற்சி கடினமானதாக இருக்கும் என்ற நிலையில் அவரின் ஒற்றைக்கால் பெரும் குறையாக பார்க்கப்பட்டு உள்வாங்கப்படாது தவிர்க்கப்பட்டார். இதை அறிந்த இசைவாணன் தனது தளபதியோடு பலமுறை சண்டையிட்டு தலைவரிடமும் பலமுறை வேண்டுதல் செய்து அந்த அணிக்குள்ளே சென்றார்.

பல மாத பயிற்சிகள், மிகக் கடினமான பயிற்சிகள். ஆனாலும் அவை அத்தனையையும் பொடியாக்கி உடைத்தெறிந்து வெற்றி பெற்றார். இறுதி பயிற்சி நடந்து முடிந்து போட்டிகள் நடந்தன. அப்போது குறிபார்த்து சுடுதல் போட்டி நடந்த போது கொடுக்கப்பட்ட அனைத்து ரவைகளையும் இலக்கினில் சரியாக பொருத்தி அனைவரிலும் சிறந்தவனாகவும் முதன்மையானவனாகவும் வந்த அந்த பொழுதுகளை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. அன்றில் இருந்து விடுதலைப்புலிகளின் பதுங்கிச்சுடும் அணிப் போராளியாக பயணித்தார்.

இந்தக் காலத்தில் தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவாகியது தமிழீழ மருத்துவக் கல்லூரி. 1982 நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தன் மடியினில் தலைவைத்து முதல் வித்தாக வீழ்ந்த சங்கரை போல இனி வரும் காலங்களில் எம் போராளிகள் சீரான மருத்துவக் காப்பு இல்லாமல் வீரச்சாவடையக் கூடாது என்ற தமிழீழ தேசிய தலைமையின் உன்னத நோக்கத்தின் பின்னால் உருவானதே ” தமிழீழ மருத்துவக்கல்லூரி”.

இந்தக் கல்லூரி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் அழகையா துரைராஜா அவர்களின் வழிகாட்டலில் , தமிழீழ மருத்துவக்கல்லூரியின் பீடாதிபதி ஜெயகுலராஜா, பேராசிரியர் சிவபாலன், மற்றும் வேறு பல பேராசிரியர்களின் ( அவர்களின் பெயர்கள் இப்போது வெளியில் குறிப்பிட முடியவில்லை) முழுமையான ஆதரவோடு உருவாக்கம் பெறுகிறது.

அப்போது பல பிரிவுகளில் இருந்து போராளிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அதில் ஒரு போராளி இசைவாணன். பதுங்கிச்சுடும் அணியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட இசைவாணன் ஒரு மருத்துவப் போராளியாக கல்லூரிக்கு அனுப்பப் படுகிறார். அவ்வாறு மருத்துவப் பிரிவில் வளர்த்தெடுக்கப்பட்ட பெரு வீரர்களில் ஒருவன். சண்டைக் களங்களை தம் ஆளுகைக்குள் வைத்திருக்கும் ஒவ்வொரு போராளிகளுக்கும் மட்டுமல்ல மருத்துவ தேவைகள் உணரப்பட்ட அத்தனை இடங்களிலும் மக்களின் சேவையாளனாக, தன்னை நிலை நிறுத்திய ஒரு இலட்சியவாதி.

போராளி மருத்துவராக பயணிக்கத் தொடங்கி சில காலங்கள் கழிந்த நிலையில் 1993 பங்குனி மாதம் 23 நாள் அன்று தமிழீழ மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை தேசியத்தலைவர் கல்லூரியில் வைத்துச் சந்திக்கிறார். அங்கு பலர் இருந்தார்கள். ஆனாலும் எமது தேசத்தின் தலைமகன்

“சுரேன் நீ இங்கயா இருக்கிறாய் …?’’

என பெயரைக் கூறி அழைத்து நலம் விசாரித்தது போராளி மருத்துவர் இசைவாணனைத்தான். (சுரேன் என்பது இசைவாணனின் முன்னாள் பெயர் ) அப்பிடி தலைவனின் நெஞ்சில் ஆழமாக பதிந்திருந்தவர், போராளி மருத்துவர் லெப். கேணல் இசைவாணன் தனக்கு ஒரு கால் இல்லை என்பதை உணர்ந்ததும் இல்லை, மற்றவர்களுக்கு அதை காட்டிக் கொண்டதும் இல்லை. எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவே இருந்தார்.

தமிழீழ மருத்துவக்கல்லூரி என்றும் இராணுவக் கட்டுப்பாடுகள் நிறைந்ததாகவே இருக்கும். அவர்கள் விடும் சிறு தவறுகளும் தண்டனையில் தான் முடியும். அவ்வாறான தண்டனை ஒன்றில் இசைவாணனின் உறுதியை அவருடன் கூடப் பயணித்த அனைத்துப் போராளிகளும் உணர்ந்து கொண்டார்கள். எந்த நிலையிலும் கால் இல்லை என்பதைக் காரணம் காட்டி இசைவாணன் வேலைகளிலிருந்தும், கற்றலிலிருந்தும் பின்தங்கியது இல்லை. என்றும் முன்னிலை மருத்துவ மாணவனாகவே விளங்கினார்.

ஒரு பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தினால் மட்டுமே போதுமானதாகும். எந்த விதமான ஆளணி மற்றும் உதவிகளின்றி, அந்த முக்கியம் வாய்ந்த பணியை முடித்து பொறுப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் பண்பு நிறைந்தவர். அதற்காக பல முனைகளில் பலருடன் விவாதங்கள் என்றும் சண்டைகள் என்றும் நிறைய பின்னடைவுகளைச் சந்திப்பார். ஆனாலும் சாதுரியமான பேச்சினால் அவர்கள் மனதை வென்று பணியை முடித்திருப்பார். அவ்வாறான பெரும் சாதுரியம் மிக்க போராளி மருத்துவர்.

யாழ்ப்பாண மாவட்டம் சிங்களத்தின் சந்திரிக்கா தலைமையிலான, அரச படைகளால் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட போது பெரிதும் நொந்து போனார். உரிமைகளை மீட்டெடுக்க போராளியாகியவர்கள் இவரும் இவரது தோழர்களும். ஆனால் தமது கண் முன்னே தமது தாயகம் எதிரியின் கைகளுக்குள் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாது விக்கித்து நின்றனர். ஆனால் தேசக் கடமை இவர்களை மருத்துவர்களாக மாற்றிய தேசியத் தலைவர் உரைத்த வார்த்தைகளை நினைத்தார்கள்.

“ஆயுதம் தூக்கி எதிரியின் உயிரை எடுக்க வந்த உங்களை நான் உயிர் காக்கும் பனி ஒன்றுக்காக தாயாராகுங்கள் என்று விட்டிருக்கிறேன். இது பலருக்கு ஏமாற்றத்தைத் தரலாம் ஏனெனில் போராளிகள் அனைவரும் எதிரியின் கொடூரங்களை எதிர்க்கவே புலியானவர்கள். ஆனாலும் இந்தப் பணியும் எம் அமைப்புக்கு மிக முக்கியமானது என்பதை நீங்கள் மருத்துவர்களாக கற்றுத் தேர்ந்ததும் புரிந்து கொள்வீர்கள். களமுனையில் ஒரு உயிரைஎதிரியைக் கொள்வதை விட அதே களமுனையில் எமது போராளி ஒருவனின் உயிரைக் காப்பாற்றும் போது இந்த பெறுபேற்றை அறிவீர்கள் ” என்ற கருத்துத் தாங்கிய செய்தி ஒன்றை அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதைப்போலவே இப்போது தலைமையின் கட்டளைக்கு ஏற்ப வன்னிக்கு இடம்பெயர்கிறார்கள்.

வன்னி மண்ணில் தொடர்ந்த அவர்களது மருத்துவக் கற்கை இசைவாணனையும் அவருடன் கூட இருந்த போராளி மருத்துவர்களையும் மருத்துவத்துறையில் புடம் போட்டது. மருத்துவப் போராளிகள் கற்கைகளை கற்கும் அதே நேரம் சண்டைகளிலும் பங்குபற்ற வேண்டியவர்களாக இருந்தார்கள். அதனால் முழுமையான போர் வீரர்களாகவும் மருத்துவர்களாகவும் வாழ்ந்தார்கள் அதில் இசைவாணனும் சிறப்பான இடத்தை வகிக்கிறார்.

எதற்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்ட இசைவாணன் முதன்முதலாக ஒரு விடயத்துக்காக அஞ்சத் தொடங்கினார். எந்த வேலைக்கும் யாரிடமும் உதவி கேட்காத இசைவாணன் முதல்தடவையாக தனது வாழ்க்கைத் துணைவிக்காக நண்பனிடம் உதவி கேட்கிறார்.களத்துக்கு அஞ்சாத மருத்துவர் இசைவாணன், காதலுக்காக அஞ்சியதை அவரது தோழர்கள் அன்று கண்டார்கள்.

“ரதி” மருத்துவர் இசைவாணனின் மனத்தைக் கவர்ந்த பெண் போராளி. மருத்துவப்பிரிவின் முதலாவது தாதியப் பிரிவில் பயின்று ஒட்டிசுட்டானில் அமைந்திருந்த “மேஜர் அபயன்” இராணுவ மருத்துவமனைக்கு பணிக்காக வந்திருந்த போதே முதலில் இசைவாணன் கண்டிருந்தார். ஏனோ ரதியை பிடித்திருந்தது. ஆனாலும் மனதில் பயமாக இருந்தது. அமைதி காத்தார்.

கிளிநொச்சி எதிரியிடம் “சத்ஜெய” நடவடிக்கை மூலம் வீழ்ந்த போது “மேஜர் அபயன் ஞாபகார்த்த ” இராணுவ மருத்துவமனை மருத்துவப்போராளி அருண் தலைமையில் தோற்றம்பெறுகின்றது. மாமனிதரான வைத்தியக் கலாநிதி கங்காதரன் அவர்களால் ஒரு வயிற்றறுவைச் சிகிச்சையுடன் ஆரம்பிக்கப்பட்ட “மேஜர் அபயன்” மருத்துவமனை போராளிகளுக்கும், மக்களுக்குமான மருத்துவப்பணியில் இயங்கியது.
இந்த மருத்துவமனையே முல்லைத்தீவுச் சமர் ஜெயசிக்குறு சமர்களில் எல்லாம் முக்கிய இராணுவ மருத்துவ மனையாக இயங்குகின்றது. அமைப்பின் மூத்த மருத்துவர்களான மருத்துவ கலாநிதி பத்மலோஜினி கரிகாலன் (அன்ரி), மருத்துவ கலாநிதி சூரி, மருத்துவ கலாநிதி பாலன், மருத்துவ கலாநிதி சுஜந்தன், மருத்துவ கலாநிதி அஜந்தன் ஆகியோர் அடங்கிய அணி அங்கு கடமையில் இருக்கின்றது. இந்த அணியில் ஒருவராகவே இசைவாணன் பணியில் இருந்தார். அப்போது தான் ரதி மீதான அவரது காதல் மலர்ந்திருந்தது.

ஆனால் அதை வெளிப்படையாக கூற மருத்துவர் இசைவாணனால் முடியவில்லை. ஏனெனில், தனது பொறுப்புக்கு கீழ் இருக்கும் “மேஜர் அபயன்” இராணுவ மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக் கூடத்தில் பணியில் இருக்கும் ஒரு பெண் போராளியை தான் விரும்புவதாக கூறும் போது அவள் மறுத்து விட்டால்…? அல்லது தனது பொறுப்பாளர் தன்னைக் காதலிப்பதாக கூறுகிறார் என்று வெளியில் சொல்லி விட்டால்? போராளிகள் மத்தியில் பேசு பொருளாகி விடக்கூடிய அபாயத்தை அவர் உணர்ந்திருந்தார்.

அதனால் நண்பனின் உதவியை நாடினார். நண்பனின் உதவியோடு அவரது காதல் திருமணத்தில் முடிந்தது. திருமண வாழ்வு எல்லையில்லா மகிழ்வை தந்தது அந்த சந்தோசத்தின் சிகரமாக அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். இவ்வாறான அவரது மகிழ்வான பக்கங்களை மேஜர் அபயன் மருத்துவமனை தாங்கி நின்றது.

இந்த நேரத்தில் “ஜெயசிக்குறு” தொடர் நடவடிக்கை மூலம் எதிரி வன்னியை இருகூறாக்கக்க முனைகையில் வன்னிப்பெருநிலப்பரப்பு வன்னி மேற்கு, வன்னி கிழக்கு என இரண்டாக பிரிந்து போனது. மாங்குளத்துக்கும் கிளிநொச்சியின் இரணைமடுச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியே இரண்டு பிரதேசங்களையும் இணைக்கும் பகுதியாக இருந்தது.

இதனால் இரண்டு பிரதேசங்களுக்குமான மருத்துவ அணியின் தேவை உணரப்பட்டு ஒரு மருத்துவ அணி வன்னி மேற்கிற்கு நகர்ந்தது. அந்த அணி வன்னேரிக்குளம் பகுதியில் தமது மருத்துவக் களத்தை விரிவாக்குகின்றது. அங்கே அபயன் மருத்துவமனையில் இருந்து பிரிக்கப்பட்ட போராளிகளின் அணி மருத்துவ கலாநிதி சுஜந்தன், மருத்துவ கலாநிதி அஜந்தன் உட்பட்ட மருத்துவ ஆளணியாகி விரைந்து இயங்குகின்றது.

மாங்குளத்தில் அசைவற்று நின்ற அந்த “வெற்றிநிச்சயம் (ஜெயசிக்குறு )” நடவடிக்கையில் சிங்கள படைகள் பல முறை தோல்விக்குமேல் தோல்வியடைகிறன. இந்த சண்டைகளுக்கெல்லாம் பிரதான மருத்துவ அணியாக இவர்கள் இயங்கினார்கள். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் கிளிநொச்சியை மீட்கும் ஓயாதலைகள் -2 நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் செய்ப்பட்டு மருத்துவ அணிகள் தயாராகின்றன.

மருத்துவ களநிலைகளில் போராளி மருத்துவர் லெப்.கேணல் காந்தனும், போராளி மருத்துவர் லெப். கேணல் இசைவாணனும் முறிகண்டிக்கு அண்மையில் உள்ள வசந்தநகர் கிராமத்தில் தமது மருத்துவ நிலையை அமைக்கின்றனர். போராளிமருத்துவர் தணிகை மற்றும் பெண் போராளி மருத்துவர் மீனலோஜினி ஆகியோர் ஜெயந்திநகர் பக்கமாகவும், போராளி மருத்துவர் மேஜர். சுசில் மற்றும், போராளி மருத்துவர் மேஜர் றோகிணி ஆகியோர் முரசுமோட்டைப் பகுதியிலும் மருத்துவ நிலைகளை அமைத்து நிற்கின்றனர். இந்த மருத்துவ நிலைகள் சாதாரணமான மருத்துவ நிலைகளாக இல்லாது பிரதான மருத்துவ நிலைகளாக உருவாக்கி இருந்தார்கள்.

உலக அரங்கிலையே முன் வைத்தியசாலை பராமரிப்பு நிலையங்களில் குருதி மீளேற்றம் அல்லது Intercostals Drainage Tube (ICD Tube), Traumatic Amputation, Blood Transfusion(some time auto transfusion), போன்ற சிறு சத்திரசிகிச்சைகள், Inserting Urinary Catheter for check the urine out put , Giving Tetanus toxoid , Proper Splinting for fractures போன்றவை செய்யப்படுவதில்லை. ஆனால் இங்கே அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் மருத்துவ நிலைகள் அனைத்திலும் இவை அனைத்தையும் செய்யக் கூடிய வகையிலையே அமைத்திருந்தார்கள். ஏனெனில் அப்போது பிரதான இராணுவ மருத்துவமனையாக ஒட்டிசுட்டான் பகுதியில் மேஜர் அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை அமைந்திருந்தது. அதனால் கிளிநொச்சியில் இருந்து அபயன் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு காயப்பட்டவர்களைக் கொண்டு செல்வதற்கு கிட்டத்தட்ட ஒன்று தொடக்கம் இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்படும். அதனால் அந்த தூர இடைவெளிக்குள் காயப்பட்ட போராளிகள் குருதி வெளியேற்றத்தால் வீரச்சாவு அடைவதை தடுக்கவும் காயங்கள் மேலும் பாதிப்படைவதைத் தடுக்கவும் இவ்வாறான முன் மருத்துவ பராமரிப்பு நிலையங்களிலையே அவற்றைச் செய்ய வேண்டி இருந்தது.

அந்தச் சண்டையில் மேஜர் சுசில், மேஜர் றோகிணி மற்றும், களமருத்துவப் பொறுப்பாளர் மேஜர் திவாகர் பெண் மருத்துவ நிர்வாகப் போராளி மேஜர் எஸ்தர் மற்றும் மேஜர் கமல் மாஸ்டர் போன்றவர்கள் மருத்துவ நிலைகள் மீதான எதிரியின் தாக்குதல்களில் வீரச்சாவடைய காயப்பட்ட போராளிகள் இசைவாணனின் மருத்துவ நிலை மற்றும் தணிகையின் மருத்துவ நிலைகளில் குவிகின்றனர். அதனால் வேலைப்பளு அதிகமாகிறது. தொடர்ந்து நிற்க முடியாத சூழல். அவரது ஒற்றைக் கால் புண்ணாகுகிறது. தொடர்ந்தும் பொய்க்காலை போட்டிருந்ததால் அந்தக்கால் பயங்கர வேதனையைத் தருகிறது. ஆனாலும் சோர்வு அவரில் வரவில்லை பணிமுடித்து தளம் மீள்கிறார்.

இவ்வாறான உறுதிமிக்க போராளி மருத்துவர் போராளிகளின் மருத்துவத்தை மட்டுமல்லாது மக்களையும் தன் மருத்துவப் பணியால் அரவணைத்ததை வன்னியில் இருந்த அனைவரும் அறிந்திருப்பர். வன்னியில் இருந்த மருத்துவ ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமிழீழ மருத்துவப் பிரிவால் உருவாக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரிகளில் முதுநிலை விரிவுரையாளராக இருந்து மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதில் முன் நின்றார் இசைவாணன்.

அதை விட அரச மருத்துவர்கள், போராளி மருத்துவர்கள் என்ற இரு வேறு பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டிருந்த தமிழீழ மருத்துவ அணி உள்ளே ஓரணியாகவும் வெளியில் மட்டும் இரு அணியாகவும் பணியாற்றியது குறிப்பிட வேண்டிய ஒன்று. (எதிரிக்காக )அவசர கால சூழல்களைத் தவிர்ப்பதற்காக அனைவரும் அரச மருத்துவமனைகளிலோ அல்லது இராணுவ மருத்துவமனைகளிலோ ஒருங்கிணைந்து செயற்படுவர். அச்செயற்பாடுகளில் எல்லாம் இசைவாணனும் முன்நிலை வகிப்பது குறிக்கப்பட வேண்டியது.

வன்னிப் பெருநிலம் எங்கும் மலேரியா ( Malaria) தலைவிரித்து ஆடிய 1996- 1998 காலப்பகுதியில் தமிழீழ சுகாதார சேவைகள் முற்றுமுழுதான வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்த வன்னிக்குள் கொடிய மலேரியா நோய்த் தாக்கத்தை இல்லாமல் செய்தார்கள் அந்த செயற்பாட்டின் முன் நிலை வகிப்பவர்களுள் இசைவாணனும் ஒருவர் என்றால் மிகையல்லை. அன்றைய நாட்களில் இலங்கை சுகாதாரத் திணைக்களத்தால் தடுக்க முடியாமல் திணறிய மலேரியா நோய்த் தாக்கத்தை வன்னிக்குள் முழுமையாக தடுத்தருந்தது தமிழீழ சுகாதார சேவைகள் திணைக்களம். இந்த செயற்பாடானது சர்வதேச சுகாதார வல்லுனர்களையே எம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் அது தவறில்லை. அதற்காக இசைவாணன் காத்திரமான பங்கை கொடுத்திருந்தார்.

2006 ஆண்டின் நடுப்பகுதியில் வன்னி மண் இறுதிப்போருக்குத் தயாரானது போது. எதிரி ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தான். அதே நேரம் சர்வதேச அளவிலான பலத்தை வன்னிமீது திருப்பி எம்மை இல்லாது செய்வதற்கான திட்டமிடலில் எதிரி வெற்றியடைந்துவிட்டிருந்தான். ஆனாலும் எந்த நிலையையும் வெற்றியின் படிக்கற்களாக்கும் போராளிகள் தடுமாறவில்லை. இயக்கத்தின் வழிநடத்தலை முழுமையாக நடைமுறைப்படுத்தும் எந்த ஆபத்தான சூழலிலும் பணியாற்ற எமது போராளிகள் தயாராகவே இருந்தார்கள். வழமையில் இராணுவ மருத்துவ மனைகளில் தொங்கும் போரரங்கின் வரைபடங்கள் தினமும் விவாதத்துக்கும் அனுமானங்களுக்கும் களமமைக்கும்.

“எதிரி மக்களை இலக்கு வைப்பதன் மூலம் உளவுரன் ரீதியில் பலவீனப்படுத்த முனைவான். சிவில் நிர்வாகத்தை உடைத்துப் போரொன்றை எதிர்கொள்ளும் சக்தியை உடைக்கவும் மூல உபாயம் வகுத்துள்ளான் ”

என்று இசைவாணன் வாதிடுவார். அவரின் கூற்றுப்படியே பல சம்பவங்கள் நடந்து முடிந்தன. அதன்படி தொண்டு நிறுவன வாகனங்கள், மருத்துவக் காவுவண்டிகள், சுகாதார சேவைகள், உணவு விநியோகம் போன்றவற்றைத் தான் முதலில் எதிரி இலக்குவைத்தான். சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னியில் இருந்து வெளியேற்றினான். இந்த நிலையில் முற்று முழுதாக எதிரியால் தடைசெய்யப்பட்ட அனைத்து வளங்களையும் எம் மக்களுக்காக நாமே ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை எழுந்திருந்தது. தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சியில் நாம் வளர வேண்டிய தேவையைத் தேசியத் தலைவர் போராளிகளுக்கு உணர்த்திய போது மக்களுக்கான போசாக்கு உணவுத் தயாரிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கினார் இசைவாணன். அதற்காக ஒரு தொழிற்சாலையையே இயக்கினார். இதனை வடிவமைக்கும் பொறுப்பை தமிழீழ சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி. சுஜந்தன் அவர்கள் இசைவாணனிடம் ஒப்படைத்த போது நிட்சயமாக அதன் பலன் பெரும் வெற்றியைத் தரும் என்றே நம்பினார்.

அதைப் போலவே கர்பிணித் தாய்மாருக்கும் குழந்தைகளுக்கும் பயன்படக்கூடியதான “போசாக்கு மாவை ” ( அரசாங்கத்தால் கொடுக்கப்படும் திரிபோசா மாவின் தரத்தோடு) உற்பத்தி செய்தார் இசைவாணன். இந்த உற்பத்தியானது இறுதிச்சண்டை வரை தொடர்ந்ததும். பட்டினியால் வாடிய மக்களின் பசி போக்குவதற்கு பெரிதும் உதவியதும் வரலாறு. இவ்வாறான போராளி மருத்துவர் இசைவாணன் மன்னார் மாவட்ட தமிழீழ சுகாதாரசேவைகள் பொறுப்பாளராக இருந்த போது மக்களுக்கான பணிகளை சரியாக செய்தார். களமுனை கொஞ்சம் கொஞ்சமாக எமது பிரதேசங்களுக்குள் நகர்ந்த போதெல்லாம் படையணிப் போராளிகளுக்கான மருத்துவம் மட்டுமல்லாது மக்களுக்கான பணிகளையும் செவ்வனவே செய்தார்.

அவ்வாறான ஒரு இக்கட்டான சூழலில் இராணுவம் எமது பிரதேசம் ஒன்றைக் கைப்பற்றிய போது இவரின் பொறுப்பில் இருந்த போசாக்குமாத் தொழிற்சாலை எமது படையணிகளின் எல்லை வேலிக்கும் எதிரிக்கும் இடையில் சிக்குண்டது. ஆனாலும் கட்டாயமாக அங்கிருக்கும் தானியங்கள், மற்றும் பாத்திரங்கள் இயந்திர உபகரணங்கள் கட்டாயமாக மீட்கப்பட வேண்டும். ஆனாலும் பாதுகாப்பு என்பது அறவே இல்லை. லெப்கேணல். இசைவாணனும் விடுதலைப்புலிகளின் முதன்மை இராணுவ மருத்துவர் வாமனும் அவற்றை மீட்டே ஆக வேண்டும் என்பதில் திடமாக இருந்தார்கள்.

இவர்களிடம் பிஸ்டலையும், கழுத்தில் இருந்த குப்பியையும் தவிர வேற எதுவும் இல்லை. அதைவிட அவர்களிடம் இருந்த வாகனமோ இயங்குநிலை தடைப்பட்டால் திரும்பத் தள்ளித் தான் இயக்க வேண்டும். இந்த நிலையில் எப்படி அவர்களால் அந்த போசாக்கு மா தொழிற்சாலையை மீட்க முடியும். ஆனால் இரு இராணுவ மருத்துவர்களும் தமது வாகனத்தோடு அந்த கொட்டகைக்கு சென்றார்கள். ஒற்றைக் கால் வலிக்க வலிக்க அத்தனை பொருட்களையும் வாகனத்தில் ஏற்றினார்கள். ஆனால் வாகனம் இயங்கவில்லை.

இருவருமே திட்டமிட்டு வாகனத்தை விட்டிருந்த இடம் ஒரு ஏற்றமான பகுதி. வாகனத்தைத் தள்ளி இயங்க செய்வது இலகு என்பதால் அவர்கள் அவ்வாறு செய்திருந்தார்கள். இப்போது மருத்துவர் வாமன், மற்றும் இசைவாணன் ஆகியோர் தமது வாகனத்தை மெதுவாக தள்ளி இயங்கு நிலைக்கு கொண்டுவந்து அந்த சூனியப் பிரதேசத்தில் இருந்து தப்பி வருகிறனர். தருணம் தப்பினால் மரணம் என்ற நியத்தை சவாலாக ஏற்று மக்களுக்காக அந்த பொருட்களை மீட்டு வந்தார்கள் மருத்துவர்கள்.

இவ்வாறான போராளி மருத்துவர்கள் இறுதி வரை தளராது களமாடிய பெரும் வேங்கைகள். ஆனாலும் அவர்கள் ஒரு விடயத்தில் சில மாறுதலான முடிவுகளை எடுத்திருந்தார்கள். ஏனெனில், அப்போது இறுதிப் போர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கை சிங்கள அரசு திட்டமிட்டதைப் போலவே வன்னி மண்ணில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு துணை போன சர்வதேசம் போட்ட நிகழ்ச்சி நிரலில் வன்னியில் மக்கள் காப்பற்றப்படுகிறார்கள் என்று வெளிச்சமிட்டுக் கொண்டு இனப்படுகொலைகள் அரங்கேறின. அதனால் தமது வருங்காலக் சந்ததியினரான குழந்தைகளை காத்துவிடத் துடித்தார்கள் சில போராளிகள். ஆனாலும் தமது பிள்ளைகள் தம்முடனே இருக்கட்டும் என்ற முடிவில் இருந்து பல போராளிகள் மாறவில்லை.

யாருக்காக இந்த போராட்டம் நடக்கிறதோ? எந்தச் சந்ததி வாழ வேண்டும் என்று அவர்கள் களத்தில் நிற்கிறார்களோ ? அந்த சந்ததி அழிந்து கொண்டிருப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. சிங்களத்தின் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் வலயங்களிலெல்லாம், பெரும் உயிர் சேதங்கள் வந்த போதெல்லாம் மருத்துவப்பிரிவின் போராளி மருத்துவர்கள் தமது உயிர் காக்கும் செயற்பாடுகளை இறுதிவரை செய்தார்கள்.

இவ்வாறான சூழல் ஒன்றில் தான், போராளி மருத்துவ அணியில் இருந்த பல மூத்த மருத்துவர்கள் சண்டைகளில் வீரச்சாவடைகிறார்கள். லெப்கேணல் வளர்பிறை, லெப்கேணல் கமலினி, லெப்கேணல் காந்தன், லெப்கேணல் சத்தியா, லெப்கேணல் தமிழ்நேசன் ஆகியோர் வீரச்சாவடைந்த நிலையில் இறையொளி, செவ்வானம் ஆகியோரும் இறுதி சண்டையில் நடந்த மருத்துவமனை மீதான தாக்குதலில் வீரச்சாவடைகின்றனர். இப்போது மிகுதியாக இருக்கும் மருத்துவ வளமோ மிக சிறியது. மூத்த மருத்துவர்கள் மிக குறுகியவர்களே பணியில் இருக்கிறார்கள், அரச மருத்துவர்களான மருத்துவக் கலாநிதி வரதராஜன், மற்றும் மருத்துவக் கலாநிதி சண்முகராஜா ஆகியோருடன் தமிழீழ மருத்துவர்கள் இடைவிடாத உயிர்காப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறார்கள்.

இந்த நிலையில் தான் சிறு ஓய்வுக்காக வீட்டுக்குச் சென்றிருந்த (வீடு என்பது தரப்பாளால் அமைக்கப்பட்டிருந்த சிறு கொட்டகை அதனோடு இணைந்த பதுங்ககழி ) இசைவாணன் 12.05.2009 அன்று அவரது குடும்பத்தோடு எறிகணை வீச்சுக்கு இலக்காகுகிறார். அந்த எறிகணை வீச்சில் பவிதா(8) றோகிதா(5) தமிழ்வேந்தன்(3) ஆகிய மருத்துவர் இசைவாணனின் மூன்று குழந்தைகளும் சாவடைகின்றனர்.

தமது கண்முன்னே தம் குழந்தைகள் துடித்துச் சாவதை இசைவாணனும் அவரது மனைவியும் மருத்துவப்பிரிவுப் போராளியுமான ரதியும் பார்க்கிறார்கள். ஆனால் எதையும் செய்ய முடியாத சூழல். மூன்று குழந்தைகளை கண்முன்னே பறி கொடுத்த தாய் தனது கணவனான இசைவாணன் முழுமையாக இருந்த கால்த் தொடையில் பெரியளவிலான முறிவுக் காயமடைந்ததையும் பார்க்கிறார்.

ஒரு பக்கம் மூன்று குழந்தைகளின் சாவு, மறுபக்கம் உயிருக்குப் போராடும் கணவன். என்ன செய்வது என்று அறியாத நிலையில் கத்திக் குழறும் பெண் மருத்துவப் போராளியை அருகில் இருந்தவர்களால் ஆற்றுகைப்படுத்த முடியவில்லை. அவரைத் தேற்ற வழியற்றுப் போனார்கள். எமது விடுதலை அமைப்பு சாவுகளைக் கண்டு அஞ்சியதில்லை. ஆனால் பெற்ற குழந்தைகள் மூவரும் ஒரே இடத்தில் சாவடைந்த கொடூரத்தை எந்த தாய் தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியும்?

குருதி பெருக்கெடுத்து ஓட, இசைவாணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். மீள் உயிர்ப்பித்தல் சிகிச்சை தரப்பட்டு, இசைவாணன் காப்பாற்றப் படுகிறார். இந்த நிலையில் இறுதி வரை இயங்கி வந்த அலன் இராணுவ மருத்துவமனை சிங்களத்தால் முற்றுகையிடப்படும் நிலை வந்தது. அதனால் அங்கிருந்து இயலுமானவரை காயப்பட்ட போராளிகள் எமது கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி கொண்டு செல்லப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக இசைவாணனும் கொண்டு செல்லப்படுகிறார். துணைவி ரதியும் தமிழீழ சுகாதார பரிசோதகரும் போராளியுமான தீபனும் இசைவாணனுடன் நிற்கிறார்கள். அருகில் காயமடைந்திருந்த மூத்த போராளி மருத்துவர் வாமனும் இருக்கின்றார்.

இசைவாணன் காயமடைந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில் முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருந்த குறுகிய நிலப்பரப்பு சிங்களப் படைகளால் கண்மூடித் தனமாக தாக்கப் படுகிறது. இந்த நிலையில் அடிக்கப்பட்டுக் கொண்டிருந்த எறிகணைத் தாக்குதல்களில் இருந்து தனது பிள்ளைகளைக் காத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துவர் வாமன் இவர்களை விட்டு வெளியேற முனைந்தார். அப்போது

“மச்சான் நிலைமை சிக்கலாகிவிட்டது. இனி என்னை இயக்கம் வைச்சு பராமரிக்கிறது என்பது பயங்கர சிக்கல் நிறைஞ்சது. ரதியும் பாவம் என்னை வைச்சு எப்பிடி பராமரிப்பா? அதை விட இப்படியே சிங்களவனிடம் சரணடையவும் என்னால் முடியாது. அவன் எங்களை நாயைச் சுடுவது போல சுட்டுத் தள்ளுவான். அப்பிடி அவனிடம் சாக நான் தயாராய் இல்ல… மச்சான் நான் குப்பி கடிக்கப்போறன்”

என்கிறார் இசைவாணன். சிங்களப் படைகளை அவர் சரியாக புரிந்திருந்தார். தனக்கு நடக்கப்போகும் அவலச்சாவை அவர் விரும்பவில்லை. தீர்க்கதர்சனமாக முடிவை எடுத்தார்.

அதைக் கேட்டு உடனடியாக மறுக்கிறார் வாமன்…

“இல்ல மச்சான் நான் சொல்லும் வரை அப்பிடி எதுவும் செய்யாத… நான் நிலைமையைப் பார்த்து சொல்லுறன். இப்ப எதுவும் முடிவெடுக்காத மச்சான்”

இசைவாணனின் தலையை வருடியபடி ஒற்றைக்காலில் நின்றுகொண்டு மருத்துவர் வாமன் கூறிய போது இசைவாணன் அவரது கூற்றை ஏற்றுக் கொள்கிறார். ஆனால்,

மச்சான் நீ போய் பிள்ளைகள் எப்பிடி என்று பார்த்திட்டு வாடா …

என வாமனை அனுப்புகிறார் இசைவாணன். மருத்துவர் வாமனும் தனது பிள்ளைகளை காத்திட வேண்டும் என்ற துடிப்போடு ஊன்றுகோலின் உதவியோடு வெளியேறி விட்டார்.

ரதி என்னோட பொய்க்கால ஒருக்கா எடுத்து வாறியா…”

மனைவியிடம் வேண்டுகிறார் இசைவாணன். ரதி அவரது பொய்க்காலை எடுப்பதற்காக வெளியில் செல்கிறார். அப்போது இசைவாணனின் அருகில் நின்ற போராளி தீபனை அருகில் அழைத்து.

“நான் குப்பி அடிக்கப்போறன் நான் சாகும் வரை ரதியை உள்ள விடாத…”

அண்ண வேண்டாம் அண்ண… பிளீஸ் வேண்டாம் அண்ண அண்ணி தாங்க மாட்டா அண்ண ஏற்கனவே பிள்ளைகளை இழந்து தனிய நிக்கிறா நீங்களும் இல்லை என்றால் அவா தாங்க மாட்டா அண்ண…

அவன் தடுக்கிறான் ஆனால் இசைவாணன் முடிவை மாற்றவில்லை.

தீபன் இது என்னோட இறுதிக் கட்டளை…
அண்ணியை உள்ள வர விடாத நான் செத்ததும் வரவிடு…

தீபன் பார்த்துக் கொண்டிருக்க இசைவாணனின் துடிப்பு அடங்கிப் போகிறது. பல ஆயிரம் உயிர்களுக்கு மீள் உயிர்ப்பூட்டிய மருத்துவ வேங்கை தான் கட்டி இருந்த நஞ்சுக் குப்பிக்குள் தனது வாழ்வை அடைத்துச் சென்று விட்டார். இரண்டு கால்களும் செயலியக்கத்தை இழந்த நிலையில் தன்னால் இயக்கத்துக்கும் தனது துணைவிக்கும் சிரமம் இருக்கக் கூடாது என்ற நினைப்பு அவரை இந்த முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது. இறுதி முடிவை அவர் உணர்ந்திருந்தார் எதிரியிடம் பிடிபட்டு கேவலச்சாவு சாவதை விட வீரனாக சாக எண்ணினார். அதனால் அவர் சுமந்து திரிந்த குப்பி அவரை உண்டு தின்றது.
இசைவாணன் என்ற பெரும் மருத்துவ மரம் சாய்ந்து எம் மண்ணுக்கு உரமாகி, விதையாகி என்றோ ஒருநாள் விடியப்போகும் சுதந்திர தமிழீழத்துக்காக காத்திருக்கிறது.

கவிமகன். இ
04.04.2018

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

முள்ளிவாய்க்காலில் வீரவரலாறான அன்பரசன்

அன்பரசன் (லோறன்ஸ்) அவர்கள் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறிலங்கா அரசு தமிழர்கள் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் காலத்திற்குக் காலம் ...

Leave a Reply