Home / மாமனிதர் / மாமனிதர் தில்லை ஜெயக்குமார்

மாமனிதர் தில்லை ஜெயக்குமார்

“கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டு, எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்துவிட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலிலே மூழ்கிக்கிடக்கிறது.

திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர், பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் அழகு. அவர் உதிரும் மந்திரப் புன்னகை அந்த அழகிய ஆளுமையை அணிசெய்தது. இதுவே, அனைவரையும் அவரை நோக்கிக் காந்தமாகக் கவர்ந்திழுத்தது.

இவர் ஒரு சிறந்த தேசப்பற்றாளர். அவுஸ்திரேலிய மண்ணில் தளமிட்டு நின்றபோதும், தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணை அவர் ஆழமாக நேசித்தார். சிங்கள அதிகார வர்க்கம் தனது இராணுவ அடக்குமுறைப் பாதையைக் கைவிட்டு, தமிழ் மக்களுக்கு என்றுமே ஒரு நீதியான தீர்வை வழங்கப்போவதில்லை என்பதை அவர் ஆழமாக உணர்ந்தவர்.

விடுதலையின் பாதையில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என்பதை அனுபவ ரீதியாகப் பட்டறிந்தவர். இந்தச் சிந்தனைத் தெளிவும் பட்டறிவும் அவரிடம் விடுதலைத் தீயைப் பற்ற வைத்தது. அவரும் எமது விடுதலை இயக்கத்தோடு ஒன்று சேர்ந்து, போராட்ட வாழ்வில் முழுமையாக மூழ்கினார்.

கடல்கள் தாண்டி, கண்டனங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூர தேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் இவர் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். அவுஸ்திரேலிய நாட்டின் அரசியல் போக்கையும் சட்ட நடைமுறைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, தமிழீழ தேச விடுதலைக்கான போராட்டப் பணிகளைச் சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் முன்னெடுத்தார்.

அங்கு வாழும் எம்மக்கள் மத்தியில் தமிழ்ப்பற்றையும் இனப்பற்றையும் ஊட்டிவளர்த்து, போராட்ட விழிப்புணர்வைத் தூண்டி, எமது போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களை அணிதிரட்டினார். அவுஸ்திரேலிய மண்ணில் தமிழ்க்குரல் வானொலி தோற்றம் பெறுவதற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பல்வேறு நாடுகளில் தனது கிளைகளைப் பரப்புவதற்கும் துணை நின்றவர். இவர் ஆரவாரமின்றி, அமைதியாக ஆற்றிய விடுதலைப்பணி என்றும் போற்றுதற்குரியவை.

திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். தேச விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. எமது நெஞ்சத்து நினைவலைகளில் அவர்கள் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்கள்.”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

…………………..
(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

மாமனிதர் நடராஜா ரவிராஜ்

நடராஜா ரவிராஜ் (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Leave a Reply