17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம்.
திரும்பும் இடமெங்கும் அழுகுரல்கள். விட்டுப் பிரிய மாட்டோம் என்ற உறுதிகள், எங்களோடு நீங்களும் வாங்கோ என்று கெஞ்சல்கள், எங்களால் வர முடியாது நாங்கள் சரணடைய மாட்டோம் நீங்கள் கவனமா போங்கோ என்று மறுதலிப்புக்கள், பிள்ளைகளுக்கான அறிவுரைகள் என நந்திக்கடல் மனித அவலத்தின் உச்சமாக நிற்கிறது. அங்கே தான் எனது குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாது தவித்துக் கொண்டிருந்தது.
அப்பா, அம்மா, அக்கா, நான் என்று வாழ்ந்த எம் வாழ்க்கை அன்று சின்னாபின்னமாகிப் போவதை என்றும் நினைத்ததில்லை. அப்பாவும், அக்காவும் துப்பாக்கிகளுடனும், நானும் அம்மாவும் ஓரிரண்டு உடைகள் அடங்கிய பையுடனும் விழியில் இருந்து அருவி பெருக்கெடுக்க தவித்து நின்றோம். அப்பா எங்களை உடனடியாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நகருமாறு உத்தரவிட்டார். தானும் அக்காவும் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதி தந்தார். மீண்டும் உங்களை நாங்கள் சந்திப்போம் என்றும் வாக்குத் தந்தார்.
குருதியால் தோய்ந்து கிடந்த அந்த நந்திக்கடலடி மண்ணில், அன்று என் அன்பு அப்பாவையும் அக்காவையும் பிரிந்து வந்தோம். விரைவில் வந்து சேர்வோம் என்று சொல்லித் தான் எம்மிருவரையும் வழியனுப்பினார்கள் அவர்கள். ஆனால் இந்தனை ஆண்டுகள் எம் பிரிவு நிலைக்கும் என்று நாம் எண்ணவில்லை. நினைக்க முடியாத வலிகளோடு எங்களின் பிரிவு முடிவிலியாய் தொடர்கிறது.
எல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைகள் தான் எனக்கும் இருக்கிறது. என் அப்பாவுடன் இருக்க வேண்டும், அவரின் வழிகாட்டுதலில் இன்னும் இன்னும் வளர வேண்டும் என்று. எனது அப்பாவின் அன்பு மிக ஆழமானது; அளவிட முடியாதது; அப்பா கல்வியாக இருக்கட்டும், விளையாட்டாக இருக்கட்டும் எல்லாத்திலும் முதன்மை பெறவேண்டும் என்று தட்டிக் கொடுப்பார். சிறு வயதில் சுவரில் கிறுக்கியதைக் கூட பார்த்து ரசிப்பார். அந்த அழகிய நினைவுகள் இன்னும் எம் மனதில் அழியாத சித்திரமாய் இருக்கின்றது.
எம்மை அம்மாவும் அப்பாவும் எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தலைவர் மாமாவையும் மற்றும் எம் மாவீரர்களின் தியாகங்களையும் கூறித்தான் வளர்த்தார்கள். தாயக விடுதலை ஏன் ஆரம்பித்தது? எதற்காக எம் மாவீர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்கள்? என்பதையும் தான் சென்ற பல கள அனுபவங்களையும் அப்பா எம்மிடம் அடிக்கடி பகிர்த்து கொள்வார். அப்பா அவர் இள வயதில் விடுதலைக்காக சென்றவர். அதைப் போலவே அக்காவும் தலைவர் மாமா வழியில் இறுதிக்களத்தில் போராட போகிறேன் என்று அவர்களுடனே சென்றார். அப்பாவும், அக்காவும் ஒன்றாகத் தான் எம்மை விட்டுப் பிரிந்தார்கள். இன்றுவரை அவர்களை காணாமல் தேடுகின்றோம். ஒன்றாக இருத்த உறவுகளை பிரிவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். அந்த உணர்வும், வேதனையும் எதிரிக்கு கூட வரக்கூடாது என்பது தான் என் மனதில் நிறைந்து கிடக்கிறது.
அவ்வாறு தொலைத்த நாட்கள் மீண்டும் வராது என்று நினைக்கும் போது மனமே வெடிக்கின்றது. அப்பா உங்களை காணும் அந்த நாளை பல தடவை கற்பனை செய்து பாத்திருக்கிறேன். கண்டவுடன் என்னவெல்லாம் பேச வேண்டும், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என பெரிய அட்டவணையையே கற்பனையில் நினைத்து வைத்திருக்கிறேன். உங்களிடம் பல விடயங்கள், பல கதைகள் கூற வேண்டும் ; அக்காவுடன் நான் பல இடங்கள் ஒன்றாக போகவேண்டும்; மீண்டும் எம் மண்ணில் நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். நீங்கள் நேசித்த புலிகளின்குரல் மீண்டும் எங்கள் தேசக் காற்றோடு கலந்து வரவேண்டும். அதை உங்களருகில் இருந்து நாம் கேட்க வேண்டும்.
அப்பா உங்களை விட்டு நாம் பிரியும் போது நீங்கள் கூறியவற்றைத் தினம் தினம் நினைக்கின்றேன். என்னை கட்டியணைத்து முத்தம் தந்து பல விடயங்களைக் கூறி அனுப்பினீர்கள். அவ்விடயங்களில் பலவற்றை நான் நிறைவேற்றி இருக்கிறேன் என்று நம்புகிறேன் அப்பா. நாங்கள் என்றோ ஓர் நாள் காண்போம். அந்த நாளில் நிச்சயமாக உங்கள் மனதை மகிழ்விக்கக் கூடியதான வெற்றிச் செய்திகளை நான் உங்களுக்கு கூறுவேன். அப்பா நீங்கள் எனக்கு அப்பாவாக கிடைத்தது நான் செய்த பேறு. உங்களின் மகளாக நான் பிறந்ததையிட்டு பெருமைப்படுகின்றேன்.
என்னை தன் நம்பிக்கையுள்ளவளாக சிறுவயதில் இருந்தே தற்காப்புக்கலை, விளையாட்டு, கால்பந்து போன்றவற்றை பழக்கி வளர்த்துள்ளீர்கள். அவ்வளர்ப்பு நிச்சயம் என்னை சிறந்தவளாக்கி இருக்கும் என்றே நம்புகிறேன். அப்பா நீங்கள் வளர்த்த உங்களின் பிள்ளைகள் மட்டுமல்லாது பல போராளிகளும், உங்களுக்கு மிக நெருக்கமானவர்களும் உங்களைப் பற்றி அடிக்கடி பெருமையாக கூறுவார்கள். அப்போதெல்லாம் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தினமும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றேன் அப்பா.
விடுதலைப்பாடல்கள் கேட்கும் போது, புலிகளின் குரலும் உங்கள் ஞபகங்களும் தான் என்னை வாட்டுகின்றது. நாங்கள் உங்களுடன் வாழ்த்த காலங்கள் குறைவு. உங்கள் விடுதலை பயணத்தில் எமக்காக சில மணிநேரங்களை செலவிட்டுள்ளீர்கள். அந்த காலங்கள் எமக்கு மிகவும் மகிழ்வான தருணங்கள். ஒற்றைக்காலுடன் இருந்தாலும் உங்கள் செயற்பாடுகள் வேறுபட்டதில்லை. வேகமும் குறைந்ததில்லை.
பணியில் கடுமையான நிலையையும், பாசத்தில் மற்றவர்களை விட மிக உயரமும் கொண்ட உங்களை எப்படி அப்பா மறக்க முடியும். அப்பா எங்கள் வீட்டில் நின்ற மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆட்டிய நாள்கள், உங்கள் மடிமீது அமர்ந்து உணவருத்திய நாள்கள், அன்று நாம் நால்வர் ஒன்றாக வாழ்ந்த அழகிய காலம் மீண்டும் வருமா? காத்திருக்கின்றேன் நீங்கள் வரும் நாளுக்காக… அப்பா… அக்கா… எப்போது வருவீர்கள் …?
புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது.
‘ஈழமுரசு’ நாளிதழை புலிகள் பொறுப்பெடுத்த சில நாட்களில் நடந்த சம்பவம் இது. பாரவூர்தியொன்றில் காகிததாதிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை இறக்குவதற்கான தொழிலாளர்கள் வரவில்லை, எனவே அச்சகப் பணியில் ஈடுபட்டிருப்போரை அவற்றை இறக்குமாறு முகாமையாளர் சொன்னார்.
அவர்களில் ‘குட்டித் தலைவன்’ போல இருந்த ஒரு தொழிலாளி ‘நாங்கள் இந்த வேலையெல்லாம் செய்வதற்கு வரவில்லை’ என்று கூறி மறுப்புத் தெரிவித்தார். உடனே ஜவான் ‘பிரச்சினையில்லை, நாங்கள் புலிகள் எந்த வேலையையும் எந்த நேரத்திலும் செய்யத் தயார்’ என்று கூறி விட்டுத் தானே அவற்றைச் சுமந்து கொண்டு போய் களஞ்சியத்தில் அடுக்கினார்.
இந்த விடயம் சக தொழிலாளர்களுக்குத் தெரிய வரவே அவர்கள் உடனே ஓடி வந்து தாங்கள் இறக்குவதாக சொல்லி விட்டு இறக்கத் தொடங்கினர். இப்பணி முடிந்தாலும் ‘வெளியில் இருந்து வருவோருக்கு எவ்வளவு கொடுப்பனவு வழங்குவீர்களோ அதனை இந்த தொழிலாளர்களுக்கு வழங்குங்கள்.” என்று முகாமையாளரை வேண்டிக் கொண்டார் ஜவான்.
இது தான் ஜவான் எந்த வேலையையும் எந்த நேரத்திலும் செய்யத் தயார். விடுதலைக்கான பணியில் ஈடுபட வந்த எமக்கு எதுவும் ஒரு பொருட்டில்லை என்பது அவரது கருத்து. அந்தக் காலத்தில் ஒவ்வொரு எழுத்தாகப் பொறுக்கிக் கோர்த்துத்தான் நாளிதழ்கள் வெளிவந்தன ஈழமுரசில் வெளியாகும் படங்களுக்கான புளொக்குகளை செய்யும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே இந்தத் தொழிலைச் செய்து வந்த புகைப்பட நிலையமொன்றில் இதனை பழகியிருந்தார் ஜவான். கிட்டு குடுப்பத்தினர், அச்சகத் தொழில் தான் செய்து வந்தனர். எனவே அச்சகம் தொடர்பான வேலைகள் அத்துபடி அவர் ஆயத்தங்களில் ஒன்றுதான் புளொக் செய்யும் வேலையைப் பழக ஜவானை அனுப்பியமை, இந்த வேலையுடன் தன்னை மட்டுப்படுத்தவில்லை ஜவான். தேவையான போதெல்லாம் களமாடி வந்தார்.
யாழ். பண்ணையிலுள்ள பொலிஸ் விடுதிக்கு பாதுகாப்பாக அமைக்கப்கட்டிருந்த இராணுவ முகாம் மீதான தாக்குதலில் ஜவானின் பங்கு முக்கியமானது. முதலில் முகாமுக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட அணியில் அவரும் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர் அடுத்த நாள் ஈழமுரசு ஆசிரியர் கோபு ஐயா இது சம்பந்தமாக ஜவானுடன் உரையாடினார். அடுத்தநாள் வெளிவந்த ஈழமுரசின் தலைப்பு ‘ஐந்து ஏ.கேயுடன் முகாமைக் கைப்பற்றினோம். இளம்புலி ஜவான் தகவலாக மொத்தத்தில் களமாடும் போராளி, யுத்தகள நிருபர், புளொக், தயாரிப்பாளர், நாட்டாமை (இந்தியாவில் இந்தச் சொல்லுக்கு அர்த்தம் வேறு) மற்றும் இன்னோரன்ன பணிகளைப் புரியும் ஒருவர்.
அங்குள்ள பணியாளர்களுடன் அவர் பழகிய விதங்களில் தங்களில் ஒருவர் என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. அதனால்தான் 1987 ஒக்ரோபர் 10 ஆம் நாள் கடமையிலிருந்த போது கைது செய்யப்பட்டோரில் எவரும் ஜவானைக் காட்டிக் கொடுக்க எண்ணவில்லை. அந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குக் குண்டு வைத்துத் தகர்த்த பின் அங்கிருந்த அனைவரையும் கைது செய்தனர். “ஜனநாயக’ நாடாம் இந்தியாவிலிருந்து வந்த படையினர் இவ்வாறு கைது செய்யப்பட்டோரில் மற்றொருவர் உதவிஆசிரியர் சர்வேந்திரா (தற்போது கலாநிதி பட்டம் பெற்று நோர்வேயில் வசித்து வரும் இவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் பயின்றவர்) திலீபனின் உண்ணாவிரத நாட்களிலும் ஈழமுரசு உண்ணவிரத களம் இதற்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் என புகைப்படக் கருவியுடன் இரவு பகலாகத் திரிந்து இவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை.
கல்வியங்காட்டுக்கும் முள்ளியவளைக்குமான உறவு ஆழமானது. உமையாள்புரத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற சமர் முக்கியமானது.எதிர்பாரத விதமாக முல்லைத்தீவிலிருந்து வந்த கவச வாகனத்துடனும் புலிகள் போராட வேண்டியிருந்தது. இந்தச் சமர்தான் கிட்டுவின் ஆற்றலை வெளிப்படுத்தியது. அவரிடம் மட்டுமே ஜி3 துப்பாக்கி இருந்தது. ஒரு நீண்ட சமருக்குத் தேவையான ஆயுதங்கள் இருக்கவில்லை. மூன்று பகுதியினராகப் பிரிந்து பின்வாங்க வேண்டியிருந்தது. ஒரு மோட்டார் வாகனமொன்றில் செல்லக்கிளி அம்மான், அருணா, ராமு, ரஞ்சன், முதலானோர் முள்ளியவளைக்குச் சென்றனர்.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே செல்லக்கிளி அம்மானின் தொடர்பு ஜவானுக்குக் கிடைத்தது. வன்னி பகுதிகளில் அவர் களமாடி வந்தார். அவ்வாறான களங்களில் ஒன்று கொக்காவில் பகுதியில் படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல்; யாழ்.குடா நாட்டில் இந்தியப் படையினருக்கு சிம்மசொப்பனமாக விளங்கியோரில் ஜவானும் ஒருவர். அக்காலத்தில் இவர் மேற்கொண்ட தாக்குதல்களின் பட்டியல் மிக நீண்டது. சுற்றி வளைப்புக்களில் இவரையும் ஏனைய போராளிகளையும் மக்கள் காப்பாற்றிய விதம் எங்கள் போராட்டத்தின் வலிமைக்குச் சான்றாகும்.
யாழ். ஹோட்டல் பரடைஸ்க்கு வெளியே (கஸ்தூரியார் வீதி) நின்ற இந்தியப் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி வருகையில் துவிச்சக்கரவண்டியில் பாடசாலை சீருடையுடன் வந்த மாணவன் ஒருவன் ‘ஜவானண்ணை ஏறுங்கோ’ என்று அழைத்து பல ஒழுங்கைகளுக்குள்ளால் கொண்டு சென்று கோண்டாவிலில் விட்டார். அந்த மாணவன் யார் என்று கேட்கும் நிலையில் சூழல் இருக்கவில்லை. அவனை அதன் பிறகு ஒருபோதும் காணவில்லை என்றார் அவர். நல்லூர் பகுதியொன்றில் இந்தியப் படையினரின் சுற்றி வளைப்பில் இவரையும் மேலும் சில போராளிகளையும் ஒரு குடும்பத்தினர் காப்பாற்றினர் என சிரித்திரனில் வெளியான கட்டுரையொன்று வெளிப்படுத்தியது.
குரு(தி)ஷேத்திரம் என்ற தலைப்பில் வெளியான இக்கட்டுரை புதுவிதி பத்திரிகையில் மறு பிரசுரமாகியயிருந்தது. யாழ். கோட்டை முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவர் காலை இழந்தார். எனினும் இவரது செயற்பாடுகளில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை. ‘புலிகளின் குரல்’ பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டதும் இவரது ஆளுமை நன்றாகத் துலங்கியது. அப்பிரிவில் பணியாற்றிய அனைவருமே தாங்களும் போராளிகளே என்று உணரத்தக்க வகையில் அவர்களை உருவாக்கினார்.
உலகில் எந்த ஒரு வானொலியுமே யுத்தத்தை நேரடி ஒலிபரப்பு செய்ததில்லை. ஆனால் புலிகளின் குரல் இப்பணியைச் செய்தது என்பதே இதற்கு உதாரணம். ஆனையிறவு முகாமை வீழ்த்தவென கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட போராளிகள் இத்தாவிலில் நிலையெடுத்திருந்தனர். அவர்களை அங்கிருந்து அகற்றப் பலமுறை தனது உச்சக்கட்டப் பலத்தையும் பயன்படுத்தியது அரசு. பிரிகேடியர் பால்ராஜின் தலைமையில் மிக உக்கிரமாகச் செயற்பட்டனர். போராளிகள் இந்த இடத்துக்கு செல்வது மிகச் சிரமம். நீரேரியூடாகவும் செல்ல வேண்டியிருக்கும். அடிக்கடி எறிகணை விழுந்து வெடிக்கும். அவ்வாறான சூழலில் ஈழநாதம் பொறுப்பாளர் தினே{ம் நானும் அங்குள்ள நிலைமைகளை கண்டு வாசகர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் அங்கு சென்றோம்.
அப்போதுதான் எமக்குத் தெரிந்தது எங்களுக்கு முன்னரே ஜவான் அங்கு வந்து சென்று விட்டார் என்று இது குறித்து அங்கிருந்த போராளி ஒருவர் தெரிவிக்கையில், வழக்கமாக இந்த பொக்சுக்குள் இருந்துதான் ஸ்டெச்சரில் ஆட்களை வெளியில் கொண்டு செல்வோம். காயப்படும் எவரையும் வாகனத்தில் கொண்டு செல்ல முடியாது. தண்ணீருக்குள்ளால் கொண்டு செல்ல ஸ்டெச்சரையே பயன்படுத்துவோம். வழக்கமான இந்த நடைமுறைக்கு மாறாக வெளியில் இருந்து ஒருவரை இங்கு ஸ்டெச்சரில் கொண்டு வந்தார்கள்.இவ்வாறு கொண்டு வரப்படுபவர் யார் எனப் பார்த்தால் அது ஜவான் அண்ணாதான்.
கண்டிப்பாக உள்ளே வந்து பார்த்து நிலைமைகளை அறிந்து நேர்காணல்களையும் எடுக்க வேண்டும் என பால்ராஜ் அண்ணரிடம் சொல்லி விட்டாராம். அதனால் ஜவான் அண்ணாவை இப்படிக் கொண்டு வர வேண்டியதாயிற்று எனக்குறிப்பிட்டார். வெறுமனே கேள்விச் செவியர்களாக இருந்து கிடைக்கும் ஒரு சிறு துருப்புக்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து வரலாற்றைத் திரிக்கும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களை இன்று காண்கிறோம்.
அதனால் தனது உயிரைப் பணயம் வைத்து செய்திகளை நம்பகரமாகக் கொடுக்க வேண்டுமென்பதில் எவ்வளவு அக்கறையாக இருந்துள்ளார். என்பதை அறியும்போது தலைவனின் வளர்ப்பு என்பதற்கு அப்பாலும் ஒரு விடயமுண்டு. ஈழமுரசில் கோபு ஐயாவுடன் ஜவான் பழகிய விதம் அவரிடமிருந்து கற்றுக்கொண்டவை என்பன நினைவுக்கு வருகின்றன.
மகாபாரதப் போரில் அப்பன் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாகக் களத்தில் நின்றார்கள் என்று அறிந்தோம். அர்ச்சுனன் – அபிமன்யு, பீமன்-கடோத்கஜன், துரோணர்-அஸ்வத்தாமா இவ்வாறான சம்பவங்களை கதைகளில்தான் படிக்க முடியும். வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், கணக்காய்வாளர்கள், பொறியியலாளர்கள் எனப் பல துறையினரும் தமது பிள்ளைகளை அதேதுறையில் வல்லவர்களாக உருவாக்குவார்கள். அரசியல்வாதிகள் தமது வாரிசுகள் வசம் தமது கட்சி போய்விட வேண்டுமென்பதில் அக்கறையாக இருப்பார்கள். நேரு – இந்திரா, ராஜீவ் – ராகுல் (இடையில் ராஜீவ் மனைவி சோனியா), கருணாநிதி, ஸ்டாலின் – கனிமொழி, சிறிமா- சந்திரிகா – அநுரா, மாவை – கலையரசன் என்ற வரிசையைக் கண்டுள்ளோம். இதனால் எந்த விடுதலைப் போராட்டத்திலும் தந்தையும் பிள்ளைகளும் சமகாலத்தில் களத்தில் நின்றதாக நாம் அறியோம். பிரபாகரனே இதனைத் தொடக்கி வைத்தார். (மாவீரரின் பிள்ளைகளும் களத்தில் நின்றனர்) புத்திர சோகத்தை அனுபவித்த வரலாறும் ஈழப்போராட்ட வரலாற்றில் தலைவர் பொட்டு, இன்பம் உட்பட பலருக்கும் உண்டு. காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் பேபி அண்ணாவும் (இளங்குமரன்) மகளும், பாலகுமாரனும் மகனும், ஜவானும் மகளும் உள்ளனர்.
காக்கா அண்ணை (மு.மனோகர்)


