Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / உணர்வு மிக்க ஊடகவியலாளர் கப்டன் செல்லப்பா

உணர்வு மிக்க ஊடகவியலாளர் கப்டன் செல்லப்பா

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும். இதில் சிலர் தங்களுடைய அர்பணிப்போடமைந்த முழுமையான பணியைச் செய்திருக்கின்றார்கள். இந்த வகையில் பார்க்கின்றபோது மட்டக்களப்பில் 1980 களில் பிரபல்யமான பத்திரிகையாளர்களில் ஒருவரான நித்தியானந்தன் அவர்களையும் முதன்மையாகக் குறிப்பிட முடியும். காலத்தால் அழியாத காவிநாயகர்கள் வரிசையில் மட்டு மண்ணில் பத்திரிகையாளானாக மக்களுக்கு அறிமுகமான நித்தியை மக்கள் சேவையாளனாக, விடுதலையை நேசித்த எழுத்தளானாக, ஒரு போராளியாக, ஒரு மாவீரானாக எமது மக்கள் கண்டுகொண்டது வரலாற்றுப் பதிவின் சிறப்பம்சமாகும். மட்டு மண் போராளியாக, சட்டவாளரை, பொறியிலாளரை, மருத்துவரை, ஆசிரியர்களை மற்றும் பொதுப்பணியாளர்களை பெற்று இழந்திருக்கின்றது, இந்த வரிசையில் ஒரு பத்திரிகையாளன் போராளியாகி மாவீரனாக வீழ்ந்த வரலாற்றுப்பதவில் நித்தியின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கின்றது. ஓர் இனத்தின் எழுச்சி எப்போதும் பாவலர்கள், எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் சார்ந்ததாக இருக்கும்.

இவர்களால் ஒரு இனத்தின் புரட்சிகர மாற்றத்தையும் உண்டுபண்ண முடியும் என்பது வரலாற்றின் ஒரு பதிவாகும். எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இவர்களுடைய பங்கு இல்லாமல் இருந்ததில்லை என்றாலும் தமிமீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இவ்வகையான எல்லோருடைய பங்கும் இருந்ததென்றும் குறிப்பிட முடியவில்லை. எண்ணற்ற இவ்வகையானவர்கள் எம் மத்தியில் வாழ்த்த போதும், எல்லோரும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கைகோர்த்துச் செல்லவில்லை. காலத்தின் மாற்றமும், எமது இனத்தின் பொருளாதாரப் பண்பாடும் சிலரை போராட்டத்திலிருந்து தள்ளியே வைத்திருந்தது என்பது உண்மையான ஒன்றாகும். உணர்ச்சிப் பாவலன் காசி ஆனந்தன் அவர்கள் தனது கவிதைகளால் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பினார் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

இவர்களில் தங்களை இழந்து, தங்கள் குடும்ப சுமைகளைத் துறந்து, வாழ்க்கையில் வசந்தத்தை எமது எதிர்காலச் சந்ததி பெறவேண்டுமென்று தாய் நாட்டின் விடுதலையை நேசித்தவர்களில் நித்தி அவர்களும் ஒருவராவார். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வடிவம் போர்க்கருவிகளைப் பயன்படுத்த தொடங்கிய போராட்டமாக மாறிய காலத்தில் மட்டக்களப்பில் ஆரம்பகாலப் போராளிகளின் செயல்பாடுகளுக்கு பத்திரிகைத் துறைமூலம் தான் ஆற்ற வேண்டிய பங்கை முழுமையாக நித்தி அவர்கள் நிறைவு செய்திருந்தார். மக்களுக்கான சமூகக் பணியையும், அதனோடு இணைந்ததான விடுதலைப் பணியையும் தான் சார்ந்த பத்திரிகை ஊடாக மிகவும் தீவிரமாகவும் செய்து வந்திருந்தார். மட்டக்களப்பில் ஒரு பத்திரிகையாளன் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக தன்னை இணைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டது முன்மாதிரியான முதல் செயல் என்று கூறமுடிகின்றது. மட்டக்களப்புத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு அதன்வழியில் செயல்படத்தொடங்கிய காலம் 1956 ம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகியது.

அதற்கு முன்பு படித்தவர்கள், பணக்காரர்கள், அதிகாரமிக்கவர்கள் என்ற சுயநலப்போர்வையில் முழ்கிக்கிடந்த மட்டக்களப்பு தமிழ் சமூகத்தை 1956 ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் புரட்சி புரட்டிப் போட்டதனால் தமிழ்மக்களின் விடுதலையோடு இணைந்ததாக அரசியல் மாறியது. அந்த அரசியலினுடாக விடுதலைப் பயணத்தில் நித்தியைப் போன்றவர்களும் கால்பதித்தனர். மடக்களப்பு மாநகரப் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மஞ்சந்தொடுவாய் ஊரைச் சேர்ந்த நித்தி அவர்கள் 25 .05 .1957 ம் ஆண்டு அன்று பிறந்தார். இவருடைய சொந்தப் பெயர் இராசையா நித்தியானந்தன் ஆகும்.எல்லோராலும் நித்தி என்று அழைக்கப்பட்டார். மட்டக்களப்பில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களையும், மக்களுக்கெதிரான அனைத்து ஒடுக்கு முறைகளையும் வெளி உலகிற்கு தெரியும் வகையில் கொண்டு வந்ததன் மூலம் துணிந்து செயல்பட்ட பத்திரிக்கையாளனாக இனம் காணப்பட்டார். தொழிலாக மாத்திரம் கருதாமல் மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்பட்ட பத்திரிகையாளர்களில் நித்தியும் ஒருவராவார். 1983 ம் ஆண்டுக்குப் பிறகு மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது. எவரும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் அம்மக்கள் குழு அமைந்திருந்தது.

இம் மக்கள் குழுவிலும் நித்தி அவர்களின் பங்கு மிகையாக இருந்தது என்றும், எதற்கும் அஞ்சாது துணிந்து கருத்துக்களைத் தெரிவிக்கும் நித்தி தேசிய விடுதலையில் மிகவும் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தார். சொந்தநாடு இழக்கப்பட்டு, அடிமைநிலையில் தாழ்ந்து கிடக்கின்ற தமிழினம் விழித்தெழுந்து, வீரத்துடன் போராடி விடுதலை பெறவேண்டும் என்று தமிழ் இளைஞர்கள் உறுதியாக களத்தில் நின்ற காலத்தில் எழுதுகோல் ஒன்றுடன் எழுந்த தமிழ்த் தேசியத்தின் பத்திரிகையாளராக நித்தி அவர்களை உறுதியாக இன்று பதிவு செய்யமுடியும். சிங்கள ஆக்கிரமிப்புக்கெதிராக போராடிக் கொண்டிருந்த எம்மக்கள் அயல் நாடான இந்தியாவின் படைகளுக்கெதிராக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் களத்தில் நின்ற வேளையில் இந்தியப் படையினரின் தமிழீழம் மீதானஆக்கிரமிப்பு எமது தேசிய விடுதலை இயக்கத்தை அவர்களுக்கெதிராக போராடும் நிலைக்கு காலம் தள்ளியது. இவ்வுலகில் வாழ்கின்ற மனிதஇனம் ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசி, பிரித்துப்பார்க்கக் கூடிய பண்பாடுகளை தம்வாழ்வில் வைத்திருந்தும் விட்டுக்கொடுக்கும் மனமில்லாமல் மனித இனத்தையே மனிதர்களாகியவர்கள் அடிமைப்படுத்த எண்ணுகின்ற போது விடுதலையென்பது வேண்டியதொன்றாகின்றது.

மனிதனேயே மனிதன் எதிர்த்துப் போராடுமளவுக்கு இச்செயல் அமைந்து விடுகின்றது. அடிமைப்படுத்தப்படுகின்ற ஓர் இனம் விடுதலை பெறுவதற்கு எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். உலகில் எங்கு வாழ்ந்தாலும் மனிதஇனம் ஏற்றத் தாழ்வில்லாமல் சமனாக வாழும் நிலைக்கு அங்கீகாரம் வழங்க படவேண்டும். இவ்வாறான ஓர் நிலைதான் எமது தாய் நாட்டிலும் ஏற்பட்டது. எமக்கு விடுதலை வேண்டும் என்று சொல்லிக் கொண்டுடிருக்க முடியும். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு போராடமுற்படுபவர்தான் தலைவராகின்றார். அர்பணிப்புகளுக்கு மத்தியில் உருவாகும் தலைவர்தான் அவ்வினத்தினால் தேசியத் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியபோது எமது மத்தியிலிருந்து பல இயக்கங்கள் உருவாகின. ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு கொள்கையோடும், ஒவ்வொரு இலக்கோடும் செயல்பட்டதனால் உறுதியான அடிப்படையில் எமது விடுதலைப் போராட்டத்தை நகர்த்த முடியாத நிலையிலிருந்தன. இதனால் கொள்கைப்பிடிப்பற்ற, சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நாற்காலிகளுக்காக, இதனைப் பயன்படுத்த எண்ணிய அமைப்புக்கள் தமிழீழ மண்ணில் செயல்படுவது எமது இலட்சியப் பயணத்தில் இடையூறுகள் ஏற்படும் என்பதால் அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு அனைத்துக் தமிழ்மக்களும் தேசிய விடுதலை இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் கேட்கப்பட்டிருந்தனர்.

ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு உட்பட ஏனைய அமைப்புக்களிலிருந்தும் குறிப்பிட்ட இளைஞர்கள் இயக்கத்துடன் இணைந்து கொண்டனர். இந்தியப் படையினரின் தமிழீழ வருகையோடு மாறுபட்ட கொள்கையோடு இயங்கியவர்களும் ஒட்டுக் குழுக்களாக தமிழீழ மண்ணில் கால்பதித்தனர். இந்திய, ஸ்ரீலங்கா அரசுகளின் கூட்டுச்சதிக்கு உடந்தையாக செயல்படுத்துவதற்கும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்கும் இவர்களைப் போன்றவர்களைப் பயன்படுத்த இரண்டு அரசுகளும் தொடங்கியது. இதனால் தமிழீழ மண்ணில், தமிழ் மக்களின் தேசிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட அறிவாற்றல் மிக்கவர்களை அழிக்க வேண்டும் என்ற முதல் திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினர்.

இவ்வரிசையில் மட்டக்களப்பில் மக்கள் குழுவில் செயல்பட்ட வண. பிதா சந்திரா பெர்னாண்டோ, தமிழர் ஆசிரியசங்கத் தலைவர் டி.எஸ். கே வணசிங்க, அதிபர் கணபதிப்பிள்ளை போன்றோர் இந்தியப் படையினரின் ஆதரவில் அவர்களின் அரவணைப்பில் ஒட்டுக்குழுக்களாக செயல்பட்டவர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மேற்கூறப்பட்டவர்களின் அளப்பரிய சேவையை மட்டக்களப்புத் தமிழ் மக்கள் இழந்து தவித்தனர். 1988 ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ மண்ணில் தலைவிரித்தாடிய படுகொலைத்தாக்குதல்களுக்கு பல அறிவாற்றல் மிக்கவர்கள் பலியாகினர். உரிமைக்காக, உரத்து ஒலிக்கும் குரல்கள் நசுக்கப்பட்டன. இவ்வரிசையில் மட்டக்களப்பு மாவட்ட வீரகேசரி பத்திரிகையின் நிருபரான நித்தி அவர்களுக்கெதிராகவும் படுகொலை முயற்சியொன்று மடடக்களப்பு பயனியர் வீதியில் அரங்கேறியது. நித்தி அவர்களின் தேசப்பற்று, மக்களுக்கான சமூகப்பணி ஆகியவற்றோடு இணைந்த பத்திரிகைத் துறைச் செயல்பாடு இந்தியப் படையினருக்கும் அவர்களோடு இணைந்திருந்த தேசத்துரோகிகளுக்கும் பெரும் சவாலாக இருந்தது.

இதனால் நித்தி அவர்களை படுகொலை செய்வதற்கு முயற்சி எடுத்தனர். 1988 .08 .15 நாள் அன்று நித்தி மிதி வண்டியில் பயனியர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது.அவரை வழிமறித்த தமிழீழ தேசத்துரோகிகள் அவரைத்தாக்கி அவரின் ஆண்ணுறுப்பில் அசிட் திரவத்தை ஊற்றி, குரல்வளையை அறுத்து சாவடைந்து விட்டார் என்ற நிலையில் விட்டுச் சென்றனர். வீதியில் சென்ற பாதசாரிகளின் அவதானத்தில் நித்தி அவர்களுக்கு உயிர் இருப்பது அசைவின் மூலம் தெரிய வந்ததனால் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நித்தி அவர்களின் பத்திரிகைத் துறை நண்பர்களுக்கு சம்பவம் தெரியவந்தவுடன் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பது மேலும் ஆபத்தை உண்டுபண்ணும் என்பதால் தமது செல்வாக்கினைப் பயன்படுத்தி கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றியதனால் நித்தி அவர்கள் உயிர் பிழைத்தார். அதன் பின்பு தனது பத்திரிகைத்துறை நண்பர் ஒருவருடன் கொழும்பில் தங்கி இருந்தார்.

தமிழ் மக்களையும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஆழமாக நேசித்த நித்தி அவர்கள் மட்டக்களப்பில் தனக்கு நேர்ந்துள்ள ஆபத்தை உணர்ந்ததனால் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக தன்னை இணைத்துகொள்ள முடிவு எடுத்தார். இச் சந்தர்பத்தில் கொழும்பில் நித்தி அவர்களைச் சந்தித்த ஒருவர் எமக்கு தெரிவித்த கருத்தின் பிரகாரம் பார்க்கின்ற போது, ஒரு தெளிவான நிலையில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்தது எமக்கு தெரியவந்தது. 1988 ம் ஆண்டு பிற்பகுதியில் மட்டக்களப்பு விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போதைய பொலநறுவ மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழரின் பூர்வீக சொந்தநிலமான மன்னம்பிட்டி என்று அழைக்கப்படுகின்ற தம்பன்கடவை வட்டத்திற்குட்பட பகுதியில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பிரதான முகாம் அமைந்திருந்தது. வெலிக்கந்தைக்கு கிழக்கே திருகோணமடு என்ற இடத்தில் தங்கியிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை நித்தி அவர்களும், சரவணபவான் அவர்களும் (இவர் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக செயல்பட்ட மேஜர்.பிரான்சிஸ் அவர்களின் அண்ணன்) சந்தித்து 1989 ம் ஆண்டு முற்பகுதியில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதன் பின்பு நித்தி அவர்களும், சரவணபவான் அவர்களும் கொழும்பு நகரில் தேசிய விடுதலை இயக்கத்திற்கு தேவையான சில வேலைத்திட்டங்களை மேற்கொண்டனர். இக்காலத்தில் சரவணபவான் அவர்களும் மேலும் இருவரும் ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டனர். அவர்கள் பற்றி எந்தவித தகவலும் அறிய முடியாததனால் சரவணாபவான் வீரச் சாவடைந்து விட்டார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. விடுதலைப் போராட்டத்தின் வெற்றி நான்கு வருடங்களும் செல்லலாம், நாற்பது வருடங்களும் செல்லலாம், அல்லது அடுத்த தலைமுறைக்கும் நகர்த்தப்படலாம் என்று எமது தேசியத்தலைவர் கூறியதற்கிணங்க விடுதலைப் பயணத்தில் தொடந்தவர்களும் உண்டு, தடம் புரண்டவர்களும் உண்டு என்பதற்கமைய மட்டக்களப்பில் தனது இறுதிக்காலம் வரை பயணத்தில் தொடந்தவர்தான் கப்டன் நித்தி அவர்களாகும். இந்திய படையினர் தமிழீழ மண்ணைவிட்டு வெளியேறிய பின்பு மட்டக்களப்பு இந்துக்கல்லுரி மைதானத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய மாபெரும் கூட்டத்திற்கு நித்தி அவர்கள் ஒரு போராளியாக தலைமை தாங்கினார். 1990 ம் ஆண்டு முற்பகுதியில் தமிழீழமெங்கும் மக்கள் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்தனர். தமக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்ற உணர்வில் உலாவினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது காவல் தெய்வங்களாக ஏற்றனர்.

தமிழீழமெங்கும் விடுதலை முழக்கம் ஒலித்தன. விடுதலைப்புலிகள் இயக்கம் தமது நிருவாகப் பணிகளை எங்கும் செய்யத்தொடங்கினர். நித்தி அவர்கள் “கொண்டல்” என்னும் மாதப் பத்திரிகையை வெளியிடத் தொடங்கினார். இப் பத்திரிகை மட்டக்களப்பில் தமிழ் மக்களின் தேசிய பத்திரிகையாக விளங்கியது. எழுது கோலுடன் தமிழ் தேசியத்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கியிருந்த நித்தி அவர்கள் ஒருகையில் எழுதுகோலும் அடுத்தகையில் விடுதலையின் திறவுகோலான ஆயுதமும் ஏந்தி வரலாற்றில் முதல் ஒருவராக பதிவானார். மட்டக்களப்பின் அரசியல், விடுதலை வரலாறு இவ்வாறு உறுதியானவர்களை வைத்து எழுதப்படுகின்றபோது, உதிரிகளான, தடம்புரண்ட உணர்வற்றவர்களால் மாற்றியமைக்கப்படக்கூடாது என்பதுதான் தமிழ்த் தேசியத்தையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழனின் பெருவிருப்பாகும். இதனைத்தான் எமது தேசிய விடுதலை இயக்கமும் கடைப்பிடித்து வந்தது. உறுதியான போராளிகளின் வரலாறு உறுதியான பதிவாக அமையவேண்டும்.போராளிகள் என்றும் ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நாற்காலிகளுக்கு ஆசைப்பட்டவர்கள் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். நித்தி என்ற பத்திரிகைத் துறையைச் சார்ந்த ஒருவர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்துகொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு விடுதலைக்கான தடைகளை அகற்றும் பணியில் சாதனையோடு அமைந்த சில தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தினார். அன்றைய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளராக பணியாற்றிய மூத்த போராளி நியூட்டன் அவர்களுடன் இணைந்து மிகவேகமாக, தனது நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலாற்றினார்.

நித்தி அண்ணன் என்றால் தனிமரியாதையொன்று பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவரிடமும் இருந்தது. தன்னுடன் ஒட்டிக்கொண்டிருந்த குடும்பம் சம்பந்தமான அனைத்து சுமைகளையும் இறக்கிவிட்டு களத்தில் அவர் நின்றதைப் பார்க்கும்போது, பத்திரிகைத்துறையைச் சார்ந்த ஒருவரால் விடுதலைப் போராளியாக மாறி எவ்வளவு சாதிக்கமுடியும், இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் எவ்வாறு தன்னை இழந்து பணியாற்ற முடியும் என்பதை நித்தி அவர்களின் வாழ்க்கையிலிருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளனாக இன்று கூறக்கூடிய நிலையிலிருந்த நித்தி அவர்கள் சுயநலமற்ற ஓர் சிறந்த மனிதராகக் காணப்பட்டார். இன்று இருந்திருந்தால் 32 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பார். மட்டக்களப்பின் பெருநிலப்பரப்பு என்று கூறக்கூடிய மட்டக்களப்பு வாவிக்கு மேற்கே அமைந்துள்ளபகுதிகள் படுவான்கரை என்று அழைக்கப்படுகின்றன. வவுணதீவு,பட்டிப்பளை, போரதீவுப்பற்று என்கிற மூன்று வட்டத்தினைக் கொண்டதாகவும் இப்பகுதி அமைந்துள்ளது. சிற்றூர்களையும், வயல்களையும், சிறிய பரப்பிலான காடுகளையும் உள்ளடக்கிய இப்பகுதியில் விடுதலைப் போராளிகள் பல இடங்களில் தங்கியிருந்தனர்.

குறிப்பாக சொல்லப்போனால் இப் பெருநிலப்பரப்பு போராளிகளின் கட்டுப்பாட்டிலும், நிருவாகத்திலும் இருந்தது. 26 04 .1992 நாள் அன்று கொத்தியவலை ஊரின் அருகாமையில் அமைந்த வயல் வட்டத்திலிருந்து புறப்பட்ட நித்தி அவர்கள் குறிஞ்சாமுனை ஊரிலிருந்து கன்னன்குடா ஊருக்கு பணியின் நிமிர்த்தம் செல்கின்றபோதுதான் எதிர்பார்க்காத அந்நிகழ்வு நடந்தது. குறிஞ்சமுனைக்கும் கன்னன்குடாவுக்கும் இடையில் பதுங்கி, மறைந்திருந்த சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் கப்டன் நித்தி அவர்களும், வீரவேங்கை பாலுமகேந்திரா ( கணபதிப்பிள்ளை உருத்திரா, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை ) வும் வீரச்சாவடைந்தனர். இந் நிகழ்வு போராளிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருந்தது. நித்தி போன்றவர்களை போராளியாக பெற்றதையிட்டு பெருமிதம் கொண்டிருந்த அனைவரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.

ஆண்டுகள் பல உயிருடனிருந்து பணிகளை செய்யவேண்டிய நித்தி குறுகிய காலத்தில் எம்மை விட்டு பிரிந்தது மட்டக்களப்பில் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்றாகும். இவரைப் போன்றவரை நாம் இழந்ததினால் பதவியை குறிவைத்த பலர் உள்ளே நுழைவதற்கு வழியாக அமைந்ததையும் இன்று பார்க்கமுடிகின்றது. ஆண்டுகள் பல கடந்தும், விடுதலைப் புலிகளின் போர்கருவி மௌனிக்கப்பட்டும், விடுதலைப் போராட்ட வடிவம் மாறியிருக்கின்ற நிலையிலும் தமிழ் மக்களை மிகவும் ஆழமாக நேசித்த தன்னலமற்ற உண்மைத் தொண்டனை எண்ணாமல் வரலாற்றில் இருக்க முடியாது. மட்டக்களப்பு மண் ஈன்றெடுத்த தமிழ் விடுதலைப் பற்றாளர்களில் ஒருவரான கப்டன் . நித்தி என்றும் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் எழுத்தும், செய்திகளும் இணைகின்ற இடத்தில் போராளி என்ற புனித ஆன்மாவின் நாயகனாக வரலாற்றில் வலம் வருவார். மக்களுக்கு தேவையான ஒரு நல்ல மனிதரை இழந்தோம், பிரிந்தோம். போராளியாக மாறிய மகத்தான சேவையாளன், தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு ஊடகப்பாலமான சிறந்த பத்திரிகையாளன் கப்டன். நித்தி என்றும் எம் நினைவில் நிலைத்து நிற்பார்.

-எழுகதிர்

About ehouse

Check Also

மேஜர் ஈழமாறன்& மேஜர் கஜன்

அந்தத் தாயவளுக்கு இவர்களும் ஓர் பிள்ளை, இவர்கள் அரசியலில் பணிகள் தேசத்தின் விடியலின் தாகத்துடன் பயணித்த போதும் இவர்களுக்கு உணவு ...

Leave a Reply