Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / அன்புக்கு இலக்கணம் சங்கவி

அன்புக்கு இலக்கணம் சங்கவி

அன்புக்கு இலக்கணம் ஆகிய அழகிய வதனம் கொண்ட சங்கவியை தெரிந்தவர்கள் யாராலும் மறக்கவே முடியாது……

அமைதியான சுபாபம் கொண்டவள். கூட இருப்பவர்களுக்கு உதவிடும் நல்ல உள்ளம் படைத்தவள். இரக்க குணம் அவளோடு கூட பிறந்தது. பழகியவர்களால் அவளை மறப்பது மிகவும் கடினம்.
1998ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டவள் சிறுத்தைப் படையணியில் நித்திலா 1 பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு மூன்றுமுறிப்பு களமுனையில் அவளது தோழிகளுடன் தடம் பதிக்கிறாள். முன்னணிக் காவலரண்களை பலமாக்கி பாதுகாப்பது, எதிரியின் ஊடறுப்பு தாக்குதல்களை முறியடித்து சமர் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டவள். தொடர்ந்து வந்த காலங்களில் அம்பகாமம், ஒட்டு ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகளிலும் அவளுடைய களப்பயணம் தொடர்கிறது.

இன்றுவரை உலகவல்லரசுகளால் வியந்து பார்க்கப்படும் தீச்சுவாலைச் சமரில் பங்கு பற்றி தன்னுடைய திறமையை அங்கும் நிரூபிக்கிறாள். மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தந்த அச் சமரில் தலையிலும் ,காலிலும் படு காயமடைந்தவள் ஆறுமாதங்கள் மருத்துவமனையில் ஓய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றாள்.

இயங்க முடியாத நிலையிலும் அமைதியான புன்னகையுடன் அடுத்த கட்டப் பணிக்காக தயாராகிறாள்.
தலையில் பலமான காயம் ஏற்பட்டதால் அடிக்கடி மயக்கம் வருவதும், தொடர் தலைவலியாலும் களமுனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படவே படையப் புலனாய்வுப் பிரிவின் பின்தள பணிக்காக அனுப்பப்படுகிறாள்.
ஆர்ப்பரிப்புக்கள் ஏதுமின்றி அமைதியாக சாதித்துவிட்டு எதுவும் நடவாதது போல் இருக்கும் அவள் தன்னுடைய மன வேதனைகளை எப்பவுமே யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.
களமுனைக்கு செல்லமுடியாமல் போகுமளவுக்கு காயம் அடைந்ததால் மனரீதியாக பலமாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய எண்ணக் கிடக்கைகளை புரிந்துகொண்டு ஆறுதலாகப் பேசினால் கூட ஓர் சிறிய புன்சிரிப்போடு அமைதியாக இருப்பாள்.
தன்னுடைய இயலாமையை கூட வெளிக்காட்டாமல் தினமும் தலைவலியால் அவஸ்தை பட்டுக்கொண்டும் கொடுக்கப்படும் பணியை நேர்த்தியாகச் செய்து முடிக்கும் பண்பு அவளிடம் நிறையவே இருந்தது.

சின்னச் சின்ன விடயங்களில் எல்லாம் மிகவும் அக்கறை எடுத்து அவற்றை அழகாக்கும் அழகே அவளுடைய பேரழகு.

சிறு வயதிலேயே வறுமையின் வலியை அனுபவித்தவள். தனது குடும்பத்தின் மீது அளவுகடந்த பற்று இருந்த போதும், தனது குடும்பத்தின் சுமையை சுமக்க வேண்டிய மூத்த பிள்ளையாக இருந்தும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தாய்மண்ணை காக்க ஓடி வந்தவள்.
அவளுக்கு அடுத்து பிறந்த அவளது தம்பி மீது அளப்பெரும் அன்பு கொண்டவள். அவன் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தை நன்றாகப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள் . கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவள் தனது தம்பிக்கு வாழ்க்கையை புரியவைக்கும் முகமாக கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், குடும்பத்தை பொறுப்போடு பார்க்க வேண்டும் என்றும் கடிதம் மூலம் எழுதி அனுப்புவாள். அவளின் விருப்பம் போலவே அவளுடைய தம்பியும் படிப்பில் மிகவும் சுட்டி.

இறுதி யுத்தத்தின்போது அனைவரும் களமுனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சங்கவியும் மிக்க மகிழ்ச்சியுடன் களமுனைக்குச் சென்றாள்.
10.02.2009 அன்று தொலைத்தொடர்பு சாதனம் எடுப்பதற்காக எமது இடத்துக்கு வந்திருந்தாள் .என்னுடன் கதைக்க வேண்டும் என்று என்னிடம் வந்தாள் என்றுமே இல்லாதவாறு அவளுடைய முகம் மிகவும் வாடி இருந்தது.
ஸ்ரீலங்கா இராணுவம் நடத்தும் கொடூரமான யுத்தத்தால் தன்னுடைய தம்பியின் கல்வி தொடர முடியாமல் போனதையும், தனது குடும்பச் சூழலையும் நீண்ட நேரமாக கண்ணீருடன் பகிர்ந்து கொண்டாள். எந்த ஒரு விடயத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவள் நீண்ட நேரமாக என்னிடம் தன்னுடைய ஆதங்கங்களை சொல்லிக் கொண்டிருந்தபோது எனக்குள் ஒருவித ஆச்சரியம் ஆனாலும் அவளுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.
செல்லும் போதும் திரும்பத் திரும்ப “அக்கா என்னை மறந்துடாதையுங்க” என்றாள் .
அவளுடைய பேச்சிலும்,செயலிலும் கண்டுகொண்ட மாறுதல்களால் கலவரம் அடைந்தாலும்
“ஒரு தாயால் எப்படி தன் குழந்தைகளை மறக்க முடியும்” என சிரித்தபடி சொன்னேன்.
அவளைப் பார்க்கும் இறுதிக் கணங்களும் அவளுடன் நான் பேசும் இறுதி வார்த்தைகளும் இவைதான் என்பது தெரியாமல்…..?????

அவள் என்னிடம் பேசிச் சென்ற அடுத்த நாள் 11.02.2009 அன்று தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வல்லிபுனம் என்ற ஊரில் எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில்…… தன்னை ஆகுதி ஆக்கிக் கொண்டாள்.
சிறந்ததோர் அணித் தலைவியாக கொடுக்கப்பட்ட பணியினை சிறப்புடன் ஆற்றி இறுதி மூச்சு உள்ளவரை எதிரியுடன் சமராடி , அவள் உயிரிலும் மேலாக நேசித்த அன்னை மண்ணை முத்தமிட்டாள் .

 

மறக்கவே முடியாத உறவுகளில் இவளும் ஒருத்தி .அடிக்கடி இவளின் நினைவுகள் எனக்குள் சுழன்றடிக்கும்.
தேநீரை தானே தயாரித்துத் தந்துவிட்டு குடித்த பாதி தேனீருக்காக காத்திருப்பாள் .சிலவேளைகளில் காத்திருப்பதை மறந்துபோய் பருகி விட்டால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அன்று முழுவதும் அமைதியாகி விடுவாள்.

எனது மகள் பிறந்திருந்த போது என்னிடம் வந்தாள். போகும்போது என்னிடம் ஒரு கவரை தந்து “அக்கா பிள்ளைக்கு ஒரு சட்டை வேண்டிவந்திருக்கிறேன். என்னிடமிருந்த காசுக்கு வேண்டினான் நீங்க பிள்ளைக்கு போடூறீங்களோ தெரியாது ,நான் போன பின்பு பிரித்துப் பாருங்கள் “என்றாள்.
அவள் போன பின்பு பிரித்துப் பார்த்தேன் மிகக் குறைந்த விலையில் மிக மிக அழகான ஒரு சட்டை இருந்தது . அவளுடைய குடும்ப சூழலுக்கு அந்தப் பணம் எவ்வளவு பெறுமதியானது என்பது எனக்கு தெரியும். .அந்த சட்டையை ஒரு பொக்கிஷம் மாதிரி பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி னேன்.
இடப்பெயர்வின் போது மிகவும் முக்கியமான பொருட்களை கூட நான் மறந்து விட்டுச் சென்றிருந்தேன். ஆனால் அவளுடைய அந்த நினைவுப்பரிசை பத்திரப்படுத்தி எடுத்துச் சென்றேன்…..

இவ்வாறு பல நினைவுகளை என்னிடம் விட்டுச்சென்ற என் தங்கையே உன் நினைவுகளில் மூழ்கும் போதெல்லாம் என் இதயத்தில் ஏற்படும் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது….
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில் உயிர் இருந்தும் வெறும் வெற்று கூடுகளாக வாழ்வது எத்தனை நரக வாழ்க்கை என்பதை தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் நினைவுகளுடன்…….🙏💐
கலைவிழி

About ehouse

Check Also

கேணல் சங்கீதன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பிரிவின் முக்கிய தளபதியும்,புலனாய்வுக் கற்கைநெறித் துறைப் பொறுப்பாளரும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணைப் பிரிவுப் ...

Leave a Reply