Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / அண்ணன் அப்துல்லா வழியில் ஆகுதியான தங்கை திலகா

அண்ணன் அப்துல்லா வழியில் ஆகுதியான தங்கை திலகா

நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார். நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும். அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான்.

திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்பம்” என்றால் தெரியாதவர் யாருமில்லை எனலாம். முதன்முதலில் ஆர்.பி.ஜி (RPG) இயக்கத்துக்கு கிடைத்தபோது, அதை இயக்கி “RPG அப்துல்லா” என அழைக்கப்பட்ட நகுலன் அண்ணாவின் தங்கையே திலகா அக்கா. 1987.10.05 அன்று சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சியில் வீரகாவியமாகி தீருவிலில் தீயுடன் சங்கமமாகிய பன்னிரு வேங்கைகளில் மேஜர் அப்துல்லாவும் ஒருவர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரியை இருப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி கணபதிப்பிள்ளை இணையர் 4 மகன்களையும் 4 மகள்களையும் பெற்றெடுத்தனர். இப்படியாக திலகா அக்காவின் குடும்பம் மிக அழகானது. தந்தை ஒரு சிறந்த கட்டடத் தொழிலாளி. கடைசிக்கு முதல் செல்லப்பிள்ளையாக தர்சினி 11.11.1971 அன்று எம் மண்ணில் பிறந்தார். சிறுபராயம் முதல் கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்வி கற்று வர்த்தகப்பிரிவில் தேறினார். குண்டெறிதல், தட்டெறிதல் மேலும் வலைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார். உதவிப்பந்து போடுபவராக இருந்து அவர் கையில் பந்து கிடைத்தால் அது வலையில் விழும் என்ற அளவிற்குத் திறமையாக ஆடுவார்.

மேஜர் திலகா / வான்மதி

வீரப்பிறப்பு: 11.10.1971  வீரச்சாவு: 12.06.1999

சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

 

1991 ஆம் ஆண்டு ஏழாம் மாதம், யாழ் பழைய பூங்காவில் புதிதாக இணைந்த பெண் போராளிகள் கூடியிருந்தார்கள். உயரமாக நீண்ட கூந்தலுடன் “யார் அந்தப் பெண்” என்று தோழிகள் கேட்க, “மேஜர் அப்துல்லாவின் தங்கை” என்ற பதில் வந்தது. அடிமனதில் அடக்கி வைத்திருந்த தமையனின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார். ஒவ்வோர் பிரிவுக்குமுரிய மகளிர் பொறுப்பாளர்கள் தம் உதவிப்பணிக்குத் தேவையான புதிய போராளிகளை அழைத்துச் சென்றனர். அங்கு பிரிந்த தோழிகள் மீண்டும் ஒன்பதாம் மாதம் 19 ஆம் அணி மகளிர் பயிற்சிப் பாசறையில் ஒன்றிணைந்து ஆரம்பப் பயிற்சியை நிறைவுசெய்து போராளி திலகாவாக உருவானார்.

1992 ஆரம்பத்தில் நிதித்துறைக்கு முதன்முதலாக மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வர்த்தகம் படித்தவர்கள் (எழுத்து, நேர்முக) தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட, முதல் எட்டுப் பேரில் திலகா அக்காவும் இருந்தார். கணக்காய்வுப் பணிக்கான கல்வி அவர்களுக்கு  கற்பிக்கப்பட்டது. சிறிதுகாலம் செல்ல, வாணிபங்களுக்கான கணக்காய்வு பணியையும் ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் திலகா அக்கா சேரன் வாணிபம், மருந்து பால்மா வாணிபங்களில் தனது கணக்காய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

நிதித்துறையின் வழங்கல் பகுதி 1993 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு அதற்குரிய கணக்குமுறைகள் ஒழுங்குசெய்யப்பட்டு 1994 அளவில் திலகா அக்காவும் இன்னும் சிலரும் கணக்காய்வு செய்து வந்தனர். 1993 நவம்பர் மாதம் பூநகரி சிறிலங்கா  அரச படையினரின் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை தொடங்கியது. அந்தவேளையில், தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் திலகா அக்காவும் இருந்தார். ஆனால், அவர் தாக்குதலிற்குச் செல்ல அனுமதிக்கப்படாமையால் ஏமாற்றமடைந்தார். கணக்காய்வுப் பணியுடன் யாழ்.உயர் தொழில்நுட்பக்கல்லூரியில் கணக்கியல் உயர் தேசியக் கல்வியையும் பயின்று வந்தார். அவர் குணநடை பற்றிக் கூறுவதாயின், உடனடியாக தெரியாதவர்களுடன் நன்றாகப் பழகமாட்டார்.  பணியாளர்கள், மற்றவர்களிடம் கண்டிப்பாக இருப்பார். “பிழை  என்றால் பிழை  தான்”என்றும் எல்லோரும் பணியில் “நேர்மையாக” இருக்க வேண்டும் எனவும் எண்ணுவார். ஆனால் நன்கு தெரிந்தவர்களுடன் நன்கு நெருக்கமாகப் பழகுவார். மனம் திறந்து கதைப்பார். பகிடிகள் விடுவார். வெளிப்பார்வைக்குத்தான் அப்படிக் கடுமை போல் காட்டிக் கொள்வார். ஆனால் எம்முடன் மனதளவில் அன்பாகப் பழகுவார். ஏனெனில் “ஒரு போராளியின் இதயம் மென்மையானது”.

களமுனைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் ஆழமாக இருந்தது. 1995 ஆம் ஆண்டு  (நடுப்பகுதி) யாழ்ப்பாணத்தை வன்கவரும் வெறியோடு வந்த சிறிலங்கா இராணுவத்தை விரட்டியடிக்கும் “புலிப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை  விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. அதற்குச் செல்லவென பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்த திலகா அக்காவும் தோழிகளும் வண்டியில் (pick-up) ஏற்றிச் செல்லப்பட்டார்கள். மனதுக்குள் மகிழ்ச்சி. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஒரு சமையல்கூடத்தில் இறக்கி விடப்பட்டு சீனிச்சம்பல் செய்வதற்காக வெங்காயம் உரிக்க விடப்பட்டனர். (ஏனெனில் வெளிப்பணிகளும் போராட்டத்துக்குத் தேவையானது என்பதால் உரியவர்கள் இடப்படும் பணிகளை செய்ய வேண்டும்)

யாழ் இடப்பெயர்வு இடம்பெற்று 1996 வன்னிப்பகுதி சென்று இழப்பீடுகள் தவிர்த்து கணக்குகள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தன. எதற்கும் சளைக்காது திலகா அக்காவும்  சிறப்புற  பணிகளைச் செய்தார். ஓயாத அலைகள் 1 தாக்குதல் பயிற்சிக்கு நிதித்துறை மகளிரிலிருந்து சிலர் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் அவர் அவ்வணியில் தெரிவு செய்யப்படாதது அவருக்கு மிகவும் வருத்தம் தான்.

எந்த ஒரு நடவடிக்கையின் வெற்றிக்கும் பின்னால் வழங்கல் அணியின் திறமையான பங்களிப்பும் மிக முதன்மையானதாக இருக்கும். வழங்கல் சரியாக உரிய நேரத்தில்  சென்றடைந்தால் தான் உரிய அப்பணியைச் சிறப்பாக செய்யலாம். அந்தவகையில் முல்லைத்தீவு மீட்புப் போரின் வெற்றியும் அமைந்தது. அதன் பின் 1997 ஆம் ஆண்டு அளவில் அங்கு முதன்மையான சிற்றுண்டி வாணிபம்  திறந்து வைக்கப்பட்டது. சிற்றுண்டி வாணிபங்களுடன் சமையல்கூடங்களுக்கான கணக்காய்வுப் பணியையும் திலகா அக்கா அணியினர் செய்து வந்தனர்.

1998.06.10 அன்று சுதந்திரபுரம் மீதான சிறிலங்கா இராணுவத்தின்  கொடூரமான மும்முனைத் தாக்குதலில் வழங்கல்பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா/அன்பு அண்ணாவும், வழங்கல் வாணிபங்களின் எமது கணக்காய்வுப்பகுதித் தோழி கப்டன் கலைமதி அக்காவும்  அன்று வீரச்சாவடைந்தனர். மற்றும் பணியாளர்கள், பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டும் படுகாயமும் அடைந்தனர். திலகா அக்காவும் அந்தப் பேரிடியால் கலங்கித்தான் போனார். கப்டன் கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி, வழங்கல் பகுதி கணக்காய்வுப் பணியினை கப்டன் கலைமதி அக்காவுடன் இணைந்தே அவர் மேற்கொண்டு வந்தார். நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்தமையினால் இருவருக்குமிடையே ஆழமான நட்பும் புரிந்துணர்வும் காணப்பட்டிருந்தது. தனிப்பட்ட தனது சொந்தச் சிக்கல்களை சொல்லி மனம் விட்டுக் கதைக்கும் நெருங்கிய தோழியாக திலகா அக்காவுக்கு கப்டன் கலைமதி அக்கா விளங்கினார். இவரது இழப்பானது திலகா அக்காவை மிகவும் தாக்கியது. அதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டிருந்தார். தொடர்ந்து புதுக்குடியிருப்புக்குச் சென்று கணக்குகள் ஒழுங்கமைக்கப்பட்டு மீள தமது பணிகளைச் செய்துவந்தார்.

ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்காவின் முழுக்குடும்பமும் எமது போராட்டத்துக்கு உறுதுணையாகவும் வலுவூட்டிக்கொண்டும் இருந்தனர். ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் தாய், தந்தை, அக்காமார், அண்ணாமார்,

தங்கை என குடும்பமாக இடம்பெயர்ந்து வந்து எமது தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக நின்று உரமூட்டினர். விருந்தோம்பலிலும், கட்டட நிர்மாணப் பணிகளிலும், காப்பரண்களாக நிற்பதிலும் இன்னும் இன்னோரன்ன செயற்பாடுகளிலும் அவர்கள் என்றுமே சளைத்ததில்லை. போராளிகள் சாப்பிடுவதற்கென்றே எந்த நேரத்திலும் அங்கு அடுப்பங்கரை இயங்கிக் கொண்டிருக்கும். “எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறல்லவா” என்று என்றும் அவர்கள் எமது நினைவிலிருப்பார்கள்.

1999 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் முன்னரண்களுக்கான ஆளணி தேவை கருதி நிதித்துறை மகளிரணி பயிற்சிக்கு அணியமானார்கள். திலகா அக்காவின் நீண்ட நாள் கனவு நிறைவேற அவரும் தெரிவு செய்யப்பட்டார். பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் சென்று வந்தார். அவர்களுடன் உரையாடி, உண்டு மகிழ்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொண்டார். திலகா அக்கா  களமுனைக்கு செல்லப்போகும் விடயம் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. வீட்டுக்குச் சென்று வந்துவிட்ட பின்பாக பயிற்சி முகாம் திரும்பி பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார்.

அதிகாலையில் ஓட்டப்பயிற்சியின் போது “முந்தி, கேட்கக் கேட்க சண்டைக்கு விடேல்லை, இப்ப வயது போட்டுது” என்று கூறிக் கொண்டும் விடாமல் “மூசி மூசி” ஓடுவார். ஓய்வுவேளையில் பூப்பந்து, கரப்பந்து நன்றாக விளையாடுவார். தான் சண்டைக் களத்திற்கு சென்று தனது தமையன் போல சாதனை செய்ய வேண்டும் என்ற ஓர்மம் அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது. அதைத் தொடர்ந்து களப்பயிற்சியை முடித்து நெடுங்கேணி முன்னரங்க காவலரண்களில் கடமையில் ஈடுபட்டார்.

அன்று காவலரண்களுக்கான உணவு எடுத்துச் சென்று வழங்கும் முறை திலகா அக்காவினது. ஒவ்வொரு அரணாகக் கொடுத்துக் கொண்டு வருகையில் 34 வது அரண் வந்தது. தனது பாசறை மற்றும் கணக்காய்வு முகாம் தோழியிடம் “எனக்குக் களைப்பாக இருக்கிறது. இங்கு நிற்கிறேன்…அடுத்த அரண்களுக்கு உணவினைக்  கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார். அவரும் “ஓம்” என்று கொண்டு சென்றார். திடீரென பக்கத்து அரண் நோக்கி சிறிலங்கா இராணுவம் பதுங்கித் தாக்குதலைத் தொடங்கியது. ஒரு பக்கம் லெப்.புகழினி நின்ற  காப்பரண். உடனே திலகா அக்காவும் பக்கத்துக்  காப்பரணுக்கு துணையாக தாக்குதல் நடந்த திக்கை

நோக்கி பதிலடி கொடுத்தார். எதிரியோ திசை திரும்பி திலகா அக்காவின் தாக்குதலுக்கு எதிராகத் தாக்கத் தொடங்கிவிட்டான்.

திலகா அக்காவும் தோழிகளும் மூர்க்கத்துடன் களமாடினார்கள். திலகா அக்கா தனது காப்பைக் கருத்தில் கொள்ளாது எதிரியை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 12.06.1999 அன்று யாருமே நினைத்திருக்கவில்லை. எதிர்பாராத வகையில் எதிரியின் பி.கே (PK) ரவை அவரின் நெற்றியைக் குறிபார்த்தது. அசையாத மரம் போல நெஞ்சுரமும் நிமிர்ந்த தோற்றமும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட எங்கள் திலகா அக்கா எம் தாய் மண்ணை முத்தமிட்டார். தோழிகள் கலங்கினர்.எப்படிச் சொல்வோம் அவர் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்வோம் என்று பதறினர்.

ஏற்கனவே துன்பத்திலிருந்த அவர்கள் குடும்பத்திலிருந்து இன்னொரு மாவீரரையும் எம் தாய்மண் சுமந்து கொண்டாள். “போன வருடம் (1998) மாவீரராய் சென்ற அவர் தோழி (கப்டன் கலைமதி) தான் எங்கள் தர்சினியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்” எனத் தாய் புலம்பினார். திலகா அக்காவின் வித்துடலைத் தூக்கிய போது அவரின் அந்த நீண்ட கூந்தலின் பின்னல் ஒன்று கழன்று தொங்கியது. உடல் கவசத்தைக் கழற்றிய போது நெஞ்சிலும குண்டு பாய்ந்திருந்தது.  எங்கள் நிதித்துறை வழங்கல்பகுதியின் கணக்காய்வு பகுதி அணிப் பொறுப்பாளர் மேஜர் திலகா/வான்மதியாக  வீர வரலாறாகினார். தமிழீழ நிதித்துறை கணக்காய்வுப் பகுதியின் ஒரு விருட்சம் வீழ்ந்தாலும் விழுதுகள் அவர் பெயர் சொல்லி தொடர்கிறோம்.

-நிலா தமிழ்.

(இந் நினைவுப் பகிர்வுக்கு  தகவல் குறிப்புகள்  வழங்கியவர் -விண்ணிலா)

About ehouse

Check Also

மேஜர் ஈழமாறன்& மேஜர் கஜன்

அந்தத் தாயவளுக்கு இவர்களும் ஓர் பிள்ளை, இவர்கள் அரசியலில் பணிகள் தேசத்தின் விடியலின் தாகத்துடன் பயணித்த போதும் இவர்களுக்கு உணவு ...

Leave a Reply