1995ம் ஆண்டு இராணுவத்தால் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பான முன்னேறிப்பாயச்சலும் அதனை த்தொடர்ந்து மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் அதிகமானோர் காயப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும்.
இருந்த சூழலில் இச்சம்பவங்களை நேரில் பார்த்த சிவரூபன் வீணாகச் சாவதைவிட இவ் ஆக்கிரமிப்புக்கெதிராக போராடுவதென முடிவெடுத்து . விடுதலைப் புலிகளில் தன்னை இணைத் கொண்டு தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து கடற்புலிகளின் தரைத்தாக்குதலணியான மண்டைதீவுச் சமரில் மாவீரரான லெப் கேணல் சூட்டி அவர்களின் பெயரைச் சுமந்த சூட்டி படையணியில் இணைந்து முல்லைத்தீவுச் சமரில் பங்குபற்றினான் .அதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை கடலில் வீரச்சாவடைந்த லெப் கேணல் நரேஸ் அவர்களின் பெயரைச் சுமந்த படையணியான நரேஸ் படையணியில் கனரக ஆயுதப் பயிற்சி மற்றும தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிகள் முடித்து அப்படையணியில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் சர்வதேசக் கடற்பரப்பில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சம்பவமொன்றை அடுத்து தலைவர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சர்வதேசப் பொறுப்பாளர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.அதற்கமைவாக தமிழீழத்திலிருந்து சில போராளிகள் சர்வதேசக் கடற்பரப்பிற்க்குச் சென்றனர்.
அப்போராளிகளுள் ஒருவனாகச் சென்ற சிவரூபன் அங்கு மாவீரரான கடற்கரும்புலி லெப் கேணல் பெத்தா அவர்களுடன் இணைந்து விநியோகப்பணியில் ஈடுபட்டான்.விநியோக பணிகளின் ஓய்வு நேரங்களில் கப்பல் சம்பந்தமாகவும் கடல் சம்பந்தமாகவும் நிறையவே கற்றான்.இவனது வளர்ச்சியில் லெப் கேணல் பெத்தாவின் பங்கும் அளப்பரியது.அங்கே ஒரு கப்பலில் தனக்கு அடுத்த நிலையில் சிவரூபனை வளர்தெடுத்தார் பெத்தா . அதன் பின்னர் தமிழீழம் திரும்பிய சிவரூபன் கடற்சண்டைபிடிக்கவேணும் என்கிற தனது ஆர்வத்தை சிறப்புத்தளபதியிடம் தெரிவித்து அவரின் அனுமதியைப் பெற்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நடந்த விநியோகப் பாதுகாப்புச்சமர் மற்றும் வலிந்த தாக்குதல்களிலும் கனரக ஆயுத இயக்குனராக தொலைத்தொடர்பாளனாக ஒரு படகின் இரண்டாம் நிலை அதிகாரியாகவும் பின்னர் ஒரு படகின் கட்டளை அதிகாரியாகவும் பங்குபற்றினான்.அதனைத்தாெடர்ந்து மன்னார் கடற்பரப்பில் 08.02.1999 அன்று விநியோகப்பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில் விநியோகப் படகுகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அவ் சிறிலங்காக் கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதலில் இவனது பங்கும் அளப்பரியது.
அதனைத் தொடர்ந்து இவனது திறமையான செயற்பாடுகளாலும் ஆளுமைத்திறனாலும் போராளிகளோடு பழகும் தன்மையினாலும் சுண்டிக்குளம் சண்டைப்படகுகளின் தொகுதிக் கட்டளை அதிகாரியாகவும் அம் முகாம் பொறுப்பாளராகவும் சிறப்புத் தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்படுகிறான்.அங்கு சிலகாலம் செயற்பட்டு வந்த சிவரூபன் சூசை அவர்களின் வேண்டுதலுக்கிணங்க சாளையிலிருந்து கப்பலுக்கு சென்று தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கிற பணியில் படகுக் கட்டளை அதிகாரியாக மிகவும் திறம்பட பணியாற்றுகிறான்.அக்காலப் பகுதியில் தான் இவ் விநியோக நடவடிக்கைக்கு ஏற்பட்ட தடைகளை அகற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டபோது அதற்காக அனுபவம் வாய்ந்த கடற்கரும்புலிகள் தேர்வு செய்யப்பட்டபோது அந்த நடவடிக்கையின் பொறுப்பாளனாக பல சண்டைகளில் முக்கிய பங்காற்றியவரும் நீண்ட கால கடல் அநுபவமும் கொண்ட சிவரூபன் சிறப்புத்தளபதியால் தேர்வு செய்யப்பட்டான்.
தலைவர் அவர்களின் திட்டத்திற்கேற்ப இந்நடவடிக்கைக்கான ஏனைய கடற்கரும்புலிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு இந் நடவடிக்கையின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டு இக்கடற்கரும்புலிகள் சென்றனர்.08.12.1999 அன்று ஆழ்கடலால் கடற்படையின் தொடரணி சென்று கொண்டிருக்கும் போது அதற்கு பாதுகாப்பாகச் சென்ற டோறா ஒன்று இவர்களை நோக்கி நெருங்கி வரும்போது இவர்கள் அவ் டோறாமீது தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்தனர். சிவரூபன் இறுதிவரை கள நிலவரம் தொடர்பாக தெளிவாகவும் உறுதியாகவும் கட்டளைமையத்திற்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தான்.இவ் வெற்றிகரத் தாக்குதலில் கடற்கரும்புலி லெப் கேணல் சிவரூபன் மேஜர் இசைக்கோன் மேஜர் யாழ்வேந்தன் கப்டன் கானகன் ஆகியோர் கடலண்ணை மீது காவியமானார்கள். தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற விநியோகத்திற்கு ஏற்பட்ட தடையை நீக்கி விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய பெருமை இவர்களையே சாரும் எனக் கூறுவதில் மிகையாகாது.
எழுத்துருவாக்கம் – .சு.குணா.