Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / தமிழீழ தேச மீட்புப் போராட்டத்தில் மாவீரர் கரிகாலன்

தமிழீழ தேச மீட்புப் போராட்டத்தில் மாவீரர் கரிகாலன்

எமது தமிழீழ போரியல் வரலாற்றில் எத்தனையோ வீரமறவர்களையும் கல்விமான்களையும் பிரசவித்த யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவன் எனும் கிராமத்தில் திரு.திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனாக 14.04.1987 இல் ஞானகணேஷன் எனும் கரிகாலன் வந்துதித்தான்.மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன் என்று எல்லோருக்கும் கடைக்குட்டியாய் வீட்டில் மிகுந்த செல்லத்துடன் வளர்ந்து வந்தான்.அவனது தந்தையார் ஒரு வைத்தியராகக் கடமை புரிந்தார்.அத்துடன் ஒரு தமிழ் ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தார். தாயார் ஒரு ஆசிரியையாக இருந்த போதிலும் பிள்ளைகளை சிறந்த கல்விமான்களாகவும் பண்பாளர்களாகவும் சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் தனது ஆசிரியப் பணியைத் துறந்து பிள்ளைகளை வளர்த்து வந்தார்.பெற்றோரது சிறந்த ஊக்குவிப்பு,அர்ப்பணிப்பு போன்றன வீண் போகவில்லை.அவர்களது ஒரு புதல்வனும் இரு புதல்விகளும் வைத்தியர்களாகவும் மற்றைய புதல்வி வங்கித் துறையிலும் சீரான முறையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று சித்தியடைந்து பணிபுரிந்தார்கள்.அந்த வகையில் கடைக்குட்டியான ஞானகணேசனும் சிறு வயது முதல் கல்வியை யாழில் பிரபல்யம் பெற்ற பாடசாலைகளில் ஒன்றான யாழ்.பரியோவான் கல்லூரியில் (st.johns college) கல்வி பயின்று வந்தான்.

104051769_2310900019204877_3614067078082779000_n

அவன் சிறு வயது முதல் படிப்புடன் விளையாட்டு,பேச்சுப்போட்டி,கவிதைப் போட்டிகள், பட்டிமன்றம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினான். பூப்பந்து(badminton), கூடைப்பந்து (basket ball),கைப்பந்து (volley ball) போன்ற விளையாட்டுக்களில் யாழ் மாவட்டத்தில் அனைத்துப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் தனது பாடசாலை சார்பாக விளையாடி சிறப்பாகச் செயற்பட்டு colors சிறப்பு விருது பெற்று அவனது பாடசாலைக்கு பெருமை பெற்றுக் கொடுத்தான்.மற்றும் பாடசாலை மாணவர் அணித் தலைவனாகவும் (prefect)சிறப்பாகச் செயற்பட்டான்.மேலும் சாரணர் இயக்கத்திலும்(scout) இணைந்து சிறந்த சாரணனாகவும் செயற்பட்டான்.அவன் படிப்பிலும் குறை வைக்கவில்லை.ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சையிலும் அதி திறமைச் சித்தி பெற்று சித்தியடைந்தான். மற்றும் க.பொ.த சாதாரண தரத்திலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.சட்டத்துறை சார்ந்து உயர் படிப்பு படிப்பதே அவனது கல்வி இலட்சியமாக இருந்தது.
தமிழீழத்திற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்தின் உண்மைத் தன்மை,அவர்களது அர்ப்பணிப்பு,தியாகம்,ஒழுக்கமான வாழ்க்கை முறை என்பன ஞானகணேஷனுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.அதனால் அதன்பால் ஈர்க்கப்பட்டு அவனும் 2005 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் எமது அமைப்பில் அரசியல்துறையினரிடம் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு வன்னிப் பெருநிலப் பரப்புக்கு வந்து அடிப்படைப் பயிற்சியை முடித்துக் கொண்டு கரிகாலன் எனும் நாமத்துடன் வரிப்புலியாகி அரசியல்துறைக்குச் செல்லப் பணிக்கப்பட்டான்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு கல்வி,அறிவாற்றல் என்பன மிக முக்கியமானது.அந்த வகையில் எமது தேசியத் தலைவரும் எமது போராளிகள் கல்வி,அறிவாற்றல் என்பனவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஒப்புரவு கொண்டவர்.அவ்வாறே கரிகாலனும் 2005-2007 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழி கற்பதற்கும் கணனிக் கற்கை நெறி கற்பதற்கும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களால் பணிக்கப்பட்டான்.அங்கே அவன் ஆயுத தளபாடங்கள் சம்பந்தமான பொறி முறை பற்றிய நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்மொழிக்கும் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்தல் சம்பந்தமான கற்கை நெறிகளைப் பயின்றான்.இயல்பாகவே மனம், புலன்களை கட்டுப்படுத்தி எளிதில் புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி கொண்டவன் கரிகாலன்.அவனுக்கு அந்த கற்கை நெறி இலகுவாகவே இருந்தது.மிகவும் விசுவாசத்துடனும் ஈடுபாட்டுடனும் அவன் அந்தக் கற்கை நெறியை மேற்கொண்டான்.

அவனுக்கு கல்வி கற்பதிலும் பார்க்க சண்டைக் களங்களுக்கு செல்வதிலேயே மிகவும் ஆர்வம் இருந்தது.ஆனால் தனக்கிடப்பட்ட பணியை செவ்வனே மேற் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தனது கல்வி கற்கை நெறியை மேற்கொண்டான்.மேலும் அவன் கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தான்.ஆனால் அவனது தேவை முக்கியமான வேறு பணிக்கு எமது அமைப்புக்குத் தேவைப்பட்டதால் அவனது பொறுப்பாளரினால் அவனை கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட முடியவில்லை.இது அவனுக்குப் பெரும் கவலையைக் கொடுத்தது.

அவன் எமது போராட்டத்தில் இணைந்து மிகக் குறுகிய காலமென்றாலும் மிகுந்த நம்பிக்கைக்குரியவனாகவும் விசுவாசமானவனாகவும் ஓர் சிறந்த போராளிக்குரிய ஓர்மம் உடையவனாகவும் அவனது பொறுப்பாளரினால் இனங் காணப்பட்டான்.

அவனது முகாமில் புதிதாக இணைந்த போராளிகளுக்கு எமது போராட்டத்தின் உண்மை நிலையை எடுத்துரைத்து நல்வழிகாட்டுவதற்கு அவர்களது பொறுப்பாளர் கரிகாலனைத் தான் பரிந்துரை செய்வார்.அந்தளவுக்கு எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையை விளக்கி அவர்களது மனவுறுதியை நிலை நாட்டும் அளவுக்கு பேச்சுத் திறமையும் சக போராளிகளை அனுசரித்துப் போகும் பாங்கும் அவனுக்கு இருந்தது.
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணா கரிகாலனின் பொறுப்பாளரிடம் அவரின் கீழ் உள்ள போராளிகளில் ஒருவரை தனது தனிப்பட்ட காரியதரிசியாகத்(personal secretary) தரச் சொல்லிக் கேட்ட போது அவர் கரிகாலனைத் தான் பரிந்துரை செய்யும் அளவுக்கு அவனுக்குத் திறமையும் ஆளுமையும் தனது பணியில் முழுமையான ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்டவனாக விளங்கினான்.(இது கரிகாலன் தொடர்பாக அவனது பொறுப்பாளருடன் நான் உரையாடிய போது கூறப்பட்டது).

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போகுவதாக இலங்கை அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்து எம்மண்ணில் எமக்கு எதிரான தாக்குதலை வான்,கடல்,தரை என மும்முனைகளிலும் தீவிரப்படுத்தியது.இதனால் வெளி நிர்வாகப் பணியிலிருந்த பெருமளவான போராளிகள் களமுனைக்கு அனுப்பப்பட்டனர்.அந்த வகையில் கரிகாலனும் சண்டைக் களங்களுக்கு அனுப்பப்பட்டான்.ஏற்கனவே சண்டைக் களங்களுக்குச் செல்ல ஏங்கிக் கொண்டிருந்த கரிகாலனுக்கு இந்தச் செய்தி கரும்பாக இனித்தது. 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வீரச்சாவடையும் வரை சண்டைக் களங்களிலேயே சூறாவளியாக எதிரிகளைக் கலங்கடித்தான்.

2008ஆம் ஆண்டு பங்குனி மாதம் மணலாற்றில் போர் முன்னரங்கப் பகுதியில் களப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காலில் விழுப்புண்ணடைந்து மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான்.பின்பு சிகிச்சையிலிருந்து மீண்டெழுந்து 2008ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரை படையறிவியற் கல்லாரியில் பயின்று பின்பு ராதா படையணியுடன் இணைந்து சிறப்புப் பயிற்சி பெற்று சண்டைக் களங்களுக்குச் சென்றான்.
2008ஆம் ஆண்டு ஆனி மாதம் கரிகாலன் படையறிவியற் கல்லூரியில் தனது சிறப்புப் பயிற்சியை முடித்துக் கொண்டு இரணைமடுப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் களப்பணியாற்றிக் கொண்டிருந்த போது அவன் மிகவும் திறமையாகச் செயற்பட்ட சம்பவம் ஒன்று அவனது பொறுப்பாளரினால் எனக்கு நினைவு கூரப்பட்டது.

இரணைமடுப் பகுதியில் எமது விமான ஓடு பாதைப் பகுதியில் இவன் உட்பட ஆறு பேர் கொண்ட அணி ஒன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.அப்போது அங்கே வந்த இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியொன்று இவனது அணியைச் சுற்றி வளைத்துக் கொண்டது.அதன் போது ஏற்பட்ட நேரடி மோதலில் அவனது அணித் தலைவர் விழுப்புண்ணடைந்ததும் அணித் தலைவரின் தொலைத் தொடர்பு சாதனத்தை உபயோகித்து அவன் அணியைத் தலைமையேற்று திறம்பட வழிநடத்தி மிகவும் ஓர்மத்துடன் போரிட்டு இராணுவத்தினருக்கு கண்ணாமூச்சியாட்டம் காட்டி அவர்களுக்கு பேரிழப்பை உண்டாக்கி தனது அணியைப் பாதுகாப்பாகப் பின் நகர்த்தினான்.அன்று அவன் உட்பட ஆறு போராளிகளும் கரிகாலனின் தலைமையேற்று போரிடும் திறனாலும் சமயோசிதப் புத்தியினாலுமே காப்பாற்றப்பட்டனர்.

பின்பு விசுவமடு ரெட்பானா பகுதி,புதுக்குடியிருப்புப் பகுதி,இரணைப்பாலை,மாத்தளன் போன்ற எல்லா போர் முன்னரங்கப் பகுதிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டான்.இவ்வாறு இறுதி யுத்தத்தில் இவன் செல்லாத சண்டைக் களங்கள் இல்லை.எல்லாச் சண்டைக் களங்களிலும் திறமையாகச் செயற்பட்டு எதிரிகளைக் கலங்கடித்தான்.

எல்லாப் போராளிகளையும் போன்றே கரிகாலனும் வெளிப் பார்வைக்கு கடினமானவனாகத் தெரிந்தாலும் அவனது மனம் பூவிலும் மென்மையானது.இதற்கு உதாரணமாக அவனுடன் நின்ற ஒரு போராளி கூறிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றேன்.
முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் பால்மா வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிய காலத்தில் இரத்த தானம் செய்தால் இரத்த தானம் செய்த நபருக்கு போதிய ஊட்டச்சத்து தேவை என்ற படியால் பால்மா பக்கற் கொடுப்பார்கள் எனும் நடைமுறை நிலவியது.அவன் தனது முகாமுக்கு அருகில் இருந்த குடும்பம் ஒன்றில் இருந்த சிறு குழந்தையொன்று பால்மா இன்றி அழுவது கண்டு மனம் வருந்தி தான் இரத்த தானம் செய்து அதனால் கிடைத்த பால்மா பக்கற்றை அச் சிறு குழந்தைக்குக் கொடுத்தான்.சிறு குழந்தைகளைக் கண்டால் தானும் ஒரு சிறு குழந்தையாகவே மாறி விடுவான்.

இரண்டு தடவைகள் அவனது பெற்றோர் வந்து சந்தித்த போது எனது வீட்டில் தான் விடுமுறையில் வந்து தங்கியிருந்தான்.நானும் ஒரு போராளியாக இருந்தும் என்னை விட மிகவும் வயதில் இளையவனான அவனின் உறுதியையும் நெஞ்சுரத்தையும் கண்டு நான் மிகவும் வியந்திருக்கின்றேன்.இயக்கத்தில் இணைந்து சிறிது காலமேயென்றாலும் எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையை “அக்கு வேறு ஆணிவேறாக “அவன் அலசி ஆராய்ந்து புரிந்து வைத்திருந்தான்.எமது தேசியத் தலைவரில் மிகுந்த நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தான்.விடுமுறையில் வீட்டில் வந்து தங்கியிருந்த போதும் நேரத்தை வீணடிக்காமல் அங்கிருந்தும் எமது போராட்டம் சம்பந்தமான நூல்களை வாசித்துக் கொண்டேயிருப்பான்.
அவன் ஒரு போராளியாகிய தனது கடமையில் மட்டுமன்றி ஒரு உறவினனாக உடன் பிறவாச் சகோதரனாக தனது குடும்பக் கடமையிலிருந்தும் சிறிதும் வழுவவில்லை.
இறுதி யுத்தத்தில் எனது கணவர் வீரச்சாவடைந்திருந்த வேளை அதனைக் கேள்விப்பட்டு அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டு வந்து நான் இரு சிறு குழந்தைகளுடன் பரிதவித்து நின்ற வேளை ஒரு உடன் பிறவாத சகோதரனாக வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்து எங்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி விட்டுத்தான் சென்றான்.இறுதி யுத்த நேரத்தில் பெரும்பாலான போராளிகளை அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் விரும்பினால் பெற்றோர்,உறவினருடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லுமாறு கூறப்பட்டது.நானும் கரிகாலனிடம் “அம்மா,அப்பா கவலைப்படுவினம் எங்களுடன் வாங்கோ”எனக் கேட்ட போது அவன் “என்ர முடிவில மாற்றம் இல்லை அக்கா நான் இறுதி வரை நின்று போராடப் போகிறேன்” என்றும் “நீங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் எப்படியாவது ஆமிக் கட்டுப்பாட்டுக்கை போயிடுங்கோ அக்கா” என்றான்.இறுதி வரை அவன் தன் கொள்கையிலேயும் முடிவினிலேயும் உறுதியாக இருந்தான்.

இறுதியில் 14.05.2009 சுனாமிக் குடியிருப்புப் பகுதி முள்ளிவாய்க்காலில் போர் முன்னரங்கப் பகுதியில் குறி பார்த்துச் சுடும் அணியில் (சினைப்பர் அணி) களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் தன் கொள்கையில் இருந்து வழுவாது இறுதி வரை களமாடி தன்னுயிரீந்து ஈழ மண்ணை முத்தமிட்டான் எங்கள் கரிகாலன்.

அவனது பொறுப்பாளருடன் நான் அவன் தொடர்பாக உரையாடிய போது அவர் அவன் நினைவாக கவலையுடன் கூறியது “இயக்கம் அவன் திறமைகளை முழுமையாகப் பெற முதல் அவன் வீரச்சாவடைந்து விட்டான்” என்பது தான்.

“ஓ… வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்…நீ மடியவில்லையடா…. உன் கதை முடியவில்லையடா….காலமெல்லாம் புலிக் குகையில் நீ தங்கினாய் கண் மூடி இன்று படமாய் தொங்கினாய்….”

– நிலாதமிழ்.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை ...

Leave a Reply