கப்டன் கலைமதி

அது 1995 காலப்பகுதி,வெள்ளை மேற்சட்டையும்(shirt)கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்து தமக்கு இடப்பட்ட கணக்காய்வுப் பணியுடனும் வெளிவாரி வர்த்தகப் பட்டப் படிப்பை(first in commerce) படிக்கவென யாழ் நாவலர் வீதியூடாக தனது ஈருருளியில் செல்லும் ஒரு போராளியாக கலைமதி அக்காவைக் காணலாம்.எப்பொழுதும் எதற்கும் தயாராக இருப்பது போல் அவருடைய எறும்பு போன்ற சுறுசுறுப்பான ஆனால் அடக்கி வைத்திருக்கும் அமைதியான ஆளுமை முதிர்வு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறது.

கலைமதி அக்காவும் எல்லோரும் போலவே திரு,திருமதி ஜெகதீசன் தம்பதியினருக்கு மகளாக 28.06.1966 இல் ரேணுகாதேவி என்ற இயற் பெயருடன் அக்காமார் , அண்ணன்,தங்கை ,தம்பிகள் கொண்ட சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான்.தந்தை ஒரு புகைப்பட வல்லுனராக அந்தக் காலத்தில் பிரபல்யம் பெற்ற நிறுவனம் வைத்திருந்தார்.மற்றவர்கள் போலவே கல்வி,வாழ்க்கை என்று போனது.கணக்கியல் உயர் தேசிய கல்வி (HNDA)கூட முடித்திருந்தார்.பின்பு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தார்.

104430660_2311621215799424_2314650415773810002_o

காலத்தின் தேவை கருதி 1993 காலப் பகுதியில் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்,புரட்டாதி மாதம் தனது ஆரம்பப் பயிற்சியை மகளிர் பயிற்சிப் பாசறையில் 27ஆம் அணியில் “சுகி” முகாமில் மேற்கொண்டார்.பயிற்சியில் ஓடும் போது அவருடைய ஒரு கால் புரண்டு விட்டது.அப்படியிருந்தும் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்ந்து மேற் கொண்டதால் கால் முறிந்து விட்டது.அதனால் மிகுந்த சிரமப்பட்டதுடன் மிகுந்த மன வேதனையும் அடைந்தார்.
அதன் பின் 1994 பங்குனி மாதமளவில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.சிறிது காலம் சிகிச்சையில் அவர் இருந்தாலும் கணக்காய்வுப் பணியைத் தொடர்ந்தார்.அங்கு தான் அவருடைய ஆளுமை வெளிப்பாடு தெரிய வந்தது.அத்துடன் வெளிவாரி வர்த்தக பட்டப் படிப்பையும் ( first in commerce)அங்கிருந்தே தொடர்ந்தார்.

நிதித்துறை வழங்கல் பிரிவின் வாணிபங்களின் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கப்பட்டிருந்தார்.அவருடைய பணி நேர்த்தி அவர்களுடன் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும்.தானும் நேரத்தை வீணடிக்காமல் மற்றவர்களையும் வீணடிக்க விடாமல் வேலை செய்வது அவரின் திறமை.வழங்கல் பகுதியில் இரும்புத் தொழிலகம்,புடவை வாணிபம்,கோல்சர் வாணிபம்,தையல் தொழிலகம்,அடுக்கணி வாணிபம் என பல வாணிபங்களிலும் தனது கணக்காய்வுப் பணியை திறம்பட மேற்கொண்டார்.

1995 ஐப்பசி மாத காலப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக வான் தாக்குதல்கள்,எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.அங்கிருந்து சென்று சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் முகாமை ஒழுங்கமைத்து பணிகள் தொடர்ந்தன.மீண்டும் தரை வழியாகவும் கரையோரத் தாக்குதல்கள் மூலமும் பகுதி பகுதியாக இராணுவத்தினர் ஊர்களைக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர்.

1996 பங்குனி மாத நடுப் பகுதியில் அங்கிருந்தும் இடம் பெயர்ந்து வன்னிப் பகுதிக்குச் சென்ற போதும் வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணி ஒழுங்கு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது.ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் மனம் சோராமல் அவற்றையெல்லாம் எதிர் கொண்டு நீண்ட தூரம் சென்றும் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த போதும் பணிகள் சீராக்கப்பட்டன.

அத் தருணத்தில் தான் இழந்த ஒன்றிற்காக இன்னொன்றைப் பெறுவதற்காக ஓயாத அலைகள்1 நடவடிக்கைக்காக மேலதிக தேவை கருதி நிதித்துறை மகளிர் அணியும் படையணிக்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.அதில் கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார்.பயிற்சியின் போது உடைந்து பொருந்திய காலுடன் மிகவும் சிரமப்பட்டார்.ஆனால் ஒருநாளும் பயிற்சிக்குப் பின் நின்றதே இல்லை.குறிப்பிட்ட எண்ணிக்கை முழு வட்டமும் ஓடி முடித்தே ஆக வேண்டும்.அவரால் ஓட முடியாத நிலையில் நடந்தே மீதித் தூரத்தையும் முடிப்பார்.

இயலாவிட்டால் முகாமுக்குத் திரும்பச் சொன்னாலும் போக மாட்டேன் எனக் கூறி விட்டார்.தனக்குக் கிடைத்த சண்டைக்குச் செல்லும் சந்தர்ப்பத்தைத் தவறவிட அவர் விரும்பவில்லை.சாப்பாடு எடுக்கும் முறை அணிக்குழுவில் அவருக்கு வரும்போது அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பதால் சாப்பாடு எடுக்கும் பெரிய சட்டியை(டாசர்) கீழே பிடித்துக் கொண்டு வர கொஞ்சம் சிரமமாக இருக்கும்.அதனால் சட்டியை(டாசர்)தலையில் சுமந்து கொண்டு தாண்டித் தாண்டி நடக்க வெளிக்கிட்டு விடுவார்.ஓயாத அலைகள் 1 வெற்றியடைய சத்ஜெய 1 நடவடிக்கையும் நடந்து முடிந்தது.

மீண்டும் முகாம் திரும்பி தனது தொடர்ச்சியான பணியை மேற்கொண்டார்.சில வேளைகளில் நாங்கள் முகாமில் சமைத்தும் சாப்பிடுவதுண்டு.அப்போது அவர் முட்டைப் பொரியல் உண்டால் சவர்க்காரம் போட்டுக் கைகழுவ மாட்டார்.ஏனென்றால் கையில் அடிக்கடி அதை மணந்து பார்த்து மகிழலாம் என்பார்.அத்துடன் சமையற்கூடப் பகுதியில் சோறு கூட எடுத்து வரச் சொல்லிக் கூறுவார்.ஏனென்றால் அதில் நீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் வெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு,தேசிப்புளி எல்லாம் விட்டு பழஞ் சோறு குழைத்துத் தருவதற்கு தான்.அவர் அவ்வாறு தரும் பழஞ்சோற்றின் சுவையோ தனிதான்.

அவரை முகாமில் ஒரு மூத்த அக்கா போல் கருதுவார்கள்.ஏனெனில் அறிவுரைகள் சொல்வதிலும் வழிகாட்டுவதிலும் சிறந்தவர்.சக போராளிகளாயினும் பணியாளர்களாயினும் யாரையும் இலகுவில் பகைத்துக் கொள்ள மாட்டார்.கண்டிப்பாகவும் சகசமாகவும் பழகக் கூடியவர்.எனவே அவருக்கென்று ஒரு தனி மரியாதை எல்லோரிடத்திலும் இருந்தது.நீண்ட காலமாக வழங்கல் பகுதி வாணிபங்களின் கணக்காய்வை அவர் திறம்பட செய்து வந்தார்.வழங்கல் பகுதிப் பொறுப்பாளராக அம்மா அண்ணை இருந்து வந்தார்.

இருப்பு எடுத்தல் தொடங்கி விட்டால் கலைமதி அக்காவை கேட்கவே தேவை இல்லை.”திருவெம்பாவை பாட வெளிக்கிட்டுட்டா” என எல்லோரும் கூறுவார்கள்.இரவில் பெற்றோல் மக்ஸ் விளக்கையும் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு கொட்டிலாக பார்ப்பதற்கு கிளம்பி விடுவார்.”இந்த மனிசியுடன் குடும்பம் நடத்த இயலாது”என இவருடன் பணி செய்பவர்கள் பகிடிக்கு கூறுவர்.இதனையும் ஒரு நாள் அவர் கேட்டு விட்டார்.ஆனால் கோபிக்காமல் சிரித்து சமாளித்து வேலை செய்விப்பார்.
வழங்கல் பகுதி புடவை வாணிபம் சுதந்திர புரத்தில் தான் இருந்தது.கணக்காய்வுப் பணி நிமித்தம் அங்குள்ள முகாமில் கலைமதி அக்கா மற்றைய போராளிகளுடன் தங்கியிருந்து வந்தார்.அதிகாலை புலர்ந்தது.அன்று புதுக்குடியிருப்புக்கு சென்று தனி நபர் வழங்கல் எடுக்கும் நாள்.தன்னுடன் துணையாக பணி செய்த போராளியை அங்கு செல்லத் தயாராகுமாறு கூறி விட்டு தேநீர் தயாரிக்க பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்.அந்தப் போராளி தயாராகி வந்து பார்த்த போது பாற் சட்டி கருகியிருந்தது.கலைமதி அக்கா அங்கு தான் நின்றவர்.ஆனால் அவருக்கு அது தெரியவில்லை.

1998 ஆனி மாதம் பத்தாம் நாள் அன்று தான் அந்தத் துயரமான சம்பவம் நடந்தது.திடீரென சிறிலங்கா இராணுவம் அப்பகுதி மீது வான்,தரை,கடலிலிருந்து ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதல் நடாத்தியது.அதில் பெருமளவு மக்கள்(33 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்), பல பணியாளர்கள் படுகாயமடைந்தும் பலர் கொல்லவும் பட்டனர்.யார் நினைத்தார் இப்படி நடக்கும் என்று?அச் சம்பவத்தில் எமது கலைமதி அக்காவும்(கப்டன் கலைமதி)அம்மா அண்ணாவும்(லெப்.கேணல் அன்பு/அம்மா)வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.”புடவை வாணிபம் இல்லா விடில் தான் இல்லை”எனக் கூறும் எங்கள் கலைமதி அக்கா என்றும் எம் தேச வரலாற்றில் நீங்காமல் நிறைந்திருப்பார்.

– விண்ணிலா.

About ehouse

Check Also

லெப் கேணல் தியாகராஜன்/காவலன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளில் ஒருவரான லெப் கேணல் தியாகராஜன்/காவலன் அவர்களின் வரலாற்று நினைவுகள்…! “விடுதலைப் பாதையில் புலனாய்வுப் ...

Leave a Reply