Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / லெப்ரினன்ட் மிருணா / முல்லையரசி

லெப்ரினன்ட் மிருணா / முல்லையரசி

எமது தேசத்துக்கான விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் எத்தனையோ ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கள்,தியாகங்கள்,உயிர்க்கொடைகள் போன்றவற்றைக் கண்டு வந்திருக்கின்றோம்.அந்த வகையில் தமிழீழத் தாயின் வீரப் புதல்வியாகவும் எம் ஒப்பற்ற பெருந் தலைவனின் வீரத் தங்கையாகவும் வாழ்ந்திருந்தாள் லெப்ரினன்ட் மிருணா/முல்லையரசி அக்கா.

ஈழத் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் செங்கோலோச்சிய அடங்காப்பற்று என்று அழைக்கப்படும் வன்னிப் பெரு நிலப்பரப்பிலே இயற்கை எழில் கொஞ்சும் வட்டக்கச்சி எனும் ஊரிலே திரு.திருமதி சேதுபதி மண இணையருக்கு ஆசைப் புதல்வியாக மதிவதனி 1974.03.09 இல் பிறந்தாள்.வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்த பண்டார வன்னிய மன்னன் ஆண்ட வன்னி வள நாட்டில் பிறந்ததால் மதிவதனிக்கும் வீரம் எனும் சொல்லானது இரத்தத்தில் ஊறியே காணப்பட்டது.அவள் வீரத்தில் மட்டுமல்ல கல்வியிலும் சிறந்து விளங்கினாள்.தனது சிறு வயது முதல் கல்வியை வட்டக்கச்சி மகா வித்தியாலத்தில் (வட்டக்கச்சி மத்திய கல்லூரி) பயின்று வந்தாள்.1990ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றி அதி திறமைச் சித்திகள் எடுத்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவை தெரிவு செய்து பயின்று 1993 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி சிறப்பாகச் சித்தியடைந்து பின்னர் எமது தமிழீழ சட்ட நீதி மன்றத்தில் பணி புரிந்து வந்தாள்.

105288714_2313791182249094_1092316243293386838_o

ஆற்றோரத்து அகதி முகாம்கள்,வயல் மேட்டின் புற்றுப் பிட்டிகள்,வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப் பெயர்வின் துயர வாழ்வினைக் கண்டு மதிவதனியும் “அன்னை நிலத்தினுக்காக வரிப்புலியாகி நடந்திடுவோம்…எம் ஆசையெல்லாம் தமிழீழம் அதற்கென அங்கு விதைந்திடுவோம்”என பொங்கி எழுந்து 1995ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் எமது போராட்டத்தின் உண்மையின் கடப்பாட்டினைப் புரிந்து கொண்டு தனது தார்மீகக் கடமையை நிறைவேற்ற எமது அமைப்பில் இணைந்து “லீமா 1” மகளிர் பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படைப் பயிற்சியினை நிறைவு செய்து கொண்டு மிருணா/முல்லையரசி எனும் நாமம் கொண்டு தமிழீழப் பெண் விடுதலைப் போராளியாகி 1996ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் கண்காய்வுப் பணியுடன் அம்முகாம் போராளிகளுக்கான மருத்துவப் போராளியாகவும் செயற்பட்டார்.அவரின் மற்றைய போராளிகளைத் தாயைப் போல அரவணைக்கும் பாங்கு,பொறுமை,சகிப்புத் தன்மை என்பனவற்றை இனங் கண்டு கொண்ட நிதித்துறை மகளிர் பொறுப்பாளர் லெப்.கேணல் வரதா அக்காவால் அவரைஎமது பிரிவின் மருத்துவப் போராளியாக நியமிக்கும் பொருட்டு ஆறு மாதங்கள் மருத்துவக் கற்கை நெறிக்கு மருத்துவப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.அங்கு அவர் திறமையாகச் செயற்பட்டு மருத்துவ கற்கை நெறியை நிறைவு செய்து கொண்டு நிதித்துறை மகளிர் மருத்துவப் போராளியாக எமது முகாம் திரும்பி பணி மேற்கொண்டார்.

எமது முகாமின் “விளக்கேந்திய சீமாட்டியாக” புளோரன்ஸ் நைற்றிங்கேலாக( florence nightingale) எமது மிருணா அக்கா மிகச் சிறப்பாகச் செயற்பட்டார்.அவர் குள்ளமான ,கொஞ்சம் உருண்டையான,குண்டான தோற்றத்தினைக் கொண்டிருந்த படியால் எங்கள் எல்லோராலும் “பொக்கான்”எனச் செல்லமாக அழைக்கபட்டார்.இவரது அன்பு,பரிவு,தாய்மையுணர்வு,எந்த வேலையென்றாலும் முழுமையாக முடிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் போன்றவற்றினை எடுத்துக் காட்டக் கூடியதான சில சம்பவங்களைக் கூறுகின்றேன்.

1997-1998ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது வன்னிப் பெரு நிலப்பரப்பில் மலேரியா நோயின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்பட்டது.எமது மருத்துவப் பிரிவினரின் மகத்தான சிறந்த தன்னலமற்ற செயற்பாட்டின் காரணத்தினால் வன்னியில் அதன் தாக்கம் மிகக் குறைவாகி இல்லாதொழிக்கப் பட்டது.அந்த வகையில் எமது முகாம் போராளிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இவ்விரண்டு குளோரோக்குயின்(chloroquine) எனும் மலேரியாத் தடுப்பு மாத்திரை வழங்கப்படுவதுண்டு.இதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் எங்களது முகாம் அல்லோல கல்லோலப்படும்.எமது புளோரன்ஸ் நைற்றிங்கேலான மிருணா அக்கா இந்த மலேரியா தடுப்பு மாத்திரை வழங்கும் திருப்பணியை மிகவும் கடினங்களுக்கு மத்தியில் சிறப்பாக மேற்கொள்ளுவார்.சில போராளிகள் மாத்திரையின் கசப்புத் தன்மையின் காரணத்தினால் மாத்திரை உட்கொள்ளக் கள்ளத்திலே “தாங்கோ மிருணாக்கா பிறகு போடுறம்” என்று போட்டு அவர் அங்கால போனதும் தூக்கி எறிவதுண்டு.இதனை எப்படியோ மிருணா அக்கா கண்டு பிடித்து விடுவார்.பின்பு தானே முன்னின்று அவர்களைப் பேசாது திட்டாது அன்பாக “இஞ்சாருமப்பா இதை மட்டும் ஒருக்கா போடுமனப்பா…என்ர செல்லம் எல்லோ” எனக் கெஞ்சிக் கொஞ்சிக் கேட்டு அன்பாக எல்லோரையும் மாத்திரை உட்கொள்ள வைத்து விடுவார்.

நாட்டில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் ஏற்பட்ட பொருளாதாரத் தடையினால் வெளி நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் போராளிகளுக்கு முட்டைப் பொரியல் போன்ற விசேட உணவுகள் உணவு வழங்கல் பகுதியினால் வழங்கப்படுவதில்லை.இதனால் நாங்கள் முட்டைப் பொரியல் மீதுள்ள பிரியத்தினால் பக்கத்து வீட்டுக் கோழிகளை சாப்பாடு போட்டு அரவணைத்து முட்டை எடுத்து வழங்கல் பகுதியினால் தலைக்கு வைக்கத் தருகின்ற எண்ணெயைக் கொண்டு முட்டை பொரித்து சாப்பிடுவதுண்டு.சில வேளைகளில் ஒரு முட்டை தான் கிடைக்கும்.அதனை மிருணா அக்கா வெகு சாமர்த்தியமாக நிறையத் தண்ணீர் விட்டு நுரை பொங்கப் பொங்க நன்றாக அடித்து எத்தனை பேர் நிற்கிறோமோ அதற்கு அளவாக(4பேர் நின்றால் ஒரு முட்டையை நான்கு வட்டமாக)திறமையாக எல்லோருக்கும் பொரித்துக் கொடுப்பார்.

நாங்கள் வெளி நிர்வாகப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் போராளிகள் எல்லோரும் எப்போதும் சோர்வடையாமல் களத்திற்குச் செல்வதற்குத் தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக எமது கணக்காய்வுப் பணிகளை மேற் கொள்வதற்கு முதல் அதிகாலையில் எழுந்து சத்தியப் பிரமாணம் முடித்து விட்டு உடற்பயிற்சிகள் செய்து முகாமுக்கு வெளியே வீதி வழியாக ஓட்டப் பயிற்சியை மேற்கொள்வதுண்டு.

எமது முகாம் சனக்குடியிருப்புப் பகுதிகளில் இருந்த படியால் நாம் ஓட்டப் பயிற்சியினை மேற்கொள்ளும் போது அடிக்கடி தெரு நாய்களின் தொல்லைகளைச் சந்திப்பதுண்டு.இதன் காரணத்தினால் ஒவ்வொரு நாளும் நாம் ஓட்டப் பயிற்சியினை மேற்கொள்ளும் போது மிருணா அக்கா கையில் ஒரு கொட்டான் தடியுடன் காட்சியளிப்பார்.அவர் கட்டையான உருண்டையான உருவத்துடன் கையில் கொட்டான் தடியுடன் நாய்களைத் துரத்திய படி ஓடுவதைப் பார்க்க எங்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.சில போராளிகள் ஓடுவதற்கு கள்ளத்தில பம்மாத்து அடித்துக் கொண்டு முகாமுக்கு அருகில் இருக்கும் மரத்தடியில் குந்தியிருந்து விட்டு ஓடிக் களைத்து வியர்வை சிந்திய மாதிரி தோற்றமளிப்பதற்காக அருகில் இருக்கும் குழாய்க் கிணற்றில் தண்ணீர் எடுத்து தெளித்து விட்டு ஓடிக் களைத்து வியர்வை சிந்திய ஆக்கள் மாதிரி மற்றைய ஆக்கள் ஓடி முடித்து வரும் போது அவர்களுடன் சேர்ந்து வருவதுண்டு.ஆனால் மிருணா அக்கா பம்மாத்து அடிக்காமல் அந்த ஓட்டப் பயிற்சியை” மூச்சு வாங்க மூச்சு வாங்க”முழுமையாக ஓடி முடிப்பார்.

அவர் மருத்துவப் பணியோடு மட்டுமல்லாது கணக்காய்வுப் பணியிலும் திறம்படச் செயற்பட்டார்.எமது நிதித்துறை வாணிபங்களான சோழன் வாணிபம்,நகை வாணிபம்,பெருந்தோட்டப் பகுதி மற்றும் அது சார்ந்த வாணிபங்களிலும் தனது கணக்காய்வுப் பணியை மிகவும் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் ஆளுமையுடனும் மேற் கொண்டார்.அவர் ஒரு பணியை முடிக்க வேண்டும் என்றால் இரவு,பகல் பாராது கண் விழித்து செயற்பட்டு முடிப்பார்.பணியிடங்களிலே பணியாளர்களுடன் மிகவும் அன்னியோன்னியமாகவும் தேவைப் படும் போது மிகவும் கண்டிப்புடனும் ஆளுமையுடன் செயற்படுவார்.

வெளி நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் போது மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான உறவானது மிகவும் சுமுகமாகவே காணப்பட்டது.எமது மக்கள் போராளிகளை சாதி மத பேதங்களைக் கடந்து தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகவே கருதினார்கள்.வீட்டில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்காகவும் எமது கட்டுக்கோப்பான நிர்வாகக் கட்டமைப்பின் மீதுள்ள நம்பிக்கையினாலும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற அவாவினாலும் அவர்கள் எமது நிறுவனங்களில் பணிபுரிவதுண்டு.அந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் பணியாளர் தாம் கொண்டு வரும் சிறிய சாப்பாட்டுப் பெட்டி உணவினை அன்புடன் எமக்குப் பகிர்ந்தளிப்பதுண்டு.சில வேளைகளில் “பாவம் போராளிகள் அவர்களுக்கு முகாமில் நல்ல ருசியான உணவு கிடைக்காது” என்று நினைத்து தங்கள் உணவினை எமக்களித்து விட்டு தாம் பட்டினி இருப்பதும் உண்டு.

அந்த வகையில் மிருணா அக்காவுக்கும் பணியாளர்களுக்குமான உறவானது பணி தவிர்ந்த மற்றைய வேளைகளிலே ஒரு குடும்ப உறவு போலவே காணப்பட்டது.அவர்கள் தங்கள் சொந்த குடும்ப பிரச்சனைகளைக் கூட அவரிடம் சொல்லி தீர்வு கேட்பதுண்டு.மிருணா அக்கா எமது போராட்டத்தில் இணைவதற்கு முன்பு எமது தமிழீழ சட்ட நீதி மன்றில் பணிபுரிந்த காரணத்தினாலேயோ என்னவோ பணியாளர்களுக்கு அவர் நல்ல தீர்வுகளைக் கூறி அவர்களது குடும்பங்களைச் சேர்த்து வைப்பார்.

எமது போராட்டத்தில் இணைந்த காலத்தில் இருந்து மிருணா அக்காவுக்கும் எல்லாப் போராளிகளைப் போலவே சண்டைக் களங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை நீறு பூத்த நெருப்பாக ஆழ் மனதில் இருந்து வந்தது.1999ஆம் ஆண்டு போர் முன்னரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட ஆளணிப் பற்றாக்குறை காரணமாக நிதித்துறை மகளிர் அணியைச் சேர்ந்த சில பேர் களப்பணிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.அவர்களில் ஒருவராக மிருணா அக்காவும் தெரிவு செய்யப்பட்டார்.அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.அவர் மிகவும் மகிழ்வுடனும் ஈடுபாட்டுடனும் களப்பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டு நெடுங்கேணிப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் சோதியா படையணியுடன் இணைந்து களப்பணிகளில் ஈடுபட்டு ஆறு மாதங்கள் மிகத் திறமையாகச் செயற்பட்டு முகாமுக்குத் திரும்பினார்.

பின்பு 2000ஆம் ஆண்டு ஓயாத அலைகள் 4 வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்காக போராளிகளின் ஆளணிப் பற்றாக்குறை காரணத்தினால் எமது பிரிவில் இருந்து பல பேர் மாலதி படையணியுடன் இணைந்து களப்பணிக்குச் செல்லத் தெரிவு செய்யப்பட்டோம்.அதிலும் ஒருவராக மிருணா அக்கா தெரிவு செய்யப்பட்டார்.
நாம் அனைவரும் சுண்டிக்குளம் பகுதியில் இரண்டு மாதங்கள் கடுமையான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டோம்.அப்போது அங்கு சூட்டுப் பயிற்சியின் போது மிருணா அக்கா மிகச் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல மதிப்பெண்கள்(score) சிறந்த சூட்டாளராகத் தெரிவு செய்யப்பட்டு ஆர்.பி.ஜி(R P G)கன ரக ஆயுதப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.அக் கன ரக ஆயுதப் பயிற்சியிலும் சிறப்பாகச் செயற்பட்டு சிறந்த சூட்டாளராகத்(gunner) தெரிவு செய்யப்பட்டார்.
கள அனுபவம் அதிகமில்லாத வெளி நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வந்த மிகவும் குள்ளமான தோற்றமுடைய ஒரு போராளி தன்னை விட அதிக எடை கூடிய ஆர்.பி.ஜி கன ரக ஆயுதத்தைத் தூக்கி பயிற்சி எடுத்து மிகக் குறுகிய காலத்தில் பயிற்சியை முடித்து ஆர்.பி.ஜி கன ரக ஆயுதத்தின் சிறந்த சூட்டாளராகத் தெரிவு செய்யப்பட்டது மிருணா அக்காவின் விடாமுயற்சியையும் தன்னம்பிகையையும் எடுத்துக் காட்டி அது அவருக்கு கிடைத்த அதிசயிக்கத்தக்க வெற்றி வாய்ப்பாகவே கருதக் கூடியதாக இருந்தது.இதனை மிருணா அக்கா மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.

பின்பு நாகர் கோவில் பகுதியில் ஒரு வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்காக மிருணா அக்காவின் ஆர்.பி.ஜி அணி தெரிவு செய்யப்பட்டது.ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அது மேற்கொள்ளப்படவில்லை.அது மிருணா அக்காவுக்கு மிகுந்த கவலையை அளித்தது.பின்பு அவர் எழுதுமட்டுவாள் பகுதி,பளை,முகமாலை கண்டல் பகுதி போன்ற போர் முன்னரங்கப் பகுதிகளில் களப்பணிகளில் திறமையாகச் செயற்பட்டார்.

போர் முன்னரங்கப் பகுதிகளில் களப்பணி புரியும் போது மற்றைய போராளிகளுக்கு அவர் கலகலப்பையூட்டி உற்சாகமாக இருக்குமாறு ஒரு தாயைப்போல அக்கறையுடன் பார்த்துக் கொள்ளுவார்.அங்கே தன்னுடன் இருக்கும் போராளிகளுக்கு, முதல் நாள் இரவு உணவுக்கு வரும் புட்டானது சில வேளைகளில் மேலதிகமாக எஞ்சி இருப்பதுண்டு. அதனால் அது வீணாகப் போகப்படாது என்ற எண்ணத்தில் அதை மிருணா அக்கா அடுத்த நாள் வெயிலில் காய வைத்து சற்றுத் தொலைவில் இருக்கும் இராணுவத்தினருக்குத் தெரியாதவாறு பாதுகாப்பாக பனை மறைவில் நெருப்பை மூட்டி வறுத்து சீனி போட்டு சுவையான சிற்றுண்டியாகத் தயாரித்து வெறுந் தேநீருடன் உண்ணுவதற்குக் கொடுப்பார்.சிற்றுண்டிகள் அரிதாகக் கிடைக்கும் அந்தக் காலப்பகுதியில் எமக்கு அது தேவாமிர்தமாக இருக்கும்.”எந்த அசாதாரண சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொண்டு மற்றவர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டு தன்னலமற்ற வாழ்வு வாழ்வது” ஒரு சிறந்த போராளிக்கான அடையாளம் ஆகும்.அது மிருணா அக்காவிடம் முழுமையாகக் காணப்பட்டது.

பின்பு கிளாலிக் கடற்கரையோரப் பகுதியில் மிருணா அக்காவின் ஆர.பி.ஜி அணியும் வேறு சில பெண் போராளிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எமது பெண் போராளிகளின் காவலரணை நோக்கி இராணுவத்தினரின் காலாட்படை அணியொன்று யுத்த டாங்கி(tank)சகிதம் முன்னேறி வந்து கொண்டிருந்தது.அதன் போது மிருணா அக்காவும் அவரது உதவியாளரும் ஆர.பி.ஜியுடன் மூவிங் பங்கரூடாகச் சென்று தாக்கி அந்த யுத்த டாங்கியை முன்னோக்கி நகர விடாமல் திறமையாகச் செயற்பட்டு இராணுவத்தினருக்கு பேரிழப்பினை ஏற்படுத்தி வெற்றிகரமாக இராணுவத்தினரின் காலாட்படை அணியினை பின்னோக்கி நகரச் செய்தனர்.இதன் போது ஏற்பட்ட நேரடி மோதலில் மிருணா அக்காவின் உதவியாளராக இருந்த போராளி இரண்டு கைகளிலேயும் பாரிய விழுப் புண்ணடைந்து மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதன் பிறகு மிருணா அக்கா மட்டுமே தனியே தனது ஆர்.பி.ஜியைத் திறமையாகக் கையாண்டார்.பின்பு எமது பெண் போராளிகள் தமது காவலரணை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் போது இராணுவத்துடருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் மிருணா அக்கா தனது ஆர்.பி.ஜியைத் தனியாகக் கையாண்டு மிகவும் உத்வேகத்துடனும் மனோலிமையுடனும் போரிட்டு 05.10.2000 அன்று இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலால் லெப்ரினன்ட் மிருணா/முல்லையரசியாக ஈழ மண்ணை முத்தமிட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டாள்.

“ஆயிரம் ஆயிரம் வீரர்களை விதைத்தோம் கல்லறை வரிசைகள் நீண்டனவே….அந்த வரிசையில் சுடர்கள் ஏற்றிடும் போது நெஞ்சினில் நெருப்பது மூழ்கிறதே….”

– நிலாதமிழ்.

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply