Home / மாவீரர்கள் / பதிவுகள் / படகுக்காவி (டொக் )

படகுக்காவி (டொக் )

அந்த நடவடிக்கை திட்டமிட்டதுதான். எதிரியின் மூர்க்கமான நகர்வால் வன்னி மண் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலம் அது. முப்படைகளின் நகர்வுகளையும் மரபணியாய் தோற்றம் பெற்றுக்கொண்டிருந்த எமது அணிகள் எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்தன.

நாளும் எல்லைக் காவலரண்களில் வீரச்சாவுகளும், விழுப்புண் அடைபவர்களினதும் பட்டியல்கள் நீண்டுகொண்டிருந்தன.

வெற்றிடங்கள் அடைக்கப்பட வேண்டியவையே. இல்லாது போனால் எதிரி எம் மண்ணை, மக்களை ஆக்கிரமித்து விடுவது தவிர்க்க முடியாது போய்விடும்.

வெற்றிடங்களை நிரவ தென்தமிழீழத்திலிருந்து படையணிகளை கடல்வழியாக நகர்த்துவதென்று முடிவாகிற்று.

நேர காலமின்றி கொக்கிளாய் தொடங்கி தென்தமிழீழக்கடல் எல்லையோரக் காவலரண்கள் வரை விழிப்பாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கும். கூடவே துல்லியமாக இலக்குகளை இனம் காட்டும் ரேடார்கள் இயங்கும். அதைப் போலவே கடலில் அசையும் கலங்களும்.

கடல்வழிப்பாதை என்னவோ இறுக்கம்தான். சண்டை செய்வதென்றாலும் புடவைக்கட்டில் இருந்து போராளிகளை முல்லைத்தீவிற்கு நகர்த்துவதென்று முடிவாகிற்று.

இதற்கான கடலிறக்கும் பணிக்கான சண்டைப்படகுகளும், விநியோகப்படகுகளும் தயார்படுத்தும் வேலைகள் வேகமாக இயக்கம் பெற்றிருந்தன.

புளியமர நிழலில் நின்றிருந்த சின்னவனின் கரும்புலிப் படகும் இணைக்கப்பட்டிருந்தது. அனைத்துப் போராளிகளும் தமக்குத்தரப்பட்ட பணியினை உணர்ந்து செயற்பட்டனர்.

விரிக்கப்பட்டிருந்த வரைபடத்தின் முன் முளைவிட்டிருந்தது கடற்கலங்கள். அவற்றினது நகர்வுப் பாதைகள் தெளிவாக குறிக்கப்பட்டிருந்தது.

விநியோகப்படகுகளில் வரும் போராளிகளிற்கு எந்த விதமான இடையூறுமற்று அவர்களைப் பாதுகாப்பாகக் கரையேற்ற வேண்டும்.

அதுவும் எதிரி விரித்திருக்கும் வலைப்பின்னல் கண்காணிப்பு, அதிவேகக் கலங்களை ஊடறுத்து.

வரைபடம் சொன்ன சேதியினை உள்வாங்கிய போராளிகளையும், படகுகளையும் சுமந்தவாறு டொக்குகள் பாதைகளால் கடற்கரையை நோக்கிப் பவனி வந்தன. சண்டைக்குத்தான் படகுகள் கடற்கரையை நோக்கி அசையும் என்பதை அறிந்திருந்த மீனவ கிராம மக்கள் விழிகள் விரிய போராளிகளைப் பார்த்தார்கள்.

விழி விரிப்பில் போராளிகளான அவர்கள் உறவுகளும் வந்தார்கள். கூடவே அவர்களது நேசத்திற்குரிய போராளி முகங்களும் தெரிந்தன.

அம் மக்களது உணர்வுகள் மௌனமாக கடற்களமாடப் போகும் போராளிகளது நலன்களை வேண்டியிருக்கும்.

ஒன்று, இரண்டு, மூன்றென தொடர் வரிசையில் படகுகளை கடலிற்குள் இறக்கி விட்டு படகுகளை சுமந்த டொக்குகள் வெறுமையாகின.

களமாடி வரும் படகுகளை ஏற்ற அவைகளும் கரையில் காத்திருக்கும்.

முல்லைத்தீவிலிருந்து, செம்மலையைத் தாண்டி அசையும் படகுகள், இருளை ஊடறுத்து, இலக்குகளாய் ரேடார்களில் பகைவனிற்கு இனம்காட்டிக் கொண்டிருக்க.

பகைக்கலங்கள் தயாராகிவிட்டன. அக்கடற்களத்தில் பகைக்கலங்களே வலிமை பொருந்தியவை என்றாலும், எமக்கான தேவைகள் அதிகம் என்பதால் எதிரியோடு எதிர்த்து என்றாலும் பணியை முடிக்க வேண்டும். எமக்கும் எதிரிக்குமான தூரங்கள் குறையக் கொக்குத்தொடுவாய்க்கு நேரே எமது படகுகளை எதிரி வழிமறிக்க ஆரம்பித்து விட்டான்.

நெருப்புக்கு கதிர்கள் ஒலியோடு எரியத் தொடங்கிவிட்டன. விநியோகப் படகுகள் தங்களது ,லக்கு நோக்கி நகர, அவற்றை மறிக்கும் ஆவேசத்தோடு பகைக்கலங்கள்.

அக்கலங்களை அடித்து விரட்டியவாறு சண்டைப்படகுகள் விநியோகப் படகணிகள் முன்னேறப்பாதை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தன.

புடவைக்கட்டுக்குள் போராளிகளைப் பக்குவமாய் ஏற்றும் விநியோகப் படகுகளை பாதுகாத்தவாறு, எதிரிப்படகுகளை அடித்து விரட்டிய போது சண்டைப்படகுகளிற்கும் எதிரிக்குமான தூரம் 5 கிலோ மீற்றராக மாறி இருந்தது.

எட்ட நின்றும் எதிரி சுட்டுக்கொண்டிருந்தான். அசையும் விநியோக அணிகளை ரேடாரில் இனம் கண்டு அவற்றைத் தாக்கப் பாய்ந்தோடும் பகைக் கலங்களை மறித்து சண்டையிட்டவாறு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தன. சண்டைப்படயணிகள்.

எதிரியின் கலங்களும் எமது சண்டைப்படகுகளும் கிளித்தட்டு மறித்துக் கொண்டிருக்க எவ்விதமான இடையூறுமின்றி போராளிகள் முல்லையில் தரையிறங்கிக் கொண்டிருந்தார்கள்.

இருள் கவிழ்ந்த நேரத்தில் இருந்து நடுச்சாம நேரத்தையும் தாண்டி புடவைக்கட்டிலிருந்து செம்மலை வரையான கடற்பரப்பு அதிர்ந்து கொண்டேயிருந்தது.

பணிபூரணமாகிக் கொண்டிருந்த தருணம் பகைக்கும் மறக்க முடியாத பாடம் ஒன்றை கற்பிக்க வேண்டும் என்ற மூர்க்கத்தோடு எதிரிக்கலங்களை நெருங்கித்தாக்கிய போது, சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த சின்னவன் அவனோடு சிறியும் இணைந்து அகலக்கோடும் நெடுங்கோடும் இணைந்த புல்மோட்டைக் கடற்பரப்பில் P452 என்ற இலக்கமுடைய டோறாவை சிதைத்து அழித்தார்கள்.

விடிவெள்ளி தோன்றியிருந்தது. பணியும் நிறைவடைந்திருந்தது;

இழப்போடு பகைவனும், நிறைவோடு போராளிகளும், முல்லைத்தீவுக் கரையில் படகுகளை டொக்குகளிற்கும் உரிய படகுகள் கரையேறிவிட்டன. கப்டன் சின்னவனையும், மேஜர் சிறியையும் அவர்களது கரும்புலிப் படகையும் காவித்திரிந்த டொக் தனித்து நின்றது.

டொக்கின் தனிமையில் பல உண்மைகள் உறங்கிக்கொண்டிருந்தன. தமிழீழ தேச விடிவிற்காய் படகுகளைக்காவும் டொக்குகள் படகுகளின் அர்ப்பணிப்போடு தனித்து விடுவது தவிர்க்க இயலாதது நிரந்தர விடிவிற்காக, நாளையும் டொக்குகள் வெறுமையாகவே கடற்கரையில் காத்திருக்கும்.

Fighting-boat-of-sea-tigers-31

Fighting-boat-of-sea-tigers-1

Fighting-boat-of-sea-tigers-2

எழுத்துருவாக்கம்: அலையிசை
நன்றி – சுதந்திரப்பறவை இதழ்.

About ehouse

Check Also

லெப்.கேணல் ராஜன்

உறுதியின் உறைவிடம்…. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளனாக முத்திரை பதித்தவன். அன்றையநாள் ...

Leave a Reply