Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / லெப்.கேணல் வரதா / ஆதி

லெப்.கேணல் வரதா / ஆதி

தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் தலை சிறந்தோரையும் கொண்டது தான் வல்வைபூமி.எவருக்குமே கிடைத்தற்கரிய கலியுகக் கடவுளான எமது ஒப்பற்ற பெருந் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த ஊராகவும் இது திகழ்வதால் தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகின்றது.

இத்தகைய வரலாற்றுப் பெருமை மிக்க இந்த ஊரிலே தான் திரு.திருமதி யோகராசா இணையருக்கு ஒரு அக்கா,இரண்டு அண்ணாக்களுடன் கடைசிச் செல்வப் புதல்வியாக சந்திரகுமாரி எனும் நாமத்துடன்01.11.1969 இல் எங்கள் வரதா அக்கா வந்துதித்தார்.அவர் எமது தேசியத் தலைவருக்கு நெருங்கிய உறவினர் என்ற பெருமையையும் பெரும் பேற்றையும் தமதாக்கிக் கொண்டுள்ளார்.அதன் காரணத்தினால் சந்திரகுமாரி அக்காவுக்கு சிறு வயது முதல் இயல்பாகவே மிகுந்த நெஞ்சுரமும் தலைமைத்துவப் பாங்கும் இரத்தத்தில் ஊறியே காணப்பட்டது.

அவரது குடும்பமானது மாமிச உணவு உண்ணாத பரம்பரைச் சைவக் குடும்பம் ஆகும்.அவரது தந்தையார் அரசாங்க எழுதுவினைஞராகக் கொழும்பு மாநகரத்திலே பணியாற்றி வந்தார்.இதனால் சந்திரகுமாரி அக்காவும் தனது சிறு வயதுக் கல்வியை கொழும்பிலே கற்றார்.பின்பு 1977ஆம் ஆண்டு தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப் பாரதூரமான இனக் கலவரத்தின் காரணத்தினால் அவரது குடும்பம் கொழும்பை விட்டு இடம்பெயர்ந்து மீண்டும் வல்வெட்டித்துறையில் வசித்து வந்தனர்.சந்திரகுமாரி அக்காவும் தனது மிகுதிப் பாடசாலைக் கற்கை நெறியினை வல்வெட்டித்துறையிலுள்ள மிகவும் பிரபல்யம் பெற்ற கல்லூரியான சாரண இயக்கத்தில் அகில இலங்கை வரை சென்று சாதனை படைத்த யாழ்.வல்வை சிதம்பராக் கல்லூரியில் தொடர்ந்தார்.

எம் தலைவன் பிறந்த மண்ணிலே பிறந்த காரணத்தினால் “கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்”என்ற முது மொழிக்கேற்ப சந்திரகுமாரி அக்காவும் சிறு வயது முதல் வீரத்தில் மட்டுமல்ல கல்வியறிவிலும் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார்.பாடசாலையில் நடைபெறும் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகளின் போது தட்டெறிதல்,குண்டெறிதல்,மரதன் ஓட்டப்போட்டி போன்றனவற்றில் பங்குபற்றி மிகச் சிறப்பாக விளையாடி தனது இல்லத்திற்கு பல பரிசுக் கேடயங்களையும் பெருமையையும் பெற்றுக் கொடுத்தார்.படிப்பிலும் குறை வைக்கவில்லை.

1985ஆம் ஆண்டில் அவர் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற வல்வை நூலகப் படுகொலை அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.ஆனாலும் தனது கல்வியை மனந் தளராது தொடர்ந்து க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் 1988வது அணியில் வர்த்தகப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கல்வி கற்று வந்தார்.

இவர் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில்1987-1988 களில் இந்திய வல்லாதிக்க இராணுவத்தினரின் கெடுபிடிகளினால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டிருந்தார்.இந்திய இராணுவத்தின் அத்தனை கெடுபிடிகளுக்குள்ளும் தனது கல்வியறிவைப் பூர்த்தி செய்து முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கல்வி கற்று 1988இல் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்றும் இலங்கை அரசினால் தமிழ் மாணவர்களின் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட தரப்படுத்தல் கொள்கை மூலம் ஏற்பட்ட வெட்டுப்புள்ளிப் பிரச்சனையினால் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.பின்பு 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது பெண் போராளிகளின் சுதந்திரப் பறவைகள் அமைப்பில் இணைந்து பணியாற்றி வந்தார்.

12.05.1985இல் க.பொ.த சாதாரணதரம் படிக்கும் போது நடைபெற்ற வல்வை நூலகப் படுகொலை, தரப்படுத்தலின் விளைவாக1988இல் க.பொ.த உயர்தரத்தில் ஏற்பட்ட பிரச்சனை,02.08.1989இல் நடைபெற்ற வல்வைப் படுகொலை போன்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் அவரை எமது போராட்டத்தின் பால் ஈர்த்தது.

இதன்பால் 1990இல் இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியில் சந்திரகுமாரி அக்காவும்”அடுப்பங்கரைகளிலும்,சினிமா கொட்டகைகளிலும் சிந்தைகளைப் பறி கொடுத்து தூங்கிக் கிடந்திடாமல் அலங்கார ஆடைகளையும் அழகு ஆபரணங்களையும் அணிந்து திரிந்து போலித்தனமான புளகாங்கிதம் அடையாமல் புரட்சிகரக் கருத்துக்களை உறுதியாகப் பற்றி போர்க் குணம் கொண்ட மங்கையாய்க் களம் புகுந்து எமது நீதியான யுத்தத்தின் மூலம் அநீதியான யுத்தமனைத்திற்கும் முடிவு கட்டலாம்”என்றும்”நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது நாயகன் கடமை மட்டுமல்ல நமது கடமையுமாகும்” என்பதனையும் உணர்ந்து எழுச்சி கொண்டு மகத்துவம் மிக்க எம் பெருந் தலைவன் அணியில் இணைந்து மகளிர் பயிற்சிப் பாசறையில் 11வது அணியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு வரதா எனும் பெயர் கொண்டு வரிப்புலியாகினார்.

பின்னர் அவர்களது பயிற்சி முகாமிலேயிருந்து 150போராளிகளைத் தேர்ந்தெடுத்து எந்த ஆபத்தான போர்ச் சூழலையும் எதிர் கொண்டு நிற்கவல்ல துணிவாற்றலுள்ள போராளிகளாக மாற்றும் மிகத் திறமையான கடுமையான விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டு பலாலிப் பகுதி,யாழ்.கோட்டைப் பகுதி போன்ற இடங்களில் போர் முன்னரங்கப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.அதில் வரதா அக்காவும் 7பேர் கொண்ட அணி ஒன்றிற்கு அணித் தலைவியாக சிறிது காலம் யாழ்.கோட்டைப் பகுதிக்கு அனுப்பப்பட்டார்.பின்பு பலாலிப் பெருந்தளத்தின் போர் முன்னரங்கப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த பெண் போராளிகளின் போர் அணிகளுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் மினி முகாம்கள் மீது துணிகரத் தாக்குதல்களை நடாத்திச் சாதனைகள் படைத்தார்.மேலும்,அவர் சைவ உணவு உண்ணுபவராக இருந்ததால் தனக்குரிய சைவ உணவு கிடைக்காத பட்சத்திலும் தான் பசியிருந்தபடி பலாலிப் போர் முனையில் நிற்கும் தனது அணியின் சக போராளிகளுக்கு ஒரு அணித் தலைவி எனும் பொறுப்புடன் ஒரு தாயாக நேரம் தவறாது பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இராணுவத்தினரின் பதுங்கித் தாக்குதல்களினை வெகு சாமர்த்தியமாகச் சமாளித்துக் கையாண்டு உணவுப் பொட்டலங்களை எடுத்துச் செல்லும் தன்னலமற்ற சேவையையும் புரிந்தார்.

எமது அமைப்பின் பெண் போராளிகளின் படையணிகள் வளர்ச்சி பெற்று விரிவாக்கம் கண்டதுடன் விடுதலைப் போரிலும் முக்கிய பங்காற்றியது10.07.1991 இல் தொடங்கிய ஆகாய கடல் வெளிச் சமரின் போது இனங் காணக் கூடியதாக இருந்தது.இப் பெருஞ் சமரில் பெண் போராளிகளைக் கொண்ட பல படைப் பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு துணிவாற்றலுடன் வீர சாதனைகள் படைத்தன.இச் சமரில் வரதா அக்காவும் 7 பேர் கொண்ட அணிக்கு அணித்தலைவியாகப் பொறுப்பேற்றுச் சென்று நெஞ்சுறுதியுடனும் ஓர்மத்துடனும் சமரிட்டு வீர சாதனை படைத்தார்.

இதன் மூலம் சர்வதேச இராணுவ-அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஒன்று உருவானது.அதாவது புலிகள் ஒரு முழு அளவிலான மரபுவழி இராணுவத்தைப் போன்று செயற்பட்டிருக்கின்றார்கள் என்றும் இந்தச் சமரை அவதானிக்கும் போது இலங்கைத் தீவில் இரண்டு இராணுவங்கள் உள்ளது போல் தோன்றுகின்றது என்பதும் ஆகும்.இந்தக் கருத்தானது எமது புரட்சிகர இயக்கத்துக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியே ஆகும்!.

ஆனையிறவுச் சமரில் பெண் போராளிகள் முக்கிய பங்கு வகித்ததைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட”மின்னல் இராணுவ நடவடிக்கை”என்ற பெயரால் தமிழீழத்தின் “இதயபூமி” என்றழைக்கப்படும் மணலாற்றில் நடைபெற்ற நடவடிக்கைக்கு எதிராக நடாத்தப்பட்ட தற்காப்புச் சமரிலும் லெப்.கேணல் அன்பு அண்ணா தலைமையில் பெண் போராளிகள் பங்கு கொண்டனர்.இலங்கை இராணுவத்தின் இவ் இராணுவ நடவடிக்கையின் நோக்கம் வட தமிழீழத்தையும் தென் தமிழீழத்தையும் இரண்டாகப் பிரிப்பதும் எம்மை பலவீனப்படுத்தி அதன் மூலம் யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றுவதாகும்.பெண் போராளிகளுக்கு இம் முறியடிப்புச் சமரானது புதுமையான காட்டுச் சமர் அனுபவமாக இருந்தது.

ஏனெனில் காட்டுச் சமர்களில் அவர்கள் அதுவரை பங்கு பெறவில்லை.அக்காட்டைப் பொறுத்தவரை திக்குத் திசை தெரியாது;சூரியன் எங்கே உதிக்கிறது மறைகிறது எனத் தெரியாது;இராணுவம் எங்கிருந்து வருவார்கள் எனத் தெரியாது;காயமடைந்த வீரச்சாவடைந்த போராளிகளைப் பின் தளத்திற்கு நகர்த்துவதற்குப் பாதைகள் இல்லை;இதைவிட இராணுவம் ஏவிய எறிகணைகள் மரங்களில் வீழ்ந்து வெடிப்பதால் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.இருந்தாலும் இக் களமுனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து போராளிகள் வரைபடங்களின் உதவிகளுடனும் இராணுவத்தின் நகர்வுகளை தொலைத் தொடர்புக் கருவியூடாக(monitoring)ஒட்டுக் கேட்டும் இத் தாக்குதலின் விநியோக நடவடிக்கையை தடையற மேற்கொண்டும் மற்றும் விழுப்புண்ணடைந்த, வீரச்சாவடைந்தவர்களையும் பின் நகர்த்தியும் கடுமையாக நெஞ்சுறுதியுடன் போரிட்டனர்.

இச் சமரில் வரதா அக்காவும் ஒரு அணிக்கு தலைவியாகப் பொறுப்பேற்று மிகுந்த ஒர்மத்துடனும் உத்வேகத்துடனும் துணிவாற்றலுடனும் சமரிட்டு பின்பு இடது கையில் பாரிய விழுப்புண்ணடைந்து மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பின் நகர்த்தப்பட்டார்.ஆனையிறவுச் சமரின் பின் வெடிபொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியிலும் இப் பாரிய முன்னேற்ற நடவடிக்கையை முறியடித்தமை எமக்கு பெரும் வெற்றியே!

பின்னர் வரதா அக்கா இடது கையில் ஏற்பட்ட பாரிய விழுப்புண்ணின் காரணத்தினால் அக்கையானது சரிவர இயங்க முடியாமல் இருந்த படியால் 1991 இலிருந்து 1993 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதி வரை நீண்ட காலம் மருத்துவ சிகிச்சையிலே இருந்தார்.பின்னர் நிதித்துறை மகளிர் பிரிவுக்கு தகுதி வாய்ந்த ஒருவர் பொறுப்பாளராக பதவி வகிக்க தேவை என்றபடியால்,வரதா அக்காவின் தலைமையேற்று நடாத்தும் பாங்கு,பொறுமை,சகிப்புத் தன்மை கல்வித் தகுதி போன்றன இனங் காணப்பட்டு 1993இல் நிதித்துறை மகளிர் பிரிவுக்கு பொறுப்பாளராக உள்வாங்கப்பட்டார்.எமது நிதித்துறை மகளிர் பிரிவிலே ஆரம்பத்திலே கணக்காய்வுப் பகுதி,ஆயப்பகுதி போன்ற பகுதிகள் மட்டுமே இருந்தன.வரதா அக்கா கணக்காய்வுப் பகுதியைப் பொறுப்பேற்று நிர்வகித்தார்.ஆயப்பகுதியை லெப்ரினன்ட் சாந்தாக்கா பொறுப்பேற்று நிர்வகித்தார்.பின்பு லெப்ரினன்ட் சாந்தா அக்கா களப் பணிக்கு சென்றதும் வரதா அக்காவே ஆயப்பகுதியையும் சேர்த்து திறம்பட நிர்வகித்தார்.

பின்பு எமது நிதித்துறை மகளிர் பிரிவானது கணக்காய்வுப்பகுதி,தையல் பகுதி,உணவு வழங்கல் பகுதி,நகைத் தொழிலகம்ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரி எனப் படிப்படியாக விரிவாக்கம் கண்டது.1993 தொடக்கம் 2001கடற்கரும்புலிகள் அணிக்குச் செல்லும் வரை அவையனைத்தினதும் நிர்வாகப் பணியினையும் திறமையாக மேற்கொண்டதுடன் அத்தகைய நிர்வாகப் பளுவுக்குள்ளும் யாழ்ப்பாணத்தில் நகைவாணிபம்,சேரன் களஞ்சியங்கள்,கலியுகவரதன் உதிரிகள் வாணிபம்,எழிலகம் புடவை வாணிபம் போன்றவற்றிலும்.1996இற்குப் பின்னர் வன்னியில் இளவேனில் எரிபொருள் வாணிபம்,கலியுகவரதன் உதிரிகள் வாணிபம் போன்றனவற்றிலும் கணக்காய்வுப் பணியைத் திறம்பட மேற்கொண்டார்.மேலும் தனது போராளிகளை துறை சார் வல்லுனர்களாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் 1994 இல் யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் தானும் கற்கை நெறியை மேற்கொண்டு ஏனைய போராளிகளையும் அக்கற்கை நெறியினை மேற்கொள்ள வழிகாட்டினார்.அத்துடன் எமது கணக்காய்வுப் பகுதி பெண் போராளிகளுக்குத் தேவையான மேலதிக வகுப்புக்களுக்கு கற்பிப்பதற்கு யாழில் பிரசித்தி பெற்ற வர்த்தகம்,கணக்கியல்,ஆங்கிலம் தொடர்பான ஆசிரியர்கள்,விரிவுரையாளர்களை ஒழுங்குபடுத்திக் கொடுத்ததுடன் தானும் அவர்களுடன் இணைந்து அக்கற்கை நெறியினை மேற்கொண்டு தனது அறிவாற்றலையும் வளர்த்துக் கொண்டார்.

எனக்கும் வரதா அக்காவுக்குமான உறவானது 1995 மார்கழி மாதத்திலிருந்து தான்(நாங்கள் அடிப்படைப் பயிற்சி முடித்து நிதித்துறை கணக்காய்வுப் பகுதிக்கு வந்ததிலிருந்து)ஆரம்பித்தது.நாங்கள் 17வயதில் எமது குடும்ப உறவுகளைப் பிரிந்து முற்றிலும் வித்தியாசமான போராட்ட வாழ்க்கையினில் காலடியெடுத்து வைத்து ஆரம்பித்த போது வரதா அக்கா தான் எங்களை ஒரு தாயைப் போன்ற பரிவுடனும் பாசத்துடனும் அரவணைத்தார்.எமக்குத் தாயில்லாக் குறையை அவரே நிவர்த்தி செய்தார்.அவருக்கு கோபம் என்பது வந்து நான் ஒருபோதும் கண்டதில்லை.அப்படி கோபம் வந்தாலும் அதனை அடக்கி ஒரு சிறிய சிரிப்புடன் சமாளித்துவிட்டுச் செல்லுவார்.அவரிடம் எப்போதும் ஒரு அன்புடன் கலந்த கண்டிப்பும் ஆளுமையும் காணப்படும்.அவர் எப்போதும் எங்களை தான் ஒரு பொறுப்பாளர் என்ற ரீதியில் அதிகாரம் செய்து கட்டளையிட்டதும் இல்லை.நாமும் ஒரு போதும் அவரது கட்டளையை மீறியதும் இல்லை.எப்பொழுதும் நாம் செய்யும் சிறு சிறு குறும்புகள்,குழப்படிகளை ஒரு தாயைப் போன்ற உணர்வுடன் ரசிப்பார்.அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூறுகின்றேன்.

எங்கள் முகாமில் ஒரே வயதுடைய மற்றைய போராளிகளை விட வயதில் குறைந்த ஏழெட்டுப் பேர் இருந்தோம்.அதனால் நாங்கள் அந்த வயதிற்குரிய குறும்புகள்,குழப்படிகளுடனேயே எப்போதும் காணப்படுவோம். ஒரு நாள் இரவு நேரத்தில் எமது பணி முடித்து முகாம் திரும்பி இரவு உணவினை உட்கொண்டு விட்டு ஒரு அறையில் எல்லோரும் சேர்ந்திருந்த குஷியில் பாட்டு,நடனம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தோம்.மற்றைய அறையில் சில வயதில் கூடிய போராளிகள் தமது வாணிபங்களின் ஆவணங்களை முகாமில் கொண்டு வந்து வைத்திருந்து பொறுப்பாகப் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு எங்களின் சத்தமானது இடைஞ்சலுடன் கூடிய தொந்தரவாக இருந்ததின் காரணத்தினால் எங்களை அமைதியாக இருக்கச் சொல்லுமாறு வரதா அக்காவிடம் சென்று புகாரளித்தார்கள்.

108119997_2328815470746665_2584717363401519384_n

இதனால் வரதா அக்கா எங்களது மகிழ்ச்சியையும் கலைக்க விரும்பாமல் பணிபுரிபவர்களையும் சமாளிக்க வேண்டும் என நினைத்து,முதலாம் கட்டமாக ஒரு போராளியை எச்சரிக்கை செய்ய அனுப்புவார்.ஆனால் வந்தவரும் எங்களுடன் சேர்ந்து அந்த அமர்க்களத்தில் ஈடுபடுவார்.பின்பு மற்றுமொருவரையும் அனுப்பி அவரும் முதல் அனுப்பியவரை ஒப்பி எங்களுடன் சேர்ந்து அமர்க்களத்தில் ஈடுபட்டதும் இறுதி எச்சரிக்கையாக தானே வரதா அக்கா களத்தில் குதிப்பார்.எங்களுடைய மகிழ்ச்சியை உடனேயே தடை செய்யவும் விரும்பாமல் கொஞ்ச நேரமாவது நீடிக்கட்டும் என்று இடைவெளி விட்டு பணி புரியும் மற்றைய போராளிகளின் மனதையும் நோகடிக்காமல் தானே எங்களிடம் வந்து திட்டுவது மாதிரி நடித்து(வாய் மட்டும் தான் எங்களைப் பேசும் அதேவேளை அவரது மூக்கும் கண்ணும் சிரிக்கும்)அதிக பட்ச தண்டனையாக வாய்க்கு துவாய் கட்டும் தண்டனையை மட்டும் தான் தருவார்.நாங்கள் அந்தத் துவாயை வாயில் கட்டிக் கொண்டும் எங்கள் அமர்க்களத்தைத் தொடருவோம்.

வரதா அக்கா தான் பொறுப்பாளர் என்ற சலுகையை ஒரு போதும் எடுத்துக் கொண்டது இல்லை.தன்னைப் போலவே தான் மற்றப் போராளிகள் என்று நினைப்பார்.அவர் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவராக இருந்ததால் எமக்கு உணவு வழங்கல் பகுதியினால் வரும் உணவில் மரக்கறி உணவினை சிலவேளைகளில் அவர் பணி முடிந்து வரத் தாமதமானால் உணவு முடிந்துவிடும் என்ற காரணத்தினால் ஒரு போராளி எடுத்து ஒளித்து வைப்பதுண்டு.ஆனால் வரதா அக்கா இப்படி தனக்காக பிரத்தியேகமாக உணவு எடுத்து வைப்பதை எப்போதும் விரும்புவதில்லை.நாமும் சில வேளைகளில் பணி முடித்து வரத் தாமதமானால் கறி தீர்ந்து விடும்.அதனால் நாங்கள் பசியில் வரதா அக்காவுக்காக எடுத்து ஒளித்து வைத்திருக்கப்படும் கறியினை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து எடுத்து உண்டு விடுவோம்.அதனைக் கண்டதும் வரதா அக்காவுக்கு கறி எடுத்து ஒளித்து வைத்த போராளி எங்களைத் திட்டுவார்.ஆனால் வரதா அக்கா”பிள்ளைகளுக்கில்லாத உணவு எனக்கெதுக்கு…அவர்கள் சாப்பிடட்டும்…அவர்களைத் திட்டாதே”என அந்தப் போராளிக்கு கூறிவிட்டு சோற்றுடன் கறிக்குப் பதிலாக பச்சை மிளகாய்,வெங்காயத்துடன் தனது உணவினை முடித்துக் கொள்ளுவார்.

எல்லாப் போராளிகளையும் போலவே வரதா அக்காவும் மக்களை நேசித்த போராளி.எமது வாணிபங்களில் காலாண்டு,அரையாண்டு,ஆண்டிறுதி காலப்பகுதிகளில் இருப்பெடுத்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதுண்டு.இதனால் பணி முடிய இரவு நேரமாகி விடும்.ஆதலினால் அங்கு பணி புரியும் பெண் பணியாளர்களை வரதா அக்காவே தனது உந்துருளியில் ஏற்றிச் சென்று அவர்களது வீட்டில் பாதுகாப்பாக இறக்கிவிட்டு வருவார்.அதனால் பணியாளர்களின் பெற்றோர்களும் அவர் மேல் தீராத அன்பும் நன்மதிப்பும் வைத்திருந்தார்கள்.

மேலும் ஒருமுறை வரதா அக்கா இரவு நேரத்தில் பணி முடித்து ஒரு போராளியுடன் உந்துருளியில் பணியிடத்தில் சைவ உணவு கிடைக்காத படியால் மதிய உணவையும் உண்ணாத காரணத்தினால் மிகுந்த பசியுடன் முகாம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்பொழுது அவருக்கு முன்னால் ஒரு உந்துருளியில் பொது மகன் ஒருவர் தனது நிறை மாதக் கர்ப்பிணி மனைவியை ஏற்றிக் கொண்டு உந்துருளியின் முகப்பு விளக்கு பழுதடைந்த காரணத்தினால் இருட்டில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருந்தார்.இதனை அவதானித்த வரதா அக்கா அவர்களிடம் முகவரியைக் கேட்டு அவர்களது வீடு எமது முகாமிலிருந்து சிறிது தூரத்தில் தான் உள்ளது என்பதை அறிந்து அவரைப் பின் தொடர்ந்து சென்று அவருக்கு தனது உந்துருளி முகப்பு விளக்கின் மூலம் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி தனது கடும் பசியையும் மறந்து அவர்களது வீடு வரைக்கும் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டுத்தான் வந்தார்.அந்தளவுக்கு சாதாரண பொது மக்களை நேசித்த போராளி அவர்.இச் சம்பவத்தை அவருடன் வந்த போராளி எமக்கு போட்டுக் கொடுத்து அன்று தொடக்கம் நாங்கள் வரதா அக்காவைக் கண்டால்”குமார் குமார் லைற் அடி…கோழிக் கூட்டுக்கு லைற் அடி”என்ற பாடலைப் பாடி கிண்டலடிப்போம்.அவரும்”வாறனடி உங்களுக்கு”என்று செல்லமாக கோபித்தபடி, எங்களது கிண்டலை ரசித்தபடி செல்லுவார்.

எமது பிரிவிலிருந்து களப் பணிகளுக்குப் போய் ஒவ்வொரு போராளியும் வீரச்சாவடையும் போதும்”சேயை இழந்த தாய்ப் பசுவின் வலிக்கொப்பான” வேதனையடைவார்.எமது பிரிவிலிருந்து வீரச்சாவடைந்த எல்லா மாவீரர் குடும்பங்களின் இல்லத்திற்கும் தானும் செல்வதோடு மட்டுமல்லாது எங்கள் எல்லோரையும் கட்டாயம் செல்லுமாறு கூறி அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் தானே முன்னின்று செய்து எங்களையும் செய்விக்க வைப்பார்.

காலையில் எழுந்து சத்தியப் பிரமாணத்தை முடித்துக் கொண்டதும் எங்கள் எல்லோரையும் ஓட்டப் பயிற்சிக்கு அனுப்பிவிட்டு முகாமில் உள்ள மாவீரர் மண்டபத்திலுள்ள மாவீரர் படங்களுக்கு தனது கையாலே பூக்கொய்து வைத்து கடவுளர்கள் மாதிரி கௌரவித்து வணக்கம் செலுத்தி விட்டுத் தான் தனது அன்றைய பணியை ஆரம்பிப்பார்.
அத்துடன் மற்றைய புதிய போராளிகளுக்கு மிகவும் அன்பாகவும் ஆர்வத்துடனும் மிகத் தெளிவாக புரியக் கூடிய வகையிலும் கணக்காய்வுப் பணியைக் கற்றுக் கொடுப்பதிலும் வல்லவர்.நானும் 1997 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி விட்டு வரதா அக்காவுடன் தான் முதன் முதலில் கலியுகவரதன் உதிரிகள் வாணிபம்,இளவேனில் எரிபொருள் வாணிபம் போன்றவற்றில் பணிக்குச் செல்லும் பேற்றைப் பெற்றேன்.அங்கு அவர் எனக்கு கணக்காய்வுப் பணியினையும் பணியாளர்களுடன் அணுகும் முறையினையும் மிகவும் அன்புடனும் ஆர்வத்துடனும் தெளிவாகவும் கற்றுக் கொடுத்தார்.அவருடன் பணி புரிந்த ஒரு வருடத்திலேயே வாணிபங்களின் இலாப நட்ட முடிவுக் கணக்குகளை என்னால் தனியே தயாரித்து முடித்துக் கொடுக்கும் அளவிற்கு என்னை ஆற்றலுடன் வளர்த்து விட்டிருந்தார்.அன்று அவர் ஊட்டிய ஊக்குவிப்பும் அறிவும் ஆளுமையும் தான் பின் நாளில் நானும் ஒரு கணக்காய்வு அணியின் அணிப் பொறுப்பாளராக உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்தது.இப்படி போராளிகளை பணி ரீதியிலும் வளர்த்து விடுவதில் வல்லவர் அவர்.

எமது போராட்டத்தில் இணைந்த காலம் தொட்டு வரதா அக்காவுக்கு கரும்புலிகள் அணியில் இணைய வேண்டும் என்ற கனவு இருந்து கொண்டேயிருந்தது.எமது தேசியத் தலைவருக்கு ஐந்தாறு தடவைகள் கடிதம் அனுப்பி அனுமதி மறுக்கப்பட்டு வந்தும் மனம் சோராமல் திரும்பத் திரும்ப தன்னைக் கரும்புலிகள் அணியினுள் உள்வாங்குமாறு கடிதம் அனுப்பிக் கொண்டேயிருந்தார்.அவரது விடாமுயற்சியினாலும் தான் கரும்புலிகள் அணியில் இணைய வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததாலும் 2001ஆம் ஆண்டு ஆரம்ப காலப் பகுதியில் அவரை கடற்கரும்புலிகள் அணியில் உள்வாங்கப்படுவதற்கு அனுமதிக் கடிதம் தேசியத் தலைவரிடமிருந்து வந்தது.வரதா அக்காவுக்கோ தனது ஆசை நிறைவேறி விட்டதையிட்டு மிகப் பெரிய சந்தோசம்.ஆனால் எமக்கோ தாயைப் போல பரிவு காட்டிய எங்கள் வரதா அக்காவைப் பிரியப் போகிறோம் என்கிற கவலை.ஆனால் போராளிகள் என்றால் பிரிவும் மறைவும் சகஜம் தானே !நாம் அதனை வலிந்து ஏற்றுக் கொண்டு எமது துயரங்களை மனதில் அடக்கிக் கொண்டு வரதா அக்காவிற்கு விடை கொடுத்தோம்.

பின்பு கடற்கரும்புலிகள் அணியில் இணைந்து கடல் நீச்சற் பயிற்சி,கடல் கனரக ஆயுதப்( heavy weapon) பயிற்சி போன்ற அனைத்துப் பயிற்சிகளினையும் தனது சரிவர இயங்க முடியாத இடது கையுடன் தன்னை விட வயது குறைந்த இளம் போராளிகளுக்குச் சமமாக ஈடுகொடுத்து உத்வேகத்துடனும் அர்ப்பணிப்புடனும் துணிவாற்றலுடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் நிறைவு செய்து கொண்டு தனது இலக்கிற்காக காத்துக் கொண்டிருந்தார்.அத்துடன் (ரேடார்RADAR) மின் காந்த அலைக் கருவியூடாகக் கடற்படைக்கலன்களின் நகர்வினை அவதானித்து கட்டளையிடும் அதிகாரியாகவும் பணியாற்றினார்.

2001 இல் எமது போராட்டமானது பரிணாம வளர்ச்சியடைந்து நாம் யாழ் குடா நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு பலமாக இருந்தோம்.இலங்கை இராணுவமானது பலவீனமடைந்து காணப்பட்டது.இதன் காரணத்தினால் யாழ் குடாநாட்டையும் மொத்த தமிழீழத்தையும் நாம் மீட்டெடுத்து விடுவோம் என்று பயமடைந்து அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நரி மூளையுடன் நோர்வே அரசின் தலையீட்டுடன்22.02.2002 இல் நிரந்தரமான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எம்முடன் இணைந்து கையெழுத்திட்டார்.இதனால் மக்கள் இலங்கை அரசின் கபடத் தனத்தை உணராமல் தமக்குத் தீர்வு கிடைத்து விட்டது என மகிழ்ச்சியில் திகழ்ந்தார்கள்.
2004 காலப் பகுதியில் வரதா அக்காவும் திருமண வயதைக் கடந்து விட்ட காரணத்தினால் அவரின் தந்தையாரின் வேண்டுகோளிற்கிணங்க தேசியத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கட்டளைத் தளபதி ஒருவரை இணையேற்றார்.திருமணம் ஆகிவிட்டாலும் அவர் கடற்புலிகள் மகளிர் அணியிலேயே தனது பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருந்தார்.

2006 இல் மீண்டும் மூண்ட நாலாம் கட்ட ஈழப் போரின் காரணத்தினால் A9 பாதை மூடப்பட்டு மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்தன.இதன் காரணத்தினால் எமது போராட்ட மரபுப்படி”துணைவனும் துணைவியும் நடைமுறை வாழ்விலும் நாட்டை மீட்கும் மகத்துவமான விடுதலைப் போரிலும் சம பங்கு கொண்டு புறப்பட வேண்டிய வேளை இது தான் புறப்படுவோம்”என்று வரதா அக்காவும் அவரது துணைவரும் தத்தமது படையணிகளுடன் இணைந்து தமது பணியினை செவ்வனே மேற் கொண்டனர்.அந்த வகையில் வரதா அக்காவும் கடற்புலிகள் மகளிர் படையணியுடன் இணைந்து (ரேடார் RADAR) மின் காந்த அலைக் கருவியூடாக அவதானிக்கும் தொலை தூர நோக்கி கண்காணிப்பு பிரிவில் கட்டளையிடும் அதிகாரியாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டார். 30.10.2006 இல் மட்டக்களப்பில் இருந்து வன்னி நோக்கி காட்டு வழியாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போது எங்கள் வரதா அக்கா மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி எம்மையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மீளாத் துயில் கொண்டு விட்டார்.

நிலாதமிழ்

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை ...

Leave a Reply