கப்டன் சுடரொளி

வட தமிழீழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் வன்னித் தலை நிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையிலே மொட்டைக் கறுப்பன்,பச்சைப் பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் விளையும் விவசாயப் பூமியும் எத்தனையோ மாவீரர்களையும் கரும்புலி வீரர்களையும் நாட்டுக்கீந்த வீரப்பூமியுமான பூநகரி எனும் ஊரிலே ஐந்து அக்காக்கள்,மூன்று அண்ணாக்கள் கொண்ட மிகப் பெரிய அழகான குடும்பத்திலே திரு.திருமதி கந்தர் தம்பதியினருக்கு கடைசிப் புதல்வியாக 09.04.1974 இல் ஞானசகுந்தலா அக்கா பிறந்தார்.அவர்களது குடும்பமானது எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்ப காலம் முதல் தோள் கொடுத்து வந்த குடும்பம் ஆகும்.தேசப் பற்றுக் கொண்ட அந்தக் குடும்பத்தில் பிறந்த ஞானசகுந்தலா அக்காவின் புறச்சூழல்கள் அவருக்கு சிறு வயதில் இருந்தே விடுதலைத் தீயை வளர்க்கத் தொடங்கின.

அவரது தந்தையார் ஒரு புகழ் பெற்ற பாரம்பரிய விவசாயி ஆவார்.அவர் ஒரு விவசாயியாக இருந்த போதிலும் தனது குழந்தைகளை நாட்டின் தலை சிறந்த கல்விமான்களாக ஆக்க வேண்டும் என்ற கொள்கையில் வெயில்,மழை பாராது வயலில் கடும் பணி புரிந்து அதன் மூலம் வரும் வருமானத்தின் மூலம் தனது குழந்தைகளை நன்றாக கல்வி கற்க வைத்தார். அவர்களும் தந்தையின் கடின முயற்சியும் நம்பிக்கையும் வீண் போகக் கூடாது என்ற எண்ணத்தில் மிகவும் உத்வேகத்துடனும் ஊக்கமுடனும் கல்வி கற்று மூத்த புதல்வர்கள்,புதல்வியர்கள் எல்லோரும் நல்ல அரசாங்க உத்தியோகத்தில் பணி புரிந்து வந்தார்கள்.

அந்த வகையில் ஞானசகுந்தலா அக்காவும் பெயருக்கு ஏற்றபடி கல்வி ஞானத்தில் வல்லவராக தனது சிறு வயதுக் கல்வியை ஆண்டு 5 வரை பூநகரி செல்வபுரம் அ.த.க பாடசாலையிலும் பின்பு ஆண்டு 6 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை யாழ்.மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் பாடசாலையின் மாணவர் தங்கு விடுதியில் தங்கி நின்று கல்வி பயின்று வந்தார்.அவர் படிப்பு,விளையாட்டு,சதுரங்கப் போட்டி என்பனவற்றில் சிறந்து விளங்கினார்.கல்லூரியில் நடைபெறும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி தனது இல்லத்திற்கு நிறையப் பரிசுக் கேடயங்களைப் பெற்றுக் கொடுத்தார்.”விளையும் பயிரை முளையில் தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப பின்னாளில் சிறந்த ஒரு கணக்காய்வாளராக வருவதற்கு அடையாளமாக மிகக் கூரிய அறிவு படைத்து யாழ் மாவட்டத்திலே அனைத்துப் பாடசாலைகளுக்கு இடையிலாக நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் பல பரிசுகளை வென்று தனது கல்லூரிக்கு பெருமை பெற்றுக் கொடுத்தார்.அதுமட்டுமல்ல அவர் படிப்பிலும் சிறந்து விளங்கினார்.க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி அதி திறமைச் சித்திகள் பெற்று க.பொ.த உயர்தரத்தில் 1993வது அணியில் வர்த்தகப் பிரிவை தேர்ந்தெடுத்து கல்வி பயின்று வந்தார்.

எமது தமிழீழப் போராட்ட வரலாற்றில் 1991ஆம் ஆண்டு இடம் பெற்ற ஆகாய கடல் வெளி ஆனையிறவுச் சமரானது பெரும் முங்கியத்துவம் வாய்ந்தது.இந்நடவடிக்கையானது 10.07.1991 தொடங்கி 53 நாட்களாக நீடித்தது.இதன் போது நாம் 573 மாவீரர்களை விலையாகக் கொடுத்தோம்.

அந்தப் போர்க்களமானது இந்த உலகிற்கும் ஒரு செய்தியை உணர்த்தியது.அதற்கும் மேலாக எமது மக்களிற்கும் ஒரு நம்பிக்கையை உணர்த்தியது.நாம் எமது நாட்டிலே சுதந்திரமான ஒரு சொந்த அரசை நிறுவி அதைப் பாதுகாத்து, நாம் தமிழீழ மக்கள், இந்த நாடு எமது தமிழீழ நாடு என்று பெருமை கொண்டு உரிமையுடன் எமது சொந்த அரசை நிறுவி அதைப் பாதுகாத்து நாமே நமது நாட்டை அமைக்க எமக்கு உறுதியான ஒரு படை உண்டு ,அந்தப் படையில் எமது நாட்டுக்கான போராட்டத்தை எமது நாட்டுக்கான இராணுவத்தை அமைக்க முடியும்,அமைய முடியும் என்ற செய்தியை உலகிற்கு மட்டுமல்ல எமது எதிரிக்கு மட்டுமல்ல எமது மக்களிற்கும் உறுதியாக உணர்த்தி நின்றது ஆனையிறவுச் சமர்.

அந்த வகையில் ஞானசகுந்தலா அக்காவும் ஆ.க.வெ ஆனையிறவுச் சமர் நடை பெற்ற காலப்பகுதியில் 1991 ஆவணி மாதத்தில் இன்றைய எமது தேவை உறுதியுள்ள ஓர் இனம் என்றும் தனது சுதந்திரத்திற்காக எவரிலும் எவர் மீதும் தங்கியிருக்காது தனது சுதந்திரத்திற்கு தன்னையே நம்பி தன்னை அடிமை கொள்ள நினைக்கும் எவரையும் எதிர்த்து நின்று தனது நாட்டிற்காக தனது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடும் ஒரு வீராங்கனையாக தன்னை உருவாக்க தீர்மானித்து உணர்வு கொண்டு எமது போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.அங்கு எமது மகளிர் பயிற்சிப் பாசறையில் 23 ஆவது அணியில் அடிப்படைப் பயிற்சி பெற்று 1992ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் சுடரொளி எனும் நாமம் கொண்டு வரிப்புலியாகி அரசியல்துறைப் போராளியாக நியமிக்கப் பட்டார்.

1992-1993 ஆம் ஆண்டு வரை அரசியல்துறை மகளிர் பிரிவில் நிதிப் பொறுப்பாளராக தனது பணியைத் திறம்பட தியாக மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்புடனும் ஆளுமையுடனும் மேற்கொண்டார்.எமது போராட்டத்தைப் பொறுத்த வரையில் மக்கள் வேறு புலிகள் வேறு அல்ல.மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள் என இது உலகியல் ரீதியாக உலக நாடுகள் அனைத்தாலும் உணர்ந்து கொள்ளப்பட்ட விடயம் ஆகும்.

அந்த வகையில் சுடரொளி அக்காவும் தனது அரசியல் பணியின் போது மக்களோடு மக்களாகவே அவர்களில் ஒருவராகவே வாழ்ந்திருந்தார்.அவரது கனிவான பார்வையும் எந்நேரமும் சிரித்த முகமும் சுறுசுறுப்பும் அமைதியான சுபாவமும் எம் மக்களை அவர்பால் ஈர்த்தது.எமது போராட்டத்துக்கு உதவி செய்த மக்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று அவர்களின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கெடுத்து இயன்றவரை அவர்களுக்கு உதவி செய்வார்.மேலும் மக்களின் பிரச்சனைகள்,அத்தியாவசிய தேவைகள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவையான உதவிகள் போன்றனவற்றை அறிந்து உதவி செய்வார்.அந்த அளவுக்கு தனது மக்களை நேசித்த போராளி அவர்.

1991ஆம் ஆண்டு எமது போராட்டமானது பல துறைசார் வளர்ச்சிகளினைக் கண்டிருந்தது.அந்த வகையில் எமது தேசியத் தலைவர் தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவுடன் கலந்தாலோசித்து எமது நிதித்துறை வாணிபங்களின் கணக்கு ரீதியிலான நடவடிக்கைகளை நிர்வகிக்க போராளிகளினால் மட்டுமே அர்ப்பணிப்புடனும் இதய சுத்தியுடனும் செயற்பட முடியும் என்பதனை உணர்ந்து நிதித்துறை கணக்காய்வுப் பகுதி என்ற பிரிவினை உருவாக்கினார். எனவே அதற்கு கணக்கியல் ரீதியில் அறிவும் அனுபவமும் புலமையும் உடைய போராளிகள் மற்றைய பிரிவுகளில் இருந்து நிதித்துறை கணக்காய்வுப் பகுதிக்கு உள்வாங்கப்பட்டனர்.அந்த வகையில் சுடரொளி அக்காவும் நிதி தொடர்பான கணக்கு நடவடிக்கைகளில் அவரது புலமை,கூரறிவு என்பன இனங் காணப்பட்டு 1993ஆம் ஆண்டு நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதிக்கு உள்வாங்கப் பட்டார்.

அங்கு 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் பருத்தித்துறைப் பகுதியில் ஆயப்பகுதி,வருவாய்ப் பகுதி மற்றும் எமது நிதித்துறை வாணிபங்களில் ஒன்றான சேரன் வாணிபத்தின் யாழ்ப்பாணன் கடை போன்றனவற்றில் தனது கணக்காய்வுப் பணியைத் திறம்பட மேற்கொண்டார்.அத்துடன் தமிழீழ மீட்பு நிதி தொடர்பான பணிகளையும் மேற்கொண்டார்.

பின்பு 1994ஆம் ஆண்டு காலப் பகுதியில் பணித் தேவையின் தகுதி கருதி பல்கலைக்கழகத்திற்கு செல்லாத மற்றைய நிதித்துறை ஆண்,பெண் போராளிகள் அனைவரையும் யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும்படி பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவினால் பணிக்கப்பட்டனர்.அந்த வகையில் சுடரொளி அக்காவும் அவ்வணியில் தெரிவாகினார்.அவர் அக் கற்கை நெறியினை மிகுந்த விருப்புடனும் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டார்.அங்கே ஒன்பது மாதங்கள் போராளிகள் அனைவரும் காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியினையும் மாலை நேரத்தில் தமக்கென ஒதுக்கப்பட்ட வாணிபங்களின் கணக்காய்வுப் பணியினையும் சோர்வடையாது மேற் கொண்டனர்.அதைவிட அவர்களுக்கு இரவு நேரங்களில் யாழில் பிரபலம் பெற்ற வணிகத் துறை சார்ந்த ஆசிரியர்களினால் விசேட வகுப்புக்களும் நடைபெறுவதுண்டு.

106334392_2318581291770083_8445130605909397926_o

சுடரொளி அக்காவும் சிறிதும் சோர்வடையாமல் கற்கை நெறியினையும் மேற்கொண்டு அதே நேரத்தில் கணக்காய்வுப் பணியினையும் மேற்கொண்டு புடம் போடப்பட்டு நிதித்துறைக் கணக்காய்வுப் பகுதியின் தலை சிறந்த கணக்காய்வாளர் ஆகினார்.பின்பு 1995ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் நகை வாணிபம்,சேரன் இரும்பகம்,எழிலகம் புடவை வாணிபம் போன்றவற்றிலும் தனது கணக்காய்வுப் பணியினை மேற்கொண்டார்.
1995ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் எமது முகாமை ஒழுங்கமைத்து வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணிகள் அங்கிருந்து மேற்கொள்ளப்பட்டன.பின்னர் பங்குனி மாத நடுப்பகுதிகளிலும் அங்கிருந்து வன்னிப் பெரு நிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து வந்து புதுக்குடியிருப்புப் பகுதியில் எமது முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு எமது நிதித்துறை வாணிபங்களும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வுப் பணிகள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சீராக மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் சுடரொளி அக்காவும் தனது கணக்காய்வுப் பணியை போதிய வசதியின்மை காணப்பட்டும் கிடைத்த வளங்களைக் கொண்டு செவ்வனே மேற்கொண்டார்.அக்காலப்பகுதியில் காணப்பட்ட பொருளாதாரத் தடை காரணத்தினால் எரிபொருள் தட்டுப்பாட்டினால் உந்துருளிகள் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.அதனால் சுடரொளி அக்கா பணி நிமித்தம் துணுக்காய் மல்லாவி,மாங்குளம் போன்ற இடங்களுக்கு துவிச்சக்கர வண்டி மூலமே பிரயாணம் மேற்கொண்டு தனது உடற்சோர்வையும் பொருட்படுத்தாது விசுவாசத்துடனும் விருப்புடனும் தனது பணியினை மேற்கொள்ளுவார்.

1995 இல் வலிகாமம்,பின் 1996 இல் தென்மராட்சிப் பகுதி போன்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னியை வந்தடைந்ததால் எமது போராளிகள், மற்றும் மக்களின் உளவரணானது பாதிக்கப்பட்டுக் காணப்பட்டது.இதனால் இராணுவத்தினருக்கு பதிலடி கொடுக்கவும் எமது போராளிகள்,மக்களின் உளவரண் வலுப் பெறுவதற்கும் எந்த ஒரு பலத்திலும் பலவீனம் இருக்கவே செய்யும்.அதனைச் சரியாக கண்டறிந்து திட்டமிட்டுத் தாக்குவதில் தான் வெற்றியின் ரகசியம் இருக்கின்றது என்ற கொள்கையுடைய எமது தேசியத் தலைவர் ஓயாத அலை 1 என்ற நடவடிக்கையை முல்லைத்தீவிலுள்ள மிகப் பலம் கொண்ட இராணுவ முகாம் மீது மேற் கொள்ளத் தீர்மானித்தார்.
இதற்காக ஆளணிப் பற்றாக்குறை காரணத்தினால் எமது பிரிவில் இருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.அவர்களில் ஒருவராகச் சுடரொளி அக்காவும் தெரிவு செய்யப்பட்டார்.இரண்டு மாதங்கள் கடும் பயிற்சியின் பின் விசேட அணியில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு ஓயாத அலைகள் 1 வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் திறம்படக் களமாடி பின்பு சத்ஜெய 1 தாக்குதல் நடவடிக்கையிலும் திறமையாகக் களமாடி வெற்றியுடனும் பெரும் மனத் திருப்தியுடனும் எமது முகாமிற்குத் திரும்பினார்.

பின்பு அவர் 1997 ஆம் ஆண்டு மார்கழி மாதம் அவர் சுகவீனம் காரணமாகச் சாவடையும் வரை எமது நிதித்துறை வாணிபங்களில் ஒன்றான நகை வாணிபத்தின் கணக்காய்வு அணிக்கு அணிப்பொறுப்பாளராக பொறுப்பேற்று பணி மேற்கொண்டு வந்தார்.பணியிடத்தில் பணியாளர்களுடன் மிகவும் அன்பாகவும் பண்புடனும் அதேவேளை தேவைப்படும் போது கண்டிப்புடனும் ஆளுமையுடன் செயற்படுவார்.

துணுக்காய்,மல்லாவி,மாங்குளம்,விசுவமடு,முழங்காவில்,புதுக்குடியிருப்பு,ஸ்கந்தபுரம்,தண்ணீரூற்று போன்ற இடங்களில் உள்ள நகை வாணிபங்களுக்கு தனது 125 ரக உந்துருளியில் பிரயாணம் செய்து தனது கணக்காய்வுப் பணியினை மேற்கொள்ளுவார்.குள்ளமான மெல்லிய தோற்றமுடைய அவர் தன்னை விட பெரிய 125 ரக உந்துருளியை ஓட்டும் அழகை நாங்கள்”துவைக்கிற கல்லில தவளை உட்கார்ந்து இருக்கிறது போல இருக்குது”என்று கிண்டல் பண்ணுவோம்.அதனை அவர் கோபிக்காமல் சாதாரணமாகவே எடுத்து சிரித்து விட்டுச் செல்லுவார்.சக போராளிகளை மதித்து அரவணைத்து அன்புடன் நடந்து கொள்ளுவார்.புதிய போராளிகளுக்கு கணக்காய்வு நடவடிக்கைகளை சுலபமாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அதன் நெளிவு சுளிவுகளை இலகுவான முறையில் துல்லியமாக புரிய வைப்பார்.

பணி என்று வந்து விட்டால் உணவு,உறக்கம் அவருக்கு இரண்டாம் பட்சம் தான்.பெரும்பாலும் தனது தூர இடத்துப் பிரயாணங்களை நேரத்தினை வீணடிக்கக் கூடாது என்ற நோக்கில் பகல் முழுவதும் பணி புரிந்துவிட்டு இரவில் தான் மேற்கொள்ளுவார்.உணவு உட்கொள்ளும் நேரத்தைக் கூட சிக்கனப்படுத்தி ஒரு போராளியை உந்துருளியைச் செலுத்த விட்டு தான் பின்னிருக்கையில் அமர்ந்து உணவினை உட்கொள்ளுவார்.

வாணிபங்களின் முடிவுக் கணக்குகள் சமப்படாமல் பிழைக்குமெனில் எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு நித்திரையின் போது கூட பேரேட்டை(ledger) தலையணை போல் வைத்துக் கொண்டு படுத்திருந்து நித்திரையில் இருந்து திடீரென விழித்து தவறினைக் கண்டு பிடித்து சீர் செய்வார்.நாங்கள் கூட எங்களது வாணிபங்களின் முடிவுக் கணக்குகள் சமப்படாவிட்டால் எப்படிப்பட்ட சிக்கலான கணக்கு என்றாலும் அவர் கண்டு பிடித்து சீர் செய்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் சுடரொளி அக்காவையே நாடுவதுண்டு.

தடிமன்,காய்ச்சல்,தலையிடி போன்ற நோய்கள் வந்தால் ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் வலி நிவாரணி மாத்திரையைப்(panadol) போட்டுவிட்டு தனது பணிக்குப் புறப்பட்டு விடுவார்.இதனால் அவரது உடல் நிலை சீரற்றுக் காணப்பட்டது.ஆனால் அதைப் பற்றி யோசிக்காது தன்னை முழுமையாக கணக்காய்வுப் பணிக்கு அர்ப்பணித்த போராளி அவர்.

நான் எனக்கு அவரைத் தெரிந்த நாள் முதல் அவர் விடுமுறையில் அவரது வீட்டிற்குச் சென்று ஒரு நாளுக்கு மேல் தங்கி நின்றதைப் பார்த்ததில்லை.விடுமுறையில் நிற்கும் நாட்களைக் கூட சிக்கனப்படுத்தி அந்த நாட்களில் கூட தனது கணக்காய்வுப் பணியை மேற்கொண்டு “அண்ணை எங்களை நம்பி இந்தப் பணியைத் தந்திருக்கிறார்….அந்த நம்பிக்கையை நாங்கள் வீணடிக்கக் கூடாது”என்று கூறுவார்.

எந்த ஒரு சாதாரண உணவையும் அவர் ரசித்து ருசித்துச் சாப்பிடுவார்.உதாரணத்துக்கு எமது உணவு வழங்கல் பகுதியில் இருந்து வரும் கத்தரிக்காய்க் கறியினைக் கூட(நிறைய போராளிகளுக்கு சேர்த்து உணவு தயாரிப்பதனால் அதன் சுவை குறைவாகவே காணப்படும்) சுவையான கோழி இறைச்சிக் கறியினைச் சாப்பிடுவது போல ரசித்து ருசித்து உண்ணுவார்.அவர் அப்படி உண்ணும் அழகைப் பார்த்து எமக்கும் கூட அதை உண்ண வேண்டும் என்ற அவாத் தோன்றும்.

அவர் கணக்காய்வுப் பணியினை மேற் கொண்டாலும் அவரது எண்ணங்களில் எப்போதும் சண்டைக் களங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற அவாவே காணப்பட்டது.எந்நேரமும் களத்தில் நிற்கும் போராளிகளை நினைத்துக் கவலைப்படுவார்.”நாங்கள் இங்கே இப்படி வசதியாக இருக்கிறோம்…களத்தில் நிற்கும் போராளிகள் பனி,வெயில்,மழை,உணவு,உறக்கம் பாராது பணி புரிந்து எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்”என்று அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்.தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைக்கும்படி தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பி விட்டு பதிலுக்கு காத்திருந்தார்.அவரின் பணியின் தேவை கருதி அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு தலைவரிடம் இருந்து பதில் வந்தும் மீண்டும் மனம் சோராமல் மறுபடியும் தன்னைக் கரும்புலிகள் அணியில் உள்வாங்கும்படி தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பி விட்டுப் பதிலுக்கு காத்திருந்தார்.

இவ்வாறு எந்நேரமும் ஓய்வு ஒழிச்சலின்றி தனது கணக்காய்வுப் பணியையே முழு மூச்சாக மேற் கொண்டு தனது உடல் நிலையை சரிவரக் கவனத்தில் கொள்ளாது இருந்த காரணத்தினால் நீண்ட நாட்களாக இனந் தெரியாத வகைக் கொடிய காய்ச்சலால் பீடிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தார்.அப் போதும் கூட முகாமில் வைத்து தனது வாணிபங்களின் ஆவணங்களை வரவழைத்து கணக்காய்வினை மேற்கொண்ட சுடரொளி அக்கா,அன்று சாவடைந்த நாளன்று பகல் கூட தனது வாணிபத்தின் சமப்படாக் கணக்கொன்றினைச் சமப்படுத்திக் கொடுத்து விட்டு 16.12.1997 அன்று இரவு எம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தி விட்டு தனது கரும்புலிகள் அணியில் சேர்வதற்கான கனவினையும் மனதில் சுமந்து கொண்டு தனது பணியினை மற்றைய போராளிகள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் மீளாத் துயில் கொண்டுவிட்டார்.

– நிலாதமிழ்

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை ...

Leave a Reply