வன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக தெம்மாங்கு பாட அன்புடன் புன்னகைக்கும் கணக்காய்வுப் பகுதி ஆண் போராளிச் சகோதரர்களுடன் நடுநாயகமாக கம்பீரமாக வீற்றிருக்கும் எமது விசுவமடு “அன்பகம்” எனும் கணக்காய்வுப்பகுதி நடுவப் பணியகம்.அங்கே அன்பு எனும் வானிலே ஒளிரும் துருவ நட்சத்திரமாக எங்கள் சேரலாதன் அண்ணாவைக் காணலாம்.கனிவு மற்றும் பண்பு கலந்த ஒரு நிமிர்வான ஆளுமையுடன் கூடிய பொறுமையான ஒரு போராளியாக அவர் காணப்பட்டார்.அந்த முகாமின் ஒழுங்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கும்,தூய்மைக்கும் அழகுக்கும் அவரே காரணம்.அங்கு பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையின் அழகில் அவரின் கைவண்ணம் தெரியும்.
அம்முகாம் போராளிகளுக்கு கேட்டவற்றை /தேவையானவற்றை உடனே வழங்கும் “அட்சய பாத்திரமாக”ஒரு தாய் போல அவர் செயற்பட்டார். அம்முகாமுக்கு பணி நிமித்தம் வரும் ஆண்,பெண் போராளிகள் யாராக இருந்தாலும் ஒருபோதும் பசியுடன் திரும்பிச் செல்லக் கூடாது என்ற கொள்கையுடையவர்.அவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து உணவு,தேநீர் போன்றனவற்றை வழங்கி அவர்கள் அகமலர்ந்து செல்வதனைக் கண்டு தானும் அகம் மலர்வார்.பொதுவாகவே எமது போராளிகளுக்கு மட்டுமேயுரிய தனிப்பட்ட சிறப்பம்சம் ஒன்று உண்டு.தனது “துணைவன்/துணைவியைத் தவிர மற்றைய போராளிகளைச் சகோதரர்களாக “கருதும் கொள்கை.அது எமது மகத்துவம் மிக்க ஒப்பற்ற பெருந்தலைவனின் சீரான வளர்ப்பு என்பதனை நான் என்றும் நிமிர்வுடன் சொல்லுவேன்.அந்தவகையில் சேரலாதன் அண்ணாவும் சக பெண் போராளிகளை தனது சொந்த சகோதரிகள் போலவே நடாத்துவார்.ஆதலால் நாம் தூர இடத்திலிருந்து களைத்து விழுந்து அன்பகம் முகாமுக்கு பணி நிமித்தமாக ஆவணக் கோப்புகளை ஒப்படைப்பதற்கு செல்லும் போது எப்போதும் உரிமையுடன் அவரிடம் உணவு,தேநீர் போன்றவற்றை கேட்டுப் பெறுவோம்.அவரும் எங்களைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது முகாமைச் சேர்ந்த மற்றைய போராளிகளை “பிள்ளைகளுக்கு சாப்பாட்டைக் குடுங்கோடா…தேநீரைக் குடுங்கோடா”என்று விரட்டியடிப்பார்.அப்படியொரு சகோதரத்துவமான தனித்துவம் மிக்க போராளி அவர்.இதன் காரணத்தினால் அவரது முகாம் போராளிகள் அவரை “மகளிர் வெளி விவகார அமைச்சர்”என்று பட்டப் பெயரை வைத்து அழைப்பார்கள்.அவரும் அதனை ஏற்று கோபிக்காமல் “உங்களுக்கு ஆகலும் நக்கல் கூடிப் போச்சு”என்று கூறி சிரித்தவாறு செல்லுவார்.
சேரலாதன் அண்ணா பிறந்து வளர்ந்தது எல்லாம் கடல் வளமும் இயற்கையின் செழிப்பும் கொண்ட யாழ்மாவட்டத்திலே உள்ள காரைநகர் எனும் மண்ணில் தான்.திரு.திருமதி மகாலிங்கம் தம்பதியினருக்கு மூன்று அண்ணன்மார்,இரண்டு அக்காமார்,ஒரு தங்கையுடன் ஆறாவது செல்வப் புதல்வனாக 16.05.1973 இல் துரைசிங்கம் எனும் இயற்பெயருடன் அவதரித்தார்.அவரை வீட்டில் சிவபாதம் என்றும் செல்லமாக அழைத்தார்கள்.துரைசிங்கம் தனது குடும்பத்தின் மீது சிறு வயது முதல் மிகுந்த பாச உணர்வும் பொறுப்புணர்வும் கொண்டவராக மிளிர்ந்தார்.அத்துடன் சட்டென எதனையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு கொண்ட கற்பூர புத்தி கொண்டவராக விளங்கினார்.1989இல் க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றும் தன் குடும்பத்தை ஆழமாக நேசித்த அவர் தனது குடும்ப சூழ்நிலையின் காரணத்தினால் உயர்தரக் கல்வியைத் தொடராமல் தனியார் வெளிநாட்டு நிறுவனம் ( NGO)ஒன்றில் பணிக்கமர்ந்தார்.அவருக்கு இயற்கையாக காணப்பட்ட ஆங்கில மொழிப் புலமை அவருக்கு அப்பணியில் பெரிதும் உதவியது.
தனது குடும்பத்தில் அளவு கடந்த பாசம் கொண்ட துரைசிங்கம் அமைதியாக இருந்தாலும் அவருள் விடுதலை எனும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.சொந்த நிலம் இழக்கப்பட்டு அடிமை நிலையில் தாழ்ந்து கிடக்கின்ற தமிழினத்துக்காக வீரத்துடன் போராடி விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று உணர்வு கொண்டெழுந்து தன்னுடன் ஒட்டிக் கொண்டிருந்த குடும்பம் சம்பந்தமான அனைத்து சுமைகளையும் இறக்கி வைத்து விட்டு 1993 ஐப்பசி மாதத்தில் எமது போராட்டத்தில் இணைந்து இருபாலையில் உள்ள டொச்சன் 2 பயிற்சி முகாமில் சேரலாதன் எனும் நாமத்துடன் அடிப்படைப் பயிற்சியினை மேற்கொண்டார்.
பூநகரியில் இலங்கை இராணுவத்தின் மிகப் பெரிய படைக் கூட்டுத்தளமும் நாகதேவன் துறையை மையமாக வைத்து ஒரு கடற்படைத் தளமும் இருந்தது.கிளாலிக் கடனீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத் தளமே காரணமாக இருந்தது.இதனால் 10.11.1993 இப்பெரிய கூட்டுப்படைத் தளம் மீது எமது அமைப்பு தாக்குதல் நடாத்த திட்டமிட்டது.நீர் வழியிலும் நிலவழியிலும் தொடுக்கப்பட்ட சமர் என்பதால் இந்நடவடிக்கைக்கு “தவளைப் பாய்ச்சல்” என்று பெயர் சூட்டப்பட்டது.இச்சமரில் ஏராளமான ஆயுத தளபாடங்களும் ஒரு யுத்த டாங்கியும் கைப்பற்றப்பட்டு இன்னொரு டாங்கி முற்றாக அழிக்கப்பட்டது.அத்துடன் நாகதேவன்துறை கடற்படைத் தளத்தில் இருந்த ஐந்து நீரூந்து விசைப்படகுகளும் கடற்புலிகளினால் வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டன.
இச் சமரின் போது ஏற்பட்ட ஆளணிப் பற்றாக்குறையின் காரணத்தினால் அடிப்படைப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சேரலாதன் அண்ணாவும் காவும் குழுவில் ஒருவராகத் திறமையாகச் செயற்பட்டார்.அப்போது,காயப்பட்ட போராளிகளை மிகவும் அவசரமாக மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்வேகத்திலும் தனது தாமதத்தினால் ஒரு போராளியின் உயிரை இழக்கக் கூடாது என்ற எண்ணத்திலும் விரைவாக பணியினை மேற்கொண்டிருந்த போது அவரது கவனம் பிசகி ஒரு கால் பிரண்டு விட்டது.இதனால் அவர் சிறிது காலம் மருத்துவ சிகிச்சையிலிருந்து பின்னர் 1994 தை மாதத்தில் ஆரம்பமான டொச்சன் 3 பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு முழு நேரப் போராளியாகினார்.பின்னர் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணிக்கு சிறப்புப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்.
ஒரு நாடு நாடாகவும் ஒரு இனம் இனமாகவும் இருக்க வேண்டுமென்றால் வீரம்,அறிவு என்ற இரு விடயங்கள் இன்றியமையாதது.வீரத்தையும் அறிவையும் ஒருங்கிணைத்து பலம் கொண்ட சக்தியாக வளரும் போது தான் ஒரு இனம் யாருக்கும் அடிமைப்படாமல் இருக்க முடியும்.அவ்வாறே எமது தேசியத் தலைவரும் எமது போராளிகள் அறிவும் பலமும் உறுதியும் திடமும் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்புடையவர்.அந்த வகையில் தமிழீழத்தின் நிர்வாகம் ,நிதி, நீதி,மருந்துவம் போன்ற எல்லாத் துறைகளிலும் எமது போராளிகள் துறைசார் வல்லுனர்களாக உருவாக வேண்டும் என்று திட்டமிட்டு அவர்களை அந்தந்த துறைகளில் கற்கை நெறிகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். எமது நிதித்துறை வாணிபங்களின் கணக்கியல் ரீதியான நிர்வாக நடவடிக்கைகளுக்கு போராளிகளால் மட்டுமே அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் அகத்தூய்மையுடனும் செயற்பட முடியும் என்பதனை புரிந்து கொண்ட தேசியத் தலைவர் நிதித்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவுடன் கலந்தாலோசித்து யாழ்.நீர்வேலிப்பகுதியில் நிதித்துறைப் போராளிகளுக்கான முதலாவது உயர்தரக் கல்விக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்றினை நிறுவினார்.அதனடிப்படையில் சேரலாதன் அண்ணாவும் க.பொ.த சாதாரணதரத்தில் பெற்ற மிகச் சிறந்த பெறுபேற்றின் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தில் அக்கற்கைநெறிக்காக நிதித்துறை கணக்காய்வுப்பகுதிக்கு உள்வாங்கப்பட்டார்.
1995இல் யாழ்மாநகரம் எமது கட்டுப்பாட்டில் இருந்தது.அதனைக் கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவம் படாதபாடுபட்டு பலமுனைத் தாக்குதல்களினைத் தொடுத்தும் அவை எமது படையணிகளால் முறியடிக்கப்பட்ட வண்ணம் இருந்தன.இதனால் 11.07.1995 இல் இலங்கை இராணுவம் “முன்னேறிப் பாய்தல்” என்ற பெயர் குறித்த தாக்குதலோடு பாரிய முன்னகர்வு நடவடிக்கையை மேற்கொண்டது.இதனால் மக்களெல்லாம் அச்சப்பட்டு அவலப்பட்டு மனமிடிந்து புலம்பிக் கிடந்தவேளை “இருள் சூழ்ந்தவேளைகளில் எல்லாம் ஒளியேற்றும்”எம் தலைவர் இதனை அமைதியாகவும் நிதானமாகவும் அவதானித்து பலியெடுத்து வந்தோரை பழிவாங்கும் வேட்கையோடு 14.07.1995இல் “ஒப்பறேசன் புலிப்பாய்ச்சல்”எனும் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டு நடாத்தினார்.இது எமது விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் புதியதோர் திருப்பு முனையாக இருந்தது.எமது மக்களை அடித்து துரத்தியவர்களை நாம் அடித்து விரட்டி புதிய வரலாறு படைத்தோம்.
பொதுவாக பெரிய அளவிலான வலிந்த,ஊடறுப்பு தாக்குதல் நடவடிக்கைகளின் போது ஏற்படும் ஆளணிப் பற்றாக்குறையின் போது எமது நிதித்துறைப் போராளிகளும் களப்பணிகளுக்குள் உள்வாங்கப்படுவதுண்டு.இதனால் எமது கணக்காய்வுப்பகுதிப் போராளிகள் ஒரு கையில் கணக்காய்வின் திறவுகோலான பச்சைநிறப் பேனாவையும்(வெளியகக் கணக்காய்வுக்கு பயன்படுத்தப்படும் பேனாவின் நிறம் பச்சை)மறுகையில் விடுதலையின் திறவுகோலான ஆயுதமும் ஏந்திக் களச் சாதனை படைத்தனர்.அந்தவகையில் சேரலாதன் அண்ணாவும் அவரது நிதித்துறை அணியுடன் இணைந்து தனது கற்கை நெறியினை இடை நிறுத்திவிட்டு புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் திறமையாகக் களமாடி வெற்றி வாகை சூடி முகாம் திரும்பினார்.
பின்னர்,தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் இலங்கை அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டாய சிங்களக் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பை வழங்கி வந்த மணலாற்றில் உள்ள இலங்கை இராணுவத்தினரின் ஐந்து படைத்தளங்களினை அழித்தொழிப்பதற்காக 28.07.1995 இல் எமது படையணிகளால் தாக்குதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.எனினும் சில துரோகிகளின் காட்டிக் கொடுப்பினால் இத்தாக்குதல் நடவடிக்கை வெற்றியளிக்காத போதும் படைத்தளத்துக்குள் ஊடுருவி அந்த மரணப் பொறிக்குள் சிக்கிய எமது படையணிகள் வீரத்துடனும் சமயோசித புத்தியுடனும் போராடி வரவிருந்த பேரிழப்பைத் தவிர்த்து குறைந்த இழப்புடன் இலங்கை இராணுவத்தினரின் இரண்டு ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பல படைக்கலங்களை அழித்து தீரமுடன் திரும்பினர்.சேரலாதன் அண்ணாவும் இத்தாக்குதல் நடவடிக்கையில் நிதித்துறை தாக்குதலணியுடன் இணைந்து வீரமுடனும் தீரமுடனும் களமாடி முகாம் திரும்பினார்.
பின்பு,17.10.1995 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக பலாலி இராணுவ முகாமிலிருந்து இலங்கை இராணுவம் மிகப் பெரிய “ரிவிரெச”(சூரியக்கதிர்)எனும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.இச்சமரிலும் சேரலாதன் அண்ணா பின்களப் பணியான களத்தில் நிற்கும் போராளிகளுக்கான உணவு ழங்கும் நடவடிக்கைகளுக்கு நிதித்துறை வழங்கல்பகுதியுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.அதன் பின் அவர் யாழ் குடாநாட்டிலிருந்து எமது அமைப்பு பின் வாங்கிய பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து சுதந்திரபுரத்தில் இயங்கிய தமிழ்மாறன் பயிற்சிக் கல்லூரியில் தனது க.பொ.த உயர்தரக் கல்வியினையும் கணக்காய்வுக் கற்கைநெறியினையும் தொடர்ந்தார்.
அதன் பின்னர் 1996ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் எமது போராட்டத்தின் மரபுவழித் தாக்குதல் அத்தியாயத்தை வலுப்படுத்திய முல்லைத்தீவு இராணுவ முகாம் மீது நடாத்தப்பட்ட “ஓயாத அலைகள் 1″நடவடிக்கையிலும் அவர் களப் பணியின் முக்கியத்துவம் கருதி தனது கற்கை நெறியினை இடை நிறுத்தி விட்டு பின் களப்பணிகளிலும் பணியாற்றினார்.பின்பு தனது க.பொ.த உயர்தரத்திற்கான பரீட்சையினை 1996 ஆவணி மாதம் தனது அணியுடன் நிறைவு செய்து கொண்டு பின்னர் தொடர்ந்து கணக்காய்வுக் கற்கை நெறியினையும் நிறைவு செய்து கொண்டு 1997 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் வன்னி கிழக்கு கணக்காய்வுப் பகுதிக்கு அனுப்பட்டு 1997 தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை ஈரல் புற்று நோயினால் சாவடையும் வரை பாண்டியன் வாணிபத்தின் கணக்காய்வு அணிக்கு உள்வாங்கப்பட்டார்.
எமது போராட்டத்துக்கான பெருமளவிலான நிதியினை ஈட்டிக் கொடுக்கும் நிதித்துறையின் மாபெரும் வாணிபங்களில் ஒன்றான பாண்டியன் வாணிபமானது பாண்டியன் பல்பொருள் வாணிபம்,பாண்டியன் புடவை வாணிபம்,பாண்டியன் சுவையூற்று,பாண்டியன் எரிபொருள் வாணிபம்,பாண்டியன் உதிரிகள் வாணிபம்,பாண்டியன் அச்சகம்,மேலும் அவற்றின் மிகப் பெரிய களஞ்சியங்களென ஒவ்வொன்றிலும் பல கிளைகளென வன்னிப் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளிலும் வியாபித்துக் காணப்பட்டது.இவ்வனைத்திற்குமான கணக்காய்வுப் பணியினை சேரலாதன் அண்ணாவின் கணக்காய்வு அணி திறமையாக மேற்கொண்டது.அவரும் இவற்றிற்கான கணக்காய்வுப் பணியினை தன் அணியுடன் இணைந்து அர்ப்பணிப்புடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் மேற்கொண்டார்.
சொல்லுக்கு முன்னே செயல் இருக்க வேண்டும்.இது எமது தலைவனின் தாரக மந்திரம்.இதனால் தான் நாம் எமது போராட்ட வரலாற்றில் உலகியல் ரீதியில் செல்வாக்குப் பெற்றோம்.அவ்வாறே சேரலாதன் அண்ணாவும் எந்தப் பணியைக் கொடுத்தாலும் சொல்வதற்கு முன்னர் அந்தப் பணியினை முழுமையாக முடித்து விட்டு வரும் திறமையைக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த கணக்காய்வாளனாக இனங்காணப்பட்டார்.பணியிடத்தில் பணி நேரத்தில் பணியாளர்களிடம் அன்பாகவும் பண்பாகவும் தேவையேற்படுமிடத்தில் கண்டிப்பாகவும் ஆளுமையுடன் செயற்படுவார்.மிகவும் பணிச்சுமை கூடிய நேரங்களில் உதாரணமாக ஆண்டிறுதி இருப்பெடுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது பணியாளர்களுக்கும் மற்றும் சக போராளிகளுக்கும் பணிச்சுமை தெரியாமல் இருக்க மிகவும் நகைச்சுவையாகப் பேசி பணியினை நேரம் போவது தெரியாமல் நிறைவேற்றும்,நிறைவேற்றுவிக்கும் தனித் திறமை அவரில் காணப்பட்டது.பணி தவிர்ந்த மற்றைய நேரங்களில் பணியாளர்களுடன் மிகவும் நட்புரிமை பாராட்டக் கூடிய ஒருவராகவும் அவர் காணப்பட்டதால் பணியாளர்கள் அனைவரும் அவரில் மிகுந்த அன்பும் நன்மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்ததை அங்கே காணக்கூடியதாக இருந்தது.
மகளிர் வெளி விவகார அமைச்சர் என்ற பட்டப் பெயருக்கேற்ப அவர் பொதுவாக அனைத்து சக பெண் போராளிகளுடனும் ஒரு சகோதரத்துவமான உரிமையில் பழகுவதனால் நாம் அவரிடம் ஒரு சகோதரன் என்ற முறையில் தேவையானவற்றைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவோம்.புதுக்குடியிருப்பு பாண்டியன் பல்பொருள் வாணிபத்தில் அவர் கணக்காய்வுப் பணியினை மேற்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் அவ்வழியால் செல்லும் போது அவரைக் கண்டு விட்டோம் என்றால் அவரின் பணியிடத்தில் இறங்கி அவரிடம் வம்பிழுக்காமல் ஒரு போதும் செல்ல மாட்டோம்.அவர் தனது சட்டைப் பையில் வெளியகக் கணக்காய்வுப் பணிக்குப் பயன்படுத்தப்படும் பச்சை நிறப் பேனாக்கள் பல புதுப்புது வடிவங்களில் கொழுவி வைத்திருப்பார்.நாமும் பச்சைப் பேனாவிலுள்ள அதீத ஆசையினால் அதனை அவரிடமிருந்து சூறையாடாமல் விடமாட்டோம்.அதனால் எங்களைக் கண்டால் “பிசாசுகள் வருகுதுகள் பிசாசுகள் வருகுதுகள்”என்று செல்லமாக வைவார்.அவர் என்ன சொன்னாலும் அவரது பச்சைப் பேனாவைச் சூறையாடுவதிலும் அவரது திட்டைக் கேட்பதிலும் எங்களுக்கு ஒரு தனி சந்தோசம் ஏற்படும்.
அத்துடன் பொது மக்களோடு மக்களாக பழகும் ஒரு போராளியாகவும் மிகவும் இளகிய மனம் படைத்த ஒரு போராளியாகவும் அவர் காணப்பட்டார்.நிதித்துறையிலிருந்து வீரச்சாவடையும் மாவீரர்களின் வீடுகள் மற்றும் தனது முகாமுக்கு அருகில் வசிக்கும் மாவீரர் குடும்பங்களின் வீடுகள் போன்றவற்றிற்கு அடிக்கடி சென்று அவர்களது இன்ப துன்பங்களிலும் பங்குபற்றுவார்.அவருடன் ஒன்றாக இருந்த போராளி நண்பர்கள் வீரச்சாவடையும் போது அதனைத் தாங்க முடியாது அவர்களது பெற்றோர்களுடன் சேர்ந்து அவரும் கதறி அழுவதை நாம் நேரில் கண்டிருக்கின்றோம்.
பின்பு 2003 ஆம் ஆண்டில் அவர் திருமண வயதினை அடைந்திருந்தமையினால் எமது அமைப்பின் அனுமதியுடன் ஒரு மாவீரரின் தங்கையான பெண் போராளி ஒருவரைத் திருமணம் செய்தார்.போராளி ஒருவரைத் திருமணம் செய்த படியால் அவரது போராட்ட பணிக்கு குடும்ப வாழ்க்கை தடையாக இருக்காமல் பக்க பலமாகவே இருந்தது.பின்னர் 2004 இல் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகினார்.2004-2008 ஆம் ஆண்டு வரை பாண்டியன் வாணிபத்தின் கணக்காய்வுப் பணியுடன் மேலதிகமாக நிதித்துறையின் தளவமைப்புப்பகுதி,உடமைப் பகுதி போன்றவற்றிற்கான கணக்கு நடவடிக்கைகளின் கணக்காய்வுப் பணியினையும் திறம்பட மேற்கொண்டார்.
பொதுவாக வெளி நிர்வாகப்பணிகளில் ஈடுபடும் போராளிகள் தமது பணியைச் சரிவரச் செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கையில் தமது பணியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தைச் சரிவரக் கவனிக்காது இயங்குவதால் களத்தினில் மட்டுமல்லாது சுகவீனம் காரணமாகவும் எமது போராளிகள் சாவடைவதுண்டு.அந்தவகையில் சேரலாதன் அண்ணாவும் பணியிடங்களில் ஏற்படும் பணிச்சுமைகளின் காரணத்தினால் தன் தேக ஆரோக்கியத்தைச் சரிவரக் கவனிக்காத காரணத்தினால் 2007 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கொடிய ஈரல் புற்றுநோயின் தாக்கத்திற்கு உட்பட்டு மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.அப்போது அவரின் மனைவி இரண்டாவது மகவை வயிற்றில் தாங்கி கர்ப்பிணியாக இருந்தார்.தமது போராட்ட வாழ்க்கையில் எந்தவொரு போராளியும் களத்திற்கு சென்று வீரமரணம் அடைவதையே விரும்புவர்.அவ்வாறே சேரலாதன் அண்ணாவும் தான் களத்தினில் வீரமரணமடையாமல் சுகவீனம் காரணமாக சாவடையப் போகிறேன் என்று எண்ணி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.பின்னர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல்,தேசியத் தலைவனையும் சக போராளிகளையும் தமிழ் மக்களையும் தனது பணியையும் மிகவும் ஆழமாக நேசித்த போராளியான சேரலாதன் அண்ணா தனது கர்ப்பிணி மனைவியையும்,பெண் குழந்தையையும் அதுவரை வெளியுலகை எட்டிப் பார்க்காத தனது மற்றைய சிசுவையும் எம் எல்லோரையும் தவிக்க விட்டு 21.08.2008 இல் மேஜர் சேரலாதனாக சாவடைந்து எம் தேசத்தின் வரலாறாகினார்.
இவரது இழப்பானது போராளிகள் மத்தியில் மட்டுமன்றி பணியாளர்கள் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வேதனையினை ஏற்படுத்தியிருந்ததை இறுதி வணக்க நிகழ்வில் அவர்கள் அனைவரும் கதறி அழுததிலிருந்து காணக்கூடியதாக இருந்தது.பல்லாண்டு காலங்கள் உயிருடன் இருந்து எம் தேசத்துக்கான பணியினையும் கணக்காய்வுப் பணியினையும் செய்ய வேண்டிய சேரலாதன் அண்ணா புற்றுநோய் எனும் கொடிய அரக்கனால் குறுகிய காலத்தில் எமை விட்டுப் பிரிந்தது எமது போராட்டத்திற்கும் நிதித்துறை கணக்காய்வுப் பகுதிக்கும் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்றாகும்.
– நிலாதமிழ் –