நீண்ட தூரம்வரை காடு மண்டிக்கிடந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய குடிமனைகள். அதன் ஓரமாக பாம்பு போல் வளைந்து நெளிந்து போகும் அந்த புழுதிபடர்ந்த வீதியோரத்தில், அந்த சிறிய கடை போராளிகளின் வரவை எதிர்பார்த்து அவர்களின் தாகம் தீர்ப்பதற்கு ஏங்கிக்கொண்டிருக்கும்.
அவர்களின் வரவைக் கண்டதும் அவளின் முகமலர்ச்சியைக் கூற முடியாது. அந்தக் கடைக்குள் சென்று ஓடி ஓடி தேநீர், அப்பம், பிட்டு… என்று அவள் நீட் டும் போது, அளவுக்கு மிஞ்சிய உபசரிப்பால் போராளிகள் செல்லமாகச் சினந்தாலும் “சாப்பிடுங்கோ … சாப்பிடுங்கோ …” என்று நச்சரித்துக் கொண்டிருப்பாள். சிலவேளைகளில், “வந்தால் நிம்மதியாகக் கதைக்கவும் விடுகிறியா?” என அதட்டலும் நடக்கும்.
இந்தச் சிறியவள்தான் எமது சுதந்திரவிடிவுக்காகத் தனது சிறுவயது முதல் அளப்பரிய வேலைகளைச் செய்துவந்தவள். இந்திய இராணுவத்தின் ஆதிக்க சுவடுகள் எமது சுதந்திர தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பதிந்து இருந்த அந்த நேரத்தில்…. சாதாரண மக்களதும் முவதற்கு இரு முவதற்குக்கூட பயந்த இரவுகளில், அந்தச் சிறிய கடைக்குள் எத்தனை இரவுகள் அவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு விழித்திருப்பாள்.
எத்தனை இரவுகள் “ஆமி அங்க நிக்கிது. ஆமி இங்க நிக்கிது. நீங்க வரவேண்டாம். உங்களுக்கு ஏதும் தேவையெண்டாச் சொல்லுங்கோ” என்று அவள் பாதங்கள் காட்டுக்குள் ஓடியிருக்கும்.
இப்படிச் செயற்பட்டவள் தானும் பயிற்சி எடுத்து களத்துக்குப் போகவேணும் ஆமியோட சண்டைபிடிக்க வேணும் என்ற நெடுநாள் ஆசையால்,
அப்போது பூநகரிப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்த ‘சாம்’ அண்ணையிடம் சென்று “அண்ணை என்னை றெயினிங்குக்கு அனுப்புங்கோ” என்று விடாப்பி டியாய் நின்றாள். “உனக்கு இங்கை நிறைய வேலையிருக்கு. இப்ப நீ போக ஏலாது” என்று அவர் கூறிவிட்டார். அவருக்கு இவளை அப்போது பயிற்சிக்கு அனுப்புவதில் விருப்பமில்லை . ஏனெனில் இவளின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. அத்தோடு இவளுக்கு அங்கு நிறைய வேலைகளும் இருந் தன.
இவள், “சரி எனக்கா போக வழி தெரியாது. நான் போய்க் காட்டுறன்” என்று சவால் விட்டதுமல்லாமல் செயலிலும் காட்டினாள்.
அவர்களின் கடைக்கு வழமை போல அன்றும் அந்த அம்புலன்ஸ் வண்டி வந்தது. சாரதி வழமையாக அந்தக் கடையிற் சாப்பிடுபவன். அம்புலன்ஸ் அன்று வெறுமையாகத்தான் இருந்தது. சற்றுத்தூரம் சென்று, அம்புலன்ஸ் சாரதியிடம் “அண்ணை என்னை அந்தச் சந்தியிலை கொண்டுபோய் இறக்கி விடுறியளே” என்றாள்.
“தங்கச்சி இதிலை நோயாளியளை மட்டுந்தான் ஏத்தலாம்” என்று அவர் மறுத்துவிட, அவள் கெஞ்சிக்கூத்தாடி ஒருவாறு சம்மதிக்கச் செய்து ஏறிக்கொண்டாள். அந்தச் சின்னப்பறவை சுதந்திரத்தைத் தேடி வந்துவிட் டாள்.
அவளின் அன்றைய பயணம் பற்றித் தோழிகள் அடிக்கடி கேலி செய்வார்கள். “குவேனி அவசர சிகிச்சைக்குத்தானே அம்புலன் சில் வந்தாய்”.
“சும்மா போங்கோடி” என தலையைச் சிலுப்பி சிரித்துக் கொள்வாள்.
கப்டன் குவேனி
நகுலேஸ்வரி இலட்சுமணன்
முழங்காவில் கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 23.11.1972
வீரச்சாவு: 07.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் வழிதவறி சிறிலங்கா படை காவலரண் அருகே சென்றபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
குவேனி மன்னாரிலிருந்து முல்லைத்தீவு மகளிர் முகாமுக்கு வந்து சேர்ந்தாள். இவளுடன் இன்னும் இருபது பெண்பிள்ளைகள் வந்தனர், மறுநாள் குவேனியைவிட மற்றவர்கள் பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர். விம்மி விம்மி அழத்தொடங்கினாள். “என்ன ஆசையோடு நான் அங்கையிருந்து வந்தனான். என்னையும் பயிற்சிக்கு அனுப்புங்கோ “. அவளது அழுகையை அடக்கப் பொறுப்பாளர் பட்டபாடு.
பயிற்சி பெறாமலே முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிது காலம் அரசியல் வேலையில் ஈடுபட்டாள். குறுகிய காலத்திற்குள்ளேயே மக்கள் இதயங்களில் நிறைந்துவிட்டாள்.
அவள் குறும்புப் பார்வை, விரிந்த தெளிவான கண்கள், அந்தத் தலை சிலுப்பல், உறுதியான தீவிர செயற்பாடுகள், அவள் மக்கள் மேல் செலுத்தும் அன்பு இவையாவும் அவள் மக்கள் உள்ளங்களில் இன்றும் அழியா இடத்தைப் பெறுவதற்குக் காரணங்களாக இருந்தன.
முல்லைத்தீவீலிருந்து யாழ்ப்பாணம் வந்த அவள், பயிற்சிக்காக அனுப்பப்பட்டாள். நானும் அவளும் ஒன்றாகவே பயிற்சி பெற்றோம். எந்நேரமும் என்பின்னால் “அக்காச்சி, அக்காச்சி” என குறும்புக் கதைகள் கூறிக் கொண்டே திரிவாள். பயிற்சியை திறம்படச் செய்தாள். மீண்டும் அரசியல் வேலைக்காகவே கூட்டிச் செல்லப்பட்டாள்.
“என்னக்காச்சி. பயிற்சி எடுத்திட்டு அடிபாட்டுக்கு போகலாம் எண்டு இருக்க, திரும்பவும் ஏத்திக்கொண்டு போயினம். எல்லாம் உங்களால தான் நான் மறிக்கப்பட்டனான்” எனப் பகிடியாக என்னை ஏசினாள்.
இதன்பின் அவள் அரசியல் வகுப்புக்காக அனுப்பப்படுகிறாள். குவேனிக்கு முப்பது பேர் கொண்ட குழு கொடுக்கப்பட்டது. குழு நடத்துவதிலும் படிப் பதிலும் தன் கவனத்தை முழுமையாகச் செலுத்தினாள். வாராவாரம் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாகவும் தலைமை தாங்கியும் நிற்பாள். எத்தனையோ தடவை இவளின் செயற்பாடுகளைக்கண்டு நான் பிரமித்ததுண்டு.
பயிற்சி முடிந்து போராளிகள் மாவட்டம் மாவட்டமாக வேலைகளுக்கு அனுப்பப்பட்ட போது இவளுக்கு மகளிர் முன்னணியின் நிதிப்பொறுப்பு வேலை ஒப்படைக்கப்பட்டது. எதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பாள். அடிக்கடி பிள்ளைகள் காசு கேட்கும்போது “இயக்கம்படும் கஸ்டம் எனக்குத்தான் தெரியும். இயக்கம் என்ன தண்ணியிலேயோ ஓடுது” என்று பகிடியாக உண்மை நிலையைக் கூறுவாள். இவள் இதைச் சொன்னதும் “உன்னிடம் காசு வாங்கிறதை விட நேரைறஞ்சித் அண்ணையிடம் வேண்டலாம் போல இருக்குது” என்று தோழிகள் கூறுவார்கள்.
இவளுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆர்வம். ஆர்வம் மட்டுமல்ல செயல் வடிவிலும் காட்ட வேண்டும் என்று நினைப்பவள். பகல் முழுவதும் நிறைய வேலைகள் செய்துவிட்டு இரவு நேரத்தில் சென்று வாகனம் ஓட்டுவதற்கு பழகிவந்தாள்.
“மில்லர் அண்ணைக்கு அடுத்த பெண் கரும்புலி நான் தான்” என்று அடிக்கடி கூறிக்கொள் வாள். சில நாட்கள் யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் நடாத்தப்பட்ட பொறியியல் வகுப்பிற்கு சென்று வந்தாள். சிறிது ஓய்வாக இருக்கும் வேளையில் புகைப்படக்கலை பற்றிக் கேட்டுப் படித்துக் கொண்டிருப்பாள். இவ்வாறு பல துறைகளிலும் இவளுக்கு ஆர்வம் இருந்தது.
இந்த வேளையில் இவளிடம் ஒரு பழுதடைந்த பண்ணையைத் திருத்தி அமைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. முழுமூச்சாக நின்று குறுகிய காலத்தில் அந்தப் பண்ணையை வளமானதாக மாற்றினாள்.
இந்தப் பண்ணை வேலையின் போதுதான் ஒரு ஐயாவின் கதை மறக்க முடியாதது.
குடும்பம் மிகவும் கஸ்டப்பட்டது. நாள் வேலை செய்து அந்தக் கூலியைக் கொண்டுதான் வயிற்றுப்பசி போக்கும் குடும்பம் அது. தொடர்ந்து ஒரு மாதம் வரை வேலை செய்தார் அந்த ஐயா. அவர் செலவாளி. அரைப்பங்கு சம்பளத்தைத்தான் வீட்டிற்குக் கொடுப்பார்.
ஒரு நாள் குவேனி அந்த ஐயா வீட்டிற்குப் போய் வந்து தனக்குள்ளேயே ஏசிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஐயாவும் வந்து சேர்ந்தார். “ஐயா இனி உங்களிடம் நான் பணம் தரமாட்டன். உங்கடை வீட்டிலைதான் கொண்டு போய்க் குடுப்பன். கொஞ்சமாவது யோசிக்கிறீங்களே ஐயா!” ஐயாவை ஏதோ ஒரு உரிமையுடன் ஏசிக்கொண்டிருந்தாள். மரத்துக்குக் கீழ் இருந்து ஐயா அழுதுவிட்டார். “எனக்குப் பிள்ளைபோல புத்தி கூறும் அளவிற்கு அப்பிள்ளை யின் உணர்வைத்தான் நான் எண்ணிப் பார்க்கிறேன்”, என ஐயா என்னிடம் அவள் ஏசிவிட்டுச் சென்றதும் சொன்னது என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அன்றிலிருந்து அந்த ஐயாவில் ஒரு புதிய மாற்றம். குவேனியிடம் அந்த ஐயா பெருமதிப்பும் அளப்பரிய அன்பும் வைத்திருந்தார். குவேனியும் அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்று வருவாள். இந்த ஐயாவின் உள்ளம் அன்று அவள் மரணம் கேட்டு பண்ணை வாசலில் கிடந்து “கு வேனி! குவேனி!” எனக் கூக்குரல் இட்டது இன்னும் என் கண்களில். ஓ! அடுத்த வீட்டு அக்காவும் அவள் மரணம் கேட்டு இன்று குவேனி என்ற பெயரில் களத்தில்….
தொடர்ந்து ஆனையிறவுப் போர் ஆரம்பமானது. இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்கூட்டியே நடைபெற்றது. வேறு வேலைகளுக்கு நின்றவர்களும் விசேட பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டனர். இந்தவேளையில் குவேனிக்கு களத்தில் இருந்து விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு உணவு வழங்குவதும் பராமரிப்பதும் தொடர்பான வேலைகள் கொடுக்கப்பட்டது. சண்டை உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவளால் அமைதியாக நின்று – வேலை செய்யமுடியவில்லை . “அக்கா நான் அடிபாட்டுக்குப் போகப் போறன் எவ்வளவு நாளைக்குத்தான் என்னைச் சோதிக்கப் போறியள்”. என அழுதாள். இவள் உணர்வை இனியும் கட்டுப்படுத்த முடியாது என்ற பொறுப்பாளர் “குவேனி ஏறு வாகனத்தில் அடிபாட்டிற்கு போக” குரல் கேட்டதும் தான் அவள் முகம் எப்படி மலர்ந்தது.
இவள் போய் ஒரு குழுவுடன் நிற்கின்றாள். அக்குழு கொய்யாத்தோட்டத்தில் நின்றது. அங்கு மகளிர் படைப்பிரிவுப் பொறுப்பாளர் குவேனியைக் கண் டுவிட்டார். “இவள் ஏன் இங்கு வந்தாள்? குவேனி உனக்குத் தரப்பட்ட வேலையை செய்து விட்டாயா? சரி உடனே நீ திரும்பிப் போ” என்று அவர் கூறிவிட்டார். எப்படி இருக்கும்? அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் தனது வேலையைச் செய்தாள். அது மட்டுமா? தோழிகள் ஒவ்வொருவரும் கேலி செய்யத் தொடங்கிவிட்டனர். “கொய்யாத்தோட்டத்தைப் பார்த்தியா? இன்னொருத்தி, “எத்தனை ஆமியை விழுத்தினாய்” என்றதும் ஓடி ஒளித்தி டுவாள்.
இதன் பின்னர் மன்னார் மாவட்ட மகளிர் முன்னணிப் பொறுப்பாளராக இவள் அனுப்பப்பட்டாள். இச்சிறுவயதில் இப்பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட் டாலும் அதை திறமையாகச் செய்து வந்தாள். குறுகிய மாதங்களுக்குள் மாற்றம் ஏற்படுத்தித் திறமையாகச் செய்யவேண்டுமென்று துடித்தாள்.
அவள் ஓடித்திரிந்த அதே வீதி, அவள் எத்தனையோ இரவுகள் வைத்தகண் வாங்காமற் பார்த்திருந்த அதே வீதியில் மோட்டார் சைக்கிளிற் போய்க் கொண்டிருந்தாள். கடை முற்றத்தைக் கூட்டிக் கொண்டிருந்ததாய்
அவளைக் கவனிக்கவில்லை . ஆனால் தம்பி குமணன் கண்டு விட்டு ,
“அம்மா குமுதாக்கா போறா” என்று கூற, தாய் ஓடிப்போய் வீதியைப் பார்த்தாள். மறைந்து விட்டாள் குவேனி. போனவள் திரும்பி இதால வருவாள் தானே என அந்தத் தாய் உள்ளம் காத்திருந்தது. ஆனால் அவளோ வேறு பாதையால் முகாம் திரும்பி விட்டாள். பாசத்தைவிட அவளின் கட மையுணர்வினை அம்மா புரிந்து கொண்டாள். மன்னார் மாவட்டத்திற்கு மகளிர் படையணி அடிபாட்டுக்குச் சென்றது. அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அவள் தன் வேலைகளுக்கிடையில் செய்து வந்தாள். அங்கு செல்லும்போது அவர்கள் வைத்திருக்கும் புதிய ஆயுதங்களைக் கையாள்வது பற்றியும் அறிந்து வருவாள்.
அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்த போது மகளிர் படைப் பொறுப்பாளரிடம், “அக்கா அங்கை அடிபாடு தொடங்கினால் நாங்களும் போகலாம் தானே” எனக் கேட்டாள். அவர் சம்மதமாகப் தலையாட்டியதும்
அவள் அடைந்த சந்தோசம்.
“எங்கடை இடத்திலை அடிபாடு வந்தால் அடிபடச் சொல்லியாச்சு என்று குழுந்தை போலத் துள்ளிக் குதித்ததை நினைத்த போது, எங்கு தான் நின்றாலும் அடிபட வேணும் என்ற அவளது இலக்கினை அறிய முடிந்தது.
இந்த நேரத்தில் மகளிர் அமைப்புத் துணைப் பொறுப்பாளர் மேஜர் பாரதி அங்கு வந்த போது, மகளிர் படையணியினரின் அடிபாட்டு இலக்குகளைச் சென்று பார்வையிடுவதற்கென இவர்கள் போய்க் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிரியின் எல்லைக்குள் பிரவேசிக்க ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவை தழுவிக் கொள்கிறாள்.
குவேனி இன்று எம்முடன் இல்லை . ஜீரணிக்க முடிய வில்லை. எல்லாப் போராளிகளின் வீரச்சாவுகளும் அப்படித் தான், எம்முடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது போல…
அவளது முகாமில் தங்களது பிரச்சினைகளைக் கூறி அவளது அன்பு வார்த்தைகளாற் திருப்தியடைந்து செல்லும் அக்காமார், ஐயாமார், அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எங்கடை குவேனி வரமாட்டாளா? இல்லை வருவார்கள், குவேனியைப் போன்ற ஆயிரமாயிரம் மாவீரர்களின் கனவுகளைச் சுமந்து புதிய குவேனியாக… –