Home / மாவீரர்கள் / பதிவுகள் / வீரவேங்கை சிந்து

வீரவேங்கை சிந்து

வடமாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான தெல்லிப்பளை யா/ மகாஜனாக் கல்லூரியின் மாணவனான சரவணபவன் தரம் பத்தில் கல்வி கற்கும் போதே மாணவர் அமைப்பில் இணைந்ததின் மூலம் தனது தாய்நாட்டுக்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தான். பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் தனது வகுப்பில் எப்போதும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று முதலாவது அல்லது இரண்டாவது தரநிலையைத் தட்டிச் செல்லுவான். கற்றல் செயற்பாடுகளில் மட்டுமல்ல விளையாட்டு ஓவியம் வரைதல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினான். அத்துடன் முதலுதவிப் பயிற்சிகளும் பெற்று அவற்றிலும் சிறந்து விளங்கி எல்லாவற்றிலும் முன்னணி மாணவனாகத் திகழ்ந்தான்.

வீரவேங்கை சிந்து (சரவணபவன் ரகுநாதன்)
உடுவில் சுன்னாகம்.
பிறந்த திகதி – 11.07.1974
வீரமரணம் – 25.02.1991.

தாய் தந்தைக்கு குலம் தளைக்க வந்த ஒரேயொரு செல்வ மகனாக பிறந்து வளர்ந்த சரவணபவனின் குடும்பநிலையானது எந்தக் குறையுமற்ற நல்ல வசதிவாய்ப்பைக் கொண்ட பாரம்பரியமிக்கதாக அமைந்திருந்தது. தந்தையார் ரகுநாதன் அரசாங்க உதவி வைத்திய அதிகாரியாகவும் தாயார் அரசாங்க ஆசியராகவும் பணி புரிந்திருந்தனர். இவர்களது பணிகள் பெரும்பாலும் சிங்கள மொழி பேசும் மாகாணங்களிலேயே அமையப் பெற்றதனால் சரவணபவன் ஆண்டு 3 வரை தனது ஆரம்பக் கல்வியை சிங்கள மொழி பேசும் பிரதேசங்களிலேயே கற்க வேண்டிய தேவை இருந்திருந்தது. ஆனால் தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்த அவனது பெற்றோர் தமது ஒரேயொரு மகனின் பிரிவையும் பொறுத்துக் கொண்டு அவனது எதிர்கால தரமான கல்விக் கற்கை நெறிக்காக வலிகாமத்தில் யாழ். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய சிறிய தாய், சிறிய தந்தையினரிடம் அனுப்பி வைத்தனர்.இதன் காரணத்தினால் தான் அவனுக்கு தெல்லிப்பளை மகாஜனா மாதாவிடம் கல்விகற்கும் சிறந்ததொரு சந்தர்ப்பம் அமைந்தது.
1987 இல் தியாகி திலீபனின் வரலாற்றுப் பதிவுத் தியாகம் அந்தச் சிறுவனின் மனதில் ஆழ வேரூன்றியதன் காரணமாக அவனது மனதில் புரட்சித்தீ கொழுந்து விட்டெரிந்தமை அப்போதே அவனது உரையாடல்கள் மூலம் இனங்காணக் கூடியதாக இருந்தது.

1989 இல் அவனது தந்தையார் இயற்கை மரணமெய்தினார். தாயாரும் சிங்களமொழி பேசும் பிரதேசத்தில் பணி புரிந்தமையினால் தந்தையை இழந்த நேரத்தின் பிறகும் அவனது தாயாருடன் ஒன்றாக வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் 1990 ஆம் ஆண்டு தை மாத முற்பகுதியில் வலிகாமம் இளவாலைப் பிரதேசத்தில் “ஐயன் முகாமில் ” தன்னை ஒரு முழுநேரப் புலிப் போராளியாக இணைக்கக் கோரிச் சென்று பின்னர் செம்மலை – நாயாறு பயிற்சிப் பாசறையில் ஆரம்பப் பயிற்சியைப் பெற்று “சிந்து” எனும் பெயருடன் தனது A. K 47 சுடுகலனை முதுகில் சுமந்தபடி பெருமிதத்துடன் தனது தாயாரைச் சந்தித்தான்.

துப்பாக்கியுடன் வந்த தனது செல்ல மகனைப் பார்த்து அரண்டு போன தாயிற்கு நம்பிக்கையையூட்டி அவரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டதுடன் தனது பாட்டனாரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டவன் மண்கிண்டி மலைச் சமர் போன்ற தான் பங்குபற்றிய சமர்களைப் பற்றி நகைச்சுவை கலந்த வீராப்புடன் எடுத்துக் கூறி தனது தாயினதும் மற்றைய உறவினர்களினதும் பயத்தினைப் போக்கினான்.

செம்மலைப் பாசறை வாழ்க்கையின் போது எமது விடுதலைப் போராட்ட அமைப்பின் கட்டளைப்படி மருத்துவப்பிரிவுடன் இணைந்து விழுப்புண்ணடைந்த, சுகவீனமுற்ற போராளிகளுக்காகக் காத்திரமான பணி புரிந்தான்.போர் முன்னரங்கப்பகுதிகளில் சுடுகலனை ஏந்தியபடி அந்த இளம் போராளி விழுப்புண்ணடைந்த போராளிகளை மிகவும் பாதுகாப்பாக மீட்டு மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சையளிப்பதில் தன்னையும் கவனியாது முன்னின்று உழைத்தான்.

எல்லாப் போராளிகளைப் போலவே அவனும் மற்றைய போராளிகளையும் தனது உடன்பிறப்புகள் போல கருதி தனக்கு தாயாரினால் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களையும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்வான்.அப்படி ஒரு சம்பவம் அவனது தாயாரினால் நினைவு கூரப்பட்டது. ஒருமுறை அவன் மட்டுவில் பகுதியிலுள்ள மருத்துவப்பிரிவு முகாமில் பணி புரிந்து கொண்டிருந்தபோது தாயாரினை வந்து சந்தித்து விட்டுப் போகும் போது அவனது தாயாரிடம் கேட்டு தனது முகாமிலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் தாராளமான அளவுக்கு போதுமான உணவுப்பொருட்களை அவரைக் கொண்டு தயாரித்துக் கொண்டதுடன் அப்போது காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணத்தினால் போராளிகளுக்கு தலைக்கு வைப்பதற்கு எண்ணெய் போதுமான அளவு வழங்கப்படாத காரணத்தினால் தனது தாயாரிடம் கேட்டு அனைத்துப் போராளிகளுக்கும் போதுமான அளவுக்கு நல்லெண்ணெயையும் வாங்குவித்து அனைவருக்கும் வழங்கினான். விழுப்புண்ணடைந்த போராளிகளை ஒரு தாயைப் போன்ற மகிழ்வுடன் தலைக்கு எண்ணெய் தேய்த்து முழுகச் செய்து உணவூட்டுவான். மானிடர்கள் அந்த இளம் போராளியிடமிருந்து தான் பாச உணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக விளங்கிய மேஜர் செங்கதிர், டொமினிக் அண்ணா, ஜவான் அண்ணா , மூர்த்தி மாஸ்டர், தயா மாஸ்டர் போன்ற தளபதிகள், பொறுப்பாளர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய செல்லப்பிள்ளையாக விளங்கினான். அவனது கல்வித்திறமையைக் கவனித்த அவர்கள் அவனைக் கல்வி கற்பிப்பதற்கு முயன்றும் அவன் அதனைத் தவிர்த்து போர் முன்னரங்கப் பகுதிகளில் பணியாற்றுவதிலேயே முனைப்பாக நின்றான்.
அவனது களப்போராட்டப் பணியில் முக்கியமானது யாழ் கோட்டை விடுவிப்புச் சமர். அங்கு போர் முன்னரங்கப்பகுதியில் தன்னுயிரையும் பாராது எதிரியை எதிர்த்து ஓர்மத்துடன் சமராடியபடியே விழுப்புண்ணடைந்த போராளிகளையும் பாதுகாப்பாக மீட்டெடுத்து மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்று காப்பாற்றி தன் பணியினைக் காத்திரமாக ஆற்றியிருந்தான் சிந்து.

தன் சகபோராளிகளில் பேரன்பைக் கொண்டிருந்த சிந்து மக்களுடன் பழகுவதிலும் மிகவும் கண்ணியமானவனாகவும் ஆளுமையுடயவனாகவும் பொறுப்பாளர்களினால் இனங் காணப்பட்டான். இதன் காரணத்தினால் 1991 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அரசியல் பரப்புரைக்காக மாவீரர் மேஜர் செங்கதிர் அவர்களுக்கு உதவியாளனாக எமது அமைப்பால் வன்னிப்பகுதிக்கு அனுப்பப்பட்டான். அங்கு செல்ல முதல் தனது தாயாரிடமும் பாட்டனாரிடமும் சென்று ஆசீர்வாதம் பெற்று பிரியாவிடை பெற்றுக் கொண்டான்.அப்போது அவனும் அறிந்திருக்கவில்லை தனது தாயாரையும் பாட்டனாரையும் சந்திப்பது இதுவே இறுதித் தடவை என்பதை… அவனது தாயாரும் அறிந்திருக்கவில்லை தனக்கென்றிருந்த ஒரேயொரு உயிர் சொத்தான ஆருயிர் மகனைக் காண்பது இதுவே இறுதி என்பதை….
வன்னிப் பகுதிக்குச் சென்ற சிந்து மேஜர் செங்கதிருடன் அரசியல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கு பற்றி மக்களுக்கு எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையையும் முக்கியத்துவத்தையும் அழகுற எடுத்துக் கூறி மக்களின் மனங்களில் எமது போராட்டம் பற்றிய தெளிவை உணர வைப்பதில் பெரும் பணியாற்றினான்.

பின்பு எமது அமைப்பினால் மேஜர் செங்கதிரையும் அவனையும் மீண்டும் யாழ் நோக்கி வருமாறு பணிக்கப்பட்டதற்கு அமைவாக யாழ் நோக்கி தாண்டிக்குளம், ஓமந்தைப் பகுதிகளினூடாக உந்துருளியில் இரவுப் பயணத்தை மேற்கொண்டான். மீண்டும் தனது தாய், பாட்டனாரையும் சக போராளிகளையும் சந்திப்பதில் பெருமகிழ்வு கொண்டு உற்சாகத்துடன் புறப்பட்ட சிந்து அங்கு தனது உயிருக்கு பேராபத்து காத்திருப்பதை உணரவில்லை. தனது பொறுப்பாளரான மேஜர் செங்கதிரை பாதுகாப்பாக கொண்டு வருவதில் முழுக் கவனத்தையும் செலுத்தியபடி சிந்து மன்னார் கல்மடு காட்டுப் பகுதியில் கும்மிருட்டில் அஞ்சாது தனது உந்துருளியை செலுத்திக் கொண்டிருந்தான். இருட்டிலே காட்டுப் பாதையிலே யாழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இராணுவத்தினரின் திடீர் வழி மறிப்புத் தாக்குதலுக்கு உள்ளாகி தீரமுடன் போராடி தாம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற எமது அமைப்பின் கொள்கைப்படி சயனைட் மருந்தினை அருந்தி சிந்துவும் அவனது பொறுப்பாளரான மேஜர் செங்கதிரும் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார்கள் . அவர்களது வித்துடலும் கிடைக்கப்படவில்லை. சிறிலங்கா இனத்துவேச இராணுவத்தினால் அவர்களது வித்துடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. சிந்துவினது விடுதலைப் போராட்ட வீரவரலாறு விடைகாணா விடுகதையானது.

இந்த இளம் புலிவீரன் சிந்து தனது இளம் வயதிலேயே தனது தாய் நாட்டிற்காக தன் இன்னுயிரீந்து கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் ” நினைவுக்கல் 500 ” இல் வீரவேங்கை சிந்துவாக தன்னைப் பதிவு செய்து கொண்டு எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரவரலாறு ஆகினான்.

தாய் நாட்டுக்காக தனது ஒரேயொரு தனயனையீந்த அவனது தாயாரும் தற்போது தனிமரமாக தனது வீர மைந்தனின் நினைவுகளைச் சுமந்தபடி ஒரு வீரத்தாயாக தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தாயைப் போன்ற எத்தனையோ வீரத்தாய்கள் எமது போராட்ட வரலாற்றில் தமது வரலாற்றைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-நிலாதமிழ்.
குறிப்பு :- இவ் நினைவுப் பகிர்வுக்கு நினைவுக் குறிப்புகளைத் தந்து உதவியவர் வீரவேங்கை சிந்துவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

About ehouse

Check Also

சண்டைக்காரன் – லெப்.கேணல் தேவன்

இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ...

Leave a Reply