புரியாத புதிர்

முல்லைத்தீவு நகரம் இந்தியஇராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த காலம்.
நகரிலிருந்து பிரிந்துசெல்லும் ஒவ்வொரு வீதியின் தொடக்கச் சந்தியிலும் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீதிச்சோதனைகளும் வீதிக்கண்காணிப்புகளும் பலமாக இருந்தன.

அவனுடைய குடும்பம் சின்னாற்றங்காட்டில் குடியேறி பல ஆண்டுகள் கடந்திருந்தன.

தொடக்க நாட்களில் அந்த ஊரின் சூழல், இடைவெளியை ஏற்படுத்தியபோது சில நாட்களிலேயே அந்தச் சூழலோடு அவன் ஒன்றித்துப்போனான்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, நகரிலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுவான். அவனுடைய பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அண்ணளவாக இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்தது. ஊரிலுள்ள மாணவர்களும் சாரி சாரியாக வந்துகொண்டிருப்பார்கள். கிரவல் வீதியை முதன் முதலில் அவன் தரிசித்தான். அந்த வீதியின் நிறம் அவனுக்குப் புதுமையானதாகவே இருந்தது. எப்போதாவது ஒரு ஊர்தி புழுதியைக் கிளப்பி விரைந்தது.

காட்டையும், பனங்கூடல்களையும், குடிமனைகளையும் இரசித்தபடி பள்ளிக்கூடத்திற்குப் பயணிப்பான். சின்னாற்றுப் பாலத்தை நெருங்க அவனது சிந்தனைகள் சிறகடிக்கத் தொடங்கும். நாள்தோறும் சின்னாற்றைத் தரிசித்தபோதும் தெவிட்டாத காட்சியாய் அது அவனது மனதில் விரிந்துகிடக்கும்.

பள்ளிக்கூடம் விட்டுப் பசியோடு வந்துகொண்டிருந்தாலும் சின்னாற்றுப் பாலத்தில் பசி பஞ்சாய் பறந்துபோகும். ஒருபக்கம் தொடுவாயைத் தாண்டி பெருங்கடல் பரந்திருக்கும்.

இன்னொரு பக்கம் தொடுவாய் நீர் வளைந்து மறைந்திருக்கும். அதற்கப்பால் நந்திக்கடலோரப் பனங்கூடல்களின் தலைகள் தெரியும். கோடைகாலத்தில் சின்னாற்றில் மிதந்திருக்கும் பாறையில் முதலைகள் வாயைத்திறந்தபடி படுத்திருக்கும்.

மாரிகாலம் முற்றிய நாட்களில் சின்னாற்றுப் பாலத்துக்கு மேலால் தண்ணீர் பாயும். அந்தத் தண்ணீரோடு மீன்களும் பாய்ந்து பாலத்தில் விழும். அதனைப் பிடிப்பதற்கு ஊரவர்கள் குழுமியிருப்பார்கள். இந்த நாட்களில் சில வேளைகளில் பள்ளிக்கூடம் நடைபெறாது. அவனுள் கவலை குடிகொள்ளும். சின்னாற்றுப்பாலம் சின்ன மனதில் சிறகடிக்கும்.

இந்தியச் சிப்பாய்கள் சின்னாற்றுப்பால முடிவில் முகாம் அமைத்த நாளிலிருந்து அவனது சின்னாற்றுப்பால இரசனை குறைந்துபோயிற்று. பாலம் நெருங்கப் பயமே அவனைப் பீடித்தது.

உப்புக்காற்றில் அவர்களின் முகாமின் அடையாளநெடி காற்றில் கலந்து மூக்கைத் தொடும்.

இந்தியச் சிப்பாய்கள் நேரகாலமின்றித் தேங்காய்களை உடைத்துச் சப்பிக்கொண்டிருந்தார்கள். சில சிப்பாய்களின் கண்கள் பள்ளி மாணவிகளை விழுங்கிக்கொண்டிருந்தன. அந்த முகாமுக்குப் புதிதாக இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவன் வந்திருந்தான். அவனின் தோற்றம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மையாய் இருந்தது.
சரளமாகத் தமிழ் கதைத்தான். அந்த அதிகாரி பல இடங்களில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல்வல்லுறவுச் சம்பவங்களுக்குக் காரணமாக இருந்திருந்தான். இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் இறுமாப்பாய் நடப்பான். அவர்களின் காவலரணிலிருந்து சிறிது
தூரத்தில் போராளியால் ஒருநாள் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். ஊரவர்கள் உளமார மகிழ்ந்தார்கள்.

இந்திய ஜவான்களின் சுற்றிவளைப்பும், தேடுதல்களும், கைதுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தன. சில நாட்களில் இரவு வேளைகளில் தாறுமாறாகச் சுட்டபடி வருவார்கள். அவனும் ஊரவர்களோடு ஓடி காட்டுக்குள் பதுங்கியிருந்திருக்கிறான்.

அமைதிப்படையாக வந்தவர்களின் கொடுமைகளால் ஊரவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டபோது ஒரு இந்தியச் சிப்பாயின் செயற்பாடு சற்று மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது. சுற்றிவளைப்புக்களை முன்கூட்டியே தெரியப்படுத்தி உதவியிருக்கிறான். அவன் ஒரு தமிழ்நாட்டுக்காரன்.

அவன் பள்ளிக்கூடம் போகும்போது அந்தச் சிப்பாய் அவனோடு கதைப்பான். அவனுக்குப் பயமாக இருந்தபோதும் அந்தச் சிப்பாயின் செயற்பாடு பிடித்திருந்தது.

ஒருநாள் பள்ளிக்கூட நேரத்தில் சிலாவத்தைப் பக்கம் சூட்டுச் சத்தங்கள் அகோரமாய்க் கேட்டன. போராளிகளுக்கும் இந்திய இராணுவத்திற்குமிடையே மோதல் வெடித்திருந்தது. சில மணிநேரத்தில் சத்தம் ஓய்ந்துபோனது.

அவன் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான். காவலரணிலிருந்த சிப்பாய்கள் முழுசிக் கொண்டிருந்தார்கள். வேர்த்துக் களைத்திருந்த தமிழ்நாட்டுச் சிப்பாய் அவனைக் கூப்பிட்டான்.

” என்ன உங்கடை ஆக்கள் வண்டியில (ஊர்தி) பூட்டி அடிக்கிற ஆயுதத்தை எல்லாம் கையிலைவைச்சு அடிக்கிறாங்கள். எங்களிலை நாலுபோரு லொஸ்ற் ”
அவனுக்கு அன்று அந்தச் சிப்பாயின் பேச்சுப் புரியாத புதிராக இருந்தது. ஆனால் இன்று அவனும் ஒரு போராளியென்பதால் அது புரியாத புதிராக இருக்கவில்லை.

– ஆ. ந. பொற்கோ
தமிழீழ விடுதலைப்புலிகள் இதழ் ( மாசி – பங்குனி 2006 )

About ehouse

Check Also

போராளியின்யின் குறிப்பேட்டிலிருந்து…

இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. ...

Leave a Reply