அவன் கள நிலைகளுக்குச் சென்றால், நண்பர்கள் பகிடியாக கத்தரிக்காய் பொறுப்பாளர் எனச்சொல்லி வரவேற்பார்கள். வேதனை கலந்த புன்னகையை உதிர்ப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவனுக்கு.
அவர்களும்தான் என்ன செய்வார்கள். எத்தனை நாட்களுக்குத்தான் கத்தரிகாயைச் சாப்பிடுவது. நாளுக்கு ஒரு வேளையென்றால் கூட பரவாயில்லை. மூன்றுவேளை உணவுடனும் கத்தரிக்காய் உறவாடியது.
ஆனால் அந்த நாட்களில் உணவுக்கு கத்தரிக்காயும் கிடைக்காமலிருந்தால்….அவனால் அதற்குமேல் சிந்திக்க முடியவில்லை.
ஓயாத அலை மூன்றினால் அந்த ஊரின் பெரும்பகுதி இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டிருந்தது. இடம்பெயர்ந்த்ருந்த ஊரவர்கள் மீண்டும் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அந்த ஊர் விடுவிக்கப்பட்டதில் அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ட்சி.
அந்த ஊர் பொன் விளையும் பூமி. போராளிகளுக்குத் தேவையான மரக்கறிகளை அள்ளித் தரக்கூடிய பூமி.
விடுவிக்கப்பட்ட அந்த ஊரில் இராணுவ ஆக்கிரமிப்பின் தாண்டவத் தடயங்கள் பரந்துகிடந்தன. காடுகளும், கழனிகளும் சேர்ந்து ஊர் காடாகவே மாறிபோயிருந்தது. மிதிவெடிகள் பெய்த மழைக்குப்பின் கண்சிமிட்டின. கண்ணுக்குத் தெரியாதவை ஊரவர் சிலரின் கால்களில் கதை முடித்தது. ஆனால் ஊரவர்கள் சேர்ந்து போகவில்லை. காடாயிருந்த களனிகள் மீண்டும் களனிகளாயின. செம்பாட்டு மண்ணில் பயிர்கள் செழிந்தன.
பொருளாதாரத் தடையால் பயிர்களுக்குத் தேவையான பசளைவகைகளோ கிருமி நாசினிகளோ கிடைக்கவில்லை. நீரிறைக்கும் இயந்திரத்துக்குத் தேவையான மண்ணெண்ணையும் கிடைக்கவில்லை. ஆனால் ஊரவர்களின் கடுமையான உழைப்பினால் உயிர்ச்சத்து உற்பத்தியாயிற்று.
நாளாந்தம் போராளிகளுக்குத் தேவையான மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்கு போதுமான பணம் இருக்கவில்லை. ஊரவர்கள் கடனுக்கு மறக்கரிகளைத் தருவதற்கு முன்வந்தார்கள்.
இப்போது கத்தர்க்காய் மட்டுமல்ல ஏனைய மரக்கறிகளும் போராளிகளின் உயிர்ச்சத்தாகியது. சில மைல்களுக்கப்பாலிருந்து, எதிரியின் எறிகணைகள் ஊரைக் கிலிகொள்ளவைக்க முயலும். ஆனால் ஊரவர்கள் இடம்பெயரவில்லை.
உயிர்ச்சத்தை உற்பத்தி செய்வதில் உறுதியாயிருந்தார்கள். உழைப்பிற்கு அப்பால் உன்னதமான பனியின் தேவையை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
வாரத்திற்கொருமுறை ஊரவர்களின் கடன்கள் தீர்க்கப்பட்டால்தான் அவர்களால் உற்பத்தியை சுமூகமாக தொடரமுடியும். வாரத்திற்கொருமுறை கூட கடனை தீர்க்கமுடியாத நெருக்கடி வந்தேறியது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
” கடனைப் பற்றிப் பிறகு பார்ப்பம், மறக்கரியைக் கொண்டே பிள்ளைகளுக்கு சமைச்சி குடுங்கோ ” ஊர்தந்த உயிர்ச்சத்தால் போராளிகள் உத்வேகம் பெற்றார்கள். இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஏனைய ஊர்களும் மீளத்தொடங்கின.
– ஆ.ந.பொற்கோ
தமிழீழ விடுதலைப்புலிகள் இதழ் ( ஆனி – ஆடி 2004 )