Home / மாமனிதர் / மாமனிதர் நாவண்ணன்

மாமனிதர் நாவண்ணன்

மாமனிதர் கவிஞர் நாவண்ணன் நினைவுகள்…

இவர் 1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்தார் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த ஈழ விடுதலையின் சுவாலையை வீறுகொண்டு எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல்கள் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார். எதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் புலிகளின் படையணிகள் புது வரலாறு படைப்பதற்கு தோளேடுதோள் கொடுத்தவர்.

போராட்டப்பாதையில் அவரின் இளமைக்காலத்திலிருந்தே இறுதிக்காலம் வரை ஓயாது இயங்கினார். எமது போராளிகள், மக்கள் செய்த தியாகங்களை- அற்பணிப்புக்களை- சாதனைகளை- அவர்கள் சந்தித்த இழப்புக்களை பதிவுகளுள் செலுத்த வேண்டுமென்பதில் துடியாக துடித்தவர்.

அதற்காக ஊர், ஊராகத்திரிந்து இரவு பகலாக அலைந்து குடிசைகளிலும் கடற்கரைகளிலும் படுத்துறங்கி அவர்களின் வாழ்வை தன்வாழ்வாக்கி உணர்வுகளை வரைந்தார். அத்தோடு, நெருப்பாற்றில் நீச்சலிடும் விடுதலைப் போரின் வீச்சுமிக்க பக்கங்களை வெற்றிகளை எழுத்துருவில் மட்டுமல்லாது ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டுக்களிலும் பதிவு செய்வதற்காகவும் துடிப்பார். ஓர் கவிஞனாக மட்டுமல்லாது ஓர் ஓவியனாகவும், சிற்பியாகவும், நாவலாசிரியராகவும் தன் உணர்வுகளை பதிவுகளை பல்வேறு வடிவங்களிலும் ஆவணமாக்கினார்.

இவருடைய தாய் மண்ணின் பற்றின் சான்றுகள் தமிழீழ மண்ணிலும் இன்றும் தமிழர் மனங்களிலும் என்றும் நிலைத்து நிக்கின்றன சில கவிஞர்கள் வெறும் எழுத்துக் கவிஞர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் வாழ்வு என வருகையில் தாமும் தமது குடும்பமும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மற்றவர்கள் போராட வேண்டும் என நினைப்பார்கள். தாம் ஒதுங்கிவிடுவர் இவர் போராட்டத்தின் பதிவுகளை தனது எழுத்துக்கள், பேச்சுக்கள், ஒவியம் சிற்ப்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர்.

“கவிஞர் நாவண்ணன்” தமிழன் சிந்திய இரத்தம், கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது , உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து கொண்டவர். இவரால் தயாரிக்கப்பட்ட “வலியும் பழியும்” என்ற பிரமாண்டமான நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளில் தயாரித்த “கரும்புலிகள் காவியத்தை” நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம் சிற்ப்பம் ஆகிய வற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செயற்ப்பட்டார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதஙக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாக செயற்ப்பட்டமைகாககவும் அதன் பின்னர் “கவியம் நூல்” உருவாக்கம் கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்.

எம் தேசத்தின் வாழ்வோடு ஒன்றிணைந்திருந்த இவரது குடும்பத்தில் ஐந்து பெண் பிள்ளைகளிற்கு ஒரேயொரு ஆண் மகனாக இருந்த “சூசைநாயகம் கிங்சிலி” உதயன் 2 லெப். கவியழகன் என்பவர் இத்தேசத்தின் பயணத்தில் இணைந்து இறுதிவரை களமாடி மாவீரரானார். அதனாலும் மனம் தளராது வீர மறவனைப் பெற்றேடுத்தேன்- அவனை வீர புத்திரனாய் மண்ணிற்குள் விதைத்தேன் என்ற தன் உயிர்ப்பிரிவின் உணர்வை இலக்கியமாக படைத்தார்.

இவரின் முதுமைக்காலத்தில் புலிகளின்குரல் வானொலியிலும். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியிலும் தன் ஆற்றலினூடாக பல்வேறு நிகழ்வுகளை உலகுக்கும் உணத்தினார். இவரின் ஆற்றலிற்காக எம் தேசியத் தலைவர் அவர்களிடம் இருமுறை விருதுகள் பெற்றார். இறுதியில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துபோன எம் உறவுகளை நினைந்துருகி “ஆழிப்பேரலையின் சுவடுகள்” என்னும் அரிய நூல் ஒன்றையும் எழுதினார்.

காலத்தின் சுழற்சியோடு தன் வாழ்க்கையை ஒன்றிணைத்து என்றுமே, எப்போதுமே தன் படைப்பின் மூலம் நினைவுகளைப் புரட்டிப்பார்க்க விட்டுச்சென்ற ஓர் உன்னத மனிதன் கவிஞர் நாவண்ணன். அப்படிப்பட்டவர் மத்தியில் தான் மட்டுமன்றி தனது அருந்தவ புதல்வனையும் மண்ணிற்கே ஈகம் செய்தவர் கவிஞர் நாவண்ணன் அவர்கள். பல மாவீரர் பாடல்களை எழுதி எமக்காக உணர்வு ஏந்தித் தந்தவர்.

கவிஞர் நாவண்ணன் அவர்களின் புதல்வன் லெப்.கவியழகன் (சூசைநாயகம் கிங்சிலி உதயன்)16-05-1997 அன்று வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்தார். ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் 15.04.2006 அன்று மரணமடைந்தார். ஈழத்தின் மூத்த கவிஞர் திரு.நாவண்ணன் அவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் “மாமனிதர்” விருது வழங்கி கௌரவிக்கபட்டது.

எழுத்துத் துறையோடு ஓவியம், சிற்பம் போன்றவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். கற்சிலை மடுவில் நிறுவப்பட்டிருந்த கம்பீரமான பண்டாரவன்னியன் சிலை, மாங்குளத்தில் நிறுவப்பட்டிருந்த கரும்புலி போர்க்கின் சிலை, கிளிநொச்சி 155ம் கட்டையில் அமைக்கப்பட்டிருந்த முதற் பெண் மாவீர்ர் மாலதியின் சிலை போன்றன இவர் செதுக்கிய சிற்பங்களே.

மானிப்பாய் அந்தோனியார் ஆலய முன்றலில் யேசுக் கிறீஸ்துவின் சிலை, மல்வம் வாசிகசாலையில் சுவாமி ஞானப்பிரகாசர் சிலை,வங்காலையில் அருட்திரு பஸ்ரியன் சிலை, மன்னார் மாதா கோவில் முன்றலில் அருட்சகோதர்ர். டிலாசாலும் இரு சிறுவர்களும் நிற்கும் சிலை போன்றன இன்றும் கவிஞர் நாவண்ணணின் கலைத்திறனை நிரூபிக்கும் அவரது சிற்பங்களாகும்.

இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்

1- 1972 இறுதி மூச்சு
2- 1976 தமிழன் சிந்திய இரத்தம்-(1958 இனக்கலவரம் பற்றியது)
3- 1976 புத்தளத்தில் இரத்தக்களம் -(1976ல் நடந்த சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் பற்றியது)
4- 1978 பயணம் தொடர்கிறது (நாவல்)
5- 1988 நானொரு முற்றுப்புள்ளி (சிறுகதைத் தொகுப்பு)
6- 1988 தீபங்கள் எரிகின்றன (தனி மனித வரலாறு)
7- 1989 இத்தாலியன் தந்த இலக்கியத்தேன் (இலக்கியம்)
8- 1992 கதை-கண்ணீர்- கவிதை (மலையக மக்கள் தொடர்பான குறுங்காவியம்)
9- 1989 நினைவாலயம் (குறுநாவல்)
10- 1994 பொழிவு (அரங்கக் கவிதைகள்)
11- 1995 எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன
12- 2002 கரும்புலி காவியம் -பாகம் 1
13- 2005 சுனாமிச் சுவடுகள்

எழுதி முடிக்கப்பட்ட வெளிவராத நூல்கள்
வலிகாமம் இருந்து வன்னி வரை
குருதியில் நனைந்த திருவடிகள்
வித்தான காவியம்
முல்லை அலை விடு தூது (தூதுப் பிரபந்தம்)

இறுதி மூச்சு வரை எழுதும் முயற்சியில் இருந்தது – புலம்பெயர்ந்த ஈழத்து உறவுகளின் வரலாறு
2006 ஏப்பிரல் 15ம் திகதி நோயுற்ற நிலையில் எழுத வேண்டும் என்ற தாகத்தோடேயே இவரது இறுதி மூச்சும் காற்றில் கலந்தது.

விடுதலைப்போராட்டத்தை வேகப்படுத்திய பெரும் எழுதுகோல் பிடித்த மாமனிதர், கவிஞர் , நாவண்ணன் அவர்களும் போற்றி வணங்கப்படவேண்டியவரே..

நினைவுப்பகிர்வு
ஈழமகன்.

மாமனிதர் நாவண்ணன்

போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஒவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன்.

தமிழன் சிந்திய இரத்தம்,கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட “வலியும் பழியும்” என்ற நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளின் குரலில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செலவிட்டார். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காகவும், அதன் பின்னர் கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்.

கவிஞர் நாவண்ணனின் இலக்கியப்பணி நீண்டது. உண்மையில் அவரைக் கவிஞர் என்றுமட்டும் சொல்வதிலும்பார்க்க, பல்துறைக் கலைஞரென்றே சொல்லவேண்டும். அவ்வளவுக்கு பலதுறைகளில் ஈடுபாட்டுடன் உழைத்த மனிதர். 1985 ஆம் ஆண்டு சிங்கள அரசபடையாற் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வங்காலைக் குருவானவர் அருட்திரு மேரிபஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலான “தீபங்கள் எரிகின்றன” என்ற நூலின் மூலம்தான் எனக்கு நாவண்ணன் அறிமுகமானார்.

பின் “புலிகளின் குரல்” வானொலியிற் பணியாற்றிய காலத்தில் மிக வீச்சுடன் செயலாற்றினார். மிக அருமையான தாயகப்பாடல்களை எழுதியுள்ளார்.

“தமிழன் சிந்திய இரத்தம்” என்ற தொடர் ஈழத்தவர்களின் அவலங்களை ஆவணப்படுத்திய முக்கிய நிகழ்ச்சி. இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றில் முக்கியமானது இத்தொகுப்புத்தானென்பேன். தனியே ஓர் இனப்படுகொலையையோ அல்லது ஒட்டுமொத்தமானவற்றையோ திரட்டிப் புள்ளிவிரவரங்களோடு தொகுப்பட்டவற்றைத் தாண்டி, தனிமனிதர்களின் அவலங்களை அவர்களின் குரலிலேயே ஆவணப்படுத்தியதும், போர் உக்கிரமடைந்தபின்னும் தனிமனிதர்கள் மேல் நடத்தப்பட்ட கொடுமைகளின் சாட்சியத்தைப் பேணியதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.

லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயம் அவரிகளிடம் பரிசு வாங்கும் கலைஞர் நாவண்ணன்

“மட்டக்களப்பில் குடும்பத்தோடு சேர்த்து வீடு கொழுத்தப்பட்டபோது சிறுவயதில் தப்பிய ஒருவன், தன் குடும்பம் முழுவதுமே அதில் கொல்லப்பட்டதாக நினைத்திருந்தவன், மணலாற்றுச்சண்டையில் தன் சகோதரியைப் போராளியாகவே சந்தித்த சம்பவங்கள் (இதன்மூலம் தமிழ்ச்சினிமாவின் சில சம்பவங்கள் சாத்தியமுள்ளவையென்று நம்பத்தலைப்பட்டவன் நான்) உட்பட ஏராளமானவற்றை ஆவணப்படுத்தியவர் நாவண்ணன். உண்மையில் கிழக்கு மக்களின் அவலங்களும் போராட்டப் பங்களிப்பும் வடக்கோடு ஒரேதளத்தில் வைத்துப் பார்க்க முடியாதென்ற தெளிவை எனக்குமட்டுமன்றி நிறையப் பேருக்குத் தந்தது அந்நிகழ்ச்சி. எல்லைப்புறத் தமிழர்கள்மேல் நடத்தப்பட்ட வன்முறைகளும் இடங்களைப் பறிகொடுத்து அவர்கள் வெளியேறியதும் பலர் வெளியேறாமலே வீம்பாக இருந்து மாண்டதும் உட்பட எல்லைப்புறத் தமிழர்களின் சிலபாடுகளையாவது வெளிக்கொணர்ந்த தொகுப்பு அது.

ஏற்கனவே ‘தமிழன் சிந்திய இரத்தம்’ என்ற பெயரில் கவிஞர் நாவண்ணன் புத்தகமொன்று வெளியிட்டிருந்தார். அதில் ஆயுதப்போராட்டம் வீரியமடைய முந்திய காலப்படுகொலைகளை ஆவணப்படுத்தியிருந்தார். பின் அதே பெயரில் ஒலிவடிவில் அவர் தொகுத்த தொகுப்புத்தான் புலிகளின் குரல் வானொலி நிகழ்ச்சி. இதுவரை அது புத்தகமாக வரவில்லையென்று நினைக்கிறேன். விரைவில் வரவேண்டும். அனாலும் பாதிக்கப்பட்டவர்களின் நேரடிக்குரற் சாடசியங்களடங்கிய ஒலிப்பேழையும் வெளியிடப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

அதைவிட 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மடுத்தேவாலயப் படுகொலை பற்றியும் அவரொரு சிறந்த தொகுப்பைச் செய்திருந்தார். கையெழுத்துப்பிரதியாக இரண்டொரு பக்கங்கள் வாசித்தேன். அது இன்றுவரை வெளிவரவில்லை. வெளிவராததற்கு இருக்கும் காரணம் நியாயமானது, என்றாலும் ஒருநாள் வெளியிடப்படுவதற்காகவேனும் அவர் தொகுத்துவைத்த அப்புத்தகத்துக்காக அவருக்கு நன்றி.

கரும்புலி காவியம் என்ற பெரும்பணியைச் செய்ய முடிவெடுத்தபின் அதற்கான தரவுகளுக்காக வன்னியின் மூலைமுடுக்கெங்கும் புழுதி குடித்து அலைந்த கவிஞரின் பாடுகளை நன்கு அறிவேன். இவையெல்லாமே காசு கிடைக்காத தொழில்கள். அவரது அலைச்சலுக்கோ அந்தக் காவியத்துக்கோ ஊதியமேதுமில்லை. வரலாற்றை ஆவணப்படுத்தும் திருப்தியைத் தவிர வேறொன்றுமில்லை.

நாவண்ணனின் பாடல்கள் எனக்கு மிகப்பிடித்தமானவை. வவுனிக்குளத் தேவாலயப் படுகொலையை நினைந்து உடனடியாகவே அவர் இயற்றி, திருமலைச் சந்திரன் பாடிய பாடலைக் கேட்டு உருகாதவர் யாருமிருக்க முடியுமா?

“கன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும். -எம் சன்னங்கள் வென்றிட உம்தயை தாரும்.”

கவிஞர் நாவண்ணனின் “அக்கினிக் கரங்கள்” என்ற நூல் 01.03.2006 அன்று கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இதுதான் அவரின் கடைசி நூல்.

சூசைநாயகம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் நாவண்ணனுக்கு ஆறு பிள்ளைகள். ஐந்துபேர் பெண்கள். அவரின் ஒரேமகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்) களத்திலே வீரச்சாவடைந்துவிட்டார்.

“ஊர் கொடுத்தார் புலவருக்கு

உவந்தளித்தார் மிடி தீர

தேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,

தெரு வெல்லாம் பவனி வர;

கார் நிறத்துக் கரி கொடுத்தார்;

காற்று விசைப் பரி கொடுத்தார்”

என்று வியந்து தொடங்குகிறது அவரது “கரும்புலி காவியம்”.

“காவியமாய் புதுப் புறம்பாடி” எம்

காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்

சீவியத்தை மண் மீட்கத் தந்து – சென்ற

செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்”

என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.

கவிஞர் நாவண்ணன் அவர்களின் கவிதையொன்று.

இவனா என் பிள்ளை!

அம்புலியைக் காட்டி ஆவென்ன வைத்து

“அச்சாப் பிள்ளை “யென “ஆய்தந்த பிள்ளை”

கம்பால் அடித்து கண்டித்து பின்னர்

கண்ர் துடைத்து அணைத்திட்ட பிள்ளை;

“வம்புக்குப் போகாதே வலுச்சண்டை செய்யாதே

வாய்காட்டாதே” யென்று வளர்த்திட்ட பிள்ளை;

பெம்பகைவர் படைஅழிக்கும் வீரனாம் எனக்கேட்டு

வியக்கின்றேன் இன்று, இவனா என் பிள்ளை!

இருட்டுக்கு அஞ்சியவன் இரவானால் தனியாக

இருப்பதற்கு துணைகேட்ட பயங்கொள்ளிப் பிள்ளை

விரட்டிக் கலைத்தாலும் விட்டகலாம் தாய்சேலை

வீம்போடு அவளோடு அலைகின்ற பிள்ளை;

பரட்டைத் தலைவான் படிப்புக்கு ஒளித்திடுவான்

பசியின்றி விளையாடித் திரிகின்ற பிள்ளை;

முரட்டுத் துவக்கோடு ‘சென்றி’யிலே நின்று

முழிக்கின்றான் இன்று இவனா என்பிள்ளை!

விதம்விதமாய் சமைத்து விருப்பு சுவையறிந்து

வேலைக்குக் கொடுத்தாலும் ” இது என்ன

இதம்இல்லை வேண்டாம் எனக்கு” என்றுகூறி

எடுத்தெறிந் தெழுகின்ற என்பிள்ளை.

பதம்பாகம் இல்லாது பசிக்கே உணவென்று

படையலாய் அவித்த எதையேனும்

நிதம் உண்கின்றானாம் நிம்மதியாம் அவனுக்கு

நினைக்கின்றேன் இன்று, இவனா என்பிள்ளை!

நாய் குரைக்க ஓடிவந்து நடுங்கிப் பதறியவன்

நாலுபேர் முன்நிற்க துணிவில்லாக் கோழை

தாய்க்கும் எனக்கும் நடுவினிலே துயிலுவதே

தனக்குச் சுகம் என்று எண்ணியவன் இரவில்

பாய் நனைப்பான், எழப்பயந்து படுப்பான் எழுப்பாது;

பட்டாசு வெடிக்கே பலகாதம் ஓடுபவன்

தாய்நாடு காக்கும் தானையிலே முன்னணியில்

திகழ்கின்றான் இன்று இவனா என்பிள்ளை?

இப்படியாய் மற்றவர்கள் இகழ்ந்துரைக்கும் குணங்களுடன்

இளப்பமாய் வாழ்ந்திட்ட என்னுடைய பிள்ளை

தப்படிகள் இல்லாது தக்கபடிதான் வளர்த்த

தத்துவத்தை வியக்கின்றேன் இவனா என்பிள்ளை!

எப்படித்தான் இவனுக்குள் இதுவெல்லாம் தோன்றியதோ?

இவர்சார்ந்த இடமே காரணமாம் என்றார்;

அப்படியாய் புதுமாற்றம் அடைந்த அவனுக்கு

அப்பன் நானன்றோ? அவனே என்பிள்ளை!

-நன்றி வன்னியன் (பூராயம் இணையத்திலிருந்து )

About ehouse

Check Also

மாமனிதர் நடராஜா ரவிராஜ்

நடராஜா ரவிராஜ் (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Leave a Reply