யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலி வீதியில் மயில்வாகனம் திலகவதி தம்பதிகளுக்கு 1975 ஆம் ஆண்டு யூன் மாதம் 29 அன்று ஆறாவது புதல்வனாக பிறந்தவன் தான் லெப் கேணல் சிந்து. இவனது இயற்பெயர் தயாளன். இவன் ஆரம்பக் கல்வியை அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் பயின்று வந்தவன், இளமைக்காலத்தில் கல்வியில் கணிசமாகவும், விளையாட்டில் மிகச்சிறந்தும் விளங்கினான்.
இவன் பாடசாலை இல்ல விளையாட்டுகளிலும் சரி, கழக விளையாட்டுக்களிலும் சரி தனது தனித்திறமையை வெளிக்காட்டினான். தாச்சிப்போட்டி, கரப்பந்தாட்டம் போன்றவற்றில் தன் திறமையை பெரிதும் வெளிப்படுத்தினான். தயா இறங்கி தாச்சி மறித்தால் யாரும் கோடுதாண்டி போகமாட்டார்கள் என்பார்கள் அவனது நண்பர்களும் அயலவர்களும் அறிந்ததொன்று. எல்லோரது கரவொலியும் அவனுக்காகவே ஓங்கி ஒலிக்கும்.
கலைநிகழ்வுகளில் அதாவது தமது ஊர் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக சுய முயற்சியில் உதயகுமாரி (வதனி) அவர்களால் நடாத்தப்பட்ட சரஸ்வதி கலையகத்தில் தானும் இணைந்து படித்துக்கொண்டு அவர்களால் அரங்கேற்றப்படும் கலைநிகழ்வுகளிலும் பங்குபற்றிச் சிறப்பித்தான்.
ஊரில் தனது அருணோதயா சனசமூகநிலையத்தின் கலைநிகழ்வுகளிலும் குறிப்பாக “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” போன்ற வரலாற்று நாடகங்களிலும் பங்குபற்றிச் சிறப்பித்தான். அது மட்டுமல்ல வதனி அவர்களின் தயாரிப்பில் உருவான ~நாடகம்ஹ என்ற நகைச்சுவை நாடகத்தில் அசட்டுப்பையனாக நடித்து அருணோதயா முன்றலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான அத்தனை மனிதர்களையும் வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்தது அவன் கலையார்வத்துக்கு மட்டுமல்ல குருபக்திக்கும் எடுத்துக்காட்டு!
அத்தோடு தனது கலைத்திறமையைப் பயன்படுத்தி இளைஞர்களுடன் சேர்ந்து வாசிகசாலை, கோவில் வளர்ச்சிக்காக கரோல் போன்றவற்றை நடாத்துவதன் மூலம் அவ்வூர் வளர்ச்சிக்காக தானும் பாடுபட்டான். பல பொதுப்பணிகளில் முன்னின்று செயற்பட்டான். இவ்வாறாக இவனது இளமைக்காலம் நகர்ந்து கொண்டிருந்தது.
அவ்வப்போது இவனது குடும்ப பொருளாதார நிலை காரணமாக பாடசாலை செல்லும் வயதிலேயே அரியாலை தபாற்கட்டைச் சந்தியில் அமைத்திருந்த ‘மணியண்ணைஹ (அவன் அப்படித்தான் அழைப்பான்) கடையில் பணிபுரிந்து அதிகாலை வேளையில் பத்திரிகை போடுவதும் உதவி செய்வதுமென சிறிய பணம் ஈட்டி வந்தான். அந்தப்பணத்தில் சீட்டுப்பிடித்து சேகரித்து தன் தாயின் கழுத்தினை சிறிய பொன்னகை போட்டு மகிழ்வித்து மகிழ்ந்த நல்ல மகன் அவன். குடும்பநிலையை மனதில் கொண்டு தனது பெற்றோரின் வாழ்விற்காகவும் ஏனைய சகோதரர்களின் படிப்புக்காகவும் தனது கல்வியை பத்தாம் தரத்துடன் நிறுத்திவிட்டு குடும்ப சுமையை தானே பொறுப்பெடுத்து கடின உழைப்பிற்கூடாக நல்ல நிலைக்கு கொண்டுவந்தான்.
இக்காலகட்டத்தில்தான் பலாலியில் இருந்து வலிகாமத்தை நோக்கி சிங்கள இராணுவத்தால் 1995 ம் ஆண்டு “றிவிறேச’’ என்னும் பாரிய இனஅழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தம் அரங்கேற்றப்பட்டது. இதனால் பெருமளவில் மக்கள்; கொல்லப்பட்டு பாரியளவில் மக்கள்; இடம்பெயர்ந்தார்கள். அதில் பெரும்பாலான மக்கள் அரியாலைப் பிரதேசங்களில் அடைக்கலம் புகுந்தார்கள்.
குடும்பநிலை உணர்ந்து சிறுவயதிலேயே தனது குடும்பச் சுமையைச் சுமந்தவனால் மற்றவர்களின் துன்பம் புரியாதா என்ன? எனவே பலஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து சிரமப்படுவதைப் பார்த்துக்கொண்டு இவனால் சும்மா இருக்கமுடியவில்லை. இரவு, பகல் பாராது வெயில் மழைபாராது அவர்களுக்கான உணவுகளை எடுத்துக் கொடுப்பதில் இருந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை அவ்வூர் அரசியல் துறையுடன் இணைந்து செய்தான்.
இந்த இராணுவ நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகளால் “புலிப்பாய்ச்சல்” என்ற பாரிய முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பாரிய இழப்புக்கள் மத்தியில் அவனது இராணுவநடவடிக்கை கைவிடப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளாத சிங்கள ஏகாதிபத்தியம் மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டது.
அதன் உச்சக்கட்டம்தான் யாழ் சென்பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத்தாக்குதல். இதில் பல தமிழ்மக்கள் உடல் சிதறிப் பலியாகினார்கள். இதை இவன் பார்த்து கொதித்தெழுகின்றான். ‘‘இப்படி ஈவிரக்கமின்றி எம்மக்களைக் கொல்கிறதே சிங்கள இராணுவம்.. இதுதானே எங்களுக்கும்? இவன் இப்படியே எம்மை அழித்து தனது இன அழிப்பைச் செய்துமுடிப்பான்“ என்பதை உணர்கின்றான். இதைத் தடுக்கவேண்டும் எனின் போராடவேண்டும் என முடிவெடுக்கின்றான்.
தன்னை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கின்ற குடும்பத்தைவிட ஈவிரக்கமின்றிக் கொல்லப்படுகின்ற தமிழ்மக்களின் அவல நிலை இவனை ஒரு போராளியாக மாற்றுகிறது.
1995ம் ஆண்டு 8ம் மாதம் 8ம் திகதி நல்லூர் அரசியல்துறையில் போராட்டத்திற்காக தன்னை முழுமையாக இணைத்துக்கொள்கிறான். இதன் இடையே இவனுடன் பிறந்த அண்ணன் 2ம் லெப்ரினன் பழனி ஏற்கனவே போராட்டத்தில் இணைந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டதால் இவன் வீடு செல்லுமாறு பணிக்கப்பட்டான். ஆனால் இவன் அன்பாக மறுத்து ஏனைய நண்பர்களுடன் பயிற்சிப்பாசறை நோக்கி நகர்கின்றான்.
மணலாறு மாவட்டத்தின் அதன் காட்டுப்பகுதியில் இயங்கிவந்த ஜீவன் பயிற்சி முகாமில் இம்ரான் பாண்டியன் படையணியின் கெனடி 01 என்ற பயிற்சிப் பாசறையில் புதுப் புலியாக புதுவேகம் எடுக்கின்றான். இவன் பயிற்சிக்காலங்களில் பயிற்சிகளிலும், கலைநிகழ்வுகளிலும, விளையாட்டுகளிலும் திறம்படச் செயற்பட்டான்.
இக்காலகட்டப் பகுதியில்தான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக, சிங்கள இராணுவத்தால் பல நாடுகளிடம் வாங்கிக் குவிக்கப்பட்ட இராணுவத் தளபாடங்களைப் பயன்படுத்தி “சூரியக்கதிர்’’ என்ற பாரிய இனஅழிப்பு, நில ஆக்கிரமிப்பு யுத்தம் எமது மக்களைக் கொன்று குவிக்க நடாத்திக் கொண்டிருக்கப்பட்டது.
இதனது எதிர்ச் சமரிற்காக இவனது பயிற்சிப்பாசறையில் இருந்து திறம்படச் செயற்பட்ட போராளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் இவனும் தெரிவுசெய்யப்படுகிறான். ஆகவே மீண்டும் யாழ் களமுனை நோக்கி ஒரு புதுப்புலியாக கன்னிச்சமரை T56-2 என்ற AK ரகத்துப்பாக்கியுடன் எதிர்கொள்ளச் செல்கின்றான்.
இவர்களைச் சமருக்காக விடப்பட்ட இடம் யாழ் பல்கலைக்கழகம். அப்போது இவன் “டேய் மச்சான் அம்மா எல்லோரும் அடிக்கடிச் சொல்வார்கள் நீ படித்து கம்பஸ் போகவேண்டும் என்று ஆனால் அதை சிங்களவன் செய்யவிடவில்லை இப்ப இயக்கம் கொண்டுவந்து விட்டிருக்கு‘‘ எனச் சிரித்தவாறே சொன்ன அவன் ‘‘இதை சிங்களவனிடம் விட்டிடக்கூடாது‘‘ என ஆவேசத்துடன் சொல்லிமுடித்தான்.
அதன் ஆவேசம் அவனது கன்னிச்சமரில் ஒரு முதிர்ந்த கள அனுபவமுள்ள போராளியைப் போல் களமாட வைத்தது. இவனது திறமையை இவனது பொறுப்புநிலை அதிகாரிகள் கண்டு வியந்தனர். யாழ்மாவட்டம் முற்றுமுழுதாக நில ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் வரை நின்று திறம்படக் களமாடினான். பின் பயிற்சிகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் பயிற்சிமுகாம் வந்து சேர்ந்தான்.
யாழை இழந்தபின் முல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான சமரிற்கு இவனுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர்த்தந்திரங்களில் ஒன்றான புதிய தாக்குதல்களில் புதிய மூலோபாயமாக புதியஇராணுவ வழங்களைப் பயன்படுத்தவது வழமை ஆகவே இத்தாக்குதலின் மூலோபாய வளங்களில் ஒன்றாக புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட 120MM (5 இஞ்சி) எறிகணைகளைப் பயன்படுத்தத் திட்டமிடுகிறார்.
அந்த வகையில் இம்ரான் பாண்டியன் படையணியின் 120MM எறிகணை அணிகளுக்கு இரகசியம் காப்பதுடன் செயற்திறன் மிக்க போராளிகள் வரிசையில் இவனும் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அதன்படி ஓயாதஅலைகள் 01 நடவடிக்கையில் 5 இஞ்சியுடன் நின்று சிறப்புடன் களமாடுகிறான். இவனது களத்திறமை இவனை ஒரு 5இஞ்சி அணிக்கு பொறுப்பாளராக மாற்றுகிறது.
இவன் அவ்வணிக்கு பொறுப்பாளராக சிறிது காலம் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக இம்ரான் பாண்டியன் படையணியின் கவச அணிக்குள் உள்வாங்கப்படுகிறான்.
இவனிடம் அசாத்தியதிறமை இருப்பதை இனங்கண்ட பொறுப்பதிகாரியால் 23MM கனோன் வகை ஆயுதம் பொருத்தப்பட்ட தென்னாபிரிக்க நாட்டுத் தயாரிப்பின் விசேட பவள் கவச வாகனத்திற்கு சாரதியாக நியமிக்கப்படுகிறான். 106MM(RCL) பின்னுதைப்பற்ற ஆயுதங்களுடனும் களமாடினான்.
போராட்டத்தின் அடுத்தகட்ட எந்தவொரு வளர்ச்சியிலும் தலைவர் அவர்களின் நேரடிப்பார்வை இருக்கும். அந்தவகையில் பவள் கவச அணியின் செயற்திறனை நேரடியாக பார்வையிட்டபோது அவ்வணிப் போராளிகள் தலைவரால் பாராட்டப்படுகிறார்கள.; அந்த அணியில் இவனும் ஒருவனாக இருந்தான்.
23MM ஆயுதம் பொருத்தப்பட்ட கவச வாகனத்தை மிகவும் சாதுரியமாக ஓட்டிச் சென்று ஆயுதச் சூட்டாளருக்கு ஏற்ற வகையில் எந்தக் கடினமான பிரதேசத்திலும் சொல்கிற இடத்தில் கொண்டுசென்று நிறுத்துவதுடன் தனது வாகன இருக்கையில் இருந்தபடி தனது சிறுரக ஆயதத்தால் களமாடி மீண்டும் பவள்கவசவாகனத்தை தனது இருப்பிடம் நோக்கி கொண்டுவந்து சேர்ப்பான். இவ்வாறு மன்னார் களமுனைகளில் பல தாக்குதல்களிலும் ஜெயசிக்குறுவுக்கு எதிரான பல எதிர் சமர்களிலும் பங்கு கொண்டான்.
இவனது வாகனம் செலுத்தும் திறமையை மட்டுமல்ல போரிடும் ஆற்றலையும் கண்ட பொறுப்பாளர்கள்;, எம்மால் பூனகரி “தவளைப்பாய்ச்சல்”; நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட T55 டாங்கிக்கு, இவனை சாரதியாக நியமிக்கின்றார்கள். அதன் பின் அவன் சாரதியாக மட்டுமல்லாது டாங்கியின் சகல பகுதிகளையும் கற்றுத் தேறுகிறான். இக்காலகட்டத்தின் போது எதிரியின் குகைக்குள் உள்நுளைந்து தாக்குதலை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணிக்கும், விசேட அணி போராளிகளுக்கும் ஒரு டாங்கியை கைப்பற்றினால் அதை எவ்வாறு ஓட்டிக்கொண்டு வருவது தொடர்பான பட்டறிவுகளையும் வழங்கினான்.
இவனது விடுதலைப்போராட்ட வாழ்க்கையில் டாங்கியோடு களமாடிய சமர்களே அதிகம். ஓயாத அலைகள் 02,03,04 ,போன்ற எமது வெற்றிச் சமர்களில் எல்லாம் டாங்கியைக் கொண்டு சென்று எதிரியை திகைப்பூட்டி கொன்றான். அதே போல் எதிரியின் ராங்குகள் எம்மவர்களால் தாக்கியழிக்கப்பட்டால் அவ்விடத்திற்கு சிந்துவும் சென்றுவிடுவான். ஏனெனில் எங்களது ராங்கிற்கு ஏதாவது பாகங்கள் களற்றமுடியுமா என பாhர்த்து அதை எவ்வளவு எதிரியின் தாக்குதலுக்கும் மத்தியிலும் களற்றிவருவான். இவ்வாறு தனது பொறுப்பாளருடன் சேர்ந்து தங்களது கவச அணியை எவ்வளவுதூரம் விடுதலைப் போராட்டத்தில் வளர்க்கமுடியுமோ அந்தளவுக்கு வளர்த்தும் பாதுகாத்தும் வந்தான்.
ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குள் பதுங்கியிருந்து தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தின் மீது நாம் டாங்கித் தாக்குதலை மேற்கொண்டபோது அவ்விடத்தில் டாங்கி புதைந்து விடுகிறது. அப்போது எதிரிக்கும் டாங்கிக்கும் இடையே சொற்ப தூரம்தான் இருந்தது. எதிரியும் பலவழிகளில் எமது டாங்கியை அழிக்க முயன்றான். அவற்றிற்கெல்லாம் எதிராக களமாடிக்கொண்டு சக போராளிகளுடன் இந்த டாங்கிக்கு ஏதாவது நடப்பதாக இருந்தால் தனது வீரச்சாவிற்குப் பிறகுதான் நடக்கும் என அவ்விடத்தில் இருந்து நகராது பலமணி நேர சிரமத்தின் மத்தியில் அந்த ராங்கியை பாதுகாப்பாக ஏனைய போராளிகளுடன் வெளியே எடுக்கிறான்.
அந்த அளவிற்கு தனது உயிரிலும் மேலாக தனது டாங்கியை நேசித்தான். காலை எழுந்ததும் பிள்ளையாரைக் கும்பிட்டுத்தான் ஏனைய கடைமைகளைச் செய்வான். நான் இங்கு பிள்ளையார் என்று கடவுளைக் கூறவில்லை டாங்கிக்கு எம்மவர்களால் வைக்கப்பட்ட பெயர்தான் பிள்ளையார்.
இவ்வறாக இவன் பல சமர்களை சந்தித்த பின்பும் கடலோரத்தில் எதிரியின் கடற்கலங்களின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கவே கடற்கரைப் பாதுகாப்பிற்காக ஏனைய காலங்களில் கண்விழித்து ராங்கியுடன் கடமையாற்றினான்.
இக்கால கட்டத்தில்தான் இவனைத் திருமணம் செய்யுமாறு பணிக்கப்படுகிறது. அதன்படி 18.05.2005 அன்று திருமணம் செய்து கொள்கிறான்.
இதன் பின் எம்மவர்களின் பாரிய தாக்குதல் திட்டத்திற்காக மாசார்பகுதியில் நிலைகொண்டிருந்த போது டாங்கியைப் பயன் படுத்துவதற்காக முகமாலையில் எதிரியின் முன்னணிக் காவலரணைப் பார்வையிட்டு வரும் வழியில் இவனையும் இவனைப் போன்ற பலரையும் டாங்கியணிக்காக வளர்த்தெடுத்த தளபதியும் டாங்கியணியின் முதல் மூத்த உறுப்பினரும், இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியுமான லெப்.கேணல் பார்த்திபன் என்ற தான் நேசித்த ஒரு தளபதியை விபத்தின் போது இழக்கின்றான்.
டாங்கியணிக்காக வளர்த்தெடுத்த தளபதியும் டாங்கியணியின் முதல் மூத்த உறுப்பினரும், இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியுமான பார்த்திபன். லெப் கேணல் சிந்து.
ஒரு விடுதலை வீரன் வீழ்கின்றபோது அவனது கடமைகளை ஏனைய போராளிகள் தாங்குகின்றார்கள். அதே போன்று அத்தளபதி விட்டுச் சென்ற கடமைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகல் பாராது தனது புதிய குடும்பத்திற்கும் மேலாக கடமையில் தீவிரம் காட்டுகிறான்.
இதற்காக எம்மைக் குறிவைத்துக் காத்திருக்கும் சூனியப் பிரதேசத்திற்குள்ளும் சென்றுவந்தான். சத்தம் கேட்டால் உயிர் போகும் என்று அறிந்திருந்தும் எம்மவர்களால் தாக்கி சேதமாக்கப்பட்டு எம்மாலும் எடுக்கமுடியாமலும் அவனாலும் எடுக்க முடியாத இடத்தில் இரவில் சென்று சத்தம் இன்றி ஏனைய போராளிகளுடன் மிகச் சாதுரியமாக பாகங்களைக் களற்றி வந்தான். இவனது திறமையையும் ஆர்வத்தையும் கண்டுகொண்ட சிறப்புத்;தளபதி இவனை கவச அணியின் எமது தாக்குதல் உத்திக்கு ஏற்ப தயார்ப்படுத்தப்படும் கவசவாகனப் பகுதிக்கும், அதன் திருத்தப் பகுதிக்கும் பொறுப்பாக நியமிக்கின்றார்.
VMB கவசவாகனத்தில் ஏற்பட்டுள்ள பிழைகளைத் திருத்தி அதில் உள்ள ஆயதத்தை தாக்குதலுக்காக தயார்ப்படுத்தி எமது தேசியத்தலைவரின் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கவேண்டும் எனத் துடித்தான். அதற்காக பலதரப்பட்டவர்களை அணுகி பலதரப்பட்ட பொருட்களைத் தானே தேடி அதை செய்துமுடித்தான். அதே நேரம் பவள் கவசவாகனத்தில் விசேடவகை கனோன் கனரக ஆயுதத்தை பொருத்துவதற்கு ஏற்றவகையில் அதை வடிவமைத்து அதில் கனரக ஆயுதத்தைப் பூட்டி அதைத் தாக்குதலுக்காக கொடுக்கும் பணியை பொறுப்பேற்று அதை பலதரப்பட்ட படையணிகளின் போராளிகளுடன் அணுகி திறம்படச் செய்துமுடிக்கிறான். அப்போதுதான் இவனது நிர்வாகத்திறமையையும், ஆளுமையையும் நாம் கண்டுகொள்கின்றோம்.
இக்காலகட்டத்தில்தான் பல நாட்டு உதவிகளுடன் எம்மை அழிப்பதற்கான பாரிய யுத்தத்தை எதிரி மன்னாரில் இருந்து தொடங்குகின்றான். இதன்போது எமது பிரதேசங்கள் இனஅழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தம் அரங்கேற்றப்பட்டது. இதனால் பல இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தார்கள். இதனால் மக்கள் ஒரு நேர உணவுக்குக்கூட அவதிப்பட்டார்கள். இதனைப்பார்த்து மிகவும் வேதனைப்பட்டான். இவன் தன்னிடம் இருப்பவற்றை மக்களுக்குக் கொடுத்தான்.
இதன் போது தொடர்ந்து டாங்கியுடனும், MBயுடனும் இவ்வினவெறி இராணுவத்திற்கு எதிராகப் போரிட்டான். அதே நேரம் எதிரியால் மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதலில் இருந்தும், எறிகணைத்தாக்குதலில் இருந்தும் எமது கவசவாகனங்களை மிகந்த சிரமங்களுக்கும் மத்தியில் இயன்றளவு ஏனைய போராளிகளுடன் சேர்ந்து பாதுகாத்துவந்தான்.
இராணுவம் பல நாட்டு உதவி ஆலோசனைகளுடன் பலமுனைகளில் நவீன இரசாயன ஆயுதங்களுடன் எமது மக்களைக் கொன்று எமது சமர்க்களங்களை புதுக்குடியிருப்புவரை பின்னகர்த்தியிருந்தான். இங்கு நாம் எது செய்தாலும் எதிரியின் வேவு விமானம் கண்டுவிடும் அப்படியிருந்தும் எதிரியின் வேவுவிமானங்களுக்குத் தெரியாத வகையில் டாங்கியை சாதுரியமாக நகர்த்தி புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு திரும்ப கொண்டுவந்துவிடப்பட்ட இடம் எதிரிக்கு ஏதோ ஒருவகையில் தெரியவந்து அவ்விடத்தில் கிபீர், மிக்27 ஆகிய விமானத் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத்தாக்குதலால் டாங்கி மறுபக்கம் கவிழ்ந்து அச்சதுப்புநிலத்தில் புதைந்துவிடுகிறது.
இதை எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்று இராணுவம் டாங்கியை அண்மிக்கும் வரை ஊணுறக்கமின்றி இடருற்றான். என்ன செய்யமுடியும் அதை வெளியே எடுப்பதற்கான வசதி அப்போது எம்மவர்களின் கைகளில் இருக்கவில்லை எனவே அதை தகர்ப்பது என தலமை முடிவெடுக்கின்றது. இதை கேள்வியுற்றவன் அழுதே விட்டான். இதை தன்னால் பார்க்கமுடியாது என சக போராளிகளிடம் விட்டுவிட்டு தனது மற்ற வாகனமான VMB யுடன் முள்ளிவாய்க்கால் செல்கின்றான்.
அங்கே VMB யை எங்கே விடுவது. நகரமுடியாதஅளவுக்கு மக்கள் கூட்டம். இதை எங்கு விட்டாலும் அந்த மக்களுக்கும் ஏதாவது நடந்துவிடும் என்பது அவனுக்கு தெரியும். எனவே தனது குடும்பத்துடனேயே வைத்திருந்தான். இதை எதிரி வேவு விமானம் கண்டால் நிச்சயம் தாக்கியழிக்க முற்படுவான். இதனால் சுற்றியிருக்கிற மக்களுக்கு பாதிப்புவரும் என்பதால் மிகவும் அவதானமாக இருந்தான்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவம் எமது மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து சரமாரியான முப்படை தாக்குதலினால் பல ஆயிரம் மக்களை கொன்றது. இவ்வாறான இராணுவத்தின் தாக்குதலில் இவனும் இவனது குடும்பத்தில் இரண்டு பேரையும் இழக்கின்றோம்.
அதுமட்டுமல்லாது ஏனையவர்கள் படுகாயமடைந்து யாரை யார் காப்பாற்றுவது என தெரியாது தவித்;தார்கள். இவ்வாறக தான் நேசித்த மக்களுடனும், உறவுகளுடனும் இந்த கவசஅணி வீரன் விதையாகின்றான். ஒரு ஆண்மகவுக்கும் பெண்குழந்தைக்கும் தந்தையான சிந்து தன் இறுதிக்குழந்தையுடன் அதிக நாட்கள் கூட வாழக் கிடைக்கவில்லை.
11.05.2009 அன்று எதிரியின் எறிகணைத்தாக்குதலில் இந்த கவசப் புலி வீரச்சாவைத்தழுவிக் கொள்கிறான். தன்வலியைவிட மற்றவர் வலிகண்டு தன்குடும்பம், சுற்றம், சூழல் துறந்து இவன் போன்றவர்களது போராட்டவாழ்க்கை எமது அடுத்தகட்ட போராட்டத்திற்கான திறவுகோலாகப் போடப்பட்டிருக்கிறது. நிச்சயம் இவன் போன்ற ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கனவுகள் நனவாகும் வரை மீண்டும் மீண்டும் எழுவோம் என உறுதியெடுத்துக் கொள்வோம்.