ஜென்னி(Jenny) இறந்த போதே மார்க்சும்(Marx) இறந்துவிட்டார் என்ற பிரெட்ரிக் எங்கெல்சின் (Fredrich Engels) கூற்றை எனது அரசியல் வகுப்பு ஆசிரியர் அடிக்கடி கூறுவார். ஆர்வ மேலீட்டால் மார்க்ஸ்-ஜென்னியின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப்படித்த போது, அவர்களுக்கு இடையில் இருந்த மகத்தான காதலைப் பார்த்து வியந்து போனேன். ஜேர்மனியில் பிறந்த ஜென்னி, தன் கணவரான மார்க்சின் அரசியல் சிந்தனைகளுக்காக சொந்த நாட்டில் இருந்த விரட்டப்பட்டு, பாரிஸ், புரூசல்ஸ், லண்டன் என அகதியாக திரிந்த போதிலும் தன் கணவருக்கு உற்ற துணையாக இருந்தார். இலட்சியத்தினால் ஒன்றிணைந்த காதலர்கள், அதே இலட்சியத்தின் பேரால் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைத் தாண்டி வரலாறாகினர்.
Marx-Jenny இணையரைப்போலவே இலட்சியத்தால் ஒன்றுபட்டு, இறுதிவரை இணைபிரியாமல் வாழ்ந்து மடிந்த பலரின் கதைகள், காவியமாக நமது மண்ணில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த மண்ணின் நினைவுகளிலிருந்து இப்பதிவை எழுதுகின்றேன்.
1970களில், இலங்கைத்தீவின் வடமுனையான வல்வெட்டித்துறையில் இருந்து பாலசிங்கம் மகேந்திரன் என்ற இளைஞனும், அதே காலப்பகுதியில், இலங்கையின் தென்முனையான மாத்தறையில் இருந்து வினித்தா சமரசிங்க குணசேகர என்ற யுவதியும், இலங்கை காவல்துறை சேவையில் இணைவதற்காக தத்தமது கிராமங்களை விட்டு புறப்பட்டு வருகின்றனர். காவல்துறை பயிற்சிகளின் பின்னர், கொழும்பு நகரப் பகுதியிலேயே பணியமர்த்த படுகின்றனர்.
இடதுசாரி இயக்கங்களுடனான ஈடுபாடுகள், ரக்பி விளையாட்டு, உந்துருளி மூலமான சாகசங்கள் என்று துடிப்பான இளைஞன் மகேந்திரனுக்கும், பெண் காவலராக தொலைத் தொடர்பு அலுவலராக பணியாற்றிக்கொண்டிருந்த வினித்தாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. சமூக அடையாளங்களால் பிளவுபட்டு போயிருக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் என்று அத்தனை வேலிகளையும் தாண்டி மலர்ந்த இவர்களின் காதலுக்கு துணிச்சல் அதிகமாக இருந்தது.
வினித்தாவின் தரப்பு மிகக்கடுமையான எதிர்வினையாற்றியது. இறுதியில் இடதுசாரி இயக்கம் ஒன்றின் தோழர் வாசுதேவ நாணயக்காரவின் அனுசரணையில், இவர்களின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. தென்னிலங்கையில் இவர்களின் அழகிய வாழ்வு தொடங்கியது.
சோதனைகள் ஆரம்பம்…
1983 ஜூலை இனக்கலவரம் இலங்கைத்தீவு முழுவதையும் தீயிலிட்டபோது சிங்கள-தமிழ் இனங்களுக்கிடையிலான பிளவுகள் இன்னும் அதிகரித்தன. மகேந்திரன் வினித்தா தம்பதியினர் இரண்டில் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலை. இறுதியில் இருவரும் தமது குழந்தையுடன் யாழ்ப்பாணம் சென்று வாழ்வது என்று முடிவெடுத்தனர். யாழ்ப்பாணம் சென்ற மகேந்திரனுக்கு யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியமர்வு கிடைத்தது. சம காலத்திலேயே, யாழ்ப்பாணத்தில் இயங்கிய விடுதலை அமைப்புகளில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனும் தொடர்புகள் ஏற்படுகின்றன.
11/04/1985 அன்று இரவு யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்படுகின்றது.
அவ்வேளையில் அங்கு கடமையில் இருந்த மகேந்திரன் புலிகளுடன் இணைந்து கொள்கிறார். மகேந்திரன் நடேசனாக மாறுகிறார். அதன்பின் விறுவிறுப்பான இயக்கப்பணிகள், இடையில் சில காலம் இந்திய இராணுவத்தின் சிறைவாசம் என காலங்கள் உருண்டோடின. தன் கணவரின் நெருக்கடியான காலங்களில் வினித்தா என்றும் துணையாக நின்றார்.
அன்ரி என்று எல்லோராலும் அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்பட்ட வினித்தா போராளிகளுக்கும், பணியாளர்களுக்கும் தென்னிலங்கை தந்த இன்னுமொரு தாயாராகவே விளங்கினார். புதுக்குடியிருப்பில் நடேசண்ணையின் வீடு, எப்போதும் ஒரு கரிசன்(Garrison)/படைமுகாம் போலவே இருக்கும். அங்கு நிற்கும் அத்தனை பேருக்குமான உணவை அன்ரியே தயாரித்து வழங்குவார். ஏதாவது ஒரு விடயமாக அங்கிளை (நடேசண்ணை) சந்திக்க அவரது வீட்டுக்குப் போனால், அன்பாக வரவேற்று உணவு பரிமாறுவார். வினித்தா அன்ரி மிகவும் எளிமையானவர். இயக்கம் சம்பந்தப்பட்ட ஏதாவது நிகழ்வுகளுக்கு மட்டுமே நடேசண்ணையுடன் வாகனத்தில் வருவார். ஏனைய சமயங்களில் எல்லாம் அவரது மகளுடன், துவிச்சக்கரவண்டியிலோ, உந்துருளியிலோ பயணிப்பார்.
போரின் இறுதிக் காலம் அவருக்கு சோதனை மிகுந்த காலம். 2009 மே 18 காலை விடிந்தபோது, விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட நாளாக விடிந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் உயர்மட்ட பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த நடேசண்ணை அனைத்தையும் இழந்து, தோல்வியுற்ற மனிதனாக தனித்து நின்றார். அந்தக் கையறுந்த நிலையிலும், வினித்தா அன்ரி நடேசண்ணைக்கு பக்கபலமாக நின்றார். இதுவரை கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, கொடிய அந்தக் கணத்தில் நடந்த கதைகள் நெஞ்சை உலுக்கும் படியானவை. வினித்தா அன்ரியின் கண் முன்பாகவே நடேசண்ணையைக் கொல்வதற்கு முயன்றார்கள். அப்போது அங்கு நின்ற சிங்களப் படையினருடன் சிங்கள மொழியில் வாதிட்டு தனது கணவரை காப்பாற்ற முயன்றார். இதனால் கோபமடைந்த ஸ்ரீலங்கா படையாள் ஒருவன் “சிங்கள பல்லி” (சிங்களத்து பெட்டை நாயே) என்று கத்தியபடியே வினித்தா அன்ரியை சுட்டுக் கொன்றான்.
இதிகாசக் கதையான சத்தியவான்-சாவித்திரி கதையில், உயிரைப் பறிக்க வந்த இயமனுடன் வாதாடி, சாவித்திரி தன் கணவனைக் காப்பாற்றினாள். இயமனிடம் இருந்து கூட இரக்கத்தை எதிர்பார்க்கலாம். ஆனால், சிறிலங்காவின் பசாசுப் படைகளிடம் இருந்து இரக்கத்திற்குப் பதிலாக, இரத்தத்தைக் குடிக்கும் தோட்டாக்களையே எதிர்பார்க்க முடியும். அங்கிளும் அன்ரியும் நந்திக்கடல் தீரமதில் வீழ்த்தப்பட்டார்கள்.
வாழ்வில் ஒன்றாய் இணைந்தவர்கள் சாவிலும் இணைந்தார்கள். இவர்களின் இலட்சியக் காதல் மரியாதைக்குரியது. அங்கிள்-அன்ரி உங்களுக்கு எனது மரியாதையை செலுத்திக் கொள்கிறேன்.
காதலுக்கு மரியாதை,
இ.ரஞ்சித்குமார்