1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத்தொடங்கியிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
அதேசமயம் மேலதிக பகுதிகளைக் கைப்பற்றமுனைந்த இராணுவத்தினரின் முயற்சிகளுக்கெதிராக முறியடிப்புச்சமர்களையும் நடாத்திக்கொண்டிருந்தனர்.அத்துடன் கடற்புறா அணியினர் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் பலவற்றைத் தாய்த் தமிழகத்திலிருந்து கடல்வழிமூலம் தமிழீழத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருந்தனர்.அதுமட்டுமல்லாது பெருங்காயமடைந்தவர்களை இங்கிருந்து தமிழகத்திற்கு அனுப்பிச் சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
இது இவ்வாறிருக்க ,இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தவுடன் கடல்வலயத்தடைச் சட்டம் போடப்பட்டதாலும் கடற்படையின் பாரியகட்டளைக் கப்பலான எடித்தாராவை வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் கடற்படையினர் கொண்டுவந்து நிறுத்தியதாலும் இக்கடல்வழி விநியோகத்திற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.இவ்விடயங்கள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது .இதனைக் கருத்திலெடுத்த தலைவர் அவர்கள் அக்கப்பலை வேகமாக அப்புறப்படுத்தி விநியோக நடவடிக்கையைத் தொடரவேண்டித் தானே நேரடியாகச் செயலில் இறங்கினார்.
தலைவர் அவர்களின் தெலைநோக்குச் சிந்தனைக்கமைவாகத் அவரது பாதுகாப்புப் பிரிவிலிருந்து கடற்புறா அணிக்குக் காந்தரூபன் அவர்களை அனுப்பினார்.ஏற்கனவே, பெரிதாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று சகபோரளிகளுக்குச் சொல்லிக்கொண்டும் அதற்கான நடவடிக்கைகளில்ஈடுபட்டுக் கொண்டுமிருந்தவன்தான் காந்தரூபன்.தலைவர் அவர்களுடன் மணலாற்றுக் காட்டில் நின்ற சமயம் தனது ஆரம்பகால நினைவுகளைக் கூறித் தலைவர் அவர்களிடம் அனுமதிபெற்றுத் தன்னை கரும்புலிகளணியில் இணைத்திருந்தான் காந்தருபன்.
கொலின்ஸும் மணலாற்றுக் காட்டில் தலைவர் அவர்களின் பாதுகாப்பணியில் இருந்து செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் தலைவர் அவர்களிடம் நேரடியாக கேட்டுத் தன்னை கரும்புலிகளணியில் இணைத்துக்கொண்டிருந்தான்.இவர்களுடன் வடமராட்சி அணியிலிருந்து ஏற்கனவே கரும்புலிகளிணியில் தன்னை இணைத்திருந்த வினோத்தும் எடித்தாராவைத் தாக்கியழிப்பதற்கான கடும்பயிற்சிகளை மேற்கொண்டனர். தாக்குதலுக்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது .
அத்திட்டத்தின் அடிப்படையில் 10.07.1990 அன்று தளபதி லெப்.கேணல்.டேவிற் ( வீரச்சாவு 09.06.1991) தளபதி லெப் கேணல்.அருச்சுனா (வீரச்சாவு 16.12.1997), கப்டன் தினேஸ் ( வீரச்சாவு 12.08.1991) ஆகியோர் தலைமையிலான படகுகள் எடித்தாரக் கட்டளைக்கப்பலுக்குப் பாதுகாப்பாக நின்ற கடற்படைக் கலங்கள்மீது தாக்குதலைத் தொடுத்து திசைதிருப்பக் கடற்கரும்புலிகளான மேஜர்.காந்தரூபன், கப்டன் கொலின்ஸ்,கப்டன் வினோத் மூவரும் இணைந்து வெடிமருந்தேற்றியபடகால் எடித்தாராக் கட்டளைக்கப்பல்மீது மோதி வெடித்துத் தம்மை ஆகுதியாக்கிக்கொண்டனர். கப்பல் பாரிய சேதத்திற்குள்ளானது.
முதலாவதாக நிகழ்த்தப்பெற்ற இவ்வெற்றிகரக்கடற்கரும்புலித்தாக்குதலைத் தளபதி டேவிற் அவர்கள் கடலில் வழிநடாத்த தலைவர் அவர்கள் வல்வெட்டித்துறைக் கடற்புறாத் தளத்திலிருந்து நெறிப்படுத்திக் கட்டளைகளை வழங்கத், தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் தளபதி லெப் கேணல்.சாள்ஸ் வீரச்சாவு (11.06.1993) அவர்களும் தலைவர் அவர்கள் அருகிலிருந்து அக்கட்டளைகளுக்குச் செயல்வடிவம் தந்தனர்.
இந்நடவடிக்கைக்கான மேலதிக வேலைத்திட்டங்களை கப்டன் மோகன் மேத்திரி (வீரச்சாவு 02.09.1990) அவர்கள் தலைமையிலான அணி செவ்வனவே செய்துகொடுத்திருந்தது.
அவ்வேளை தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்கு ஒரு தகவலைத் தெளிவாகக்கூறினார்.அதாவது “கடற்கரும்புலிகளின் தாக்குதலிற் சேதமான கடற்கலங்கள்மீண்டும் கடலில் செல்லக்கூடாது”என்பதே அது .அதற்கேற்ப 16.07.1995 அன்று கடற்கரும்புலிகளான மேஜர் தங்கன்,மேஜர் நியூட்டன், கப்டன் தமிழினி ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகத்திற்குள் ஊடுருவி எடித்தாராக்கப்பலை மூழ்கடித்துத் தலைவர் அவர்களின் சொல்லுக்குச் செயல்வடிவம் தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சிறிலங்கா கடற்படையின் அதி உச்சப் பாதுகாப்புகடற்படைத்தளத்தினுள்; ஊடுருவி கடற்படையினர் மீதும், கட்டளைக் கப்பல் எடித்தாராவையும் மூழ்கடித்து ஆயத விநியோகத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய கடற்கரும்புலிகள், கடற்புலிகள். இலங்கைப் படைகளால் யாழ்க்குடாநாட்டை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இராணுவநடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சலும் அதற்கெதிரான தலைவர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் விடுதலைப்புலிகளால் தீடிரென மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலான புலிப்பாய்ச்சலும் யாவருமறிந்ததே .இப்படை நடவடிக்கையின் வழங்கள் மையம் எது அதற்கென்ன செய்யவேண்டும் என்பதை தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள்.இது சம்பந்தமான மேலதிக தகவல்களையும் கடற்புலிகளிடம் கேட்டறிந்து அதற்கமைவாக ஒரு சிறந்த தாக்குதற் திட்டம் அதாவது கடற்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவு மற்றும் கடற்கரும்புலிகளணி கடற்தாக்குதற் படையணிகள் இணைக்கப்பட்டு கடற்புலிகளிடம் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்டது.
அதற்கமைவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் படையினருக்குத் தேவையான பொருட்களை இறக்கிக்கொண்டிருக்கும் கடற்படைக்கலங்கள் மீது கடற்புலிகளின் நீரடிநீச்சல் கடற் கரும்புலிகள் தாக்குதல் நடாத்தும் சமநேரத்தில் கடற்புலிகளின் கடற்தாக்குதல் படையணிகளான லெப் கேணல் சாள்ஸ் படையணியும் லெப்.கேணல் நளாயினி படையணியும் கடற்கரும்புலிகள் அணியும் கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதி லெப்.கேணல் நரேஸ் மற்றும் கடற்புலிகள் மகளிர் படைப்பிரிவுத் தளபதி லெப்.கேணல் மாதவி தலைமையில் (லெப்.கேணல் குணேஸ் லெப்.கேணல் நிமல் லெப்.கேணல் இரும்பொறை லெப்.கேணல் சதீஸ் லெப்.கேணல் நாவரசன் மேஐர் விசும்பன் இவர்கள் வெவ்வேறு கடற்சமரில் பின்னாளில் வீரச்சாவடைந்தனர்.) தலைமையிலான படகுகள் சென்று ஏனைய கடற்படைக்கலங்கள் மீது தாக்குதல் நடாத்தி ஒரு பாரிய சேதத்தை ஏற்படுத்துவது எனத் திட்டமிடப்பட்டது.
அதற்கேற்ப 1995.07.16 அன்று நள்ளிரவு நீரடிநீச்சல் கடற்கரும்புலிகளான மேஐர் தங்கன் அவர்களும் மேஐர் நியுட்டன் அவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்தில் படையினருக்குத்தேவையான பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த கப்பலான எடித்தாராக் கட்டளைக்கப்பல் மீது கப்பலின் அடிப்பகுதியில் குண்டைபொருத்தி வெடிக்கவைத்து காங்கேசன்துறை துறைமுகத்தில் ஒரு வரலாற்றை எழுதிச்சென்றனர்.
என்ன நடந்ததென்று கடற்படையினர் திகைத்து நின்ற சமநேரத்தில் இலங்கைக் கடற்படையின் உச்ச விழிப்புடன் இருந்த காங்கேசன்துறை துறைமுக பாதுகாப்பு வேலியை மிகவிரைவாக ஊடுருவிச்சென்ற கடற்புலிகளின் சண்டைப்படகுகள் துறைமுகப்பாதுகாப்புப் பணியிலிருந்த கடற்படையினர் மீது ஒரு மூர்க்கத்தனமான திகைப்புத் தாக்குதலைத் தொடுத்தனர்.சண்டை ஆரம்பித்த சிறிதுநேரத்தில் இக்கடற்சமரை கடலில் வழிநடாத்திய லெப்.கேணல் நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய
லெப் கேணல் குணேஸ் அவர்கள் களத்தை தலைமையேற்று தொடர்ந்து வழிநடாத்தினார். மூன்று மணிநேரம் நீடித்த இப்பெரும் கடற்சமர் கடற்படைக்கு ஆள் ஆயுத வழங்கலகளுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்திவிட்டு தலைவர் அவர்கள் கொடுத்த திட்டத்திற்க்கு கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் செயல்வடிவம் கொடுத்தனர்.இவ்வெற்றிகரகடற்சமரை கடற்புலிகளின் பிரதான ராடர் (கதுவி) நிலையமான கப்டன் அலன் முகாமில் தலைவர் அவர்கள் அருகிருந்து சிறப்புத்தளபதி சூசை அவர்களும் தளபதி கங்கைஅமரன் அவர்களும் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி வழிநடாத்தியிருந்தார்கள்.
இவ் எடித்தாராக் கட்டளைக் கப்பலானது 10.07.1990 கடற்கரும்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பாரிய சேதத்திற்க்குள்ளானது .கடற்கரும்புலிகளின் தாக்குதலுக்குள்ளான எந்தவொருகப்பலும் தமிழீழக் கடற்பரப்பில் உலாவக்கூடாது என்ற தலைவர் அவர்களின் சொல்லுக்கு மதிப்பளித்து கடற்கரும்புலிவீரர்கள் இக்கப்பலை மூழ்கடித்து காவியமானார்கள்.
இக்கடற்சமரில் வீரகாவியமானவர்கள் விபரம் .
கடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் – பதுளை – சிறிலங்கா)
கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் – குருநகர், யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) (சிவராஜசிங்கம் நவராஜன் – திருகோணமலை)
கடற்புலி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்செல்வி – இன்பருட்டி, யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் – பெரியபோரதிவு, மட்டக்களப்பு)
கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி – யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி – மானிப்பாய், யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா – மாங்குளம், முல்லைத்தீவு)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி – யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி – முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
இப்பதிவானது அன்று இக்களமுனையில் களமாடி இன்று பல்வேறு திசைகளில் உள்ளவர்களின் நினைவழியா நிகழ்விலிருந்து…..
எழுத்துருவாக்கம்..சு.குணா.