இறப்பினும் மறவோம் இலக்கினில் தவறோம்!
திரும்பிப் பார்க்கின்றோம் –
சுதந்திரத்தின் சிகரத்தை நோக்கிய எங்கள் நெடும் பயணம்இ கண்ணுக்குள் விரிகிறது அந்த நெடுவழிப்பாதை. எழ எழ விழுந்துஇ விழ விழ எழுந்து…… எத்தனை இன்னல்கள்இ எத்தனை சவால்கள்இ எத்தனை அழுத்தங்கள்இ எத்தனை குழிபறிப்புகள்.
எல்லாவற்றையுமே எகிறிக் கடந்து எழ எழ விழுந்து…… விழ விழ எழுந்து……
திரும்பிப் பார்க்கின்றோம் –
இரத்தத்தையும், சாம்பர்மேடுகளையும், சவப்பெட்டிகளையும் தமழனுக்குத் தந்தவர்களின் தலைவாசல்களுக்கு – கண்ணீரையும், கதறலையும், துன்பப்படுவதென்றால் எப்படி இருக்குமென்பதையும் தமிழன் திரும்பவும் பரிசளித்து……
திரும்பிப் பார்க்கின்றோம் –
தேடிப்போய்க் கையேந்தி நின்ற தமிழனை அடித்து விரட்டியவர்களை, தேடி வந்து கையேந்தி வந்து தமழனிடம் “அடிக்காதீர்கள்” என இரக்க வைத்து….
திரும்பிப் பார்க்கின்றோம் –
வீழ்ந்து போய்க் கிடந்த தமிழனின் வரலாறு எங்களுக்குத் தந்த ஒரு தலைவன்இ எழுச்சியாய் நிமிரும் புதியதோர் வரலாற்றைத் தமிழுக்கு தந்து நிற்க……
திரும்பிப் பார்க்கின்றோம் –
ஆகா……! என்ன ஒரு ஆச்சரியம்……! எங்களையே அசத்திவிட்ட அதிசயம்……! நம்ப முடியாமலல்லவா இருக்கின்றது…… எப்படி இது நிகழ்ந்தது……? பிரமிக்க வைக்கிறதே……! நினைக்கையில் உயிர் சில்லிடுகின்றது…… நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க, எங்கள் கண்களுக்கு முன்னாலயே…… இது ஒரு கால மாற்றமா? இல்லை.
இது மாற்றப்பட்ட காலம்!
திரும்பிப் பார்க்கின்றோம் –
இந்தப் புதுயுகத்தின் பிரசவத்திற்காக எங்கள் தேசம் செலுத்திய விலைமதிப்பற்ற பெறுமதி……
ஒன்றா…… இரண்டா…… அத்திவாரக் கற்களாக, தாங்கும் தூண்களாக, உச்சியின் முகடுகளாக, முகடுகளின் கிரீடமாக, கிரீடத்தில் பதித்த முத்துக்களாக…… தேசத்தின் நிர்மாணிப்பிற்காக நாங்கள் இழந்த இரத்தக்கனிகள்……
சாதாரண சகவாழ்வின் பற்றதல்களை உதறியவர்கள்; தனிப்பட்ட சுய வாழிவின் இலட்சியங்களைத் துறந்தவர்கள்; இனிய இளமை வாழிவின் கனவுகளை மறந்தவர்கள்; தங்கள் அறிவு, ஆற்றல்கள், திறமைகள் அனைத்தையும் தாயக மண்ணுக்காய்த் தந்தவர்கள்; மக்களின் விமோசனத்திற்காக மரணத்திற்குள் வாழ்ந்தவர்கள்.
போர்முனைகளிலும் அவற்றுக்கு அப்பாலும் நாங்கள் சாதித்த ஒவ்வொரு மகத்தான வெற்றிக்காகவும், உயிர்த்துடிப்போடு உழைத்து விழிமூடிய எங்கள் நெஞ்சினிய நண்பர்கள்.
தமிழீழத்தை – தமிழனுக்கென்ற தனியரசை – தமிழினத்தின் தன்னாட்சியை – மட்டுமே, ஆத்மார்த்தமான தாகமாகத் தங்களது ஆன்மாவில் சுமந்தவர்கள்; அதற்காகவே வாழ்ந்தார்கள் – போராடினார்கள்; வீழ்ந்தார்கள்.
45 ஆண்டுகளாக இறுமாந்து கொண்டிருந்த சிங்கள தேசத்தின் பேரினவாதச் சிந்தனைக்கு, தாயக மண்ணில் புலிகள் கொடுத்த மிகப் பெரிய அடி – ‘ஒப்பறேசன் தவளை’
அந்தக் களத்திலும் வீழ்ந்து, அந்தக் களத்திற்காகவும் வீழ்ந்து, பூநகரியில் – சரித்திர வெற்றிக்கு மகுடம் சூட்டினார்கள் எங்கள் நெருப்புக் குழந்தைகள்.
அந்த மாபெரும் களத்தில் நாங்கள் செலுத்திய விலைகளில் ஒன்று. லெப்ரினன்ற் கேணல் குணா.
குணா!
தென்மராட்சி மண் எங்கள் தந்தையர் தேசத்திற்குத் தந்த ஒரு தலைசிறந்த புரட்சிவீரன்.
தமிழீழப் போர் வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மெல்லென ஒளிர்ந்த படைத்தளபதி.
பாசம்மிகு மக்களின் உள்ளங்களை ஊடுருவி அன்போடு வீசிய குளிர்ந்த காற்று.
நாங்கள் அவனோடு இருக்க விரும்பினோம் என்பதை விடவும் அவனைப் போல இருக்க விரும்பினோம் என்பதே சரியானது.
ஐந்து அடி பத்து அங்குல உயரத்தில் அந்த அஜானபாகுவான ‘இராணுவக்கட்டுடல்’, சதா புன்னகைத்துக் கொண்டு குதூகலமாய்ப் பழகும் அந்த நிலவு முகம், சுருள் சுருளாகப் படர்ந்து தவழும் அந்தத் தலைமுடிகள், பார்க்கின்றவர்களை வசீகரித்துவிடுகின்ற அந்த மிடுக்கான தோற்றம், எங்களை மெய்மறந்து பார்க்க வைக்கும் ஒய்யார நடை, அளவான பேச்சு, அமைதியான சுபாவம், விரைவான செயல், பண்பான அணுகுமுறைகள்…… எங்கள் கண்களுக்குள் நிறைந்து நிற்கின்றது அந்த வண்ணக்கோலம்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் – திருநெல்வேலித் தாக்குதலுடன் போராட்ட வளர்ச்சிப் போக்கு புதியதொரு பரிமாணத்திற்குள் பிரவேசித்த காலகட்டத்தில்தான், விஜயராஜா என்ற அந்த இருபது வயது இளைஞனும் விடுதலைப்புலியாகி வந்தான்.
கல்வயல் அவனுடைய ஊர்; ஒரு சிறிய விவசாயக் கிராமம். பச்சைப் பசேலென்ற மேலாடை அந்த நிலத்தின் சிறப்பழகு குச்சொழுங்கைகளின் புழுதியில் ஓடி, வயற்சேற்றில் விழுந்து, செல்லையா அப்புவின் காணிக்குள் இளநீருக்குப் பாய்ந்து கலைபட்டு, பன்றித்தலைச்சி அம்மன் திருவிழாவில் கூத்தடித்து, சாவகச்சேரி நகரப் பாடசாலையில் பாடப் புத்தகங்களோடு பக்கத்து வாங்குப் பிள்ளைகளையும் கவனித்து –
சின்ன வயதில் அந்த ஊர் அவனுக்குச் சொந்தம்; வளர்ந்த பின் அவன் இந்தத் தேசத்திற்குச் சொந்தம்.
புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிப்பாதையில் போராட்டம் எடுத்த இன்னொரு புதிய வடிவமாக பிரதேச ரீதியாக சிற்றூர்ப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு – போராட்டத்தை மக்கள் மயப்படுத்தவும் மக்களை போராட்ட மயப்படுத்தவும் – அரசியல் வேலைத்திட்டங்கள் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் குணா கல்வயலிற்கு நியமிக்கப்பட்டான்.
அப்பொழுது கடமையிலிருந்தவர்களுள் சிறந்த பணியாற்றிய பிரதேசப் பொறுப்பாளர்களில் ஒருவனாக அவன் திகழ்ந்ததும், ஆனையிறவிலும் நாவற்குழியிலும் ‘ஆமி’ வெளிக்கிட்டதாக ‘வோக்கி’ அறிவித்தபோதெல்லாம் அந்தக் களங்களில் விரைந்து திறம்படச் சண்டையிட்டதும், அவனது பற்றுறுதியும், அவனது வீரமும் துணிவும் – தளபதி கேடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முன்னணிப் போராளிகளுள் ஒருவனாக அவனை உயரச் செய்தன.
அந்த நம்பிக்கை – இயக்கத்தின் அதி முக்கியமானதும், இரகசியமானதும், தலைவருக்குரியதுமான சில பொறுப்புக்களை அவனது தலை மேல் சுமத்தியது. ஒப்படைத்த வேலைகளில் அவன் கட்டிய ஈடுபாடும், ஓய்வற்ற கடும் உழைப்பும் – தலைவரிடத்திலும் கிட்டண்ணனிடத்திலும் பாராட்டையும் நற்பெயரையும் பெற்றுத் தந்ததுடன் – குணாவை இனங்காட்டியும் விட்டன.
கைதடியில் வெடித்த குண்டு – பொன்னம்மான், வாசுவோடு – தளபதி கேடியை எம்மிடமிருந்து பிரித்துவிட, தென்மராட்சியில் மந்தமாகிப் போன போராட்டப் பணிகளுக்கு புத்துயிர்ப்புக் கொடுத்து, மீளவும் வளர்ச்சிப்பாதையில் இட்டுச்சென்ற பெருமை குணாவைத்தான் சேரும்.
ஏற்கெனவே சண்டைகளில் அவன் நின்றவன் தானென்றாலும் நெல்லியடி வரலாற்றுக்களம் தான் அந்த வீரனுக்குச் சொல்லக்கூடிய முதற்சண்டை. இன்றைய உலகின் வியப்புக்குரியதாகி, சிங்கள தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் கரும்புலிகளின் சகாப்தத்தை மில்லர் என்ற மாவீரன் இடிமுழக்கத்தோடு தொடக்கி வைத்த போது – தென்மராட்சிப் படையணிக்குத் தளபதியாக, குணா அந்தக் களத்திலிறங்கினான்.
காலச் சக்கரத்தின் சுழற்சி; இந்தியப் படையின் தரையிறக்கம்; இசைந்துகொடுத்தே ஆக வேண்டியிருந்த ஒரு நிர்ப்பந்தம். மாறுபட்ட ஒரு வடிவத்திற்குள் இட்டுச்செல்லப்பட்டது போராட்டம். மாயைத் திரை கிழிந்து உண்மை வெளிப்பட நாங்கள் காத்திருந்த நாட்கள்.
இந்தியா ஆக்கிரமித்ததற்கும் – அது சண்டையை ஆரம்பித்ததற்கும் இடைப்பட்ட அந்தக் காலம் மகா முக்கியமான, மறைமுகமான பணியொன்று அவனது மடியில் சுமத்தப்பட்டது. குணா மாடாய் உழைத்தான்.
ஆயுதங்கள் –
விடுதலைப் போராட்டத்தின் உயிர்நாடி; தேசத்தின் அசைக்க முடியாத இரும்புக் கவசம்; அன்று நாங்கள் பேசப்போன போது அவர்கள் அதைத் தூக்கினார்கள் – பின்பு நாங்கள் அதைத் தூக்கிய போது அவர்கள் பேச வருகின்றார்கள். வரலாற்றைத் தலைகீழாக்கிய நெம்புகோல்கள். படையியல் அரங்கில் போரிடும் போதும் சரிஇ ஆயுதங்களே தமிழனின் பலம், ஆயுதங்களே தமிழனுக்கு ‘வாழ்வு’; ஆயுதங்களே தமிழனின் ‘எதிர்காலம்’. ஆயுதங்களை நாங்கள் கைவிட முடியாது – ஒருபோதுமே கைவிடப் போவதுமில்லை.
தேசத்தின் முதுகெலும்பான ஆயுதங்களை, பக்குவமாய்ப் பாதுகாக்க வேண்டிய ஒரு முக்கியமான பொறுப்பு. அன்றைய சிக்கலான சூழ்நிலையில் குணாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எவ்வளவுக்கெவ்வளவு அது முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வளவுக்கவ்வளவு அது இரகசியம் மிக்கது; எனவே அந்தரங்கமாக மேற்கொள்ளப்பட வேண்டிய மிகமிகச் சிரமமான ஒரு செயற்பாடு அது. சில சமயங்களில்தான் அவன் அடுத்தவர்களை உதவிக்கு நாடினான். பெரும்பாலும் அவன் தனியாகவேதான். குணா சளைக்கவில்லை – சலிக்கவில்லை. இந்தியர்களின் கழுகுப் பார்வைக்கு மறைந்து – ஒழுங்கான உணவின்றி, போதுமான உறக்கமின்றி – அவன்பட்ட கஸ்டங்களை நாங்கள் பார்த்தோம்; அவன் சந்தித்த துன்பமும் துயரமும் கொஞ்சமல்ல.
திலீபனை இந்தியர்கள் கொன்று; கண்ணன் தனத்தோடு இன்னும் கொஞ்சப்பேரை இந்தியர்களோடு வந்தவர்கள் கொன்று; புலேந்திஅம்மான், குமரப்பா, தென்மராட்சியின் அப்துல்லாவோடு பன்னிருவரை இந்தியர்களும் சிங்களவர்களுமாகச் சேர்ந்து கொன்று…… வரலாற்றுக் காற்றின் வீச்சு, மக்களில் கவிந்திருந்த மாயைப்புகையை மெல்லக் கலைத்துச் செல்ல –
1987, ஒக்ரோபர் 10.
சரித்திர நாள்.
ஓரோசையும் அற்று உறங்கிய இரவு பேரோசையோடு விடிந்தது.
‘பூமாலை’யோடு வந்தவர்கள் இங்கு ஒரு ‘புயற்காற்றை’ வீசச் செய்தார்கள்.
அன்பில் முத்தமிட என வந்த அமைதித்திரை கிழிந்து – கண்ணில் யுத்தமிடும் வெறிகொண்டது ஆக்கிரமிப்புப் பூதம்.
‘றோ’ கொடுத்த தகவலின்படி திட்டம் போட்டார்கள். ‘750 பேருக்கு 72 மணித்தியாலங்கள்’
யாழ்ப்பாணக் கோட்டையில் ஆரம்பித்து, அம்பாறைத் திருக்கோவில் வரை வியாபித்து, மணலாற்றுக் காட்டில் ‘முதல் அத்தியாய’த்தை தலைவர் முடித்துவைத்த போது – இரண்டரை ஆண்டுகளின் பின் வல்லரசுப் படைகள் மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறின.
போரியல் சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட அந்த இந்திய – புலிகள் யுத்தம். அந்த வீரனை முழுமையாக இனங்காட்டிய நெருப்பு நாட்கள்.
முற்றுகைகள்; சுற்றிவளைப்புக்கள்; காட்டிக்கொடுப்புகள்; திடீர்ச்சண்டைகள்; கலைபாடுகள்; தப்பி ஓடல்கள்…… எல்லாவற்றுக்கும் மத்தியில் நின்றுஇ தென்மராட்சியில் புலிகளின் நாடித்துடிப்பாக இயங்கியவன் குணாதான்.
அவனது உறுதி, அவனது வீரம், அவனது நம்பிக்கை, அவனது வழிநடாத்தல், ஒட்டுமொத்தமாக அவனேதான் – அத்துணை நெருக்கடிகளுக்கும் மத்தியில் அங்கு புலிகளை நின்று நிலைக்கச் செய்து, தழைத்தோங்கி வளரச் செய்தான்.
‘சயனைட்’டை நம்பியே விடிந்துகொண்டிருந்த அன்றைய நாட்கள்; அடுத்த காலையில் உத்தரவாதமற்றுப் பதுங்கப் போகும் இரவுகள்; மரணம் உயிரை உரசிய சமயங்களில், குப்பியைப் பிடித்துக் கொண்டு தப்பித்து மீண்ட மயிரிழைப் பொழுதுகள்; நாளுக்கு நாள் வீழ்ந்துகொண்டிருந்த அன்புத்தோழர்கள் –
கனகம் புளியடியில் பதுங்கிப்பிடித்த பகைவனின் கைகளில் கீதன் விழிகளை மூட, கல்வெளியில் ரோந்துப் படையிடம் அகப்பட்டு நகுலன் குப்பி கடிக்க, கொடிகாமத்தில் எதிர்பாராமல் மாட்டுப்பட்டு ரேகா சன்னங்களை ஏந்த, அல்லாரையில் முற்றுகைக்குள் சிக்கி புறோப்ளர் தனக்கே குண்டு வைக்க, மிருசுவில் அதிரடித் தாக்குதலில் கில்மன் களப்பலியாக, கச்சாய் வீதியில் இட்டுமுட்டாய் அகப்பட்டு நிதி வீழ்ந்துபோக, சரசாலையில் எதேச்சையாய் மாட்டிக்கொண்டு வின்சன் நஞ்சு தின்ன, பளையில் சுற்றிவளைப்பிற்குள் வேல்ராஜ் சயனைட் கடிக்க, உசனில் பதுங்கித் தாக்குதலில் அக்பர் வீழ்ந்து போக, நாவற்குழி சுற்றிவளைப்பிற்குள் அருள் குப்பி கடிக்க….
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் எங்கள் செல்வங்கள் விழவிழவும் குலையாத மலையாக இறுகிக்கொண்டே போனான் அந்தத் தளபதி.
நெருப்புக்கள் நின்றும் நீறாகிப்போகாமல் நிமிர்ந்த அந்த வீரன், எங்களையும் நிமிரச் செய்தான்.
வேம்பிராய்ச் சந்திக் கும்மிருட்டில், “தம்பி!” என்று சைக்கிளில் எட்டிப்பிடித்து மறித்தவன் ‘பீடி’யை உறிஞ்சியபோது, வெளிச்சத்தில் பார்த்தால், சீக்கிய முகம்! சைக்கிளால் தூக்கி அடித்துவிட்டு, குணா வேலியால் பாய்ந்தோடிய போது துப்பாக்கிகள் உறுமின!
கெருடாவில் வீதியில் போனபோது எதிரே வந்தது இந்திய ஜீப்; பக்கத்து ஒழுங்கையால் மெதுவாகத் திரும்பி தப்பிப்போக முனைகையில், வந்து திரும்பிய ஜீப்பிலிருந்து முழங்கத் துவங்கியது ‘பிறண்’! இந்தியர்கள் கலைத்துச்சுட, இவர்கள் வலிந்து ஓட, இளைத்து இளைத்து ஓடி முள்ளுக் கிழித்து இரத்தம் ஒழுக, இயலாமல் விழுந்த பாப்பாவையும் இழுத்துக்கொண்டு வந்துசேர்ந்தான் குணா.
பெருங்குளத்தில் ஆமி கலைக்க ஓடி அடுத்த தெருவில் ஏற, ஆமி ஜீப்பில் வந்தான்! பக்கத்துக் காணியால் ஓடி இன்னொரு வீதியால் ஏற ஆமி நடந்து வந்தான்! அருகு வீட்டுக்குள்ளால் பாய்ந்து பின்னொழுங்கையில் ஏற ஆமி குந்திக்கொண்டிருந்தான்! அடுத்த காணியால் பாய்ந்து விழுந்தடித்து ஓடி, விடயம் தெரியாமல் “என்ன மச்சா”னென்று சிரித்துக்கொண்டு வந்த கந்தண்ணையையும் இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான் குணா.
“நான் சாகலாம்; நீ சாகலாம். ஆனால் நாங்கள் சாகக்கூடாது.”
வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட அந்தக் கத்திமுனை நாட்களில், குணா இதை அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பான். அவ்வளவு தெளிவு; அவ்வளவு உறுதி.
“நாங்கள் இங்கேயே நிப்பம்; எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அசையாமல் போராடுவம்; இடைவெளி விடாமல் நாங்கள் போராடிக்கொண்டேயிருப்பம். நாங்கள் சாகச்சாக, எங்கட இடத்திற்கு தலைவர் அடுத்தவர்களை அனுப்பிக் கொண்டிருப்பார். அதனால், நான் சாகலாம், நீ சாகாலாம்; ஆனால், ஒருபோதும் நாங்கள் சாகமாட்டோம்.”
தூரத்தில் – சுற்றிவளைப்புக்கு நடுவில் – சயனைட் குப்பியும் கையுமாக நின்று ‘வோக்கி’யில் தகவல் சொல்லும் தோழனுக்கும் குணா இதைத்தான் சொன்னான். சொன்னதைப்போலவேதான் வாழ்ந்தான்; போராடினான் ஒவ்வொரு புலிவீரனுக்கும் தியாகத்தை ஊட்டி, குணா இந்தியப் படைக்கெதிரான போரை நடாத்தினான்.
இழப்பக்களால் உடைந்து போகும் மானிடப் பொது விதிக்கு மாறாக, இழப்புக்களிலிருந்து உரம்பெறும் பிரபாகரனின் புதுவிதிக்கு, குணாவும் இலக்கணமானான்.
தளம்பியவர்களுக்கு உறுதியூட்டினான்; குழம்பியவர்களுக்கு தெளிவூட்டினான்; தளர்ந்து நின்றவர்களுக்கு நம்பிக்கையூட்டினான்; ஒவ்வொரு புலிவீரனுக்கும் வீரத்தையூட்டி – குணா இந்தியப் படைக்கெதிரான போரை நடாத்தினான்.
“இந்தியர்களுக்கு அடிக்கவேண்டும்; ஓயவிடாமல் அவர்களை தாக்கிக்கொண்டேயிருக்க வேண்டும்; எங்கள் தாயகத்தின் நெஞ்சில் குருதி வழியச் செய்தவர்களின் மேனியில் சன்னங்கள் துளையிட வேண்டும். ஒவ்வொரு நாளும் எங்கோ ஓர் இடத்தில்இ ஏதோ ஒருவகையில் அவர்கள் சேதப்பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். எங்கள் சொந்த விடயங்களில் தலையிட்டவர்கள் திரும்பி ஓடு மட்டும் அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.” ஒவ்வொரு புலிவீரனுக்கும் வேட்கையை ஊட்டி – குணா இந்தியப் படைக்கெதிரான போரை நடாத்தினான்.
சாவகச்சேரி நகரில் துரோகக் கும்பலின் பயிற்சி முகாமை வேவுபார்க்க அனுப்பிய நடேசுவையும், பாபுவையும் நுணாவிலுக்கு அருகில் அவர்கள் பதுங்கித் தாக்கி வீழ்த்திவிட்ட ஒரு துயர நாள்.
பொறுக்கமுடியவில்லை அந்த வீரனால்! அடிக்கு அடி கொடுக்கும் வெறிகொண்டான் வேங்கை; பழிக்குப் பழியெடுக்கும் சினம்கொண்டு தேடினான். உயிர் துடித்தது! உடல் கொதித்தது! அடிபட்ட புலியாகி குணா அடி கொடுக்க அலைந்தான். செத்துப் போனவர்கள் பற்றி எரியுமுன்னர் ஐந்து துரோகிகளையாவது கொன்று, ஆயுதங்களையும் எடுக்க வேண்டும் தாக்குதலணியையும் இழுத்துக் கொண்டு, சாவகச்சேரியெங்கும் குணா அவர்களைத் தேடி அலைந்தான். துயரம்! ஆவேசம்! ஆத்திரம்! ‘எம் 16’ இன் ‘பிஸ்ரர் கிறிப்’பில் பற்றியிருந்த கைகள் துறுதுறுத்துக்கொண்டிருந்தன.
‘வேல்சினிமா’ முகாமிலிருந்த ஈ. பி. ஆர். எல். எவ். காரர்களுக்கு சேதி போனது. எங்களுக்கு அடிக்க குணா தேடிக்கொண்டு திரியிறானாமடா……!” இறுமாந்து வெளிக்கிட்டது ஒரு கூட்டம். தெருவில் போன வந்தோரையெல்லாம் பிடித்தடித்து, “நாங்கள் நிக்கிறமெண்டு குணாவிட்ட சொல்லுங்கோடா” என்று அட்டகாசம் செய்தது. சொல்லிச் சொல்லி அடித்து அனுப்பிக் கொண்டு கூட்டம் வந்துகொண்டிருந்தபோது –
பெருங்குளம் சந்தியில் வைத்து விழுந்தது நெருப்படி! ஓடஓடக் கலைத்துக் கலைத்துக் குடுத்தனர் புலிகள். 2 மைல் தூரம்! ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ யென்று தலைதெறிக்க ஓடியது வந்த கும்பல். முகாமின் வாசல்வரை துரத்தித் துரத்தி அடித்து ஐந்து பேரைக் கொன்று ஆயுதங்களை எடுத்து வந்து, நடேசுவுக்கும் பாபுவுக்கும் பக்கத்தில் அடுக்கி வைத்து அஞ்சலி செய்த பின்னர்தான் – வீரர்களை அடக்கம் செய்ய குணா அனுமதி தந்தான்; அமைதியானான்.
நுணாவிலிலிருந்து கனகம்புளியடிக்கு ரோந்து போன ஒரு பெரிய படையணியை வழிமறித்து – திருப்பி அடித்துக் கலைத்த ஒரு நீளச் சண்டை; புத்தூர்ச் சந்தியிலிருந்து வேம்பிராய்க்கு நகர்ந்த இன்னொரு பெரிய படையணியை இடைமறித்துத் துரத்தி அடித்து, பலத்த உயிர் – பொருட் சேதத்தை உண்டாக்கி முகாம் வாசல்வரை கலைத்த இன்னொரு நீளச்சண்டை; போன வந்தோரையெல்லாம் பிடித்து அடித்துக்கொண்டு மட்டுவிலிலிருந்து நுணாவிலுக்கு ரோந்துபோன ஒரு படையணியை எதிர்த்துத் தாக்கி, ஆயுதங்கள் எடுத்து மீண்ட ஒரு சண்டை; சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம்போன படைவண்டித் தொடர்மீது 9ஆம் கட்டையில் வைத்து அடித்து, 9 பேரைக் கொன்ற தாக்குதல்…… அவன் செய்தவை கொஞ்சமல்ல.
ஆனாலும் குணா பாவம். ஏனென்றால், அவன் செய்து முடித்த சண்டைகளைவிட, செய்ய முனைந்தும் முடியாமல்போன சண்டைகள்தான் நிறைய. அது ஒரு பெரிய பாதிப்பாக, கடைசிவரைக்கும் அவனுக்குள் இருந்துகொண்டு தானிருந்தது.
சண்டை பிடிக்க வேண்டும்; ஆயுதங்கள் எடுக்க வேண்டும்;; ஆயுதங்களை எடுப்பதற்காக சண்டை பிடிக்க வேண்டும். அது ஒரு ஆறாத வெறி; தீராத தாகம்.
எத்தனையோ இடங்களில் வேவு பார்த்தான்; எத்தனையோ தடவைகள் ஏற்பாடு செய்தான்; எத்தனையோ இடர்பாடுகளுக்குள் தாக்குதல் அணிகளை நகர்த்தினான்; எத்தனையோ இலக்குகளை நோக்கி வியூகம் அமைத்தான்.
அவனது துரதிஸ்டம். ஏதோ ஒரு ‘இடையூறு’, ‘இடையூறாய்’ வந்து ‘இடையூறை’ ஏற்படுத்திவிட, அவனது கனவுகளெல்லாம் கனவுகளாகவே போய்விட்டன.
கட்டைக்காடு திடீர் அதிரடித் தாக்குதலைத் தவிர, பெரிய சண்டைகளை நடாத்தும் வாய்ப்பு எதுவும் அந்த வீரனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் தனக்குக் கிடைத்த ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பாகத்தான், அவன் பூநகரியைக் கருதினான்.
குணா பூநகரிக்குப் புறப்படும்போது தனது எண்ணங்களையெல்லாம் ஈடேற்றும் ஆசையைச் சுமந்து கொண்டல்லவா போனான்!மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து, அல்லும் பகலும் பட்ட கஸ்டங்களின் விளைச்சலைத் தேடி, மகிழ்ச்சியோடல்லவா அவன் புறப்பட்டான். மேனி சிலிர்த்து, உயிரிறுகி நின்று, கைகளைப் பற்றி – “குணா சாதிக்கப்போறானடா மச்சான்” என்றல்லவா சொல்லிவிட்டுச் சென்றான். திரும்பி வருவானென நாங்கள் பார்த்திருந்தோமே…… வெற்றிபெற்றென் மைந்தன் ராஜநடைபயின்று வருவானென, தென்மராட்சி மண் காத்திருந்ததே……!
ஆனால் குணா!……. எங்கள் உயிர் நண்பனே…… ஒரு ரவைகூடச்சுட முடியாமல் நீ வீழ்ந்து போனாயாமேயய்யா! அந்தச் சேதி வந்தெங்கள் செவிகளில் மோதி முழங்கிய போது, எப்படியய்யா நாங்கள் தாங்குவோம்? ஆயுதங்களோடு மீண்டு வந்து தென்மராட்சிக்குப் பெருமை சேர்ப்பேன் என்றவனே……! ஆளே வராமல் விட்டுவிட்டாயேடா குணா!
இந்தியப் போர்க் காலத்தில், உனது பொறுப்பிலிருந்த ஆயுதங்கள் ஒவ்வொன்று ஒவ்வொன்றாய் போனபோது நீ பட்ட வேதனை. எம் ஆயுதங்களை இந்தியர்கள் கைப்பற்றிய போது நீ துடித்த துடிப்பு, அவற்றை நினைத்து நினைத்து இருப்புக்கொள்ள முடியாமல் நீ பட்ட அவஸ்தை. நாங்கள் சிரித்துக் கதைக்கிறபோது எம்மோடு சேராமல் ஒதுங்கிப் போயிருந்து அதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருக்கின்ற உன் மனநிலை…… அதையெல்லாம் அவ்வளவு கெதியாக நாங்கள் மறந்துவிடுவோமா குணா?
உனது மனதறிந்த தலைவர் உன்னை மணலாற்றுக்குக் கூப்பிட்டதும், ஆறுதல் வார்த்தைகளால் உன்னை அமைதிப்படுத்தியதும், தளர்ந்து போய்விடாமல் உற்சாகம் ஊட்டியதும், “பறிகொடுத்ததில் துவண்டு போகாமல் பறித்தெடு குணா” உன்று ஊக்கப்படுத்தியதும், தோள்களில் தட்டி அவர் வழியனுப்பி வைத்துவிட மகிழ்ச்சியோடு நீ திரும்பி வந்ததும், அந்த வேட்கையோடேயே நீ நேற்றுவரை அலைந்ததும்…… எங்களுக்குத் தெரியாதவையாடா குணா?
இப்போது ஆயுதங்களை அள்ளி வந்து குவித்துவிட்டு பார்த்து மகிழ்கின்றோமேயய்யா…… எங்களோடு மகிழ நீ ஏனடா வராமல் போனாய்?
குணா! எங்கள் செல்வமே! கண்திறந்து பாரனடா…… உந்தன் மீது விழுந்து விழுந்து கதறி அழுகின்றார்கள் நீ நேசித்த மக்கள். அவர்களால் நம்ப முடியவில்லை; அவர்களால் தாங்க முடியவில்லை; ஏதேதோ எல்லாம் சொல்லிக் கதறுகிறார்கள். எங்களது பிள்ளையா வீழ்ந்து போனான்……? அவர்கள் கதறுகிறார்களடா…… இலக்கு வைத்து இந்தியர்கள் உன்னை வளைத்தபோது, பொக்கிளிப்பானில் நீ சுருண்டு கிடக்கையில் தங்கள் இறகுகளுக்குள் வைத்துப் பாதுகாத்த அதே மக்கள்…… உனக்காக ஆமி பார்த்த கண்களைப் பாரடா, உனக்காகச் சோறூட்டிய கைகளைப் பாரடா, உனக்காக அடிவாங்கிய உள்ளங்களைப் பாரடா…… “எமது மக்களே எமது பலம்” என்றவனே! எங்கள் உயிரினிய நண்பனே குணா……! எங்களுக்குள் ஒருவனாய்; தளபதியாய்; சகதோழனாய் எங்களோடு நீ வாழ்ந்த நினைவுகளில் மூழ்கி உள்ளம் நொருங்கிப்போனதய்யா……! இந்தியர் காலத்தில் – உனது வெல்வாக்கால் உனது நற்பெயரால் – உனது திறமையால் எத்தனை தடவைகள் நாங்கள் தப்பி மீண்டோம். நீதானேயய்யா எங்களைப் பாதுகாத்தாய்…… எங்களை விட்டுப் போயி விட்டாயா குணா?
நினைவிலழியாத அந்த யுத்த நாட்கள்!
தமிழ்ச்செல்வனுக்குப் பக்கத்துணையாக நின்று குணா, இந்தியாவுக்கு எதிரான போரை நடாத்திக்கொண்டேயிருந்தான்; இந்தியர்கள் குணாவைக் குறிவைத்து படையை நகர்த்திக் கொண்டேயிருந்தார்கள்.
அவன் அவர்களுக்குப் பெரிய தலையிடி; இந்தியப் படையாட்களின் தூக்கத்தை கலைக்கும் பயங்கரக் கனவுகளில் பேயுருவில் அவன் வருவான். நிம்மதி கெட்டது; அவன் அவர்களுக்குப் பெரியதொரு பிரச்சினையாகினான்; அவர்களால் சமாளிக்கவே முடியவில்லை.
நவீன சந்தை மாடியிலேறி காவலரணுக்குக் குண்டடித்து விட்டு இறங்கி ஓடிய சிறுவனைத் துரத்திப்பிடித்து அடித்து நொருக்க – “எறியச் சொல்லி குணா அண்ணை தந்தவர்”
நள்ளிரவில் மறைந்து, ஊர்ந்து, முகாமிற்கு முன்னால் சுவரில் போஸ்டர் ஒட்டுபவனைக் கண்டு, பதுங்கிச் சென்று பாய்ந்து பிடித்து அடித்து விசாரிக்க – “ஒட்டச் சொல்லி குணா அண்ணை தந்தவர்.”
காவலரணுக்கு முன்வீதியால் கனதரம் போய் வந்தவரை சாதுவாகச் சந்தேகப்பட்டு, பிடித்துக்கொண்டு போய் அடித்து முறித்த போது – “பார்த்து வரச்சொல்லி குணா அனுப்பிவிட்டது.”
தாக்கிவிட்டுப் புலிகள் தப்பிப்போய்விட்ட அடுத்த நிமிடத்தில் ஊரையே வளைச்சு எல்லோரையும் பிடித்து செம்மையாகச் சாத்துகிற போது – “குணாதான் முன்னுக்கு நிண்டு சுட்டது.”
குணா நிற்பதாய் சேதி கிடைத்து, ஆயிரமெனப் படையை நகர்த்தி, சந்துபொந்தெல்லாம் சல்லடை போட்டு, ஊரையே திரட்டிப் பள்ளியில் குவித்து, அவன் இல்லை எங்கும் என்று நிம்மதியாய் மூச்சுவிட்டுத் தகவல் சாதனத்தை முடுக்க, புலிகளின் அலைவரிசையில் – “பரணி பரணி – குணா…… இப்பதான் புட்டும் கோழிக்கறியும் முடிச்சிட்டு இருக்கிறம் நல்லபிடி.”
மக்களுக்குள் அவன்; கடலில் வாழும் மீன்.
இந்தியர்கள் எதைச் செய்தும்இ குணாவை எதுவும் செய்ய முடியவில்லை.
அந்தப் பற்றைக்காடுகள், குச்சொழுங்கைகள், குடிசனங்கள், எங்கள் ஆட்காட்டி குருவிகளும், அன்புக்கினிய நாய்களும் கூட…… கண்ணுக்கு இமையாகி அவனை காத்தன.
கூரைக்குள் தூங்கவிட்டுக் காவலிருப்பார் கிழவர். 3 மணிக்கே எழுந்து புட்டுக்கு மாகுழைப்பாள் ஆச்சி. பருப்பு ஊறவிட்டு வெங்காயம் மிளகாய் வெட்டத் துவங்குவாள் அக்கா. தேநீருக்கு தண்ணீர் வைப்பாள் தங்கை. 4 மணிக்கு பெரியவர் மனமில்லாமல் தட்டியெழுப்ப – முகம் கழுவி, தேநீர் பருகி, சாப்பிட்டு இருளோடு இருளாக இருளுக்குள்ளேயே அலுவல் முடித்து, மூத்தவன் பின்னால் பார்க்க, இளையவன் பின்னால் பார்க்க – பக்கத்து வேலியால் ‘பிள்ளைகளை’ அனுப்பிவைக்கும் போது, அடுத்த சந்தியில் நாய்கள் அகோரமாகக் குரைக்கத் துவங்கும். அந்த இந்திய மணம் மெல்ல மெல்ல காற்றைக் களங்கப்படுத்தும். ஊர் உறையும். நெஞ்சு விறைக்க கதவுகளைப் பூட்டிக்கொண்டு வீட்டார் முடங்குவார்கள். வீதிப் படலையை இந்தியச் சப்பாத்து உதைத்து திறக்கும் சத்தம் கேட்கும்……!
குணாவுக்குச் சோறு ஊட்டியவர்கள். குணாவுக்கு மருந்து கொடுத்தவர்கள். குணாவுக்கு படுக்கை போட்டவர்கள், குணாவுக்கு படுக்கை போட்டவர்கள், குணாவுக்குப் பாதை பார்த்தவர்கள், குணாவுக்குக் காவல் இருந்தவர்கள்…… தேடித் தேடித் பிடித்துச் சென்றுஇ இந்தியன் அடித்து நொருங்கிக் கந்தல் துணியாக்கி, “அடுத்த தடவை சூடுதான்” என்று வீட்டுவாசலில் போய்விட்டுப் போகவும் –
அன்றிரவு ஆடடித்துக் கறியாக்கி, அவனுக்குக் காவிக்கொண்டு போனார்கள் அவனுடைய மக்கள்.
கல்வயலில் கலைத்துக் கொண்டு வந்த இந்தியர்களுக்குத் தப்ப இவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். நாலுபக்க வீதிகளாலும் எதிரி வளைத்துக் கொண்டிருந்தான். அந்த வீடுதான் வசதிப்பட்டது. வழமையாகப் படுக்கவைக்கப்பட்டிருக்கும் பாட்டி முற்றத்தில் – கட்டிலில் கிடந்தாள். உடலியக்கம் நின்று போன ஆச்சி வானத்தைப் பார்த்தபடியேதான் எப்போதும் கிடப்பாள்; அசைவற்றவள். கிழவி கண்டுவிட்டால் சிக்கல் என்று வேலிக்கரையோடு மெல்ல ஊர்ந்து, யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் புகுந்து, அங்கொரு மூலைக்குள் பதுங்கிவிட – மொய்த்துக் கொண்டு நுழைந்தார்கள் இந்தியர்கள். கிழவியை அவர்கள் மிரட்டுவதும், ஏதோ பதில்கள் அவள் சொல்வதும், திரும்பவும் அவர்கள் உறுக்குவதும், பிறகும் அவளேதோ கூறுவதும் கேட்டது. ‘நல்லகாலம்…… கிழவி காணேல்ல. அது கண்டிருந்துதெண்டால் இண்டைக்கு நாசமறுப்பத்தான்’ மணித்தியாலங்கள் போயின. வெளியில் எட்டிப் பார்ப்பதும் சிக்கல். இவர்கள் யோசித்துக்கொண்டிருக்க, முற்றத்தில் படுத்திருந்தபடியே கிழவிதான் சொன்னாள் – “தம்பியவை வெளியில வாருங்கோடா, ஆமி போயிட்டான் போல கிடக்கு.”
இரவுபோய்ப் படுத்த மீசாலை வீட்டில் விடிந்துவிட்டது. அறைக்குள் நான்கு பேர். கிணற்றடியில் இரண்டுபோர். காட்டிக்கொடுத்தவன், வீட்டுக்குள்ளேயே இந்தியர்களைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டான். எட்டித்தொடும் தூரத்தில் எதிரிகள்; துவக்கெடுத்துச் சுடமுடியாத அண்மை; மயிர்கூச்செறியும் கணப்பொழுதுகள். குப்பிகள் வாய்களிற்குள் செருக, “அடித்து விழுத்திக்கொண்டு பாயுங்கோடா!” – கத்தினான் குணா. திகைத்த இந்தியர்கள் மலைத்து நிற்க, நடுவீட்டுக்குள்ளேயே கைச்சண்டை. மோட்டரைத் தூக்கி கூர்க்காவுக்கு அடித்த அம்மா என்ற வீரனுக்கு கை கழன்று போக, இந்தியன் எஸ். எல். ஆரினால் அடித்து இன்னொருவனுக்கு மண்டை உடைந்து போக, கட்டிக் குளித்த சாறம் முள்ளுக் கம்பியில் கிழிந்து அடுத்தவன் ‘ஒன்றுமே இல்லாமல்’ ஓட, ஒரு வழியாக எல்லாரையும் சேர்த்துக் கொண்டு வந்து சேர்ந்தான் குணா. வீட்டாரைப் பிடித்து அள்ளி முகாமிற்குக் கொண்டு போய்விட்டார்கள் இந்தியர்கள்.
“எமது மக்களே எமது பலம்” என்றான் அவன்; “எமது குணாதான் எமக்குக் காவல்” என்கிறார்கள் அவர்கள்.
விடுதலைப் புலிகளின் ராஜதந்திரக் காய் நகர்த்தல் இந்தியப் படையை இங்கிருந்து நகர்த்த – வெடி முழக்கங்களோடு தொடங்கியது சிறீலங்காவுக்கு எதிரான இரண்டாவது போர்.
தென்மராட்சிக் கோட்ட சிறப்புத் தளபதியாக இப்போது அவன்.
இந்தியர் காலத்தில் – நாவற்குழியிலிருந்து இயக்கச்சி வரை ஒவ்வொரு குறுந்தெருவினூடும் மக்களிடம் அவன் நடந்தான்; பின்பு எங்களின் காலத்தில் – அதே சந்துபொந்துகளெங்கும், அதே மக்களைத் தேடி அவனது ‘பஜரோ’ சில்லுகள் உருண்டன.
அன்றுவரை அவனைப் பாதுகாத்த மக்களை, அன்றிலிருந்து அவன் பாதுகாத்தான்.
போர்முனைகளில் இராணுவ வியூகங்களை நெறிப்படுத்திய அந்தத் தளபதி, ஊர்மனைகளில் அபிவிருத்தித் திட்டங்களை ஒழுங்குபடுத்தினான்.
வறிய சனங்களுக்கு வேலைவாய்ப்புக்கள், இடம் பெயர்ந்தவர்களுக்கு குடியிருப்புக்கள், வேலையிழந்தவர்களுக்கு தொழிற்சாலைகள் – பண்ணைகள், பாலர் பாடசாலைகள், சமூக மேம்பாட்டு வேலைப்பாடுகள்; பாரபட்சம் பாராமல் – ஏற்றத்தாழ்வு காட்டமால் – அந்தச் சமூகத்தினை உயர்த்த அவன் எல்லாவகையிலும் உழைத்தான்.
அனைத்து இடங்களிலும் அவனுக்குத் துணைநின்ற மக்களுக்காக, அனைத்து வகையிலும் அவன் பாடுபட்டான்.
1991 ஆம் ஆண்டு, சர்வதேசப் பிரசித்தி பெற்ற இரு பெரும் போர்கள் உலகத்தைக் கவர்ந்தன. ஒன்று, 27 நாடுகளைக் கூட்டுச்சேர்த்துக் கொண்டு அமெரிக்கா, தனித்து நின்ற ஈராக்கிற்கு அடித்த ‘பாலைவனப்புயல்’; அடுத்தது முப்படைகளும் சேர்ந்து திரண்டு வந்து தாக்கியபோது, புலிகள் தனித்து நின்று எதிர்த்து மோதிய ஆனையிறவுச் சமர்.
தமிழீழம் எந்தக்காலத்திலும் சொல்லிப் பெருமைப்பட முடியும்.
அரவாரமான ஏற்பாடுகள். தூக்கமற்றுப் போனான் குணா.
போராளிகளுக்கு சிறிது ஆறுதல் கிடைத்த போதும் – தளபதிகளுக்கு ஓய்வே இல்லை.
அந்தப் பெருந் தளத்தை முற்றுகையிட்டு – இறுக்கி – அதன் முகாம்களைப் படிப்படியாகத் தாக்கி அழிக்கும் மூலத் திட்டம்.
ஆரம்பித்த நான்காம் நாளே வெற்றிலைக்கேணித் தரையிறக்கத்துடன் சமர் இருவேறு பரிமாணங்களைப் பெற்றது.
ஆனையிறவில் தாக்குதற் போர்முறை; வெற்றிலைக்கேணியில் தற்காப்புப் போர்முறை.
இருமுனைகளில் சமர்; நிறுத்தமற்ற தொடர் சண்டைகள்.
சமராடிக் காயப்பட்டுப் போனவர்கள். காயம் மாற்றித் திரும்பவும் களத்திற்கு வர வேண்டியிருந்த போர் அரங்கு.
1991 யூலை 27 ஆம் நாள்.
தடை முகாம் பகுதி மீதான இரண்டாவது தாக்குதல் தொடுக்கப்பட்ட ஒரு நள்ளிரவு. குணாவின் கட்டளையின் கீழ் அந்த முயற்சி எடுக்கப்பட்டபோது, சூழ்ந்து நகர்ந்த தாக்குதல் அணிகளுக்குத் துணையாய் பிரதான வீதியால் முன்னேறிய எங்கள் கவசவாகனத்தின் தொடர்பு அறுந்துவிட, அதிலிருந்த சராவிடமிருந்து பதிலில்லை; அருகிலிருந்த சொனியிடமிருந்து தொடர்பில்லை; கூடப்போன குகதாசும் கதைக்கவில்லை…… என்ன நடந்தது……? குணா குழம்பிப்போனான். தன்னிலை மறந்த அந்தத் தளபதி ‘ரி56’உம் கையுமாக களத்திற்குள் இறங்கினான். சண்டை வீரர்களோடு தானுமொரு வீரனாக – பொறி கக்கும் துப்பாக்கியுடன் பிரதான வீதி ஓரமாக – அவன் கவச வண்டியை நொருக்கவென எதிரி ஏவிய ‘கனன்’ பீரங்கிக் குண்டு வெடித்துச் சிதற, சிதறிய குண்டின் ஒரு சிறு துண்டு குணாவின் மூக்கில் துளைத்து உள்ளே போனது. பக்கத்திலிருந்தவர்கள் பலவந்தமாய் இழுத்த போதும் வரமறுத்து – மூக்காலும் வாயாலும் இரத்தம் ஓட ஓடச் சண்டையிட்டு சோர்ந்து…… துவண்டு…… செயலிழந்து வீழ்ந்தவனைஇ அதன் பின்னர்தான் தோழர்கள் தூக்கி எடுத்து பின்னால் கொண்டுவந்தார்கள்.
மருத்துவமனைக்குப் போக மறுத்துவிட்டு ஆனையிறவிலேயே கிடந்தான்.
அருகினில் குண்டு வீழ்ந்து வெடிக்கும் அதிர்ச்சிக்கெல்லாம், குருதி பெருக்கெடுத்து ஓடிக்கிடந்த போதும் களத்திலிருந்து செல்ல மறுத்துக் கொண்டிருந்தவனை – பொட்டம்மான் கடுமையாக உத்தரவிட்டு ‘அம்புலன்சில்’ வற்புறுத்தி ஏற்றி அனுப்பி வைத்தார்.
1992, மார்ச் 5 ஆம் நாள்.
கறுக்காய்வெட்டைப் பகுதியில் ஆமி வெளிக்கிட்ட ஒரு உற்சாகமான காலைப்பொழுது; காவலரணிலிருந்த வீரர்கள் எதிர்கொள்கிறார்கள். பெருந்தொகையான படையினர்; போர்க் கலங்களின் அகோரமான தாக்குதல்; களத்தில் நின்ற எம் வீரர்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர்.
தனது சிறு குழுவுடன் ஏதோ அலுவலாக எங்கோ போய்க்கொண்டிருந்த குணாவுக்கு ‘வோக்கி’ சேதியைச் சொல்லஇ விரைந்த ‘பஜரோ’ ஆனையிறவுக்குத் திசைமாறியது.
இப்படி நடக்குமென்று எதிரி எதிர்பார்த்திருக்கவே மாட்டான். முன்னேறியவர்களை முற்றுகையிட்டு ஒரு பாய்ச்சல். குறுகிய நேரத்தில் மூர்க்கத்தனமான அதிரடி. 20 பேர்வரையில் கொல்லப்பட்ட, வீழ்ந்தவர்களையும் ஆயுதங்களையும் போட்டுவிட்டு, அவர்தம் தோழர்கள் தப்பினோம் பிழைத்தோம் என மண்கிண்டினார்கள்.
1992, மே 28 ஆம் நாள்.
‘பலவேகய – 2’
எதிரி கட்டைக்காட்டிலிருந்து ஆனையிறவுக்குப் படையெடுத்தான்.
ஆனையிறவும் மூடி, பூநகரியும் மூடிப்போக, கொம்படியே தஞ்சமென்று மக்கள் போய்வந்துகொண்டிருக்க – பாதைக்கு குறுக்கே பகைவன் போட்ட ‘படைவேலி’
குடாநாட்டு முற்றுகைக்காய் அவன் செய்த முதற்கட்ட அசைவு.
நாட்கணக்கான சமர்; தொடர் சண்டை; களத்தின் முன் முனையை வழிநடாத்தியபடி குணா.
குலையக் குலைய குழுக்களை ஒழுங்குபடுத்தி, எதிரி நகர நகர புதிதாய் அரண்கள் அமைத்து, துப்பாக்கிக்கு துப்பாக்கி நிலையிடம் காட்டி, டார்சினின் ஆர்.பி.ஜி. ‘டாங்கி’யை நொருக்க பக்கத்தில் வைத்து இலக்குக் காட்டி கடைசிவரைக்கும் – களத்தில் நின்றவன்…… பீரங்கிக் குண்டுக்கு உடல் பிய்ந்து வீழ்ந்தான்.
பதற்றப்படாமல்…… நிதானமாக…… ‘வோக்கி’ யில் ரூபனை அழைத்து…… அருகில் வரச்சொல்லி…… ‘எம் 16’ ஐக் கொடுத்தவன் – மருத்துவமனையில்தான் கண் திறந்தான்.
1992 கார்த்திகை 24 அம் நாள்.
பலாலிப் பெருந்தளத்தின் கிழக்குப் பாதுகாப்பு வியூகம் உடைத்தெறியப்பட்ட புகழ்பூத்த தாக்குதல்.
“குறுகிய நேரத்திற்குள் நடந்து முடிந்த கொடிய யுத்தம்” என சிங்களப் படைத்துறைப் பேச்சாளர் கேணல் சரத் முனசிங்க வர்ணித்த போர் அரங்கு.
முன்னணிச் சண்டைக் குழுக்களுக்குள் குணா சேர்க்கப்படவில்லை.
நீண்ட தாக்குதல் வலையத்தில் மகளிர் படையணிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியில், பின் கள வேலைகளே அவனிடம் கொடுக்கப்பட்டிருந்தன.
தாக்குதல் ஆரம்பித்த சொற்ப நேரத்தில், எதிரியின் அரண்களை வீழ்த்தி உள்ளே நுழைந்த பெண் போராளிகள் முன்னேறிக் கொண்டிருந்த வேளை –
அவர்களைப் பின்பக்கத்தால் வளைத்துக் கொண்டான் பகைவன்.
சுற்றிவர எதிரி; நடுவுக்குள் எம்மவர்கள் – அவர்கள் வசமாகச் சிக்கிக்கொண்டிருந்தார்கள்.
நிலைமை மோசமாகிவிட்டதைக் குணா கண்டான்; சூழ்நிலை பிசகி விட்டதை உணர்ந்தான்; அது – தானே முடிவெடுக்க வேண்டிய தருணம் என்பதை விளக்கினான்.
உடனடியாகத் தனது குழுவைத் தயார்படுத்திச் சண்டைக்குள் இறங்கினான் குணா. ஆவேசப்பாய்ச்சல்; அசாதாரண வேகம்; வளைத்து நின்ற எதிரியைத் தகர்த்தெறிந்து நுழைந்தது புலிகளின் சேனை.
கைப்பற்றிய ஆயுதங்களை, களமாடிய துப்பாக்கிகளை, காயப்பட்டு வீழ்ந்தவர்களை, களப்பலியானவர்களை…… எல்லாரையுமே, எல்லாவற்றையுமே இழுத்து இழுத்துக் கொண்டு வந்து வெளியில் போட்டது அவன்தான்.
1993 செப்ரெம்பர் 29ஆம் நாள்.
குணாவும், அவனது தென்மராட்சிப் படையணியும் – பூநகரிக்குள் பாய பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போதுஇ பகைவன் – கிளாலியைப் பிடிக்க முன்னேறினான். நோக்கம் பெரியது என்பதால் பயிற்சி பிற்போட முடியாததாகவும் – முக்கியமானதாகவும் இருந்தது. ‘யாழ்தேவி’யை புலோப்பளையில் தடம் புரட்டிய புகழ்பெற்ற தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படையணிகளுக்குள், அவனது படை செர்க்கப்படவில்லை.
“எனது பிரதேசத்தில் எதிரி படையெடுக்கிறான்; நாம் போகமுடியாதுள்ளது.” குணாவால் தாங்க முடியவில்லை…… இருப்புக் கொள்ளாமல் தவித்தான்…… அந்தரப்பட்டான்; சாப்பாட்டை மறந்தான். தூக்கமில்லாமல் எழுந்து திரிந்ததை நாங்கள் பார்த்தோம். அந்தச் சமரில் களமாட முடியவில்லையே என்று உண்மையிலேயே வேதனைப்பட்டான். எந்த நேரமும் ‘வோக்கி’யை எடுத்து நிலைமையைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். அந்த இரண்டு நாட்களும் அவன் துடித்த துடிப்பு இருக்கிறதே……! அதை வெளியாட்களால் புரிந்து கொள்ள முடியாது.
1993 கார்த்திகை 10ஆம் நாள்.
‘ஒப்பறேசன் தவளை’
மனித சாதனைகள் பதிவு ஏட்டில் – பொன் எழுத்துக்களால் பொறித்து வைக்கப்படவேண்டிய ஒரு மகத்தான போர்ச்சாதனை.
அனைத்துலக படைத்துறை வரலாற்றில் புலிகள் இயக்கம் படைத்த இன்னொரு இராணுவ விந்தை.
படையியலின் பலத்தை வைத்து அரசியலில் பேரம்பேச முனைவோருக்கு, புலிகள் விடுத்த பூகம்ப எச்சரிக்கை.
போர்முறையானது இருவகைப்படுகின்றது. ஒன்று, ‘மரபுவழி யுத்த முறை’; அடுத்தது, ‘கெரில்லா ( கரந்தடி ) யுத்த முறை’. சர்வதேசப்புகழ்பெற்ற கெரில்லாப் போர் முறையில், பிரபாகரன் உலகிற்கு அறிமுகப்படுத்திய நுட்பமான ஒரு புதுவடிவப் படை நகர்த்தல் பூநகரி வெற்றியின் தந்திரோபாயம்.
சுற்றுவேலியில் பகைவன் பார்த்துக் கொண்டு காவலிருக்க, புலிகள் நடுவீட்டில் தீ மூட்டிய அதிசயம் நிதழ்ந்தது.
பயிற்சி! இடையறாப் பயிற்சி! தொடர் பயிற்சி! நீண்ட கடும் பயிற்சி! – விடுதலைப்புலிகளின் படைவீரர்கள்இ ஒரு மாபெரும் வெற்றியை ஈட்டிவரத் தங்களையே வருத்தினார்கள்; உருக்கினார்கள்.
அந்த நாள் வந்தது –
“நீங்கள் ஒவ்வொருவருமே என்னுடைய பிள்ளைகள்! எனது ஒரு பிள்ளையைக்கூட நான் அநாவசியமாக இழக்கத் தயாராக இல்லை! அதனால் – அசுர வேகத்தில் முன்னேறி – நீங்கள் வீழ்த்தப்பட முன்னர் எதிரிகளை வீழ்த்தி – வெற்றிக்கனியைத் தட்டிப்பறியுங்கள்!”
போரிடும் படைகளின் தளகர்த்தராய் நின்று, தேசியத் தலைவர் வழியனுப்பினார்.
குணாவின் கையில் மின்னியது ஒரு வெள்ளிச் சங்கிலி. அது இரவு நகர்வுக்கு பொருத்தமில்லாதது; எதிரிக்கு இனங்காட்டிவிடக்கூடியது. அருகில் வந்த தளபதி சொர்ணம், “உந்த மணிக்கூட்டைக் கழற்றித்தந்துவிட்டுப் போவன் குணா” என்றபோது –
திடீரென என்னவோபோல ஆகினான்; முகம் வாடியது; உண்மையிலேயே கண்கள் கலங்கின் தளபதி புரியாமல் விழித்தார். குணா சொன்னான், “இதை நான் ஒரு நாளுமே என்ர கையிலயிருந்து கழற்றுறேலயண்ணை – தலைவர் தந்தது……” சொல்லிவிட்டுக் குனிந்து மணிக்கூட்டைப் பார்த்தான்; கழட்டிக் கோல்சருக்குள் வைத்தான்.
ஒளியற்ற இருள்……! நிலவற்ற வானம்……! கார்முகில் பன்னீர் தெளித்து வாழ்த்தியது.
உறங்கிக்கொண்டிருந்த தேசத்தை நாளை உவகையோடு துயிலெழுப்ப, மரணம் விளையாடும் களத்தை நோக்கி நகரத் தொடங்கினர் புலிகள் –
சண்டைக் களம் அபூர்வமானது. நினைத்துப் போவது நடக்காமல் போகும்; நடந்து விடுவது நினையாததாய் இருக்கும்.
கும்மிருட்டு! தவறவிட்ட பாதையை பின்னர் சரிபடுத்தி வேவு வீரன் இடத்தைக் காட்டினான். குணா ஆணையிட்டான்! முன்னணித் தாக்குதற் குழுக்கள் அரண்களை உடைத்துக் கொண்டு பாய்ந்தன! ஆவேசமான தாக்குதல்! வீழ்த்தப்பட்ட அரண்களின் ஊடு, பிரதான தாக்குதல் அணியோடு குணா முன்னேறினான். எதிர்பாராத விதமாக – தாக்கப்பட்ட அரண்களிலிருந்து பின்வாங்கிய எதிரிஇ பிரதான அணிக்கு பக்கவாட்டில் வந்து பின்பக்கத்தால் தாக்கினான். மினிமி ஜீ . பி . எம். ஜீ கள் ரவைகள் அள்ளிப் பொழிந்தன. முன்னால்போன குணாஇ பின்னால் அடிவிழத் திகைத்து, ‘என்ரபொடியன்……!’ என்று திரும்பி ஓடிவந்து தாக்க முயல……! ஏங்கள் குணா……!
பூநகரி வெற்றியின் முதற் களப்பலியாய் சன்னங்கள் சல்லடையாக்க வீழ்ந்தான் எம் வீரன்!
ஓ! எங்கள் குணா……! தமிழீழப் போர் வானின் நம்பிக்கை நட்சத்திரமாய் மெல்லென ஒளிர்ந்த படைத்தளபதியே……! ஒவ்வொருவரினதும் உயிரினை ஊடுருவி இதமாக வீசிய குளிர்காற்றே…… முற்றுகையில் முன்னின்றாய் – முதற் சாவு நீ கண்டாய்…… போய்விட்டாய்!
நாங்கள் நடக்கின்றோம்.
அதே குச்சொழுங்கை…… அதே தோட்டவெளி…… அதே தென்னந்தோப்பு…… அதே வழித்தடம்…… சுதந்திரத்தின் சிகரத்தை நோக்கிய எங்கள் நெடும் பயணம்
நினைவுப்பகிர்வு: தி.இனியவன்
விடுதலைப்புலிகள் இதழ் தை, 1995.