Home / மாவீரர்கள் / சுவடுகள் / நினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி

நினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி

விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியில் அங்கம் வகித்த ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த பூரணியக்காவைப் பற்றி ஏதொவொரு நினைவுகள் அலைபாய்ந்து கொண்டேயிருக்குமென நம்புகின்றேன். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியானது பல தாக்குதல் அணிகளையும் பல நிர்வாக அணிகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும்படைக் கட்டமைப்பாகும். இங்கு அனைத்து அணிகளிலும் மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரும் இணைந்தே களப்பணிகள் மற்றும் நிர்வாகப்பணிகள் ஆகியவற்றை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் பூரணியக்கா தான் வகிக்கின்ற பொறுப்பு நிலைகளுக்கு அப்பால் ஒவ்வொரு போராளிகளிடமும் ஒரு நல்ல அக்காவாக தனது வயதில் மூத்தவர்களிடம் ஒரு நல்ல தங்கையாக இடம்பிடித்துக்கொண்டார் என்று கூறினால் அதுமிகையாகாது.

இருபாலாரையும் இணைத்து நிர்வகிக்கின்ற ஆளுமை பூரணியக்காவிடம் இருந்தது என்று கூறுவதற்கு 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையான சுமார் நான்கு ஆண்டு காலப் பகுதிகளில் அக்கா நிர்வகித்திருந்த கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பை இங்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். கடற்புலிகளின் சண்டைப்படகுகளில் படகுக் கட்டளையதிகாரியாகவும் தொகுதிக் கட்டளையதிகாரியாகவும் மகளீர் செயற்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் நிர்வாகச் செயற்பாடுகளில் குறிப்பாக மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரையும் உள்ளடக்கிய அரசியல்த்துறைக் கட்டமைப்பில் அதுவும் மக்கள் மத்தியில் வேலைசெய்கின்ற ஒருகட்டமைப்பை நிர்வகிப்பதென்பது சாதாரண விடயமல்ல. ஆனாலும் பூரணியக்கா அதனை செவ்வனே செய்துகாட்டியிருந்தார்.

Boorani1992-ம் ஆண்டின் முற்பகுதியில் கடற்புலிகளின் மகளீரணி தோற்றம் பெற்று புதிய போராளிகள் உள்வாங்கப்பட்டு கடற்புலிகளின் மகளீரணிக்கென முதலாவது அடிப்படைப் பயிற்சிப்பாசறை தொடங்கப்பட்டபோது அந்தக் காலப்பகுதியில் பூரணியக்காவும் தன்னை போராட்டத்தில் இணைத்துக்கொண்டு அந்தப்பாசறையில் ஒருபோராளிக்கு வேண்டிய அனைத்து பயிற்சிகளையும் சிறப்புடன் பெற்று சிறந்ததொரு ஆளுமைமிக்க போராளியாக பூரணியக்கா அந்தப் பாசறையிலிருந்து வெளியேறினார். அன்றையநாட்களில் கடற்புலிகளுக்கான தரைத் தாக்குதலணிகளும் செயற்பட்டு வந்ததோடு பல களங்களையும் அவை கண்டிருந்தன. கடற்புலிகளின் மகளீர் தரைத் தாக்குதலணியான சுகன்யா படையணியில் உள்வாங்கப்பட்ட பூரணியக்கா அந்தத் தாக்குதலணி யாழ்ப்பாணத்திலும் பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்பிலுமாக பங்கெடுத்திருந்த குறிப்பிடக்கூடிய தாக்குதல்கள் மற்றும் களச்செயற்பாடுகளிலும் தனது வகிபாகத்தை வகித்திருந்தார்.

இவ்வாறாக தனது துணிச்சலான களச்செயற்பாடுகளாலும் அணிகளை வழிநடாத்தும் ஆளுமையாலும் நாளடைவில் சுகன்யா படையணியின் பொறுப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஓயாதஅலைகள்-03 என விடுதலைப்புலிகளால் பெயர்சூட்டப்பட்டு தொடரான நிலமீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் பல கிராமங்கள் மீட்கப்பட்ட நடவடிக்கையிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின்போது தாளையடியில் அமைந்திருந்த படைத்தளத்தை தகர்த்து தரையிறங்கிய அணிகளுக்கான தரைவழி விநியோகப் பாதையை ஏற்படுத்துவதிலும் கடற்புலிகளின் தரைத் தாக்குதலணிகளான சூட்டி படையணி மற்றும் சுகன்யா படையணிகளது பங்கு மிகஅளப்பரியது. இந்த நடவடிக்கைகளின்போது பப்பா வண் (P1) என்ற சங்கேதக் குறியீட்டுப்பெயரைக் கொண்ட பூரணியக்காவின் காத்திரமான பங்கும் அவரது அர்ப்பணிப்பான உழைப்பும் இன்றியமையாததாக அமைந்திருந்தது.

2001-ம் ஆண்டின் பிற்பகுதிகளில் விடுதலைப் போராட்டத்தில் கடற்புலிகளுக்கென புதிதாக இணைந்த பெண் போராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையான மேஜர் கலாநிதி அடிப்படைப் பயிற்சிப்பாசறை முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியில் நிறுவப்பட்டபோது அந்தப் பயிற்சி முகாமின் பொறுப்பாளராக பூரணியக்கா நியமிக்கப்பட்டிருந்தார். அந்தப் பயிற்சிப் பாசறையில் பூரணியக்காவின் வழிநடாத்தலின் கீழ் பயிற்சிபெற்று போராளிகளாகப் புடம்போடப்பட்டு அந்தப் பாசறையிலிருந்து வெளியேறிய பல மகளீர் போராளிகள் தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் கடற்புலிகளின் மகளீரணியில் சண்டையணிகளிலும் நிர்வாகச் செயற்பாடுகளிலும் முதன்மையான வகிபாகம் வகித்திருந்ததை நான் நன்கறிவேன்.

இந்தக்காலப்பகுதிகளில் ஓர்நாளில் பூரணியக்கா உந்துருளியில் பயணித்துக் கொண்டிருக்கையில் அதே வீதி வழியாப் பயணித்த சாதாரண பொதுமகன் ஒருவருக்குச் சொந்தமான மினிபஸ் ஒன்றுடன் ஏறபட்ட விபத்தில் பூரணியக்கா காயமடைந்ததோடு அவரது கால் ஒன்றும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருந்தது. பின்னர் தீவிர மருத்துவச் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்படைந்த காலுக்குள் உலோகத்தகடுகள் வைக்கப்பட்டு உடைந்த எலும்புகள் பொருத்தப்பட்டபோதிலும் அக்காவின் பாதிக்கப்பட்ட கால் சிறிது கட்டையாகவேயிருந்தது. இதனால் அக்கா அந்தக் காலுக்கு சில பாட்டாக்களைச் சேர்த்து ஒட்டப்பட்ட ஒட்டுபாட்டாவையே பயன்படுத்தினார். பின்னைய நாட்களில் சமாதான காலப்பகுதியில் எங்களுடன் கதைக்கின்றபோது இந்தச்சம்பவத்தையிட்டு பூரணியக்கா பல சந்தர்ப்பங்களில் கவலைப்பட்டதுண்டு. ‘எத்தனையோ சண்டைகளிலெல்லாம் நேரடியாகப் பங்குகொண்டிருக்கிறன். அப்போது கூட ஒரு சிறிய கீறல்க்காயம்கூட ஏற்படவில்லை. ஒரு விபத்து ஏற்பட்டு என்னை முடமாக்கிப்போட்டுது. ஆனால் சண்டை தொடங்கினால் நான் அங்குசென்று சண்டை ஸ்பொட்டில் நிற்பன். ஒருகால்தானே இயலாது பரவாயில்லை என்னால் சண்டைபிடிக்க முடியும்.” என்று பூரணியக்கா பலசந்தர்ப்பங்களில் ஆதங்கப்பட்டுக் கூறியிருக்கின்றார்.

ஒருமுறை அவருக்கு ஏற்பட்ட அந்த விபத்துச்சம்பவம் தொடர்பாக அவருடன் கதைத்துக்கொண்டிருந்தபொழுது நான் “அந்த மினிபஸ்சாரதிக்கு நடடிவக்கை எதுவும் எடுக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு பூரணியக்கா “அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மக்கள் பாவம். மக்களுக்காகத்தானே போராடுகின்றோம். ஏதோ தவறுதலாக அந்த விபத்து நடந்துவிட்டது. அதற்காக ஒரு அப்பாவிப்பொதுமகனை தண்டிக்கமுடியுமா? அது எந்தவகையில் நியாயம்? அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று அழுத்தமாகக்கூறினார். பூரணியக்கா மக்கள் மீது எந்தளவிற்கு ஆழமான பற்றும் பாசமும் கொண்டிருந்தார் என்பதற்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

2002-ம்ஆண்டு போர்நிறுத்தமும் சமாதானமும் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் சில மாதங்கள் லெப் கேணல் சிலம்பரசன் (றஞ்சன்) அவர்கள் கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்றிருந்தார். ஆனாலும் அவரது பணி சர்வதேசக் கடல் நடவடிக்கைகளுக்கு இன்றியமையாததாகவிருந்ததால் 2002-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதமளவில் லெப் கேணல் சிலம்பரசன் அவர்கள் சர்வதேசக் கடல் நடவடிக்கைகளுக்கு சூசையண்ணாவால் அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் 2002-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்திலிருந்து 2003-ம்ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் லெப் கேணல் சிலம்பரசன் உள்ளிட்ட பதினொரு போராளிகள் சர்வதேசக் கடற்பரப்பில் வீரச்சாவுச் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதி வரையிலுமாக சுமார் ஆறுமாதங்கள் கடற்புலிகளின் அரசியல்த்துறைக்கென பொறுப்பாளர்கள் எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. கடற்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட அந்தந்தப் பிரதேசங்களுக்கான மற்றும் மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் அவற்றை நிர்வகித்துக்கொண்டிருக்க எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அப்போது கடற்புலிகளின் தளபதியாகவிருந்த லெப் கேணல் மங்களேஸ் மேற்பார்வைசெய்துகொண்டிருந்தார்.

2003-ம் ஆண்டு ஏப்ரல்மாதமளவில் கடற்புலிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளராக பூரணியக்கா அவர்களை சிறப்புத்தளபதி சூசையண்ணா அவர்கள் நியமித்திருந்தார். அந்தக்காலப்பகுதியில் நான் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் அரசியல் பணிகனை முன்னெடுத்துக் கொண்டிருந்தேன். அரச படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் அனைத்துக் கிராமங்களிலும் மக்கள் மீள்குடியேறிக்கொண்டிருந்தனர். அப்போது சுண்டிக்குளம் தொடக்கம் குடாரப்பு வரையிலுமாக பத்து கிராம அலுவலர் பரிவுகள் எமது ஆளுகையிலிருந்தன. இவற்றை நிர்வகிப்பதற்கு வடமராட்சிக் கிழக்குப் பிரதேச அரசியலிற்கென நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர் உட்பட நாம் மூன்று போராளிகள் மாத்திரமே அங்கு அரசியல் பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தோம். மீள்குடியேறிய மக்கள் அநேகமான விடயங்களுக்கு அரசியல்த்துறை செயலகத்தையே நாடிவரவேண்டியிருந்தது.

அந்த மக்களுக்கான மக்கள் சந்திப்புகளை மேற்கொள்ளுதல் அத்தோடு அபிவிருத்திப் பணிகளுக்காக வருகின்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தல் மக்களது தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரதேச செயலர் மற்றும் கிராம அலுவலர்களை சந்தித்தல். அரச அதிகாரிகளுடன் இணைந்து கிராமங்கள்தோறும் மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ளுதல் முதலான ஏகப்பட்ட பணிகளை பிரதேச அரசியல் துறையினராகிய நாமே நிர்வகிக்கவேண்டியிருந்தது. மாதர் சங்கங்களையும் பெண்கள் சம்பந்தமான விடயங்களையும் கையாள்வதற்கு அன்றைய நாட்களில் வடமராட்சி கிழக்கு அரசியல் பணிகளுக்கென மகளீர் எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. மக்கள் சந்திப்பு என்ற முதன்மையான பணியை நான் முன்னெடுத்துக் கொண்டிருந்ததால் பெண்கள் சம்பந்தமான விடயங்களை கையாள்வதில் அவ்வப்போது நெருக்கடிகளை எதிர்கொண்டேன். ஆதலால் கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பூரணியக்கா பொறுப்பேற்றிருந்த நிலையில் அவரிடம் நான் முன்வைத்த முதலாவது வேண்டுகோள் என்னவெனில் வடமராட்சிக் கிழக்கு பிரதேசத்தில் மகளீர் சம்பந்தமான அரசியல்ப் பணிகளை முன்னெடுப்பதற்கு மகளீர் போராளிகள் இருவரை அரசியல் பணிக்கு அமர்த்தவேண்டும் என்பதுவே அதுவாகும். எங்களது பணிச் சுமைகளை நேரில் வந்து அவதானித்த பூரணியக்கா வெகுவிரைவில் இரண்டு மகளீர் போராளிகளை அரசியல்ப் பணிகளுக்கு அமர்த்துவதாக உறுதியளித்தார். அதன்படியே சிலவாரங்களில் இரண்டு மகளீர் போராளிகளை கூட்டிவந்து எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து அவர்களை அரசியல்ப் பணிகளுக்காக நியமித்திருந்தார். அத்தோடு போரினால் அதிகமான பாதிப்புக்களைச் சந்தித்த பிரதேசம் வடமராட்சி கிழக்குப் பிரதேசம் என்பதால் பூரணியக்கா மற்றும் மங்களேசண்ணா ஆகியோர் தமது கூடிய கவனத்தை வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் செலுத்தியிருந்ததால் அதன் பிற்பாடு ஓரளவிற்கு இலகுவாக அரசியல் பணிகளை எம்மால் முன்னெடுக்கக்கூடியதாக அமைந்திருந்தது.

2004-ம்ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகளின் அளம்பில்-செம்மலைப் பிரதேச அரசியல் துறைப் பொறுப்பாளராக நான் கடமையாற்றிய காலப்பகுதியில் பூரணியக்காவின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் தாராளமாகவே எனக்கு கிடைத்திருந்தது. அன்றைய நாட்களில் எமது அமைப்பு சார்ந்த தேசியநினைவுநாள் நிகழ்வுகளுக்கும் மக்களுடனான கலந்துரையாடல்களுக்கும் நான் பூரணியக்காவிற்கு முன்னறிவித்தல் கொடுத்தால் கண்டிப்பாக பூரணியக்கா அந்நிகழ்வுகளுக்கு வருகைதந்து அவற்றை சிறப்பித்துச்செல்வது வழக்கமானது.

2005-ம்ஆண்டு பிற்பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை அவர்களால் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத்தளபதியாக பூரணியக்கா நியமிக்கப்பட்டிருந்தார். அதாவது 2005-ம்ஆண்டு பிற்பகுதியிலிருந்து 2007-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் வரையும் அரசியல்த்துறைப் பொறுப்பையும் மகளீரணிப் பொறுப்பையும் ஏற்றிருந்து சமநேரத்தில் இரு பிரதான பொறுப்புக்களை வகித்திருந்தார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடற்புலிகளின் மகளீரணியின் கட்டமைப்புக்கள் அனைத்தையும் அக்கா மிகவும் நேர்த்தியாக நெறிப்படுத்தியிருந்தார். 2006-ம்ஆண்டு முற்பகுதியில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் கடற்புலிகளில் திறமையாகச் செயற்பட்ட பதினொரு இளநிலைத் தளபதிகளை தேர்வுசெய்து அவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு கைத்துப்பாக்கிகளை (பிஸ்ரல்) வழங்கியிருந்தார். இதில் ஒன்பது மகனாரும் இரண்டு மகளீரும் உள்ளடங்கியிருந்தனர். அந்த இரு மகளீரில் ஒருவர் பூரணியக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

2007-ம்ஆண்டு நடுப்பகுதியில் புதிய போராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையான லெப் கேணல் புயலினி பயிற்சிப் பாசறையிலிருந்து போராளிகள் பயிற்சியை முடித்து வெளியேறியிருந்தனர். அந்தக் காலப்பகுதியில் நான்காவது கட்ட ஈழப்போர் தாயகமெங்கும் முனைப்புப் பெற்றிருந்தன. இவ்வாறாக மணலாற்றிலிருந்து இராணுவத்தினர் அடிக்கடி முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்வதும் அது விடுதலைப்புலிகளால் தடுத்து நிறுத்தப்படுவதுமாக மணலாற்றுக் களமுனையில் அவ்வவ்ப்போது உக்கிர சண்டைகள் நடந்தன. இந்நிலையில் மணலாற்றுக் களமுனையின் பகுதிகள் பல படையணியினருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றின் அனைத்து நடவடிக்கைகளையும் மணலாறு கட்டளைப்பணியகம் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தது. அந்தவகையில் கடற்புலிகளுக்கும் மணலாறுக் களமுனையில் ஒருபகுதி கொடுக்கப்பட்டிருந்தது. இதில் மகனார் மற்றும் மகளீர் இருபாலாரும் உள்ளடக்கம். புயலினி அடிப்படைப் பயிற்சிப்பாசறையில் பாயிற்சி முடித்து வெளியேறிய மகளீரை உள்ளடக்கிய அணியொன்று அங்கு சென்று மகனாரோடு இணைந்து கடற்புலிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த பகுதியில் முன்னரங்க நிலைகளை அமைத்து களநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த அணியில் அநேகமானோர் புதியபோராளிகளாகவிருந்ததன் காரணமாக பூரணியக்காவை சிறப்புத் தளபதிநிலையிலிருந்து கொண்டே அங்கு நின்று அவர்களை மேற்பார்வைசெய்துகொண்டு அவர்களை வழிநடாத்தும்படி சிறப்புத்தளபதி சூசையண்ணா பூரணியக்காவை பணித்திருந்தார். பூரணியக்காவைப் பொறுத்தவரையில் புதியபோராளிகளுக்கு ஒரு தாயாக சகோதரியாக பொறுப்பாளராக தளபதியாக எல்லாம் ஒருசேர வழிநடாத்துவதில் அவருக்குநிகர் அவர்தான் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

மணலாறுக்களமுனை கட்டம் கட்டமாக பின் நகர்ந்து வந்துகொண்டிருந்தபோதிலும் அவ்வவ்ப்போது எதிரிப் படையினருடன் கடும் சமர்க்களமும் தொடுத்திருந்தனர். அந்தவகையில் அளம்பில் உடுப்புக்குளம் சிலாவத்தை முல்லைத்தீவு வட்டுவாகல் என சிங்களப் படைகளுடன் பாரிய மறிப்புச் சமர் புரிந்து நூற்றுக்கணக்கான படையினரை கொன்றொழித்து பல படையினரின் உடலங்களையும் படையப் பொருட்களையும் கையகப்படுத்திய வெற்றிச்சமர்கள் அனைத்திலும் பூரணியக்காவின் சாதனைகள் குவிந்திருக்கின்றது.

17-05-2009 அன்று அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுதப் போராட்டத்தின் இறுதி மணித்தியாலங்களுக்கான யுத்தம் மூர்க்கமாக நடந்துகொண்டிருந்தது. நாலாபுறமும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தரப்பாள்க் கூடாரங்களும் தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருந்தன. உயிரற்ற மனிதஉடலங்கள் ஆங்காங்கே அநாதரவாகக்கிடந்தன. அப்போது நாங்கள் நின்றிருந்த இடத்தில் எங்களுடன்கூட நின்ற கடற்கரும்புலி அணியைச் சேர்ந்த அமுதினியக்காவின் வோக்கி அலறியது. வோக்கியில் எதிர்முனையில் பூரணியக்கா தனது வழமையான கம்பீரமானதும் உறுதி தளராததுமான குரலில் அமுதினியக்காவுடன் சிலவார்த்தைகள் பேசினார். அதுவே நான் கடைசியாகக் கேட்ட கேட்ட பூரணியக்காவின் குரல். பூரணியக்காவின் அந்தக்கணீர் என்ற கம்பீரமானகுரல் இப்போதும் எனது செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

நினைவுப்பகிர்வு:
கொற்றவன்.

About ehouse

Check Also

கேணல் சங்கீதன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பிரிவின் முக்கிய தளபதியும்,புலனாய்வுக் கற்கைநெறித் துறைப் பொறுப்பாளரும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணைப் பிரிவுப் ...

Leave a Reply